வேதக் கதைகள்
இயேசு ஒரு ஸ்திரீயை குணமாக்குதலும் யவீருவின் மகளை எழுப்புதலும்—“பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு”


மாற்கு 5:21–43

இயேசு ஒரு ஸ்திரீயை குணமாக்குதலும் யவீருவின் மகளை எழுப்புதலும்

“பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு”

யவீரு தனது மனைவி மற்றும் மகளுடன்

கலிலேயா கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊரில் யவீரு என்பவன் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தான். யூதர்கள் தேவனை ஆராதிக்க சென்ற ஜெப ஆலயத்தில் யவீரு ஒரு தலைவனாக இருந்தான்.

மாற்கு 5:22

யவீருவின் மகள் மிகவும் நோய்வாய்ப்படுதல்.

யவீருவின் மகள், 12 வயது மட்டுமே ஆனவள், மிகவும் நோய்வாய்ப்பட்டாள். அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீரு, அவளுக்கு உதவி தேவை என்று அறிந்தான். இயேசு அவர்களுடைய ஊரில் இருப்பதையும் அவன் அறிந்திருந்தான்.

மாற்கு 5:22–23

யவீரு தன் மகளைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கேட்குதல்

யவீரு தன் வீட்டை விட்டு வெளியேறி இயேசுவைக் கண்டான். அவன் இயேசுவின் பாதங்களில் மண்டியிட்டு, தன் மகளைக் குணப்படுத்த வருமாறு வேண்டினான். இயேசு தன் மகளை ஆசீர்வதித்தால், அவள் பிழைப்பாள் என்று யவீரு அறிந்திருந்தான். இயேசு யவீருவைப் பின்தொடர்ந்து அவனுடைய வீட்டிற்குச் சென்றார். திரளான ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

மாற்கு 5:23–24

கூட்டத்தில் ஒரு ஸ்திரீ இயேசுவால் குணமடைய விரும்புதல்.

அதே ஊரில் இருந்த ஒரு ஸ்திரீக்கும் இயேசுவின் உதவி தேவைப்பட்டது. அவள் 12 வருடங்களாக மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள். அவள் தன் பணத்தையெல்லாம் வைத்தியர்களுக்காகச் செலவிட்டிருந்தாள், ஆனால் யாராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை—அவள் இன்னும் மோசமாகிக்கொண்டே போனாள். இயேசு தன்னை குணப்படுத்த முடியும் என்று அந்தப் பெண் விசுவாசித்தாள். கூட்டத்தின் வழியாக அவள் எப்படி அவரிடம் போகமுடியும்?

மாற்கு 5:25–27

Jesus Heals Woman Raises Jairus' Daughter

இயேசுவின் ஆடைகளைத் தொட்டால் போதும், அவளால் குணமடைய முடியும் என்று அந்தப் பெண் நம்பினாள். இயேசு நடந்து செல்லும்போது அவள் அவரிடத்தில் வந்தாள். அவள் அவருடைய வஸ்திரங்களின் ஓரத்தைத் தொட்டவுடனே, அவளுடைய நோய் குணமானது.

மத்தேயு 9:20; மாற்கு 5:27–29; லூக்கா 8:44

இயேசு தன்னைத் தொட்டது யார் என்று கேட்குதல்.

உடனே, இயேசு நடப்பதை நிறுத்தினார். அவரிடமிருந்து வல்லமை வெளியேறுவதை அவர் உணர்ந்தார். “என்னைத் தொட்டது யார்?” என்று அவர் கேட்டார். அவருடைய சீஷர்கள் குழப்பமடைந்தார்கள். பலர் அவரைத் தொட்டனர்—அவர்கள் ஜனங்களால் சூழப்பட்டிருந்தனர் . இயேசு தன்னைத் தொட்டது யார் என்று சுற்றிப் பார்த்தார்.

மாற்கு 5:30–32; லூக்கா 8:45

இயேசு அந்தப் பெண்ணிடம் சமாதானமாகப் போகும்படி கூறுதல்.

இயேசு தம்முடைய வஸ்திரங்களைத் தொட்ட பெண்ணைக் கண்டார். அவள் தன் நோயைப் பற்றியும், இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றியும் இயேசுவிடம் சொன்னாள். இயேசு அவளை ஆறுதலடையும்படி சொன்னார். அவர்மீது வைத்திருந்த விசுவாசத்தினால் அவள் குணமடைந்தாள். அவர் அவளை நோக்கி: “சமாதானத்தோடே போ,” என்றார்.

மாற்கு 5:33–34, லூக்கா 8:47–48

தன் மகள் இறந்துவிட்டாள் என்பதை யவீரு அறிந்து கொள்ளுதல்.

பின்னர் யவீருவின் வீட்டிலிருந்து ஒரு மனுஷன் வந்தான். அவன் சொன்னான் , இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது: யவீருவின் மகள் ஏற்கனவே இறந்துவிட்டாள். இனி இயேசுவை யவீரு தொந்தரவு செய்ய வேண்டாம்.

மாற்கு 5:35

இயேசு யவீருவிடம் அவரில் விசுவாசிக்கும்படி கூறுதல்

இதைக் கேட்டவுடன் இயேசு யவீருவிடம், “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு.” என்றார். பிறகு அவர்கள் யவீருவின் வீட்டிற்குச் சென்றார்கள்.

மாற்கு 5:36–38

இயேசு யவீருவின் மகளை எழுந்திருக்கச் சொல்லுதல்.

யவீருவும் அவனுடைய மனைவியும் தங்கள் மகள் படுத்திருந்த இடத்திற்கு இயேசுவை அழைத்துச் சென்றனர். இயேசு அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து, “எழுந்திரு” என்றார்.

மாற்கு 5:41

யவீருவின் மகள் மீண்டும் உயிருடன் இருத்தல்.

உடனே, யவீருவின் மகள் தன் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவள் இனி இறந்தவள் இல்லை! இயேசு யவீருவையும் அவனுடைய மனைவியையும் அவளுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரும்படி கேட்டார். இயேசு தங்கள் மகளுக்குச் செய்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்த அற்புதத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று அவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மாற்கு 5:42–43