2020–2024
பூலோக ஜீவியம் பயனுள்ளதே!
அக்டோபர் 2024 பொது மாநாடு


10:59

பூலோக ஜீவியம் பயனுள்ளதே!

நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால்கள் இருக்கிற போதிலும், நம்முடைய அன்பான, பரலோக பிதா நாம் தோல்வியடைய விடப்படாதபடி மகிழ்ச்சியின் திட்டத்தை வடிவமைத்துள்ளார்.

என் தொகுதியில் வயதான ஒரு சகோதரிக்கு வீட்டில் போதிக்கும் பொறுப்பு பல வருடங்களாக, எனக்கு ஒதுக்கப்பட்டது. அவருக்கு எளிதான வாழ்க்கை அமையவில்லை. அவருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தது. சிறு பிராயத்தில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக வாழ்நாள் முழுவதும் வலியை அனுபவித்தார். 32 வயதில், நான்கு இளம் குழந்தைகளை வளர்த்து பராமரிக்க வேண்டிய நிலையிலிருந்த அவர் விவாகரத்து பெற்று, 50 வயதில் மறுமணம் செய்து கொண்டார். அவருக்கு 66 வயதாக இருந்தபோது அவரது இரண்டாவது கணவர் காலமானார், இந்த சகோதரி மீதமுள்ள 26 ஆண்டுகள் விதவையாக வாழ்ந்தார்.

அவருடைய வாழ்நாள் முழுவதும் சவால்கள் நீடித்தபோதிலும், அவர் கடைசிவரை தனது உடன்படிக்கைகளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். இந்த சகோதரி ஒரு ஆர்வமுள்ள வம்சாவளியியலாளர், ஆலய வருகையாளர், மற்றும் குடும்ப வரலாறுகளை சேகரிப்பவரும் எழுதுபவரும் கூட . அவருக்குக் கடுமையான சோதனைகள் பல இருந்த போதும், சில சமயங்களில் அதற்கேற்ற சோகத்தையும் தனிமையையும் அவர் உணர்ந்தபோதும், முகமலர்ச்சியைப் பெற்றிருந்து, இரக்கமுள்ளவரும் குணவதியாயும் இருந்தார்.

அவர் மரித்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவரது மகன்களில் ஒருவருக்கு ஆலயத்தில் ஒரு விசேஷித்த அனுபவம் கிடைத்தது. அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையால் தன்னுடைய தாய் தனக்கு ஒரு செய்தியை வழங்க இருப்பதாக அறிந்துகொண்டார். அவர் அவருடன் தொடர்பு கொண்டார், ஆனால் தரிசனத்தாலோ, கேட்கக்கூடிய வார்த்தைகளாலோ அல்ல. தாயிடமிருந்து பின்வரும் தெளிவான செய்தி மகனுடைய மனதினுள் வந்தது: “பூலோக ஜீவியம் பயனுள்ளதே என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும் [என் வாழ்க்கையில்] நடந்தது எல்லாம் ஏன் அப்படி நடந்தது என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன் என்று நீ அறிய வேண்டுமென விரும்புகிறேன் - அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த சகோதரி சகித்துக் கொண்டு கடந்து வந்த கஷ்டங்களையும், அவருடைய நிலைமையையும் ஒருவர் எண்ணிப் பார்க்கும்போது, இந்தச் செய்தி அதிக வியப்பாக இருக்கிறது.

சகோதர சகோதரிகளே, பூலோக ஜீவியம் பயனுள்ளதே! இது கிரியை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களும், மனவேதனைகளும், சிரமங்களும், இருக்கிற போதிலும், நம்முடைய அன்பான, ஞானமான, பரிபூரண பரலோக பிதா நாம் தோல்வியடைய விடப்படாதபடி மகிழ்ச்சியின் திட்டத்தை வடிவமைத்துள்ளார். அவருடைய திட்டம், நமது பூலோக ஜீவியத்தின் தோல்விகளை தாண்டி எழுவதற்கு ஒரு வழியை வழங்குகிறது. “ஏனெனில் இதோ, மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது.” என்று கர்த்தர் அறிவித்தார்,

ஆயினும்கூட, தேவனின் அழியாமையும் நித்திய ஜீவனும் என்கிறதான “கிரியை மற்றும் மகிமையின்“ பயனாளிகளாக நாம் இருக்க வேண்டுமானால், நாம் பயிற்றுவிக்கப்படவும் கற்பிக்கப்படவும் சில சமயங்களில் நம்முடைய வரம்பின் கடையாந்திரம் வரைக்குமாயும் புடமிடுகிறவருடைய அக்கினியினுள்ளே கடந்து செல்லவும் எதிர்பார்க்க வேண்டும். இந்த உலகத்தின் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் கஷ்டங்களை முற்றிலுமாக தவிர்ப்பது, பூலோக ஜீவியம் பயனுள்ளதாக இருப்பதற்கு நிச்சயம் தேவைப்படுகிற செயல்முறையை விலக்கிவைப்பதற்கு ஒப்பாகும்.

அதனால் கடினமான காலங்கள் நமக்கு வரும்போது நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நம்மை சோதிக்கும் சூழ்நிலைகளையும், உண்மையான தயாளத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்க உதவும் மக்களையும் நாம் சந்திப்போம். ஆனால் நாம் நமது கஷ்டங்களை சகித்துக்கொண்டு, கர்த்தர் சொன்னது போல நினைவில் கொள்ள வேண்டும்:

எனக்காக, என்னுடைய நாமத்தின் நிமித்தமாக தன்னுடைய ஜீவனைக் கொடுக்கிறவன், மீண்டும் நித்திய ஜீவனைக் கண்டடைவான்.

ஆகவே, உங்களுடைய சத்துருக்களுக்கு [அல்லது உங்கள் பிரச்சனைகளுக்கு, சவால்களுக்கு அல்லது இந்த வாழ்க்கையின் சோதனைகளுக்கு] பயப்படாதிருங்கள், ஏனெனில் நான் கட்டளையிட்டதால் … , நீங்கள் தகுதியாயிருப்பதைக் காணும்படியாக என்னுடைய உடன்படிக்கையில் நீங்கள் நிலைத்திருக்கிறீர்களா என சகல காரியங்களிலும் நான் உங்களை சோதித்துப் பார்ப்பேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

நம்முடைய பிரச்சனைகளைக் குறித்து நாம் கலக்கமடையும்போது அல்லது கவலையாக உணரும்போது அல்லது வாழ்க்கையின் கஷ்டங்களில் நமது நியாயமான பங்கைவிட அதிகமாகப் பெறுகிறோம் என்று உணரும்போது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னதை நாம் நினைவுகூரலாம்:

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியை[களை}யும் நினைப்பாயாக.

லேகி தன் குமாரன் யாக்கோபுக்குப் போதித்தது போல:

“நீ உபத்திரவங்களாலும், அநேக துன்பங்களாலும் பாடுபட்டிருக்கிறாய். … ஆயினும், … [தேவன்] உன் உபத்திரவங்களை, உனது ஆதாயத்திற்கென மாற்றுவார். ஆகவே, உன் மீட்பருடைய நீதியினிமித்தம் நீ மீட்கப்பட்டிருக்கிறாய், என நான் அறிவேன்.”

ஏனெனில் இந்த வாழ்க்கை ஒரு சோதனைக் களமாக இருப்பதாலும், “கஷ்டத்தின் கருமேகங்கள் நமக்கு மேல் தொங்குவதாலும், மேலும் நமது அமைதியை அழிக்க அச்சுறுத்துவதாலும்,”வாழ்க்கையின் சவால்கள் தொடர்பாக மோசியா 23-ல் காணப்படும் இந்த ஆலோசனையையும் வாக்குறுதியையும் நினைவில் வைப்பது உதவியாக இருக்கும்: “ஆயினும், எவன் [கர்த்தர்] மீது தன் நம்பிக்கையை வைக்கிறானோ, அவனே கடைசி நாளில் உயர்த்தப்படுவான்.”

ஒரு இளைஞனாக, மற்றவரின் அநீதியான செயல்களின் விளைவாக வந்த மிகுந்த உணர்ச்சிகரமான வலியையும் அவமானத்தையும் நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்தேன், இது பல ஆண்டுகளாக எனது சுய மதிப்பையும் கர்த்தருக்கு முன்பாக எனது தகுதியையும் பாதித்தது. ஆயினும்கூட, இந்த கண்ணீரின் பள்ளத்தாக்கில் நாம் தங்கியிருக்கும்போது நாம் அனுபவிக்க அழைக்கப்படும் எந்த கஷ்டங்களிலும் கர்த்தர் நம்மை பெலப்படுத்தவும், தாங்கவும் முடியும் என்று நான் தனிப்பட்ட சாட்சியம் பகருகிறேன்.

பவுலின் அனுபவத்தை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்:

“அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் [நான் பெற்றிருக்கிறேன்] நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.

“அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

“அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.”

பவுலின் “மாம்சத்தில் உள்ள முள்“ என்னவென்று நமக்குத் தெரியாது. அது ஒரு உடல் வியாதியா, மன அல்லது உணர்ச்சி பலவீனமா அல்லது ஒரு சோதனையா என்பதை அவர் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் உதவிக்காக கர்த்தரிடம் போராடி மன்றாடினார் என்பதையும், இறுதியில், கர்த்தரின் பலமும் வல்லமையும்தான் அவருக்கு உதவியது என்பதையும் அறிய அந்த விவரம் நமக்குத் தேவையில்லை.

பவுலைப் போலவே, கர்த்தரின் உதவியின் மூலமாக நான் இறுதியில் உணர்ச்சி ரீதியாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் பலப்படுத்தப்பட்டேன், இறுதியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் எப்போதும் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களுக்குத் தகுதியான ஒரு நபராக இருந்தேன் என்பதை கண்டுணர்ந்தேன். என் தகுதியின்மையின் உணர்வுகளை மேற்கொள்ளவும், குற்றவாளிக்குத்தக்க மன்னிப்பை வழங்கவும் இரட்சகர் எனக்கு உதவினார். இரட்சகரின் பாவநிவர்த்தி எனக்கு ஒரு தனிப்பட்ட வரம் என்பதையும் என் பரலோக பிதாவும் அவரது குமாரனும் என்னை பரிபூரணமாக நேசிக்கிறார்கள் என்பதையும் நான் இறுதியாக புரிந்துகொண்டேன். இரட்சகரின் பாவநிவர்த்தியின் காரணமாக, பூலோக ஜீவியம் பயனுள்ளதே!

இரட்சகர் எவ்வாறு என்னைக் காப்பாற்றி அந்த அனுபவங்களின் மூலம் என்னுடன் நின்றார் என்பதை அடையாளம் காணத்தக்கதாக நான் இறுதியாக பாக்கியம் பெற்றபோது, எனது பதின்வயதின் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை எனது தனிப்பட்ட பயணமும் அனுபவமும் என்பதை நான் தெளிவாக புரிந்துகொள்கிறேன். இதன் தீர்மானமும் இறுதி விளைவும் பிறரின் அநீதியான நடத்தையால் பாதிக்கப்பட்டவர்கள் மீதும் தொடர்ந்து துன்பப்படுபவர்கள் மீதும் திணிக்க முடியாது.

நன்மையோ தீமையோ, வாழ்க்கையின் அனுபவங்கள் நமக்கு முக்கியமான பாடங்களைக் கற்பிக்க முடியும் என்பதை நான் அறிவேன். பூலோக ஜீவியம் பயனுள்ளதே! என்பதை நான் இப்போது அறிவேன், சாட்சியமுமளிக்கிறேன்! நன்மையும் தீமையுமான எனது வாழ்க்கையின் அனுபவங்களின் கூட்டுத்தொகையின் விளைவாக, பிறரின் செயல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மீது எனக்கு இரக்கமும், ஒடுக்கப்பட்டவர்களிடம் அனுதாபமும் இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்மையும் தீமையுமான எனது வாழ்க்கையின் அனுபவங்களின் விளைவாக நான் மற்றவர்களிடம் கனிவாக இருப்பேன் என்றும் இரட்சகரைப் போல மற்றவர்களை நடத்துவேன் என்றும், பாவியைக் குறித்த அதிக புரிதல் கொண்டிருப்பேன் என்றும், என்னிடம் முழுமையான உத்தமம் இருக்கும் என்றும் உண்மையாக நம்புகிறேன். நாம் இரட்சகரின் கிருபையை சார்ந்து நமது உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளும்போது, இரட்சகரின் பாவநிவர்த்தியினால் நாம் பலதரப்பட்டோருக்கு உதாரணமாயிருந்து சேவை செய்ய முடியும்.

நான் பூலோக ஜீவியம் பயனுள்ளதே என்பதற்கான ஒரு முடிவான உதாரணத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

மூப்பர் ஹேல்ஸின் அத்தை மற்றும் தாய்.

மூப்பர் ஹேல்ஸின் அத்தை, லோயிஸ் வாண்டன்போஷ், மற்றும் அவரது தாயார், க்ளீ வாண்டன்போஷ்.

என் அம்மா பூலோக வாழ்க்கையில் எளிதான பயணத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர் எவ்வித பாராட்டுகளையோ உலக கனத்தையோ பெற்றிருக்கவில்லை உயர்நிலைப் பள்ளியைத் தாண்டி கல்வி வாய்ப்புகளைப் பெறவில்லை. அவர் சிறுவயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார், இதன் விளைவாக வாழ்நாள் முழுவதும் அவருக்கு இடது காலில் வலியும் அசௌகரியமும் ஏற்பட்டது. வயது வந்தவராக, அவர் பல கடினமானதும் சவாலானதுமான உடல் உபாதைகளையும் நிதி நெருக்கடிகளையும் அனுபவித்தார், ஆனாலும் அவருடைய உடன்படிக்கைகளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார், கர்த்தரை நேசித்தார்.

என் அம்மாவுக்கு 55 வயதாக இருந்தபோது, என் அடுத்த மூத்த சகோதரி காலமானார், அவருடைய எட்டு மாத மகள், தாயில்லாமற் போனாள். பல்வேறு காரணங்களால், அம்மா அடுத்த 17 ஆண்டுகளுக்கு அக்குழந்தையை அடிக்கடி மிகவும் கடினமான சூழ்நிலைகளில் பெரும்பாலும் தானே வளர்த்தார். ஆயினும் இந்த அனுபவங்ககளைப் பொருட்படுத்தாமல், அவர் சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும் தன் குடும்பத்தாருக்கும், அயலாருக்கும், தொகுதி அங்கத்தினர்களுக்கும் சேவை செய்தார், அநேக ஆண்டுகள் ஆலயத்தில் நியம பணியாளராக சேவை செய்தார். அவரது வாழ்க்கையின் அந்தியில் பல ஆண்டுகளாக, அம்மா ஒரு வகையான மறதி நோயினால் பாதிக்கப்பட்டார், அடிக்கடி குழப்பமடைந்தார், ஒரு செவிலியர் பராமரிப்பில் முடங்கிப் போனார். துரதிர்ஷ்டவசமாக, அவர் எதிர்பாராத விதமாக இறந்தபோது தனியாக இருந்தார்.

அவர் மறைந்து பல மாதங்களுக்குப் பிறகு, நான் மறக்க முடியாத ஒரு கனவு கண்டேன். என் கனவில், நான் சபை நிர்வாக கட்டிடத்திலுள்ள என் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அம்மா அலுவலகத்திற்குள் நுழைந்தார். அவர் ஆவி உலகத்திலிருந்து வந்தார் என்று எனக்குத் தெரியும். எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவர் எதுவும் பேசவில்லை, ஆனால் நான் இதுவரை அனுபவித்திராத ஒரு ஆவிக்குரிய அழகை அவர் வெளிப்படுத்தினார், அதை விவரிக்க எனக்கு கடினமாக உள்ளது.

அவருடைய முகபாவமும் இருப்பும் உண்மையிலேயே பிரமிக்க வைத்தது! அவருடைய ஆவிக்குரிய வல்லமையையும் அழகையும் குறிப்பிட்டு, “அம்மா, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்!,“ என்று நான் அவரிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. மறுபடியும் எதுவும் பேசாமல்—அவர் என்னை அங்கீகரித்தார். என் மீது அவர் கொண்டிருந்த அன்பை நான் உணர்ந்தேன், அவருடைய உலகப்பிரகாரமான கவலைகள் மற்றும் சவால்களிலிருந்து குணமடைந்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார், “ஒரு மகிமையான உயிர்த்தெழுதலுக்காக“ ஆவலுடன் காத்திருக்கிறார் என்றும் நான் அறிந்தேன். அம்மாவுக்கு, பூலோக ஜீவியம் பயனுள்ளதாய் இருந்தது. - அது நமக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

“மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருவது” தேவனுடைய கிரியை மற்றும் மகிமையாயிருக்கிறது பூலோக வாழ்க்கையின் அனுபவங்கள் அந்த அழியாமையையும் நித்திய ஜீவனையும் நோக்கி வளரவும் முன்னேறவும் நம்மை அனுமதிக்கும் பயணத்தின் ஒரு பகுதியாகும். நமக்கான தேவனுடைய திட்டத்தில் வெற்றிபெறவேயன்றி நாம் தோல்வியடைய இங்கு அனுப்பப்படவில்லை.

”இப்படியிருக்க தன் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்பவர்களின் ஆசீர்வாதமானதும், மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஏனெனில், இதோ ஆவிக்குரியதும் லெளகீகமானதுமான சகல காரியங்களில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் இறுதிபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சி உள்ள நிலையிலே தேவனோடு வாசம்செய்யும்படி பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.“ என்று பென்யமீன் இராஜா போதித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பூலோக ஜீவியம் பயனுள்ளதே!

நாம் சுவிசேஷத்தின் நியமங்களைப் பெற்று, தேவனுடன் உடன்படிக்கைகளில் பிரவேசித்து, பின்னர் அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொண்டு, மனந்திரும்பி, மற்றவர்களுக்கு சேவை செய்து, முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும்போது, பூலோக ஜீவியம் பயனுள்ளதே என்ற நிச்சயமும் முழுமையான நம்பிக்கையும் நாமும் கர்த்தரில் இருக்க முடியும் எனவும் நான் சாட்சியமளிக்கிறேன்! இயேசு கிறிஸ்துவைப்பற்றியும், நமது பரலோக பிதாவுடனான நமது மகிமையான எதிர்காலம் இரட்சகரின் கிருபை மற்றும் பாவநிவர்த்தியால் சாத்தியமாக்கப்படுகிறது எனவும் நான் சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. அனுமதியுடன் பகிரப்படுகிறது. இந்த அனுபவம் நீதிமான்களுக்கு மரணம் “இனிமையாயிருக்கும்“ என்ற கர்த்தரின் போதனையுடன் ஒத்துப்போகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:46). தீர்க்கதரிசி ஜோசப் விளக்கினார், “ஆவிகளின் உலகத்தில், …நீதிமான்களின் ஆவிகள் மிகப்பெரிய மகத்துவமான மகிமையான பணிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.(Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 179). அவர் மேலும் போதித்தார், அவர்கள் நம்மைவிட்டு தூரத்திலில்லை, நமது சிந்தனைகளை, உணர்வுகளை, இயக்கங்களை அறிவார்கள், புரிந்துகொள்வார்கள்.” (in Discourse, Oct. 9, 1843, as reported by Times and Seasons, 331, josephsmithpapers.org).

  2. மோசே 1:39.

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:13-14.

  4. உபாகமம் 8:2.

  5. 2 நேபி 2:1-3.

  6. “We Thank Thee, O God, for a Prophet,” Hymns, no. 19.

  7. மோசியா 23:22

  8. 2 கொரிந்தியர் 12:7-9.

  9. Elder Richard G. Scott said: “I testify that I know victims of serious abuse who have successfully made the difficult journey to full healing through the power of the Atonement” (“To Heal the Shattering Consequences of Abuse,” Liahona, May 2008, 40).

  10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:14.

  11. மோசே 1:39 பார்க்கவும்.

  12. மோசியா 2:41.