மத்தேயு 1; லூக்கா 1
தூதர்கள் மரியாளையும் யோசேப்பையும் சந்தித்தல்
தேவனுடைய குமாரனை கவனமாக வளர்த்திட தேர்ந்தெடுக்கப்படுதல்
மரியாள் எனப்படும் ஒரு பெண் நாசரேத் என்ற ஊரில் வசித்து வந்தாள். அவள் தேவனை நேசித்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வந்தாள். மரியாள், தேவனை நேசித்த யோசேப்பு எனப்படும் ஒருவருடன் திருமணம் செய்யவிருந்தாள்.
மத்தேயு 1:18-19; லூக்கா 1:26-28
ஒரு நாள், காபிரியேல் என்ற தூதன் மரியாளைச் சந்தித்தான். முதலில், மரியாள் பயந்தாள். ஆனால் தூதனாகிய காபிரியேல், தான் தேவனால் அனுப்பப்பட்டதாகக் கூறினான். மரியாள் பயப்பட வேண்டியதில்லை. மரியாள் தேவனுக்கு மிகவும் விசேஷமானவள் என்றும், விரைவில் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் அவன் சொன்னான். மரியாளின் குழந்தை தேவனுடைய குமாரனாகிய இயேசுவாக இருப்பார்.
லூக்கா 1:26-33
ஆனால் மரியாள் குழப்பமடைந்தாள். அவள் இன்னும் யோசேப்புடன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவளுக்கு எப்படி ஒரு குழந்தை உண்டாகும்? அது தேவனுடைய வல்லமையினால் ஆகும் என்று காபிரியேல் விளக்கினான். “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்று அவன் அவளிடம் கூறினான்.
லூக்கா 1:34-37
மரியாள் மனத்தாழ்மையும் விசுவாசமும் உடையவள். அவள் காபிரியேலிடம் தான் கர்த்தருடைய அடிமை என்று கூறினாள். தேவனுடைய குமாரனின் தாயாக இருக்க அவள் மனமுள்ளவளாக இருந்தாள்.
லூக்கா 1:38
மரியாளுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை யோசேப்பு அறிந்தபோது, அவன் கலக்கமடைந்தான். அவன் இன்னும் மரியாளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று யோசித்தான்.
மத்தேயு 1:19
இப்படியிருக்கையில் ஒரு இரவில், ஒரு கனவிலே தூதன் யோசேப்பை சந்தித்தான். மரியாளின் குழந்தை தேவனுடைய குமாரன் என்றும் அவனுக்கு இயேசு என்று பேரிட வேண்டும் என்றும் தூதன் யோசேப்பிடம் சொன்னான். இயேசு தம்முடைய எல்லா ஜனங்களையும் அவர்களுடைய பாவங்களை நீக்கி இரட்சிப்பார். யோசேப்பு மரியாளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தூதன் சொன்னான்.
மத்தேயு 1:20-23
தூதன் சொன்னபடியே யோசேப்பு செய்தான். யோசேப்பும் மரியாளும் திருமணம் செய்து கொண்டார்கள்.
மத்தேயு 1:24
மரியாள் தன் உறவினராகிய எலிசபெத்தை சந்திக்கப் போனாள். எலிசபெத்து மிகவும் வயதானவளாக இருந்தாலும், அவளும் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தூதன் மரியாளிடம் கூறினான். இது தேவனிடமிருந்து வந்த மற்றொரு அற்புதம். அவளுடைய மகன் வளர்ந்து யோவான் ஸ்நானனாக மாறுவான். மரியாள் வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் எலிசபெத்தை வாழ்த்தினாள்.
லூக்கா 1:13–17, 36, 39–40
எலிசபெத்து மரியாளின் குரலைக் கேட்டவுடனே, எலிசபெத்தின் குழந்தை அவளுக்குள் மகிழ்ச்சியுடன் துள்ளியது. எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டாள். மரியாள் தேவனுடைய குமாரனை சுமப்பதை அவள் அறிந்திருந்தாள். மரியாள் எலிசபெத்துடன் மகிழ்ந்தாள். தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்க தேவன் செய்கிற எல்லா அற்புதமான காரியங்களுக்காகவும் மரியாள் தேவனை துதித்தாள்.
லூக்கா 1:41-55