அப்போஸ்தலருடைய நடபடிகள் 21–22; 26–28
பவுலின் ரோமாபுரி பயணத்தின் போது நடந்த அற்புதங்கள்
கர்த்தர் தம்முடைய ஊழியரை ஆசீர்வதிக்கிறார்
பவுலை எருசலேமுக்குப் போகும்படி ஆவியானவர் சொன்னார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி பவுல் போதித்த விஷயங்கள் அங்கிருந்த பலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அவனைக் கைதுசெய்து சங்கிலிகளால் கட்டினார்கள். பவுல் தான் வானத்திலிருந்து ஒரு ஒளியைக் கண்டதையும், இயேசுவின் குரலைக் கேட்டதையும், ஞானஸ்நானம் பெற்றதையும் பற்றி எல்லோரிடமும் கூறினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:4, 12–13, 27–40; 22:1–16
பவுல் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் அங்கே இருந்தபோது, இயேசு தோன்றி, “பவுலே, திடன்கொள்” என்றார். பவுல் ரோமாபுரியில் தம்மைப் பற்றி சாட்சியமளிப்பான் என்று அவர் கூறினார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:10–11
பவுல் தேசாதிபதிகள் மற்றும் ஒரு ராஜாவுக்கு முன்பாகக் கொண்டு செல்லப்பட்டான். இந்த வல்லமைவாய்ந்த ஆட்சியாளர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவன் தைரியமாக சாட்சியமளித்தான். எல்லாரும் இயேசுவை நம்ப வேண்டும் என்று அவன் விரும்பினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:10–27; 25:6–8, 17–19; 26:1–29
ராஜா பவுலை ரோமாபுரிக்கு, பேரரசரான சீசரால் நியாயந்தீர்க்க அனுப்பினான். பவுல் மற்ற கைதிகளுடன் கப்பலில் பயணம் செய்தான், வழியில் தங்கினான். ஒரு நிறுத்தத்தில், விரைவில் குளிர்காலம் வரும் என்று பவுலுக்குத் தெரியும். அவர்கள் தொடர்ந்து சென்றால், அவர்கள் பெரும் ஆபத்துக்குள்ளாவார்கள். வானிலை சீராகும் வரை காத்திருக்குமாறு கப்பல் ஊழியர்களிடம் அவன் கூறினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:1–10
பவுலை யாரும் நம்பவில்லை, அதனால் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தனர். ஒரு பெரிய புயல் வந்தது, கப்பல் பல நாட்கள் அலைகளால் அலைக்களிக்கப்பட்டது. அவர்களால் சூரியனையோ நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. அவர்கள் புயலில் இறந்துவிடுவார்கள் என்று நினைத்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:11–20
ஒரு இரவு, தூதன் பவுலைச் சந்தித்து, “பவுலே, பயப்படாதே” என்றான். கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி, பவுல் ரோமாபுரிக்கு வருவான் என்று தூதன் கூறினான். கப்பலில் உள்ள அனைவரையும் தேவன் பாதுகாப்பார் என்றும் அவர்களில் யாரும் இறக்க மாட்டார்கள் என்றும் அவன் கூறினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23–24
தூதன் சொன்னதை பவுல் எல்லோருக்கும் சொன்னான். “திடமனதாயிருங்கள்,” “தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்,” என்று பவுல் சொன்னான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:21–25
சில நாட்களுக்குப் பிறகு, கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. ஆனால் தூதன் வாக்குறுதி அளித்தது போலவே, கப்பலில் இருந்த யாரும் இறக்கவில்லை. அவர்கள் அனைவரும் மெலித்தா என்ற தீவுக்கு நீந்தினர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:40–44; 28:1
மெலித்தா தீவில் வாழ்ந்த மக்கள் பவுலிடமும் கப்பலில் இருந்த மற்றவர்களிடமும் கருணை காட்டினர். எல்லோரும் சூடேற்றிக் கொள்வதற்காக அவர்கள் நெருப்பை மூட்டினர்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:2
திடீரென்று, நெருப்பிலிருந்து ஒரு பாம்பு வெளியே வந்து பவுலின் கையில் கடித்தது. ஆனால் பவுலுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அவன் பாம்பை அப்படியே உதறித் தள்ளிவிட்டான். மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்!
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:3–6
புபிலியு என்ற ஒருவன் பவுலைத் தனது வீட்டில் தங்க அனுமதித்தான். புபிலியுவின் தகப்பன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தான். பவுல் அவன் மீது கைகளை வைத்து, தேவனின் வல்லமையைப் பயன்படுத்தி அவனைக் குணப்படுத்தினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:7–8
பவுல் மெலித்தாவில் மூன்று மாதங்கள் செலவிட்டான். கர்த்தர் அவனுக்கு பல அற்புதங்களைச் செய்ய உதவினார், நோயுற்றவர்களை ஆசீர்வதித்து குணப்படுத்தினார். பின்னர், கர்த்தர் வாக்குறுதி அளித்தபடியே, பவுல் ரோமாபுரிக்குப் பயணம் செய்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:9–16
பவுல் ரோமாபுரியில் இருந்தபோது இன்னும் ஒரு கைதியாகவே இருந்தான். ஆனால் அவனது காவலர்கள் மக்கள் அவனைப் பார்க்க அனுமதித்தனர். கேட்கும் எவருக்கும் பவுல் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தான். அவன் பல இடங்களில் உள்ள சபை உறுப்பினர்களுக்கும் கடிதங்களை எழுதினான். இந்தக் கடிதங்கள் அல்லது நிருபங்களில் சில புதிய ஏற்பாட்டில் உள்ளன.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:16–31