பரிசுத்த வேதங்கள்—விசுவாசத்தின் அடித்தளம்
மனமாற்றங்களிலும், சுவிசேஷத்தில் உண்மையாக நிலைத்திருப்பதிலும் பரிசுத்த வேதங்களின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
நானும் என் மனைவி மேரியும் சமீபத்தில் ஒரு புத்தகத்தின் படத்துடன் ஒரு டி-ஷர்ட்டைப் பார்த்தோம், அதன் முன்பக்கத்தில் ஒரு செய்தி, அது கூறுவதாவது: “புத்தகங்கள்: அசல் கையடக்க சாதனம்.”
இந்த சுவாரஸ்யமான செய்தியைப் பற்றியும், அனைத்து வகையான கையடக்க சாதனங்கள் எவ்வளவு குறிப்பிடத்தக்கதாக மாறியுள்ளன என்பதைப் பற்றியும் நான் யோசித்தேன். மேலும் ஆழ்ந்து சிந்தித்தபோது, எந்த ஒரு சாதனமும் அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட ஒன்றும் கூட தெய்வீக வெளிப்பாட்டிலிருந்து வரும் ஆவிக்குரிய வழிகாட்டலைப் போல முக்கியமானதாகவோ அல்லது குறிப்பிடத்தக்கதாகவோ ஒருபோதும் இருக்காது என்பதை உணர்ந்தேன்.
கையடக்கமாகவோ அல்லது டிஜிட்டலாகவோ இருந்தாலும், பரிசுத்த வேதாகமம் மற்றும் மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடு, உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஆவிக்குரிய வழிகாட்டுதலையும் போதனையையும் வழங்குகிறது. பண்டைய தீர்க்கதரிசிகளுக்கும் மக்களுக்கும் தேவனின் வழிகாட்டுதலையும், நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு அவை வழங்கும் வழிகாட்டுதலையும் ஆவணப்படுத்துவதில் இந்த புத்தகங்களின் ஆழமான பங்கிற்காக நாம் அவற்றைப் பொக்கிஷமாக கருதுகிறோம்.
ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் போதனைகளுடன் இணைந்து, இந்த பரிசுத்த வேதங்கள் இன்றைய உலகில் நமக்கு கோட்பாட்டு வழிகாட்டுதலை வழங்குகின்றன. கர்த்தரிடமிருந்து வழிகாட்டுதலை நாடும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் அறிவுரை, திருத்தம், ஆறுதல் மற்றும் தேறுதல் ஆகியவற்றை வழங்கும்போது இந்த வேதங்கள் மிகவும் வல்லமை வாய்ந்தவைகளாக உள்ளன.
பரிசுத்த ஆவியிடமிருந்து ஆவிக்குரிய உணர்த்துதலுடன் இணைந்து வேதங்கள், நொறுங்குண்ட இருதயங்களையும், நருங்குண்ட ஆவிகளையும் மற்றும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புபவர்களின் மனமாற்றத்தையும் எளிதாக்கும் முதன்மை ஆதாரமாகத் தொடர்கின்றன. விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிட சத்துருவின் தொடர்ச்சியான முயற்சிகளைத் தாங்கக்கூடிய ஒரு அடித்தளத்தைக் கட்ட வேதங்கள் உதவுகின்றன.
புதிதாக மனம் மாறியவர்கள் சபையின் வரலாறு முழுவதும் ஆசீர்வதிக்கப்பட்டு, அதன் உயிர்நாடியாக இருந்துள்ளனர். ஒரு உதாரணம் எனக்கு மிகவும் மதிப்புமிக்கது. நான் இளம் ஆயராக இருந்தபோது, இரண்டு அற்புதமான ஊழியக்கார சகோதரிகள் வில்லியம் எட்வர்ட் முஸ்மான் குடும்பத்திற்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். தந்தை, மிகவும் திறமையான வழக்கறிஞர், ஒரு பெரிய நிறுவனத்தில் பொது ஆலோசகராக இருந்தார். அவருடைய அர்ப்பணிப்புள்ள மனைவி ஜேனட், குடும்பம் இன்னும் கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையை வாழ முயல உதவிக்கொண்டிருந்தார்.
20 வயதையொட்டிய அவர்களின் சிறந்த மகன் மற்றும் மகள், இருவரும்கூட கற்பிக்கப்பட்டனர். நால்வரும் பாடங்களைக் கற்று சபைக்குச் சென்று கொண்டிருந்தனர். ஊழியக்கார சகோதரிகள் மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதையும் அந்த பரிசுத்த வேதத்தின் சாட்சிக்காக ஜெபிப்பதையும் வலியுறுத்தினார்கள். குறிப்பிடத்தக்க வகையில், குறுகிய நேரத்தில் முழு மார்மன் புஸ்தகத்தையும் குடும்பத்தினர் ஜெபத்துடன் வாசித்தனர்.
பிணைய ஊழியக்காரர்கள், இருவரும் முந்தைய தொகுதி ஒத்தாசை சங்கத்தின் தலைவர்கள், அவர்களுடன் திருவிருந்துக் கூட்டங்களுக்கு சென்றனர்.
குடும்பம் ஞானஸ்நானம் பெறுவதை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அவர்கள் சபைக்கு எதிரான விமர்சன புத்தகங்களை சரமாரியாகப் பெற்றனர். இது இணைய தளம் வருவதற்கு முன்பு நடந்தது, ஆனால் அந்த பொருட்கள் ஒரு பெரிய அட்டை பெட்டியை நிரப்பியது.
எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவுவதற்காக ஊழியக்கார சகோதரிகள், சமீபத்தில் அழைக்கப்பட்ட 34 வயதான ஆயரான என்னை அழைத்தனர். நாங்கள் அவர்களின் முன்னறையில் கூடியபோது, சபையை எதிர்த்து விமர்சிக்கும் துண்டுப் பிரசுரங்களின் பெரிய பெட்டி அறையின் நடுவில் இருந்தது. நான் ஜெபத்துடன் இந்த பணியை அணுகினேன். ஆரம்ப ஜெபத்தின் போது, ஆவியானவர் என்னிடம் கிசுகிசுத்தார், “அது உண்மை என்று அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்.” இது மிக முக்கியமாயிருந்தது! குடும்பத்தின் மற்றவர்களுக்கு ஏற்கனவே ஒரு சாட்சியம் இருப்பதாக சகோதரிகள் நம்பினர். அவர்களுக்குத் தந்தையைப் பற்றி உறுதியாகத் தெரியவில்லை.
அவர் ஏற்கனவே ஒரு சாட்சியம் பெற்றிருப்பதாக ஆவியானவர் என்னைத் தூண்டினார் என்று, நான் உடனடியாக அவரிடம் தெரிவித்தேன். “அது உண்மையா?” அவர் என்னை உற்றுப் பார்த்து, மார்மன் புஸ்தகம் மற்றும் சபை பற்றிய சத்தியத்தை ஆவியானவர் உறுதிப்படுத்தினார் என்று கூறினார்.
அவர்களுக்கு ஆவிக்குரிய உறுதிப்படுத்தல் ஏற்கனவே இருந்தால் துண்டுப் பிரசுரங்களை மறுபரிசீலனை செய்வது அவசியமா என்று நான் கேட்டேன்.
அது தேவையில்லை என்று தந்தை பதிலளித்தார். அவரது பதிலை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
அவரிடம் ஒரு முக்கியமான கேள்வி இருப்பதாக அவர் கூறினார்: அவர்கள் அதிகமான சபை எதிர்ப்புப் புத்தகங்களைப் பெற்றதற்கு ஒரு காரணம், அவர்கள் வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். கூடுதலாக, அவர் அந்த விசுவாசத்துக்காக ஒரு புதிய கூடுமிடத்தை கட்ட உதவுவதாக ஒரு பெரிய உறுதிமொழியை செய்திருந்தார். தசமபாகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஊழியக்கார சகோதரிகள் அவருக்குக் கற்பித்ததாக அவர் எனக்குத் தெரிவித்தார், அதை அவர் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர் முன்பு செய்த உறுதிமொழியை மதிக்கத் தவறுவது தவறாகாதா என்று அவர் கேட்டார். உறுதியளித்தபடி செலுத்துவது மரியாதைக்குரியதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று நான் அவருக்கு உறுதியளித்தேன்.
முஸ்மான்கள் தங்கள் மகன், மருமகள் மற்றும் மகளுடன்.
முழு குடும்பமும் ஞானஸ்நானம் பெற்றது. ஒரு வருடம் கழித்து அவர்கள் ஓக்லாண்ட் கலிபோர்னியா ஆலயத்தில் ஒரு குடும்பமாக முத்திரிக்கப்பட்டனர். நான் அங்கு இருக்கும் சிலாக்கியம் கிடைத்தது. மகன் சட்டப் படிப்பை முடித்தார், கலிபோர்னியா பார் தேர்வில் தேர்ச்சி பெற்றார், உடனடியாக ஜப்பானில் ஒரு விசுவாசமிக்க ஊழியம் செய்தார். அடுத்தடுத்த தலைமுறைகள் சுவிசேஷத்திற்கு உண்மையாக இருப்பதை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். பேத்திகளில் ஒருவரின் முத்திரித்தலுக்கு தலைமைதாங்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது.
நம் நாளில் நிகழும் மனமாற்றங்கள் சமமாக குறிப்பிடத்தக்கவை. கடந்த ஜூன் மாதம் கன்சாஸ் சிட்டி சீஃப்ஸின் தலைமை கால்பந்து பயிற்சியாளர் ஆண்டி ரீட் மற்றும் நான், நமது விசுவாசம் மற்றும் பிற மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றவர்களுடன் சேர்ந்து, நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்சைடு சபையில் பன்மத நிகழ்வில் பேசினோம். பயிற்சியாளர் ரீட் இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் அழைப்புகளுக்குப் பதிலளித்து, அதுவே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமாகும் என வலியுறுத்தினார். அடுத்த நாள் காலை, எங்கள் மனைவிகளான டாமி ரீட் மற்றும் மேரியுடன், மன்ஹாட்டன் இரண்டாம் தொகுதியில் நடந்த திருவிருந்துக் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டோம். அது ஒரு ஆவிக்குரிய ஆராதனை. கூட்டத்தில் பல புதிதாக மனம் மாறியவர்கள் இருந்தனர். சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்ற ஐந்து உறுப்பினர்கள், நான்கு ஆண்கள் மற்றும் ஒரு இளைஞன், திருவிருந்தைப் பரிமாறும் ஆரோனிய ஆசாரியத்துவ உறுப்பினர்களில் இருந்தனர். இதேபோன்ற புதிய உறுப்பினர்களின் வருகை சபை முழுவதும் நடைபெறுவதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பரிசுத்த அழைப்புகளுக்குப் பதிலளித்து, தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் வாய்ப்பை ஏற்றுக்கொள்பவர்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், மற்றும் திடப்படுத்தல் மூலம் பரிசுத்த வேதாகமம் மற்றும் மார்மன் புஸ்தகம் ஆகியவற்றில் கற்பிக்கப்பட்டபடி உடன்படிக்கையின் பாதையில் பிரவேசிக்கிறார்கள்.
மனமாற்றங்களிலும், சுவிசேஷத்தில் உண்மையாக நிலைத்திருப்பதிலும் பரிசுத்த வேதங்களின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. மார்மன் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள பண்டைய தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் பற்றி அறிந்திருந்தனர் மற்றும் அவருடைய சுவிசேஷத்தைப் போதித்தார்கள். மார்மன் புஸ்தகம், அதன் போதனைகளைக் கற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு, பிரயோகிக்கும்போது தேவனிடம் நெருங்கி வர உதவுகிறது. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார், “ஒரு ஆண் [அல்லது பெண்] வேறு எந்த புத்தகத்தையும் விட [இந்த புஸ்தகத்தின்] கொள்கைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் தேவனிடம் நெருங்கி வருவார்”
மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தை என்பதை அறிய, நாம் அதைப் படிக்கவும், சிந்திக்கவும், ஜெபிக்கவும், அதன் கொள்கைகளின்படி செயல்படவும் வேண்டும். தீர்க்கதரிசி மரோனி, நாம் உண்மையான இருதயத்தோடும், உண்மையான நோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசத்தோடும் ஜெபிக்கும்போது, புஸ்தகம் பற்றிய சத்தியத்தை தேவன் நமக்கு வெளிப்படுத்துவார் என்று உறுதியளித்தான். நீடித்த மனமாற்றத்துக்கு மார்மன் புஸ்தகத்தைப் படித்தல் தேவை.
வேதாகமத்துக்கும் மார்மன் புஸ்தகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை கையடக்க சாதனங்களாக நாம் சிந்திக்கும்போது, ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்கலாம். இரண்டு புத்தகங்கள் “ஒன்றாக இணைக்கப்படும்” மற்றும் “உங்கள் கையில் ஒன்றாக மாறும்” என்று கர்த்தர் அறிவித்தால், அவை எவ்வளவு பயனுள்ளதாகவும், மாற்றாகவும் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? வேதாகமமாகிய “யூதாவின் கோல்,” மற்றும் “யோசேப்பின் கோலாகிய,” மார்மன் புஸ்தகம் ஆகியவற்றைப் பற்றி கர்த்தர் அறிவித்தது அதுதான்.
பல குறிப்பிடத்தக்க அம்சங்களில், மார்மன் புஸ்தகம் வேதாகமத்தை மேம்படுத்தும் மற்றும் அதன் மீது கட்டமைக்கும் அடிப்படைக் கோட்பாட்டை வழங்குகிறது. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி பற்றிய கோட்பாடு ஒரு ஆழ்ந்த உதாரணம்.
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் உட்பட அவருடைய பூலோக ஊழியத்தைப் பற்றிய துல்லியமான பதிவை வேதாகமம் வழங்குகிறது. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி பற்றி தீர்க்கதரிசிகள் அவர் இறப்பதற்கு முன்பு விரிவாக விளக்கியதில், மார்மன் புஸ்தகம் மிகவும் தெளிவாக உள்ளது.
ஆல்மா அதிகாரம் 42 க்கான தலைப்பு, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் கோட்பாட்டு முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
“அநித்திய வாழ்க்கை மனுஷன் மனந்திரும்பி, தேவனுக்கு சேவை செய்யத் சாத்தியமாக்கும் ஒரு சோதனைக்காலம் – வீழ்ச்சி மனுஷகுலம் யாவின் மீதும் லௌகீக, ஆவிக்குரிய மரணங்களைக்கொண்டு வந்தது – மீட்பு மனந்திரும்புதல் மூலம் வருகிறது – தேவனே உலக பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்தல் – மனந்திரும்புவோருக்கே இரக்கம் அளிக்கப்படும் – மற்ற யாவரும் தேவனுடைய நியாயத்திற்கு கீழ்ப்பட்டவர்கள் – பாவநிவர்த்தியினிமித்தம் இரக்கம் வருகிறது – உண்மையாய் மனஸ்தாபம் உள்ளவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள்.
தலைவர் ரசல் எம்.நெல்சன் சொன்னார்: “மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு தினமும், நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறந்த தீர்மானங்களை எடுப்பீர்கள் என நான் வாக்களிக்கிறேன்.” அவர் மேலும் வாக்களிக்கிறார், “நீங்கள் தினமும் மார்மன் புஸ்தகத்தில் மூழ்கும்போது, அன்றைய தீமைகளுக்கு எதிராக நீங்கள் பாதுகாக்கப்பட முடியும்.”
நான் குறிப்பிட்டது போல, அசல் கையடக்க சாதனம்-ஒரு புத்தகம் எனும் கருத்து என்னைக் கவர்ந்தது. இருப்பினும், இன்று உலகில் இணையத்தின் நம்பமுடியாத முக்கியத்துவத்தை நான் அங்கீகரிக்கிறேன். ஒரு நவீன கையடக்க சாதனம் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய நூலகம் நிரப்பியுள்ள தகவலை வழங்க முடியும். இப்படிப்பட்ட காலத்தில் வாழ்வதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பரிசுத்த புத்தகங்கள் மற்றும் சபை புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் கிடைக்க அனுமதித்ததற்கு நான் குறிப்பாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சுவிசேஷத்தைப் படிப்பதற்கு இணையம் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இன்று, பலர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நண்பர்களுடன் வேதவசனங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மார்மன் புஸ்தக செயலி, எடுத்துக்காட்டாக, மார்மன் புஸ்தகத்துக்கு நண்பர்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு அற்புதமான வழியாகும், மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் சாதாரண மற்றும் இயற்கையான வழிகளில் எளிதாகப் பகிரலாம்.
இணையம் பல ஆசீர்வாதங்களை வழங்கும் அதே வேளையில், துரதிர்ஷ்டவசமாக, நான் முன்பு விவரித்த சபையை எதிர்த்து விமர்சிக்கும் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைப் போலவே, இது சந்தேகத்தை உருவாக்கவும் மதிப்புமிக்க சுவிசேஷ கொள்கைகளில் நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. தலைவர் நெல்சன் குறிப்பிட்டுள்ள “இக்காலத்தின் தீமைகளின்” ஒரு பகுதியாக இது இருக்கலாம்.
சத்துருவும் அவனுக்கு உதவி செய்பவர்களும், தெரிந்தோ தெரியாமலோ, நான் முன்பு விவரித்தபடி சபையை எதிர்த்து விமர்சிக்கும் எழுத்துப் பிரதிகள் அடங்கிய பெட்டிக்கு இணையான பெட்டியை இணையத்தில் உருவாக்கி, தேவனின் சத்தியத்திலிருந்து உங்களைத் தூர விலக்க வேண்டும் என்று எண்ணினார்கள்.
பல ஆண்டுகளாக சந்தேகத்தை உருவாக்க எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறிப்பிடத்தக்க வகையில் ஒத்தவை. நான் 20 வயதில் இருந்த 1960 களுடன் நமது நாளை ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பாக உண்மை.
நியாயத்தீர்ப்பைப் பயன்படுத்தவும், எல்லாவற்றிலும் ஞானமாக இருக்கவும் வேதங்கள் நமக்குக் கற்பிக்கின்றன. இணையத்தை நேர்மறையாக அல்லது அழிவுகரமான முறையில் பயன்படுத்தலாம்.
நீண்ட கால உறுப்பினர்கள் மற்றும் புதிதாக சுவிசேஷத்தைப் படிப்பவர்கள் இருவரும் தாங்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒழுக்கக்கேடான, நேர்மையற்ற அல்லது அநீதியான விஷயங்களை அனுமதிக்காதீர்கள். நீங்கள் செய்தால், அல்காரிதம்கள் உங்களை நம்பிக்கையை அழித்து உங்கள் நித்திய முன்னேற்றத்தை பாதிக்கும் ஒரு பாதையில் உங்களை வழிநடத்தும். நீங்கள் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ செயல்படலாம். நீதியைத் தேடுங்கள் மற்றும் இருண்ட இணைய முயல் துளைகள் மற்றும் (டூம்ஸ்க்ரோலிங்) ஆகியவற்றைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கையை நேர்மறை, நீதியான யோசனைகளால் நிரப்புங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்; வேடிக்கையாக இருங்கள், ஆனால் முட்டாள்தனத்தை தவிர்க்கவும். ஒரு வித்தியாசம் இருக்கிறது. பதிமூன்றாவது விசுவாசப் பிரமாணம் ஒரு அற்புதமான வழிகாட்டி. எல்லாவற்றிற்கும் மேலாக, மார்மன் புஸ்தகத்தில் தவறாமல் மூழ்கி இருங்கள், இது உங்கள் வாழ்க்கையில் ஆவியை ஈர்க்கும் மற்றும் பிழையிலிருந்து சத்தியத்தைப் புரிந்துகொள்ள உதவும்.
உடன்படிக்கையின் பாதையிலிருந்து எந்த வகையிலும் விலகியவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், பரிசுத்த வேதங்கள், தீர்க்கதரிசன வழிகாட்டுதல், வீட்டில் மத ஆசரிப்பு மற்றும் விசுவாச இசைக்குத் திரும்ப வேண்டும். ஒவ்வொரு ஆத்துமாவும் கர்த்தருக்கு விலைமதிப்பு மிக்கது. நீங்கள் எங்களுக்குத் தேவை! கர்த்தருக்கு நீங்கள் தேவை, உங்களுக்கு அவர் தேவை! நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுவீர்கள். எனது பல வருட சபை சேவையின் போது, உடன்படிக்கையின் பாதைக்குத் திரும்பிய அற்புதமான மனிதர்களை நான் பாராட்டினேன், பின்னர் அவர்கள் நேசித்த அல்லது அவர்கள் தொடர்பு கொண்ட அனைவருக்கும் சேவை செய்து ஆசீர்வதித்தேன்.
பரிசுத்த புத்தகங்கள் மற்றும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள், ஒரு அன்பான பரலோக பிதா தனது மகிழ்ச்சிக்கான திட்டத்தை தனது குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கிய வழி.
இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் அவரது பாவநிவர்த்தியின் உண்மை பற்றி நான் உறுதியான சாட்சி கூறுகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.