வேதக் கதைகள்
இரட்சகர் பிறந்தார்—தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியது.


லூக்கா 2; மத்தேயு 2:1-15

இரட்சகர் பிறந்தார்

தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியது

யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்குப் பயணமாகுதல்.

யோசேப்பும் மரியாளும் நாசரேத்தில் வாழ்ந்தார்கள். மரியாளுக்கு விரைவில் ஒரு குழந்தை பிறக்க இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடிமதிப்பு செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால் யோசேப்பும் மரியாளும் யோசேப்பின் சொந்த ஊரான பெத்லகேமுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு செல்ல அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

லூக்கா 2:1-5

பெத்லகேமில் மரியாளும் யோசேப்பும்

மரியாளுக்கு பயணம் எளிதாயிருக்கவில்லை. பெத்லகேமில் நிறைய பேர் வந்திருந்ததால், மரியாள் குழந்தையை பெற்றெடுக்கும்படி மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடம் கிடைக்கவில்லை.

லூக்கா 2:6-7

மரியாளும் யோசேப்பும் புதிதாகப் பிறந்த பாலகன் இயேசுவை ஏந்திக்கொண்டிருத்தல்

அவர்கள் வழக்கமாக விலங்குகள் அடைத்து வைக்கப்படும் இடமொன்றைக் கண்டுபிடித்தனர். இந்த தாழ்மையான இடத்தில் இயேசு பிறந்தார். மரியாளும் யோசேப்பும் பாலகன் இயேசுவை அன்புடன் நேசித்து பராமரித்தனர். அவர் கதகதப்பாகவும் சௌகரியமாகவும் இருக்க அவர்கள் அவரைத் துணியால் சுற்றினர். அவர்கள் அவரை விலங்குகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படும் முன்னணையில் உறங்க வைத்தனர்.

லூக்கா 2:6-7

ஒரு தூதன் மேய்ப்பர்களிடத்தில் தோன்றுதல்.

அருகிலிருந்த வெளிகளில், மேய்ப்பர்கள் இரவெங்கும் தங்கள் ஆடுகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கணத்தில், ஒரு வெளிச்சமான ஒளி அவர்களைச் சுற்றி பிரகாசித்தது, ஒரு தூதன் அவர்களுக்கு வெளிப்பட்டான். மேய்ப்பர்கள் பயந்தனர்.

தூதன் மேய்ப்பர்களிடம் இயேசு இப்போதுதான் பிறந்திருக்கிறார் என்று கூறுதல்.

தூதன் அவர்களிடம், பயப்படவேண்டாம் என்றும், ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல வந்துள்ளதாகவும் கூறினான். இரட்சகர் பெத்லகேமில் பிறந்திருக்கிறார், அவர் ஒரு முன்னணையில் கிடத்தியிருப்பதை அவர்கள் காண்பார்கள். அப்போது இன்னும் பல தூதர்கள் தோன்றி, சொன்னதாவது, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக.”

லூக்கா 2:10–15

மேய்ப்பர்கள் பாலகன் இயேசுவை வணங்குதல்.

மேய்ப்பர்கள் விரைவாக பெத்லகேமுக்குச் சென்று, தூதன் சொன்னபடியே பாலகன் இயேசுவை கண்டனர். அவர்கள் தாங்கள் கண்டதும் கேட்டதுமான அற்புதமான விஷயங்களை மக்களிடம் கூறினர். இயேசு ஒரு விசேஷமான குழந்தை என்பதை அவர்கள் அறிந்தனர்.

லூக்கா 2:16-17

பாலகன் இயேசுவை ஏந்தி நிற்கும் சிமியோன்.

மரியாளும் யோசேப்பும் பாலகன் இயேசுவை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க ஆலயத்துக்குக் கொண்டுசென்றனர். அங்கே அவர்கள் சிமியோன் என்ற ஒரு மனுஷனை சந்தித்தனர். சிமியோன் மரிப்பதற்கு முன்பு இரட்சகரைச் சந்திப்பான் என்று பரிசுத்த ஆவியானவர் அவனிடம் கூறியிருந்தார். அவன் பாலகனை கைகளில் ஏந்திக்கொண்டு, இயேசு தேவனுடைய அனைத்து பிள்ளைகளையும் இரட்சிப்பார் என்றான். யோசேப்பும் மரியாளும் அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.

லூக்கா 2:22-35

அன்னாள் பாலகன் இயேசுவை சந்தித்தல்

ஆலயத்தில் அன்னாள் என்ற பெயருடைய ஒருவளும் இருந்தாள். அவளின் கணவன் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான். அன்னாள் தன் வாழ்நாளை ஆலயத்தில் தேவனை ஆராதிப்பதற்காக அர்ப்பணித்திருந்தாள். இரட்சகரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததற்கு அன்னாள் தேவனுக்கு நன்றி கூறினாள். இரட்சகருக்காகக் காத்திருந்த ஒருவரை அவள் சந்திக்கும்போதெல்லாம், இயேசுவைப் பற்றி அவர்களிடம் கூறினாள்.

லூக்கா 2:36-38

சாஸ்திரிகள் வானத்தில் தோன்றிய புதிய நட்சத்திரத்தை காணுதல்.

இயேசு பிறந்தபோது, வேறு தேசத்தில் இருந்த சாஸ்திரிகள் வானத்தில் ஒரு புதிய நட்சத்திரத்தை கண்டார்கள். அது தேவ குமாரனும் உலகின் இரட்சகருமான ஒரு விசேஷமான குழந்தை பிறந்ததைக் குறிக்கிறது என்பதை அவர்கள் அறிந்தார்கள். அந்த குழந்தையை சந்திக்க, அவரை ஆராதிக்க அவர்கள் நீண்ட தூரப் பயணத்தை ஆரம்பித்தார்கள். அவர்மேல் தங்களுடைய அன்பை வெளிப்படுத்த அவருக்குப் பரிசுகளை கொண்டு வர விரும்பினர்.

மத்தேயு 2:1–7; ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பை 2a குறிப்புகளில் பார்க்கவும்

சாஸ்திரிகள் எருசலேமில் இரட்சகரைத் தேடுதல்

நீண்ட நேர பயணத்திற்குப் பிறகு, சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தார்கள். யூதர்களுக்காக ஒரு புதிய ராஜாவும், இரட்சகரும் பிறந்துள்ளார்; அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்று அவர்கள் கூறினர். புதிய ராஜாவை எங்கே காணலாம் என்று அவர்கள் கேட்டார்கள்.

மத்தேயு 2:1-2

ஏரோது தனது ஆட்களிடம் புதிய ராஜாவைத் தேடச் சொல்லுதல்.

ஏரோது என்ற பெயருடைய ராஜா, சாஸ்திரிகள் ஒரு புதிய ராஜாவைத் தேடுகிறார்கள் என்று அறிந்தான். அவன் கவலையடைந்தான். அவனின் ஆசாரியரும் வேதபாரகரும், வேதங்கள் சொன்னபடி புதிய ராஜா பெத்லகேமில் பிறப்பார் என்று அவரிடம் தெரிவித்தனர். ஏரோது, சாஸ்திரிகளிடம் பெத்லகேமில் சென்று புதிய ராஜாவைத் தேடுங்கள்; அவரை கண்டபின் வந்து எனக்குச் சொல்லுங்கள் என்று கூறினான்.

மத்தேயு 2:3-8

சாஸ்திரிகள் பாலகன் இயேசுவை பணிந்துகொள்ளுதல்.

சாஸ்திரிகள் பெத்லகேமுக்கு வந்தனர். அவர்கள் நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தார்கள், அது அவர்களை இயேசுவிடம் நடத்திச் சென்றது. அவர்கள் இயேசுவையும் மரியாளையும் யோசேப்பையும் கண்டபோது, இயேசுவுக்கு மூன்று விசேஷமான பரிசுகளை அளித்து, அவரை பணிந்தனர். தேவன் அவர்களை ஏரோதினிடம் திரும்பக்கூடாது என்று எச்சரித்ததால், அவர்கள் வேறு வழியாக தங்கள் வீட்டிற்குத் திரும்பினர்.

மத்தேயு 2:9-12

ஒரு தூதன் யோசேப்பிடம், தன் குடும்பத்தை எகிப்துக்குக் கூட்டிக்கொண்டுபோக வேண்டுமென்று கூறுதல்.

சாஸ்திரிகள் சென்ற பிறகு, யோசேப்பு ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில், ஒரு தூதன் யோசேப்பிடம், ஏரோது மிகவும் கோபமாக இருக்கிறான் என்று கூறினான். யோசேப்பு, மரியாளையும் இயேசுவையும் பாதுகாப்பாக இருக்கச் செய்ய, எகிப்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டி வந்தது.

மத்தேயு 2:13

யோசேப்பு, மரியாள் மற்றும் இயேசு எகிப்துக்குத் செல்லுதல்.

யோசேப்பு உடனே எழுந்தார். இரவு நேரத்திலேயே, யோசேப்பு மரியாளுடனும் இயேசுவுடனும் எகிப்துக்குப் புறப்பட்டார்.

மத்தேயு 2:14

யோசேப்பு, மரியாள், மற்றும் இயேசு தங்கள் வீட்டில் இருத்தல்.

ஏரோது இறந்துவிட்டான், இப்போது திரும்புவது பாதுகாப்பானது என்று தூதன் சொல்லும் வரை மரியாள், யோசேப்பு, மற்றும் இயேசு எகிப்திலேயே தங்கியிருந்தனர். பின்னர் அவர்கள் நாசரேத்தில் வாழ திரும்பிச் சென்றார்கள்.

மத்தேயு 2:15, 19–23