வேதக் கதைகள்
இயேசுவின் அப்போஸ்தலர்கள் அவருடைய சபையை வழிநடத்துகிறார்கள்—போதித்து, ஞானஸ்நானம் கொடுத்து, குணப்படுத்தி மற்றும் எல்லாவற்றையும் பகிர்ந்து


அப்போஸ்தலருடைய நடபடிகள் 1–4

இயேசுவின் அப்போஸ்தலர்கள் அவருடைய சபையை வழிநடத்துகிறார்கள்

போதித்து, ஞானஸ்நானம் கொடுத்து, குணப்படுத்தி மற்றும் எல்லாவற்றையும் பகிர்ந்து

அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தைப் போதிக்கிறார்கள்.

இயேசு பரலோகத்தில் தம்முடைய பிதாவினிடத்திற்குத் திரும்பிய பிறகு, அப்போஸ்தலர்கள் சபையின் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் இரட்சகரின் சுவிசேஷத்தைப் போதித்தார்கள், மக்களை அவருடைய சபையில் சேர அழைத்தார்கள், தேவனின் வல்லமையால் பல அற்புதங்களைச் செய்தார்கள். பரிசுத்த ஆவியை அனுப்பி அவர்களுக்கு உதவுவதாக இயேசு வாக்குறுதி அளித்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8–13; 2:41–47

அப்போஸ்தலர்கள் மத்தியாவை நியமிக்கிறார்கள்.

யூதாஸ் மரித்ததால், பதினொரு அப்போஸ்தலர்கள் மட்டுமே இருந்தனர். இயேசு கிறிஸ்துவின் சிறப்பு சாட்சியாக இருக்கவும் யூதாஸுக்கு மாற்றாக யாரை தேவன் விரும்புகிறார் என்பதையும் அறிய அப்போஸ்தலர்கள் ஜெபித்தார்கள். தேவன் மத்தியா என்ற மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவனானான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:15–26

அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டுள்ளனர்.

ஒரு சிறப்பு யூத விடுமுறை நாளில், சீஷர்கள் எருசலேமில் ஒன்றாக இருந்தனர். திடீரென்று, வானத்திலிருந்து ஒரு காற்று வீட்டை நிரப்பியது போல் உணரப்பட்டது. தங்கள் மீது அக்கினி போன்ற ஒளி தங்கியிருப்பதைக் கண்டார்கள், அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். பரிசுத்த ஆவியின் உதவியால், அவர்களால் மற்ற மொழிகளில் பேச முடிந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:1–4

அப்போஸ்தலர்கள் பேசுவதைக் கேட்க மக்கள் கூடிவருகிறார்கள்.

எருசலேமில் உள்ள மக்கள் இதைக் கேள்விப்பட்டபோது, ​​ஒரு பெரிய கூட்டம் கூடிவந்தது. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாகவும் இருந்தபோதிலும், அப்போஸ்தலர்கள் சொன்னதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மொழியில் கேட்டார்கள். மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்!

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:5–13

பேதுரு தனது சாட்சியத்தை அளிக்கிறான்.

பேதுரு எழுந்து நின்று கூட்டத்தினரிடம் பேசினான். அவன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்களிடம் கூறினான். இயேசுவே இரட்சகர் என்றும் அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார் என்றும் அவன் சாட்சியம் கூறினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:14–36

மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்று அப்போஸ்தலர்களிடம் கேட்கிறார்கள்.

இதைக் கேட்டதும், மக்கள் மாற வேண்டும் என்று உணர்ந்தார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அப்போஸ்தலர்களிடம் கேட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37

மக்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்படுதல்

பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றான். அன்று சுமார் 3,000 பேர் ஞானஸ்நானம் பெற்று சபையில் இணைந்தனர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38–43

நடக்க முடியாத ஒரு மனிதன் ஆலயத்துக்கு முன்னால் இருக்கிறான்.

பின்னர், பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குச் சென்றார்கள். நடக்க முடியாத ஒரு மனிதனை அவர்கள் கண்டார்கள். அவன் ஒவ்வொரு நாளும் அங்கே உட்கார்ந்து, மக்களிடம் பணம் கேட்பான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:1–2

பேதுருவும் யோவானும் அந்த மனிதனிடம் பேசுகிறார்கள்.

அந்த மனிதன் பேதுருவிடமும் யோவானிடமும் பணம் கேட்டான். அவர்கள் நின்று அவனைப் பார்த்தார்கள். பேதுரு, “எங்களை நோக்கிப் பார்” என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:3–4

அந்த மனிதன் தேவனின் வல்லமையால் குணமடைந்து எழுந்து நிற்க முடிகிறது.

தங்களிடம் வெள்ளியோ பொன்னோ இல்லை என்று பேதுரு கூறினான். ஆனால் அவர்களிடம் ஏதோ சிறப்பாக இருந்தது. பேதுரு, “நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” என்றான் பேதுரு அவனுக்கு எழுந்து நிற்க உதவினான். வாழ்க்கையில் முதல் முறையாக, அந்த மனிதனால் நடக்க முடிந்தது! அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, துள்ளிக் குதித்து, பேதுரு மற்றும் யோவானுடன் ஆலயத்துக்குள் நடந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6–8

பேதுரு மக்களிடம் மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்கச் சொல்கிறான்.

மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அந்த மனிதனைக் குணப்படுத்தியது தன்னுடைய வல்லமையோ அல்லது யோவானின் வல்லமையோ அல்ல என்று பேதுரு அவர்களிடம் கூறினான். இயேசு கிறிஸ்துவின் வல்லமையாலும் அவர் மீதுள்ள விசுவாசத்தாலும் அவன் குணமடைந்தான். பேதுரு அவர்களிடம் மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்கும்படி கூறினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:9–26

சில தலைவர்கள் பேதுரு மற்றும் யோவானிடம் இயேசுவைப் பற்றிப் போதிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.

பேதுருவும் யோவானும் போதித்த விஷயங்கள் சில யூதத் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. இயேசுவைப் பற்றி யாரும் போதிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:1–18

மக்கள் இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று பேதுருவும் யோவானும் தலைவர்களிடம் கூறுகிறார்கள்.

பேதுருவும் யோவானும் தாங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவார்கள் என்றும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தாங்கள் அறிந்ததை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தேவன் விரும்பினார் என்றும் சொன்னார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19–20

பேதுரு ஒரு பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது மக்கள் அங்கே கூடுகிறார்கள்.

அப்போஸ்தலர்கள் மிகுந்த வல்லமையுடன் இரட்சகரின் சுவிசேஷத்தைப் போதித்துக்கொண்டே இருந்தார்கள். அவருடைய சபையில் அதிகமான மக்கள் சேர்ந்தனர். அவர்கள் ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள், எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் தங்களிடம் இருந்ததை விற்று, பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கும்படி அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31–37