தேவன் தமது பிள்ளைகள் அனைவரையும் நேசிக்கிறார்
இயேசு கிறிஸ்து எப்பொழுதும் நம்மை அழைக்கிறார், அவருடைய பிள்ளைகளை தம்மிடம் கொண்டு வர உதவுவதற்காக அவர் தமது சாதாரண ஊழியர்களான நம்மைப் பயன்படுத்துகிறார்.
நமது பரலோக பிதா உங்களிடமிருந்து என்ன விரும்புகிறார்? நீங்கள் உலக வாழ்க்கைக்கு முந்திய நிலையில் இருந்தபோது, பரலோக பிதா நீங்கள் பூமியில் வாழ்வதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார் என்று நீங்கள் அறிவீர்களா? இளைஞர்களிடம் பேசிய தலைவர் ரசல் எம். நெல்சன், “நமது பரலோக பிதா, இந்த இறுதிக் கட்டத்திற்காக அநேகமாய் தமது மிகச்சிறந்த குழுவாகிய தம்முடைய உத்தமமான ஆவிகள் பலவற்றை வைத்திருந்திருக்கிறார்.” இந்த கடைசி நாட்களுக்காக நாம் வைக்கப்பட்டிருப்பதால், இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்க கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நல்ல மேய்ப்பன், தம்முடைய மந்தையை அவர் அறிந்திருக்கிறார், மேலும் மந்தை அதன் மேய்ப்பரை அறிந்திருக்கிறது, ஏனெனில் “அவர் தம்முடைய ஆடுகளைப் பேர்சொல்லி அழைக்கிறார்” அவர் எப்பொழுதும் நம்மை அழைக்கிறார், அவருடைய பிள்ளைகளை தம்மிடம் கொண்டு வர உதவுவதற்காக அவர் தமது சாதாரண ஊழியர்களான நம்மைப் பயன்படுத்துகிறார்.
முன்பு ஒரு சமயம், நானும் பிணையத் தலைவர் ஒருவரும் உள்ளூர் நகர்ப்பகுதியில் இருக்கும் சபையின் உறுப்பினர்களைப் பார்க்கச் சென்றோம். நாங்கள் திட்டமிட்ட சந்திப்புகளை முடித்த பிறகு, இன்னும் ஒரு குடும்பத்தைப் பார்க்கச் செல்லலாமா என்று பிணையத் தலைவர் என்னிடம் கேட்டார். அவர்களுடன் நாங்கள் பேச வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.
நாங்கள் கதவைத் தட்டினோம், ஒரு சகோதரி அதைத் திறந்தாள். அவள் என்னைப் பார்த்தாள், ஆனால் நான் யார் என்று அவளுக்குத் தெரியவில்லை. அதனால் அவள் அதிகம் வெளிக்காட்டவில்லை. நான் பிணையத் தலைவரை நோக்கி கையை நீட்டினேன், அவளை பெயர் சொல்லி அவர் வாழ்த்தினார். அவள் அவரது குரலைக்கேட்டு, கண்டவுடனே பூரிப்படைந்தாள். வாசலில் நின்று இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதனர். இது எங்கள் சந்திப்புக்கான தொனியை அமைத்தது. அந்த சகோதரி முந்தைய நாள் கீமோதெரபி சிகிச்சை பெற்றாள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவள் வயது வந்த மகனைப் பராமரிக்க முடியாத அளவுக்கு பலவீனமாக உணர்ந்தாள். அதனால், அவளுடைய மகனுக்கு ஆடை அணிவிக்க நான் பிணையத் தலைவருக்கு உதவினேன், நாங்கள் அவனை அவனது சக்கர நாற்காலியில் அமர வைத்தோம். தொகுதியைச் சேர்ந்த மற்றொரு இனிய சகோதரி முன்பு கொண்டு வந்த உணவை அவனுக்கு ஊட்டி, மற்ற பணிகளுக்கு உதவினோம். அவர்களின் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்க முடிந்தது.
இந்த சந்திப்பின் போது என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததெல்லாம், இயேசு கிறிஸ்து அவர்களை முற்றிலும் நேசிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. அவர் அவர்களைப்புரிந்து கொண்டு அவர்களின் தனித்துவமான சூழ்நிலையின் வலியை தனிப்பட்டமுறையில் அறிந்திருக்கிறார். ஏறக்குறைய முழு சந்திப்பும் அமைதியாக நடந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் பெரிய பிரசங்கம் செய்யவில்லை அல்லது எங்களுக்குப் பிடித்தமான வேதத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் கர்த்தர் எங்களை தம்முடைய ஆவியால் அபரிமிதமாக ஆசீர்வதித்தார்.
இந்த நேரத்தில் உங்கள் பரலோக பிதா உங்களை இங்கு அனுப்பியதற்கு மிகப் பெரிய காரணங்களில் ஒன்று, உங்களது முழுத் திறனையும் நீங்கள் உணர முடியும்படிக்கே. கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் நமக்குக் கற்பிக்கிறது. உங்கள் ஆவிக்குரிய திறன்கள் தனித்துவமாயும், தனிப்பட்டவையாயும், இயல்பானவையாயும் இருக்கின்றன, அவற்றை மேம்படுத்த உங்கள் பரலோக பிதா உங்களுக்கு உதவ விரும்புகிறார். உங்கள் பரலோக பிதாவின் அன்பை எப்போதும் யாரேனும் உணர்ந்துகொள்ளத்தக்கதாக நீங்கள் உதவ முடியும். உங்கள் ஆற்றல் தெய்வீகமானது. மிகவும் போட்டி நிறைந்த இந்த உலகில் வெற்றிபெற நிச்சயமாக உங்களைத் தயார்படுத்துவது முக்கியம் என்றாலும், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் முக்கியமான பணிகளில் ஒன்று இயேசு கிறிஸ்துவின் சீஷராக மாறுவதும், ஆவியானவரின் உணர்வுகளைப் பின்பற்றுவதும் ஆகும். நீங்கள் இதைச் செய்யும்போது,தேவன் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார், அவர் உங்கள் தற்போதைய அல்லது எதிர்கால குடும்பத்தை ஆசீர்வதிப்பார், மேலும் நீங்கள் சந்திக்கும் அவருடைய குழந்தைகளின் வாழ்க்கையை அவர் ஆசீர்வதிப்பார்.
நாம் அதிக வாய்ப்புள்ள காலத்தில் வாழ்கிறோம். நாம் பல சிரமங்களை எதிர்கொண்டாலும், நம்முடைய பரலோக பிதாவின் அன்பை மற்றவர்கள் உணர உதவுவதற்கு அவை நமக்கு ஒரு வழியில் உதவுகின்றன என்பதை நான் அறிவேன். தலைவர் நெல்சன்: “வரும் நாட்களில், உலகம் எப்போதும் கண்டிராத இரட்சகரின் வல்லமையின் மிகப் பெரிய வெளிப்பாடுகளை நாம் காண்போம்“ என்று போதித்தார். உதவிக் கரம், அரவணைப்பு, ஆறுதலான உணர்வு ஆகியவை தேவைப்படுவோரைப் பார்த்துக்கொள்ளும்படியான அல்லது வெறும் மௌனமாய் அவர்களுடன் இருக்கும்படியான பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஒரு கணம் கூட, அவர்களின் சுமைகளைக் குறைக்க நம்மால் உதவ முடிந்தால், அவர்களின் வாழ்வில் இரட்சகரின் வல்லமையின் மகத்தான வெளிப்பாடுகளை நாம் காண முடியும்.
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, பிற்காலப் பரிசுத்தவான்கள் உலகில் அனுகூலமான வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். நம் முகரூபத்தில் பிரதிபலிக்கும் மகிழ்ச்சியின் உணர்வை வழங்க முடியும், அந்த மகிழ்ச்சியை அன்பின் வார்த்தைகளாலும், தயைமிக்க செயல்களாலும் நாம் பகிரமுடியும். நல்ல அயலாராக, நல்ல முதலாளிகளாக, நல்ல வேலையாட்களாக இருப்போமாக. எல்லா நேரங்களிலும் நல்ல கிறிஸ்தவர்களாக இருக்க முயற்சி செய்வோமாக.
நம்மை பரலோக பிதாவுடன் பிணைக்கும் அனைத்து வாக்குத்தத்தங்களையும் அவரின் பிள்ளைகள் பெற்றிருக்கும்படியாக தேவையான நியமங்களுடன் கர்த்தர் தம் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்துள்ளார். நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் அன்றாட சவால்களில் அவர்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களின் பரலோக பிதாவிடம் இந்த பரிசுத்த வாக்குத்தத்தங்களை செய்து, அவற்றைக் கைக்கொள்ள அவர்களுக்கு உதவுவதையும் நினைவில் கொள்வோமாக. இப்படியாக, அவர்கள் இவ்வாழ்க்கையிலாகிலும் நித்தியத்திலாகிலும் மென்மேலும் ஆசீர்வாதங்களை தம் பங்கிற்கு அவர் வாக்குத்தத்தம் பண்ணுவார். இந்த வாக்குறுதிகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் அவரது ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களின் மறுஸ்தாபிதம் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
வேறு வார்த்தைகளில் எனில், உடன்படிக்கையின் பாதையில் இருக்க மற்றவர்களுக்கு நாம் உதவலாம். நம்மில் சிலர் அவ்வப்போது பாதையிலிருந்து விலகிச் செல்கிறோம், ஆகிலும் திரும்பி வருவதற்கான வாய்ப்பு எப்போதும் நமக்கு உள்ளது என்று நமது பரலோக பிதா வைத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது போக்கு மிக பூரணமாய் இல்லாவிட்டாலும், “[நாம்] அடிக்கடி மனந்திரும்பி, உண்மையான நோக்கத்தோடு மன்னிப்பை [நாடும்போது] [நாம்] மன்னிக்கப்படுவோம்“ என்று இரட்சகர் எப்போதும் நமக்கு நினைவூட்டுகிறார்,
நாம் மாறுவதற்கு எந்த வழியும் இல்லையென்றோ அல்லது நமக்கு இனிமேலும் மாறுவதற்கான நம்பிக்கை உண்டாயிருப்பதில்லை என்றோ யோசிக்கச்செய்து நம்பவைப்பது இந்நாளில் சத்துருவின் தந்திரங்களில் .ஒன்றாகும் இந்த நாசகரமான சிந்தனை நம்மில் பலர் முயற்சி செய்வதை நிறுத்துகிறது. இச்சமயத்தில்தானே ஒருவர் மறுபடியும் முயற்சி செய்யத்தக்கதான போதுமான நம்பிக்கையை நம்முடைய அன்பும், ஆறுதலும் ஊக்கமான வார்த்தைகளும், நம்முடைய நேரமும், நமது உதவியும் கொடுக்கக்கூடும்.
ஒருவேளை நீங்கள், “சரி, ஆனால் எனக்கு யார் ஊழியம் செய்கிறார்கள்?” என நினைக்கலாம். நமது சகோதர சகோதரிகளின் வாழ்க்கையைப் போய் ஆசீர்வதிப்பதன் மூலம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையால் நம் வாழ்க்கையை நிரப்பும் சாட்சியங்களைச் சேகரிப்போம். இந்த சாட்சியங்கள் நம்மை மீண்டும் ஒருமுறை முயற்சி செய்ய புத்துயிர் அளிக்கும். பரிசுத்த ஆவியானவர் நம்மை உயிர்ப்பித்து, நம்முடைய சொந்த கஷ்டங்கள் மற்றும் தனிப்பட்ட சோதனைகளைத் தொடர புதுப்பிக்கப்பட்ட சாட்சிகளுடன் நமக்கு உதவுவார். நாம் பிறருடைய வாழ்க்கையை ஆசீர்வதிக்க முற்படும் போதெல்லாம், கர்த்தர் நம்மீது இன்னும் அதிகமாக இரக்கம் கொள்கிறார்.அவர் நம்மைப் பெலப்படுத்தி, நம் வாழ்வில் நமக்கு உதவுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் இரட்சகர் என்பதையும் தனிப்பட்ட முறையில் உங்களைப் புரிந்துகொள்கிறார் என்பதையும் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். ஒரு அழைப்பை நிறைவேற்றுவதும், தேவனின் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு காரியங்களை விட்டுவிடுவதும் என்னவென்று அவருக்குத் தெரியும். நீங்கள் அவரை நம்பினால், சந்தேகம் கொள்ளாமல், எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிக்கும் வல்லமை அவருக்கு இருக்கிறது.
என் அன்பான சகோதர சகோதரிகளே, ஒரு தாயையும் மகனையும் சந்திக்கும்படியாக அந்நாளில் ஒரு ஆசாரிய தலைவர் ஈர்க்கப்பட்டதாக உணர்ந்த போது அந்த சந்திப்பு எங்களின் நிகழ்ச்சி நிரலில் இல்லை, அவர்களுக்கு நாங்கள் தேவைப்பட்டோம் என்று தேவன் அறிந்துவைத்திருந்ததை நான் அறிவிக்கிறேன் இறுதியில், எனக்குத்தான் ஊழியம் செய்யப்பட்டது. அன்று, இரட்சகரின் அன்பின் மிகப் பெரிய பாடங்களில் ஒன்றை நான் பெற்றேன்.
இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்றும், அவர் ஜீவிக்கிறார் என்றும், உங்களுக்காகவும் எனக்காகவும் வாழ்ந்து மரித்தார் என்றும், திரைக்கு மறுபுறத்திலே ஏற்கனவே இருப்போருடன் மகிழ்ச்சி ததும்ப மேன்மையான மறுசந்திப்புகளை நாம் விரும்பி எதிர்பார்க்கும்படியாக உங்களுக்காகவும் எனக்காகவும் அவர் உயிர்த்தெழுந்தார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அவர் உங்களையும் என்னையும் பூரணமாக புரிந்துவைத்திருக்கிறார் என்று நான் அறிவேன். நம்முடைய ஒவ்வொரு கடினமான தருணங்களையும் அவர் புரிந்துகொள்கிறார், மேலும் நாம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாய் உணரும் தருணங்களில் நமக்கு உதவும் வல்லமை அவருக்கு உண்டு. இந்த நாட்களில் சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்ய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் நமது பரலோக பிதாவும் ஜோசப் ஸ்மித்துக்கு தரிசனமானதை நான் அறிவேன். நமது அன்பான தீர்க்கதரிசி, ரசல் எம். நெல்சன், கர்த்தருடைய தீர்க்கதரிசி என்பதை நான் அறிவேன், நான் இதைக்குறித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.