வேதக் கதைகள்
இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தல்—மக்கள் தங்கள் இரட்சகரை வரவேற்றல்


மத்தேயு 21:1–16

இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தல்

மக்கள் தங்கள் இரட்சகரை வரவேற்றல்

மக்கள் எருசலேமுக்கு வெளியே இயேசுவை சந்திக்கக் காத்திருந்தல்.

யூதர்களுக்கு முக்கியமான பஸ்கா பண்டிகை நெருங்கி வந்துகொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்காக மக்கள் பலர் எருசலேமில் கூடினர். இயேசுவும் அவருடைய சீஷர்களும் கூடச் சென்றார்கள். இயேசு வருவதை அறிந்த மக்கள், அவரைச் சந்திக்க விரைந்தனர்.

மத்தேயு 21:1; யோவான் 12:12–13

இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு அருகே வருதல்

இயேசுவும் சீஷர்களும் எருசலேமின் அருகே வந்ததும், அவர் ஒரு கழுதையை தன்னிடம் கொண்டு வரும்படி கேட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு தீர்க்கதரிசி, இரட்சகர் கழுதை குட்டியாகிய மறியின் மீது சாந்தகுணமுள்ளவராய் வருவார் என்று அறிவித்திருந்தார்.

மத்தேயு 21:1–7; சகரியா 9:9ஐயும் பார்க்கவும்.

இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தல்.

கழுதையின் மீது ஏறியபடி இயேசு நகரத்திற்குள் வந்தார். அவரைக் கண்டபோது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அவரை ஒரு ராஜாவைப் போல வரவேற்றார்கள். கழுதை நடந்து செல்வதற்காக அவர்கள் பனை ஓலைகளையும் துணிகளையும் தரையில் விரித்தனர். அவர்கள் தேவனுக்கு நன்றி செலுத்தி, “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஆர்ப்பரித்தார்கள்.

மத்தேயு 21:8–9; லூக்கா 19:36-38; யோவான் 12:13

மக்கள் இயேசுவை கவனித்தல்.

எருசலேமில் இருந்த பல மக்கள் என்ன நடக்கிறது என்று வியந்தார்கள். “இவர் யார்?” என்று அவர்கள் விசாரித்தார்கள். இது நாசரேத்திலிருந்து வந்த இயேசு என்று மற்றவர்கள் பதிலளித்தார்கள்.

மத்தேயு 21:10–11

இயேசு ஆலயத்தில் மக்கள் பணம் பரிமாறிக் கொண்டிருப்பதை பார்த்தல்.

அடுத்ததாக, இயேசு ஆலயத்திற்குள் சென்றார். அங்கு சிலர் பணம் பரிமாறிக் கொண்டு, பலி செய்ய வேண்டிய விலங்குகளை விற்றனர். அவர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பதை இயேசு அறிந்திருந்தார்.

மத்தேயு 21:12

பணம் மாற்றுபவர்களை இயேசு ஆலயத்தை விட்டு வெளியேறச் சொல்லுதல்.

ஆலயத்தில் வழிபட விரும்பியவர்களிடமிருந்து அவர்கள் பணம் சம்பாதிப்பது இயேசுவுக்கு பிடிக்கவில்லை. அவர்களை ஆலயத்தை விட்டு வெளியேறச் செய்து, அவர்களுடைய மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். “என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்”, என்றார்.

மத்தேயு 21:12–13; ஏசாயா 56:7; எரேமியா 7:11 ஐயும் பார்க்கவும்.

ஆலயத்தில் மக்களை இயேசு குணப்படுத்துதல்.

ஆலயத்தில் குருடர் நடக்க முடியாதோர் இயேசுவிடம் வந்தபோது , அவர் அவர்களை குணப்படுத்தினார். பிள்ளைகள் இயேசுவைப் புகழ்ந்து, அவர் இரட்சகர் என்று கூறி, “ஓசன்னா” என்று ஆர்ப்பரித்தனர்.

மத்தேயு 21:14–15

ஆசாரியர்களுடனும் வேதபாரகருடனும் இயேசு பேசுதல்.

இயேசு செய்ததைக் கண்டும், பிள்ளைகள் சொல்வதைக் கேட்டும் சில ஆசாரியர்களும் வேதபாரகர்களும் வருத்தமடைந்தனர் . பிள்ளைகளின் வாயிலிருந்து பரிபூரண துதி உண்டாகும்படி செய்வார் என்று கூறும் ஒரு வேதவாக்கியத்தை இயேசு அவர்களுக்கு நினைவூட்டினார்.

லூக்கா 21:15–16; சங்கீதம் 8:2 ஐயும் பார்க்கவும்.