வேதக் கதைகள்
இயேசுவும் இளம் செல்வந்த வாலிபனும் — "நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"


மாற்கு 10:17–31

இயேசுவும் இளம் செல்வந்த வாலிபனும்

"நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"

இயேசுவிடம் ஓடி வரும் ஒரு இளம் வாலிபன்.

இயேசுவும் அவருடைய சீஷர்களும் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒரு இளம் செல்வந்த வாலிபன் இயேசுவிடம் ஓடி வந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டான். பரலோக பிதாவோடு மீண்டும் வாழ்வதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று அவன் இயேசுவிடம் கேட்டான்.

மாற்கு 10:17

இயேசு அந்த இளம் வாலிபனுக்குக் கட்டளைகளை நினைவுபடுத்தினார்.

இரட்சகர் அந்த இளம் வாலிபனிடம், தேவனின் கட்டளைகள் அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதை நினைவுபடுத்தினார்: கொலை செய்யாதே, பொய் சொல்லாதே, திருடாதே மற்றும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

மாற்கு 10:19

அந்த இளம் வாலிபன் இயேசுவுக்குப் பதிலளிக்கிறான்.

அந்த இளம் வாலிபன் தான் சிறுபிள்ளையாயிருந்ததிலிருந்தே இந்தக் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நடப்பதாகப் பதிலளித்தான்.

மாற்கு 10:20

இயேசு அந்த இளம் வாலிபனுக்குப் போதிக்கிறார்.

இயேசு அந்த இளம் வாலிபனை அன்போடு பார்த்தார். அவன் இன்னும் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று அவனிடம் கூறினார். அவனிடம் இருந்த அனைத்தையும் விற்று, அந்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து, இயேசுவைப் பின்பற்றுபவர்களில் ஒருவனாக ஆக வேண்டும். அப்பொழுது அவனுக்குப் பரலோகத்தில் பொக்கிஷங்கள் உண்டாயிருக்கும்!

மாற்கு 10:21

அந்த இளம் வாலிபன் அங்கிருந்து விலகிச் சென்றான்.

அந்த இளம் வாலிபன் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் இருந்த அனைத்தையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை. அவன் மிகுந்த கவலையோடு அங்கிருந்து சென்றான்.

மாற்கு 10:22

செல்வத்தை அல்ல, தேவனையே நாம் நம்ப வேண்டும் என்று இயேசு விளக்கினார்.

செல்வத்தை நேசிக்கும் ஜனங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிது என்று இயேசு கூறினார். சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். "அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்று அவர்கள் கேட்டார்கள். இரட்சிக்கப்படுவதற்கு நாம் தேவனை நம்ப வேண்டும் என்று இயேசு விளக்கினார். "தேவனால் எல்லாம் கூடும்" என்று அவர் கூறினார்.

மாற்கு 10:23–30