லூக்கா 24:1–12, 36–49; யோவான் 20
அவர் உயிர்த்தெழுந்தார்
இயேசு கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை ஜெயித்தார்
இயேசுவின் சீஷர்கள் அவரது உடலைக் கல்லறையில் வைத்தனர். அவருடைய சரீரத்தைப் பராமரிக்க அவர்கள் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்பினர், ஆனால் ஏறக்குறைய ஓய்வுநாள் நெருங்கிவிட்டது. ஓய்வுநாள் முடிந்த பிறகு திரும்ப வர திட்டமிட்டனர்.
லூக்கா 23:52–56
இயேசு இறந்த மூன்றாம் நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்றவர்களும் கல்லறைக்குச் சென்றார்கள்.
லூக்கா 24:1; யோவான் 20:1
அவர்கள் அங்கு வந்தபோது, கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் கல்லறைக்குள் சென்றார்கள், இயேசுவின் உடல் அங்கே இல்லை.
லூக்கா 24:2–3; யோவான் 20:1
இயேசுவின் உடலை யாரோ எடுத்துச் சென்றுவிட்டதாக பேதுரு மற்றும் யோவானிடம் சொல்ல மரியாள் ஓடினாள். பேதுருவும் யோவானும் கல்லறைக்கு ஓடினார்கள்.
யோவான் 20:2–4
அவர்கள் கல்லறைக்குச் சென்றபோது, பேதுருவும் யோவானும் உள்ளே சென்றார்கள். இயேசுவின் உடல் அங்கே இல்லை என்பதைக் கண்டார்கள். அவரைச் சுற்றியிருந்த துணி மட்டும் அங்கே இருந்தது.
யோவான் 20:5–7
பேதுருவும் யோவானும் வீட்டிற்குச் சென்றார்கள், ஆனால் மரியாள் அழுதபடி கல்லறைக்கு அருகிலேயே நின்றாள். அவள் கல்லறைக்குள் பார்த்தாள், அங்கே இரண்டு தூதர்களைக் கண்டாள். அவள் ஏன் அழுகிறாள் என்று அவர்கள் கேட்டார்கள். இயேசுவின் உடலை யாரோ எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அது எங்கே இருக்கிறது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவள் சொன்னாள்.
யோவான் 20:11–13
பின்னர் இயேசு வந்தார், ஆனால் அது அவர்தான் என்று மரியாள் அறிந்திருக்கவில்லை. இயேசு அவளை நோக்கி, "ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார். மரியாள் அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்தாள். இயேசுவின் உடல் எங்கே இருக்கிறது என்று அவருக்குத் தெரியுமா என்று அவள் அவரிடம் கேட்டாள்.
யோவான் 20:14-15
இயேசு, “மரியாளே” என்றார். அவள் திரும்பிப் பார்த்தாள். இப்போது அது இயேசு என்று அவளுக்குத் தெரிந்தது! அவள் அவரை நோக்கி: "போதகரே" என்றாள். இயேசு தமது பரலோக பிதாவிடம் செல்ல வேண்டும் என்று மற்ற சீஷர்களிடம் சொல்லும்படி அவளிடம் கேட்டார். மரியாள் மற்ற சீஷர்களைக் கண்டுபிடித்து, தான் இயேசுவைக் கண்டதாகவும், அவர் மீண்டும் உயிரோடிருக்கிறார் என்றும் அவர்களிடம் சொன்னாள்!
யோவான் 20:16–18
அந்த மாலையில், அப்போஸ்தலர்களில் பலர் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். யூதர்களின் தலைவர்கள் தங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள் என்று பயந்து, அவர்கள் கதவுகளை மூடிக்கொண்டார்கள். திடீரென்று, அவர்கள் நடுவில் இயேசு நிற்பதைக் கண்டார்கள். முதலில் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவரை ஒரு ஆவியென்று நினைத்தார்கள். இயேசு, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
லூக்கா 24:33–38; யோவான் 20:19
இயேசு தம்முடைய கைகளையும் கால்களையும் தொடும்படி அப்போஸ்தலர்களை அழைத்தார். அவர் வெறும் ஆவி அல்ல, ஒரு உடல் இருக்கிறது என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் அவர்களுடன் மீனையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் கூட சாப்பிட்டார். அவரைக் கண்டதில் சீஷர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்!
லூக்கா 24:39–44; யோவான் 20:20
பின்னர் இயேசு தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி போதித்த வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ள தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு உதவினார். அவர் மூலம் ஜனங்கள் மனந்திரும்பியும் மன்னிப்பும் பெற முடியும் என்பதை அனைவருக்கும் போதிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்போஸ்தலர்கள் அவருடைய சாட்சிகளாக இருப்பார்கள்.
லூக்கா 24:44–48
இயேசு வந்தபோது அப்போஸ்தலன் தோமா அங்கு இல்லை. இயேசுவின் கைகளில் உள்ள ஆணித் தழும்புகளைக் காணாமல், அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நம்ப மாட்டேன் என்று அவன் சொன்னான்.
யோவான் 20:24–25
எட்டு நாட்களுக்குப் பிறகு, சீஷர்கள் ஒன்றாக கூடினர். இயேசு மீண்டும் தோன்றினார். இந்த முறை தோமா அங்கே இருந்தான்.
யோவான் 20:26
இயேசு தோமாவைத் தம்முடைய கைகளிலும் விலாவிலும் உள்ள காயங்களைத் தொட அழைத்தார். அவர் தோமாவிடம், "அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு" என்று கூறினார். தோமா, "என் ஆண்டவரே! என் தேவனே!" என்று கூறினான். இப்போது, இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை தோமா விசுவாசித்தான். தன்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு கூறினார்.
யோவான் 20:27–29