மாற்கு 14–15; லூக்கா 22–23; யோவான் 18–19
இயேசு கைது செய்யப்படுதல்
தேவகுமாரனை நியாயந்தீர்த்தல்
இயேசு கெத்செமனேயில் ஜெபித்து முடித்து, வேதனையை அனுபவித்த பிறகு, யூதாஸ் ஒரு பெரிய யூதக் காவலர் கூட்டத்தோடு அங்கே வந்து சேர்ந்தான். யூதாஸ் அப்போஸ்தலர்களில் ஒருவன். இயேசு அடிக்கடி இந்தத் தோட்டத்திற்குச் செல்வதை அவன் அறிந்திருந்தான். இயேசுவைக் கண்டுபிடித்துக் கொண்டுபோவதற்கு ஏதுவாக, யூதத் தலைவர்கள் யூதாசுக்குப் பணம் கொடுத்திருந்தார்கள்.
யோவான் 18:2–3
காவலர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டுபோக முயன்றபோது, பேதுரு ஒரு பட்டயத்தை உருவினான். அவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை அறுத்துப் போட்டான்.
யோவான் 18:10
இயேசு பேதுருவிடம் அவனது பட்டயத்தை உறையிலே போடும்படி சொன்னார். தனது பிதாவின் சித்தப்படியே தான் செய்ய வேண்டும் என்று இயேசு கூறினார்.
யோவான் 18:11
இயேசு அந்த வேலைக்காரனின் காதைத் தொட்டு, அதை குணமாக்கினார்.
லூக்கா 22:51
காவலர்கள் இயேசுவைப் பிரதான ஆசாரியனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். மற்ற யூதத் தலைவர்களும் அங்கே இருந்தார்கள். இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு எதிராக ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் வகைதேடினார்கள். அவரைப் பற்றிப் பொய் சொல்லும்படி சில ஆட்களை அவர்கள் கூட்டி வந்தார்கள்.
மாற்கு 14:53–61
கடைசியாக, பிரதான ஆசாரியன் இயேசுவிடம், அவர் தேவனுடைய குமாரனா என்று கேட்டான். இயேசு, “நான் அவர்தான்” என்றார்.
மாற்கு 14:61–62
இது பிரதான ஆசாரியனையும் மற்ற தலைவர்களையும் கோபப்படுத்தியது. அவர்கள் இயேசுவை அடித்தார்கள், அவர்மேல் துப்பினார்கள், அவரைப் பார்த்து கேலி செய்தார்கள். அவர் கொல்லப்பட வேண்டும் என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மாற்கு 14:63–65
இயேசு பிரதான ஆசாரியனின் வீட்டில் இருந்தபோது, பேதுரு வெளியே காத்திருந்தான். அவன் குளிர்காய்வதற்கு நெருப்பின் அருகே அமர்ந்தான். மூன்று முறை, ஜனங்கள் பேதுருவை இயேசுவின் சீஷர்களில் ஒருவனாக அடையாளம் கண்டுகொண்டதாகக் கூறினார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும், தனக்கு இயேசுவைத் தெரியாது என்று பேதுரு சொன்னான்.
மாற்கு 14:54, 66–71
அப்போது சேவல் கூவியது, இயேசு தனக்குச் சொன்னதை பேதுரு நினைவுகூர்ந்தான்: அதாவது, பேதுரு அவரை மூன்று முறை மறுதலிப்பான் என்று இயேசு சொல்லியிருந்தார். பேதுரு அழுதுகொண்டே அங்கிருந்து சென்றான்.
மாற்கு 14:72
யூதத் தலைவர்கள் இயேசுவை ரோமானிய தேசாதிபதியான பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே ஜனங்களும் கூட்டமாக வந்தார்கள். இயேசுவைக் கொலை செய்ய வேண்டும் என்று தலைவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். இயேசு தம்மை யூதர்களின் ராஜா என்று சொல்லிக்கொள்கிறார் என்று அவர்கள் பிலாத்துவிடம் சொன்னார்கள்.
மாற்கு 15:1–3 ; லூக்கா 23:2 ; யோவான் 18:28–31
நீ யூதருடைய ராஜாவா என்று பிலாத்து இயேசுவிடம் கேட்டான். என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்று இயேசு சொன்னார். ஜனங்களுக்கு சத்தியத்தை போதிக்கவே தாம் இந்த உலகத்திற்கு வந்ததாக அவர் விளக்கினார்.
யோவான் 18:33–37
இயேசு எந்தத் தவறும் செய்ததாக தான் நம்பவில்லை என்று பிலாத்து சொன்னான். ஆனால் ஜனங்களில் பலர், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். ஜனங்கள் கேட்டபடியே, இயேசுவைக் கொலை செய்ய பிலாத்து முடிவு செய்தான்.
மாற்கு 15:12–14; லூக்கா 23:14–24