2020–2024
அவர் கரம் நமக்குத் துணை நிற்கும்
அக்டோபர் 2024 பொது மாநாடு


10:13

அவர் கரம் நமக்குத் துணை நிற்கும்

நாம் விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவை அணுகும்போது, அவர் எப்போதும் நம்மோடு இருப்பார்.

நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, நாங்கள் கரை ஓரம் இருந்த எனது சொந்த நாடான சிலியின் ஒரு கடற்கரைக்கு குடும்பமாக விடுமுறைக்குச் சென்றோம். கோடையை சில நாட்கள் என் குடும்பத்துடன் செலவிடப்போவதில் நான் உற்சாகமாக இருந்தேன். நான் சற்று பரபரப்பாகவும் இருந்தேன், ஏனென்றால் நான் கடைசியாக என் இரண்டு மூத்த சகோதரர்கள் தண்ணீரில் வழக்கமாக வேடிக்கையாகச் செய்வதை நானும் கலந்துகொண்டு செய்யலாம் என்று நினைத்தேன்.

ஒரு நாள், என் சகோதரர்கள் அலைகள் கொந்தளித்துக்கொண்டிருந்த இடத்தில் விளையாடச் சென்றார்கள், நான் அவர்களைப் பின்தொடரும் அளவுக்கு பெரியவனாகவும் பக்குவமடைந்தவனாகவும் உணர்ந்தேன். நான் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்தபோது, அலைகள் கரையிலிருந்து பார்க்கும்போது தோன்றியதை விட பெரியதாக இருப்பதை உணர்ந்தேன். திடீரென்று, ஒரு அலை என்னை வேகமாக நெருங்கி, என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இயற்கையின் சக்தி என்னை ஆட்கொண்டது போல் உணர்ந்தேன், கடலின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன். நான் சுழற்றியடிக்கப்பட்டதால் பிடிமானத்திற்கான எந்த அடையாளத்தையும் பார்க்கவோ உணரவோ முடியவில்லை. பூமியில் எனது சாகசம் முடிவுக்கு வரப்போகிறது என்று நான் நினைத்தபோது, ஒரு கை என்னை மேற்பரப்பை நோக்கி இழுப்பதை உணர்ந்தேன். கடைசியாக, என்னால் சூரியனைப்பார்க்க முடிந்தது மூச்சு விடவும் முடிந்தது.

என் சகோதரர் கிளாடியோ நான் பெரியவன் போல் காட்ட முயன்ற என் செயல்களைப் பார்த்து என்னைக் காப்பாற்ற வந்திருந்தான். நான் கரையிலிருந்து வெகு தூரத்தில் இருக்கவில்லை. தண்ணீர் ஆழமற்றிருப்பினும்,நான் திசைதிருப்பப்பட்டேன், எனக்கு நானே உதவியிருக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் கவனமாக இருக்க வேண்டும் என்றும், நான் விரும்பினால், அவன் எனக்குக் கற்றுத்தருவதாக கிளாடியோ என்னிடம் கூறினான். நான் விழுங்கிய தண்ணீர் கேலன்களாக இருந்தபோதிலும், நான் ஒரு பெரிய பையனாக இருக்க வேண்டும் என்ற எனது பெருமையும் விருப்பமும் வலுவாக இருந்தது, பதிலுக்கு நான் “நிச்சயமாக“ என்றேன்.

நான் அலைகளை எதிர்த்துத் தாக்க வேண்டும் என்று கிளாடியோ என்னிடம் கூறினான். ஒரு பெரிய நீர் சுவர் போல் தோன்றிய அந்த போராட்டத்தில் நான் நிச்சயமாக தோல்வி அடைவேன் என்று எனக்கு நானே சொன்னேன்.

ஒரு புதிய பெரிய அலை நெருங்க நெருங்க, கிளாடியோ விரைவாகச் சொன்னான்: “என்னைப் பார்; இப்படித்தான் செய்யவேண்டும் என்று காட்டினான்.” கிளாடியோ உள்வரும் அலையை நோக்கி ஓடி, அது உடையும் முன் அதற்குள் மூழ்கி நுழைந்தான். அவன் மூழ்கி எழுந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது, ஆனால் அடுத்த உள்வரும் அலையை பார்க்கத் தவறிவிட்டேன். எனவே, மீண்டும், நான் கடலின் ஆழத்திற்கு அனுப்பப்பட்டு, இயற்கையின் வலிமையால் சுழற்றி அடிக்கப்பட்டேன். சில வினாடிகளுக்குப் பிறகு, ஒரு கை என்னுடைய கையைப் பிடித்தது, நான் மீண்டும் மேற்பரப்பு மற்றும் காற்றை நோக்கி மேலே இழுக்கப்பட்டேன். என் பெருமையின் சுடர் அணைந்து கொண்டிருந்தது.

இந்த முறை,என் அண்ணன் தன்னுடன் சேர்ந்து நீர்மூழ்க அழைத்தான். அவனது அழைப்பின்படி, நான் அவனைப் பின்தொடர்ந்தேன், நாங்கள் ஒன்றாக மூழ்கினோம். நான் மிகவும் சிக்கலான சவாலை வெல்வது போல் உணர்ந்தேன். நிச்சயமாக, அது மிகவும் எளிதானது அல்ல, ஆனால் நான் அதைச் செய்தேன், என் சகோதரனின் உதவிக்கும் உதாரணத்திற்கும் என் நன்றிகள். அவன் கை என்னை இருதரம் காப்பாற்றியது; அவனது உதாரணம், என் சவாலை எப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவது என்பதை அந்த நாளில் எனக்குக் காட்டியது.

தலைவர் ரசல் எம்.நெல்சன் சிலஸ்டியலாக சிந்திக்க நம்மை அழைத்திருக்கிறார், அவரது ஆலோசனையைப் பின்பற்றி எனது கோடைகால கதையோடு அதை ஒப்பிட விரும்புகிறேன்.

சத்துருவின் மீது இரட்சகரின் வல்லமை

நாம் சிலஸ்டியலாக சிந்தித்தால், நம் வாழ்வில் நாம் சவால்களை எதிர்கொள்வோம், சவால்களை மேற்கொள்வது நமது திறமைக்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்துகொள்வோம். இப்பூலோக வாழ்க்கையில், நாம் சந்துருவின் தாக்குதல்களுக்கு உட்படுவோம். அந்த கோடை நாளில் என் மீது ஆதிக்கம் கொண்ட அலைகளைப் போல, நாம் வல்லமையற்றவர்களாக உணரலாம் மற்றும் வலுவான விதிக்கு நம்மை விட்டுக்கொடுக்க நினைக்கலாம். அந்த “கொடூர அலைகள்” நம்மை ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கமாக மோதித் தள்ளக்கூடும். ஆனாலும் அந்த அலைகள் மீதும், உண்மையில் எல்லாவற்றின் மேலும் அதிகாரம் பெற்றவர் யார் என்பதை மறந்துவிடாதீர்கள். அதுதான் நம் இரட்சகராகிய, இயேசு கிறிஸ்து. ஒவ்வொரு துயரமான சூழ்நிலையிலிருந்தும் அல்லது பாதகமான சூழ்நிலையிலிருந்தும் நமக்கு உதவ அவருக்கு வல்லமையிருக்கிறது. நாம் அவருடன் நெருக்கமாக உணர்கிறோமா என்பதைப் பொருட்படுத்தாமல், நாம் இருக்கும் இடத்தில் நாம் நாமாகவே இருக்கும்போதும் அவர் நெருங்குகிறார்.

நாம் விசுவாசத்துடன் அவரை நெருங்கும் போது, அவர் எப்போதும் நம்மோடு இருப்பார், அவருடைய நேரத்தில், நம் கைகளைப் பற்றிக்கொண்டு நம்மை பாதுகாப்பான இடத்திற்கு இழுக்கவும் தயாராக இருப்பார்.

இரட்சகரும் மற்றும் அவரது ஊழியத்தின் முன்மாதிரியும்

நாம் சிலஸ்டியலாக சிந்திப்போமானால், இயேசு கிறிஸ்துவை ஊழியத்தின் ஒரு குறைபாடற்ற முன்மாதிரியாக அங்கீகரிப்போம். அவர் அல்லது அவருடைய சீஷர்கள் உதவி, மீட்பு அல்லது ஆசீர்வாதம் தேவைப்படும் ஒருவரை நெருங்கும்போது, அவர்களும் தங்கள் கைகளை நீட்டி நெருங்கும்போது, வேதத்தில் நமக்கு ஒரு மாதிரி இருக்கிறது. என் கதையில், என் அண்ணன் அங்கு இருப்பதை நான் அறிந்தேன், ஆனால் அங்கு இருப்பது மட்டும் போதாது. நான் சிக்கலில் இருப்பதை கிளாடியோ அறிந்தான், அவன் என்னை தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வரவும் உதவினான்.

அவ்வப்போது, தேவைப்படும் ஒருவருக்காக நாம் இருந்தால் போதும் என்று நினைக்கிறோம், ஆனால் பல நேரங்களில், நம்மால் இன்னும் அதிகம் செய்யக்கூடும். ஒரு நித்திய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது, தேவைப்படும் மற்றவர்களுக்கு சரியான நேரத்தில் உதவியை வழங்க வெளிப்பாடுகளைப் பெற உதவும். என்ன வகையான உதவி தேவை என்பதை அறிய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலிலும் ஏவுதலிலும் நாம் சார்ந்திருக்கலாம், அது மன ஆறுதல், உணவு, அன்றாட வேலைகளில் உதவுதல் போன்ற உலகப்பிரகாரமான உதவியாக இருக்கலாம் , அல்லது ஆவிக்குரிய வழிநடத்துதலான பரிசுத்த உடன்படிக்கைகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும், கனப்படுத்துவதிலும் மற்றவர்களுக்கு உதவுவதாகவும் இருக்கலாம்.

இரட்சகர் நம்மை மீட்க தயாராக இருக்கிறார்

மூத்த அப்போஸ்தலரான பேதுரு, “இயேசுவிடம் செல்ல தண்ணீரின் மேல் நடந்தபோது … அவன் பயந்து அமிழ்ந்துபோகத் தொடங்கினான்“, பின்னர் “ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கதறினான்“. பேதுரு, தன் விசுவாசத்தை காண்பிக்க தண்ணீரின் மேலாக தம்மிடம் வர முயற்சி செய்ததை இயேசு அறிந்திருந்தார். பேதுருவின் பயத்தையும் அவர் அறிந்திருந்தார். எழுதப்பட்டபடி, “உடனே இயேசு … கையை நீட்டி அவனைப்பிடித்து,” பின்வரும் வார்த்தைகளைக்கூறினார் : “அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?” அவரின் வார்த்தைகள் பேதுருவை கடிந்துகொள்வதற்காக அல்ல, ஆனால் அவனுடனும் சீஷர்களுடனும் இருப்பது அவர்தான், மேசியாவானவர், என்பதை அவனுக்கு நினைவூட்டினார்.

நாம் சிலஸ்டியாலாக சிந்தித்தால், இயேசு கிறிஸ்து உண்மையில் நம்மை காக்கிறவர், பிதாவுடன் பரிந்து பேசுபவர், நம் மீட்பர் என்பது நம் இருதயங்களில் உறுதிப்படும். நாம் அவரில் விசுவாசமாயிருந்தால், அவர் நம்மை விழுந்துபோன நிலையிலிருந்து இரட்சித்து, நம் சவால்களையும் சுகவீனங்களையும் உலகப்பிரகாரமான தேவைகளையும் கடந்துபோகப்பண்ணி, எல்லா கொடைகளிலும் மிகவும் பெரிதான நித்திய ஜீவனைத் தந்தருள்வார்.

இரட்சகர் நம்மை கைவிடவே மாட்டார்

அன்று என் சகோதரன் என்னை கைவிடவில்லை, விடாப்பிடியாக நிலைத்திருந்ததால், நான் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள முடிந்தது. அவன் என்னை இரண்டு முறை காப்பாற்ற வேண்டியிருந்திருந்தாலும் தொடர்ந்து போராடினான். எனக்கு முதலில் புரியவில்லை என்றாலும் அவன் விடாப்பிடியாயிருந்தான். நான் இந்த சவாலை எதிர்கொண்டு வென்றுவிட வேண்டுமென்பதில் அவன் விடாப்பிடியாயிருந்தான். நாம் சிலஸ்டியலாக சிந்தித்தால், நம்முடைய வாழ்வில் உண்மையான மற்றும் நித்திய மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடிய எந்த காரியத்தையும் கற்றுக்கொள்ள, மாற்றிக்கொள்ள, சமாளிக்க, ஒத்துப்போக அல்லது வெற்றிபெற முயற்சிப்போமானால், நமக்கு எத்தனை தடவை அவருடைய உதவி தேவையோ அத்தனை முறை உதவி செய்வதற்குத் இரட்சகர் நமக்காக இருப்பார் என்று உணருவோம்.

இரட்சகரின் கரங்கள்

இரட்சகரின் கைகளின் அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் வேதங்கள் என்றும் நிலைத்திருக்கும் கரங்களாக சித்தரிக்கின்றன. அவருடைய பாவ நிவாரண பலியில், அவரை சிலுவையில் தூக்கி நிறுத்த அவருடைய கரங்கள் ஆணிகளால் துளைக்கப்பட்டன. அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர் தம்முடைய சீஷர்களுக்கு ஒரு பரிபூரண சரீரத்தில் தோன்றினார், ஆனால் அவருடைய கரங்களின் தழும்புகள் அவருடைய நிகரற்ற பலியின் நினைப்பூட்டுதலாகத் தொடர்ந்து இருக்கின்றன. நம்முடைய பரலோக பிதா, நம்முடைய இரட்சகராக, எல்லா மனுக்குலத்தின் மீட்பராக அவரை தெரிந்துகொண்டதால், நாம் முதலில் அதைக் காணவோ உணரவோ முடியாதிருந்தாலும், அவருடைய கரம் எப்பொழுதும் நமக்கு இருக்கும்.

இரட்சகரின் விரிந்திருக்கும் கரம்

நமது பிடியில், ஜாய் பிரையன்ட் வார்ட்

இரட்சகரின் மீட்கும் கரம்

தேவனின் கரம், யாங்சங் கிம்

நான் சிலஸ்டியலாக சிந்தித்தால், இவ்வாழ்வில் நாம் தனியாக விடப்படவில்லை என்பது எனக்குத் தெரிய வரும். நாம் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கையில், நம்முடைய பரலோக பிதா நம்முடைய திறமைகளைப் பற்றி அறிந்திருக்கிறார், நம்முடைய கஷ்டங்களைத் தாங்கவோ சமாளிக்கவோ முடியும் என்பதையும் அறிந்திருக்கிறார். நாம் நம்முடைய பங்கைச் செய்து விசுவாசத்தோடு அவரிடம் திரும்ப வேண்டும். அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து நம் மீட்பராக இருக்கிறார் மற்றும் எப்போதும் இருப்பார். அவரின் நாமத்தில், இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. See Russell M. Nelson, “Think Celestial!,” Liahona, Nov. 2023, 118:

    நீங்கள் தேர்வுகளை செய்யும்போது, நீண்ட பார்வையை—நித்தியமான பார்வை பார்க்க நான் உங்களை அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுங்கள், ஏனென்றால் உங்கள் நித்திய ஜீவன் அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்திலும் அவருடைய பாவநிவர்த்தியிலும் சார்ந்திருக்கிறது ….

    “நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, சிலஸ்டியலாக சிந்தியுங்கள்! சலனத்தால் சோதிக்கப்படும் போது, சிலஸ்டியலாக சிந்தியுங்கள்! வாழ்க்கை அல்லது அன்புக்குரியவர்கள் உங்களைக் கைவிடும்போது, சிலஸ்டியலாக சிந்தியுங்கள்! யாராவது அகால மரணமடைந்தால், சிலஸ்டியலாக சிந்தியுங்கள். யாரேனும் ஒரு கொடிய நோயால் அவதிப்படும்போது, சிலஸ்டியலாக சந்தியுங்கள். வாழ்க்கையின் அழுத்தங்கள் உங்கள் மீது குவியும் போது, சிலஸ்டியலாக சிந்தியுங்கள்! நீங்கள் ஒரு விபத்து அல்லது காயத்தில் இருந்து மீண்டு வரும்போது, நான் இப்போது செய்வது போல், சிலஸ்டியலாக சிந்தியுங்கள்!”

  2. மாற்கு 04:35–41 பார்க்கவும்.

  3. நம்முடைய பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் நமக்கு உதவி செய்யும் வல்லமை இருப்பதாக நாம் நம்பினாலும், அவர்களுடைய உதவி எப்போதும் நாம் எதிர்பார்க்கும் விதத்தில் வராமல் போகலாம். நாம் நம்மை அறிவதை விட அவர்கள் நம்மை நன்கு அறிவார்கள் மற்றும் சரியான நேரத்தில் நமக்கு மேன்மையான ஆதரவையும் உதவியையும் வழங்குவார்கள் என்று நம்புவது முக்கியமானது: “இந்தக் காரியங்கள் யாவும் உனக்கு அனுபவத்தைத் தரும், உன்னுடைய நன்மைக்காயிருக்கும் என்பதை என் மகனே, நீஅறிந்துகொள்“ (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122:7).

    நாம் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் சவால்கள், சோதனையை எதிர்ப்பதற்கும், சுபாவ மனிதனை வெல்வதற்கும் பெலனையும் நற்குணத்தை வளர்க்கவும் உதவுகிறது.

  4. மத்தேயு 14:31; மாற்கு 01:31; 05:41; 09:27; அப்போஸ்தலர் 3:7; 3 நேபி 18:36ஐப் பார்க்கவும்.

  5. தலைவர் ரசல் எம். நெல்சன் ஒரு புதிய மற்றும் பரிசுத்தமான ஊழியம் செய்தலுக்கு நம்மை அழைத்தபோது, (“ஊழியம் செய்தல்,” ஐப் பார்க்கவும்,” லியஹோனா, May 2018, 100), இது என்னை பற்றியதோ அல்லது நான் என்ன கொடுக்க விரும்புகிறேன் என்பதை பற்றியதோ அல்ல மாறாக மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதே என்பதை நன்கு புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இயேசு கிறித்து பிறனை, ஒரு உயர்ந்த மற்றும் பரிசுத்தமான வழியில் நேசிக்க வாய்ப்புத் தருகிறார் லூக்கா 10:27

  6. மத்தேயு 14:29-30.

  7. மத்தேயு 14:31.

  8. மகிழ்ச்சியை உண்மையாக புரிந்து கொள்ள, நம் வாழ்வில் ஆசீர்வாதங்களின் பங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசீர்வாதங்கள் என்பதன் வரையறை இந்த கருத்தை தெளிவுபடுத்த உதவுகிறது: “ஆசீர்வாதம் என்பது ஒருவருக்கு தெய்வீக தயவை வழங்குவதாகும். உண்மையான மகிழ்ச்சி, வளர்ச்சி அல்லது வளமைக்கு பங்களிக்கும் எதுவும் ஒரு ஆசீர்வாதமாகும்” (Guide to the Scriptures, “Bless, Blessed, Blessing,” Gospel Library). உலகம் பெரும்பாலும் உண்மையான மகிழ்ச்சியை, தற்காலிக இன்பத்துடன் குழப்புகிறது, இது குறுகிய காலம் வாழும் “மகிழ்ச்சியை“ பின்பற்றுகிறது.

  9. ஏசாயா 49:16 பார்க்கவும்.