முன்னுரை
புதிய ஏற்பாட்டைப் பற்றியது
இயேசு கிறிஸ்து மற்றும் அவரைப் பின்பற்றியவர்களின் கதை
வேதாகமம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டில் பண்டைய கால தீர்க்கதரிசிகள் எழுதியவைகள் இடம்பெற்றுள்ளன. இந்த தீர்க்கதரிசிகளில் சிலர், தேவன் ஒரு இரட்சகரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்ததாக எழுதினார்கள். அவரே தேவனுடைய குமாரன் எனப்படுவார்; நாம் மீண்டும் தேவனோடு வாழும்படியாக, அவர் நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிப்பார்.
ஏசாயா 53:3–5; யாக்கோபு 7:11; மோசே 4
புதிய ஏற்பாடு, இந்த வாக்குத்தத்தம் எவ்வாறு நிறைவேறியது என்பதை விவரிக்கிறது. அது தேவனுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி எடுத்துரைக்கிறது.
லூக்கா 2:4-7
புதிய ஏற்பாடு இயேசுவின் வாழ்க்கையையும் பற்றிச் சொல்லுகிறது. அவர் யூத மக்களிடையே வாழ்ந்து, நாம் ஒரு நாள் பரலோகப் பிதாவிடம் திரும்பிச் செல்லும் வகையில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நமக்குப் போதித்தார்.
மத்தேயு 5:1-2
இயேசு பிள்ளைகளை ஆசீர்வதித்து அவர்களுக்கு ஊழியம் செய்தார். அவர் மக்களுக்காக எண்ணற்ற அற்புதங்களைச் செய்தார்; நோயுற்றோருக்கு சுகமளித்து, இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்தார்.
மத்தேயு 4:23
இயேசு தம்மைப் பின்பற்றியவர்களில் பன்னிருவரை அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுத்தார். அவருடைய சபையை வழிநடத்தும்படி அவர் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.
லூக்கா 9:1-2
இயேசு நம்மை நேசித்ததினால், அவர் நம்முடைய அனைத்து வேதனைகளையும், துக்கங்களையும், பாவங்களையும் தம்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் நமக்காக மரித்தார். பின்னர், மூன்றாம் நாளில், அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்! இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்; அவரால்தான், நாம் பாவங்களில் இருந்து மனந்திரும்பி, மரித்த பிறகு மீண்டும் வாழ முடியும்.
இயேசுவை அறிந்தும் அன்புகூர்ந்தும் இருந்தவர்கள் இதையெல்லாம் எழுதியுள்ளனர். இயேசு கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை வளர்க்க, சபை உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக அவரது அப்போஸ்தலர்கள் கடிதங்களை எழுதினர். அவர்கள் எழுதியவைகள் பற்பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இப்போது, புதிய ஏற்பாட்டில் அவற்றை வாசித்து, இயேசு கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றுவது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
லூக்கா 1:1-4