வேதக் கதைகள்
இயேசு அப்போஸ்தலர்களிடம் தமது ஆடுகளை மேய்க்கும்படி கேட்குதல்— இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர் மீது அன்பு காட்டுதல்


யோவான் 21 ; மத்தேயு 28:16–20 ; மாற்கு 16:15–19

இயேசு அப்போஸ்தலர்களிடம் தமது ஆடுகளை மேய்க்கும்படி கேட்குதல்

இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர் மீது அன்பு காட்டுதல்

பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் மீன் பிடிக்கச் செல்லுதல்.

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களில் சிலரும் மீன் பிடிக்கச் சென்றார்கள். இரவு முழுவதும் அவர்கள் மீன் பிடித்தும், அவர்களுக்கு ஒன்றும் அகப்படவில்லை.

யோவான் 21:1–3

இயேசு அப்போஸ்தலர்களிடம் மீன் ஏதேனும் பிடித்திருக்கிறீர்களா என்று கேட்குதல்.

மறுநாள் காலையில், அப்போஸ்தலர்கள் இயேசுவைக் கரையில் கண்டார்கள், ஆனால் அவர் தான் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் மீன் ஏதேனும் பிடித்திருக்கிறீர்களா என்று அவர் கேட்டார். இல்லை என்று அவர்கள் சொன்னார்கள்.

யோவான் 21:4–5

அப்போஸ்தலர்கள் மீன்கள் நிறைந்த வலையைப் படகுக்குள் இழுக்க முயற்சி செய்தல்.

இயேசு அப்போஸ்தலர்களிடம், வலையைப் படகின் வலதுபுறமாகப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன் கிடைக்கும் என்று கூறினார். இயேசு சொன்னபடியே அப்போஸ்தலர்கள் செய்தார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் வலையில் நிறைந்தன! மீன்கள் நிறைந்திருந்ததினால் அந்த வலையைப் படகுக்குள் இழுக்க அப்போஸ்தலர்களால் முடியவில்லை.

யோவான் 21:6

பேதுரு இயேசுவை நோக்கி நீந்திச் செல்லுதல்.

அப்பொழுது அந்த மனிதர் யார் என்று யோவான் உணர்ந்தான். அவன் பேதுருவிடம், "அவர் கர்த்தர்" என்று சொன்னான். பேதுரு கடலில் குதித்து இயேசுவை நோக்கி நீந்திச் சென்றான். மற்ற அப்போஸ்தலர்கள் படகையும் மீன்களையும் கரைக்குக் கொண்டு வந்தார்கள். இயேசு சில அப்பங்களையும் மீன்களையும் சமைத்துக் கொண்டிருந்தார், மேலும் அப்போஸ்தலர்களைத் தம்மோடு உணவு அருந்தும்படி அழைத்தார்.

யோவான் 21:7–13

இயேசு பேதுருவிடம் தமது ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும்படி கூறுதல்.

அவர்கள் சாப்பிட்ட பிறகு, இயேசு பேதுருவிடம், “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார். பேதுரு ஆம் என்று சொன்னான். பிறகு இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்றார்.

யோவான் 21:15

பேதுரு இயேசுவிடம் தாம் அவரில் அன்பாயிருப்பதாகக் கூறுதல்.

பின்பு இயேசு மீண்டும் பேதுருவிடம் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று கேட்டார். மீண்டும், பேதுரு ஆம் என்று சொன்னான். இயேசு அவனிடம், “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார்.

யோவான் 21:16

இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களைப் கவனித்துக் கொள்ளுமாறு பேதுருவுக்குக் போதித்தல்.

இயேசு மூன்றாவது முறையாகப் பேதுருவிடம் நீ என்னை நேசிக்கிறாயா என்று கேட்டார். பேதுரு அவரை நோக்கி, "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான்." இயேசு மீண்டும் அவனிடம் , “என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்றார். இயேசுவைப் பின்பற்றுபவர்களை பேதுரு கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்

யோவான் 21:17

இயேசு அப்போஸ்தலர்களிடம் சுவிசேஷத்தைப் பகிருமாறு கூறுதல்.

பின்னர், இயேசு தனது அப்போஸ்தலர்களை ஒரு மலையில் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்கே அவர் அவர்களிடம், உலகம் முழுவதும் தமது சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்படியும், ஜனங்களுக்குத் தமது கட்டளைகளைக் கற்பிக்கும்படியும், விசுவாசித்த அனைவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கும்படியும் கூறினார். "நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்," என்று அவர் கூறினார். அவர் அவர்களுடனேயே இருப்பதாகவும், பரிசுத்த ஆவியின் மூலம் அவர்களுக்கு வல்லமையைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

மத்தேயு 28:16–20; மாற்கு 16:15–19; அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8

இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்லுதல்.

பிறகு, இயேசு ஒரு மேகத்தில் வானத்துக்கு ஏறிச் சென்றார். அவர் பரலோகத்திலிருக்கும் தமது பிதாவிடம் திரும்பிச் சென்றார். அப்போஸ்தலர்கள் அவர் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இரண்டு தூதர்கள் தோன்றினார்கள். இயேசு எப்படி வானத்துக்கு ஏறிச் சென்றாரோ, அதேபோல் ஒரு நாள் அவர் மீண்டும் பூமிக்குத் திரும்புவார் என்று அவர்கள் கூறினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:9–11