2020–2024
காற்று வீசுவதிலிருந்து ஓயவில்லை
அக்டோபர் 2024 பொது மாநாடு


9:46

காற்று வீசுவதிலிருந்து ஓயவில்லை

தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான பயணத்தில் முன்னேற மற்றவர்களுக்கு நாம் உதவ முடியும்.

2015 ஆம் ஆண்டில், பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில், ஜெ. ரூபன் கிளார்க் சட்ட சங்கத்தின் 62 உறுப்பினர்கள் நான்கு வெவ்வேறு முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களின் சட்ட சவால்களை விசாரிப்பதில் மாநில வழக்கறிஞர் அலுவலகத்துடன் ஒத்துழைத்தனர். ஒரு சனிக்கிழமை ஐந்து மணி நேரத்திற்கு, இந்த வக்கீல்கள் 200 குடியிருப்பாளர்களை ஒவ்வொருவராக பேட்டி கண்டனர், அவர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தால் நடைமுறை ரீதியாக மறக்கப்பட்டிருந்தனர்.

அவர்களின் நேர்காணல்களின் போது, வயதான குடியிருப்பாளர்களுக்கு எதிராக செய்யப்பட்ட கைவிடுதல், தவறாக நடத்துதல் மற்றும் நிதி துஷ்பிரயோகம் போன்ற பல குற்றங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த சட்ட சங்கத்தின் ஒரு முக்கிய தூண் ஏழை எளியவர்களை கவனித்துக்கொள்வதாகும். இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அரசு வழக்கறிஞர் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக வெற்றிகரமாக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.

“உங்கள் உடனுற்றார்களுக்கு நீங்கள் சேவை செய்யும்போது தேவனுக்கே சேவை செய்கிறீர்கள்,” என்ற பென்யமீன் ராஜாவின் போதனைக்கு அவர்களின் உதவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

புரோ போனோ திட்டத்தின் போது ஒரு குடியிருப்பாளரான லூசியா என்ற ஒரு கனிவான 93 வயது பெண்மணியை நான் தனிப்பட்ட முறையில் பேட்டி கண்டேன். எங்கள் சேவைக்கு நன்றியுள்ளவராக, அவர் வேடிக்கையாக, “என்னைக் கல்யாணம் செய்து கொள்!“ என்றார்.

ஆச்சரியமடைந்த நான், “அதோ அந்த அழகான இளம் பெண்ணைப் பாருங்கள்! அவள் எனது மனைவி மற்றும் அரசு வழக்கறிஞர்,“ என்று பதிலளித்தேன்.

“அதனால் என்ன? அவள் இளமையானவள், அழகானவள், எளிதாக மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். எனக்கு இருப்பதெல்லாம் நீ மட்டும்தான்!“ என்று அவர் சட்டென்று பதிலடி கொடுத்தார்:

அற்புதமான குடியிருப்பாளர்களின் அனைத்துபிரச்சினைகளும் அன்று தீர்க்கப்படவில்லை. வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கிய சவாலான பயணத்தில் யாரேதியர் தங்கள் படகுகளில், “அவர்கள் மேல் விழுந்த மலைபோன்ற அலைகளினிமித்தம், அநேகந்தரம் சமுத்திரத்தின் ஆழங்களில் புதைக்கப்பட்டார்கள்.“ அதைப் போலவே இவர்களும் அவ்வப்போது கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்த சனிக்கிழமையன்று, முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் பூமிக்குரிய அநாமதேயத்தைப் பொருட்படுத்தாமல், எளிய ஜெபங்களுக்குக் கூட பதிலளிக்கிற அன்பான பரலோக பிதாவால் தாங்கள் தனிப்பட்ட முறையில் அறியப்பட்டவர்கள் என்பதை அறிந்தார்கள்.

எஜமானர்களின் எஜமான் யாரேதியரை வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதங்களை நோக்கி “உக்கிரமான காற்று“ அடிக்கும்படிச் செய்தார். அதேபோல், கர்த்தரின் கரங்களில் ஒரு தாழ்மையான காற்றாக சேவை செய்ய நாம் தீர்மானிக்கலாம். வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி யாரேதியரை “காற்று வீசுவதிலிருந்து ஓயவில்லை” என்பதைப் போல, தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான பயணத்தில் முன்னேற மற்றவர்களுக்கு நாமும் உதவலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆயராக நான் அழைக்கப்படுவதற்காக, என் அன்பு மனைவி கிறிஸும் நானும் நேர்காணல் செய்யப்பட்டபோது, ஆலோசகர்களாக சிபாரிசு செய்ய பெயர்களை ஜெபத்துடன் பரிசீலிக்கும்படி எங்கள் பிணையத் தலைவர் என்னிடம் கேட்டார். நான் சிபாரிசு செய்த பெயர்களைக் கேட்ட பிறகு, ஒரு சகோதரரைப் பற்றி நான் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

முதலாவதாக, இந்த சகோதரருக்குப் படிக்கத் தெரியாது. இரண்டாவதாக, உறுப்பினர்களைச் சந்திக்க அவர் பயன்படுத்தும்படிக்கு அவரிடம் கார் இல்லை. மூன்றாவதாக, அவர் எப்போதும்—எப்போதும்—சபையில் கூலிங்கிளாஸ்களைப் பயன்படுத்தினார். தலைவரின் உண்மையான கவலைகள் இருந்தபோதிலும், அவரை இன்னும் எனது ஆலோசகராக பரிந்துரைக்க வேண்டும் என்று நான் உறுதியாக உணர்ந்தேன். அதற்குப் பிணையத் தலைவரும் ஆதரவளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நானும் எனது ஆலோசகர்களும் திருவிருந்துக் கூட்டத்தில் ஆதரிக்கப்பட்டோம், உறுப்பினர்களின் முகங்களில் ஆச்சரியம் தெளிவாகத் தெரிந்தது. இந்த அன்பான சகோதரர் மெதுவாக மேடையை நோக்கிச் சென்றார், அங்கு அவரது கூலிங்கிளாஸில் தலைக்கு மேல் விளக்குகள் பிரகாசமாக பிரதிபலித்தன.

அவர் என் பக்கத்தில் உட்கார்ந்தவுடன், “சகோதரரே, உங்கள் பார்வையில் சிக்கல் இருக்கிறதா?“ என்று கேட்டேன்.

“இல்லை“ என்றார் அவர்.

“பிறகு நீங்கள் ஏன் சபையில் கூலிங்கிளாஸ் பயன்படுத்துகிறீர்கள்?“ என்று நான் கேட்டேன். “என் நண்பரே, உறுப்பினர்கள் உங்கள் கண்களைப் பார்க்க வேண்டும், நீங்களும் அவர்களை நன்றாகப் பார்க்க முடியும்.“

அந்த நேரத்திலேயே, அவர் தனது கூலிங்கிளாஸைக் கழற்றினார், மீண்டும் சபையில் அவற்றைப் பயன்படுத்தவே இல்லை.

இந்த அன்பு சகோதரர் நான் ஆயராக விடுவிக்கப்படும் வரை என்னோடு சேவை செய்தார். இன்று, அவர் சபையில் விசுவாசத்துடன் சேவை செய்கிறார், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டுமாயிருக்கிறார். ஆனாலும், பல வருடங்களுக்கு முன்னர், அந்த ஆராதனைக் கூடத்தின் இருக்கைகளில் மறக்கப்பட்டிருந்த ஒரு பெயர் தெரியாத கூலிங்கிளாஸ் அணிந்தவராகவே அவர் இருந்தார். நான் அடிக்கடி ஆச்சரியப்படுகிறேன், எத்தனை விசுவாசமுள்ள சகோதர சகோதரிகள் இன்று நம் மத்தியில் அமர்ந்துள்ளவர்கள் மறக்கப்பட்டிருக்கிறார்கள்?

நாம் நன்கு அறியப்பட்டிருந்தாலும் அல்லது மறக்கப்பட்டிருந்தாலும், சோதனைகள் நம் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாமல் வரும். நாம் இரட்சகரிடம் திரும்பும்போது, அவர் “[நமது] உபத்திரவங்களை [நமது] ஆதாயத்திற்கென மாற்றுவார்“ மேலும் நமது ஆவிக்குரிய முன்னேற்றத்தை எளிதாக்கும் வகையில் நமது சோதனைகளுக்குப் பதிலளிக்க நமக்கு உதவ முடியும். முதியோர் இல்ல குடியிருப்பாளர்கள், தவறாக மதிப்பிடப்பட்ட சபை உறுப்பினர் அல்லது வேறு யாராக இருந்தாலும், நாம் “வீசுவதிலிருந்து ஓயாத [அந்த] காற்றாக“ இருக்கலாம், நம்பிக்கையைக் கொண்டு வரலாம் மற்றும் உடன்படிக்கையின் பாதையில் மற்றவர்களை வழிநடத்தலாம்.

நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம்.நெல்சன், இளைஞர்களுக்கு உற்சாகமூட்டும் மற்றும் உணர்த்துதலான அழைப்பை விடுத்தார்: “தகுதியான, திறமையான ஒவ்வொரு இளைஞனையும் ஒரு ஊழியத்திற்கு ஆயத்தம் செய்து சேவை செய்யும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதை இன்று நான் பலமாக உறுதிப்படுத்துகிறேன். பிற்காலப் பரிசுத்தவான் வாலிபர்களுக்கு, ஊழிய சேவை ஒரு ஆசாரியத்துவ பொறுப்பு. … இளம் மற்றும் திறமையான சகோதரிகளாகிய உங்களுக்கு, ஊழியம் என்பது ஒரு ஆற்றல்மிக்க, ஆனால் கட்டாயமற்ற, வாய்ப்பாகும்.

ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் ஊழியக்காரர்களாக சேவை செய்வதன் மூலம் கர்த்தரின் தீர்க்கதரிசன அழைப்புக்கு பதிலளிக்கிறார்கள். நீங்கள் புத்திசாலி, தலைவர் நெல்சன் சொன்னது போல, எந்த முந்தைய தலைமுறையையும் விட நீங்கள் உலகத்தில் அதிக தாக்கம் உண்டாக்க முடியும்!” நிச்சயமாக, நீங்கள் ஊழிய பயிற்சி மையத்தில் காலடி எடுத்து வைக்கும் தருணத்தில் உங்களுக்குள் உள்ள சிறந்த பதிப்பாக நீங்கள் இருப்பீர்கள் என்று அர்த்தமல்ல.

அதற்கு பதிலாக, “[நீங்கள்] செய்யவேண்டிய காரியங்களை முன்னதாகவே அறியாதவராய், ஆவியினால் நடத்திச் செல்லப்பட்டேன்.” என்று நீங்கள் நேபியைப் போல உணரலாம். இருந்தபோதிலும் [நீங்கள்] போனீர்கள்.”

ஒருவேளை எரேமியாவைப் போல நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்து, “நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்.“ என்று சொல்ல விரும்பலாம்.

உங்கள் தனிப்பட்ட குறைபாடுகளையும்கூட நீங்கள் பார்த்து: “ஆண்டவரே, நான் வாக்குவல்லவன் அல்ல… : நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்“ என்று மோசேயைப் போலவே கூக்குரலிட விரும்பலாம்.

உங்களில் பிரியமும் வல்லமையுமுள்ள இளம் ஆண்களும் பெண்களும் இப்பொழுதே இப்படிப்பட்ட சிந்தனையைக் கொண்டிருந்தால், கர்த்தர் பதிலளித்ததை நினைவில் கொள்ளுங்கள், “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போ,“ மேலும் அவர், “ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்“ என்று வாக்களிக்கிறார்.

இடைவிடாமல் கண்டுபிடிக்கவும், மனந்திரும்புதலைப் போதிக்கவும், மனம் மாறியவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும்,” தினசரி மனந்திரும்புதல், விசுவாசம், சரியான கீழ்ப்படிதல் மற்றும் கடின உழைப்பு மூலம் ஊழியக் களத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய நீங்கள் ஊக்கமாக முயற்சி செய்யும்போது,உங்கள் இயல்பான சுயத்திலிருந்து ஆவிக்குரிய சுயத்திற்கு வரிவரியாயும், கட்டளை கட்டளையாயும்,” உங்கள் மாற்றம் நிகழும்.

நீங்கள் ஒரு பெயர் பட்டையை அணிந்திருந்தாலும், சில நேரங்களில் நீங்கள் அடையாளம் காணப்படாமலும் அல்லது மறக்கப்பட்டதாகவும் உணரலாம். இருப்பினும், உங்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிற ஒரு பரிபூரண பரலோக பிதாவும், உங்களை நேசிக்கிற ஒரு இரட்சகரும் உங்களுக்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவேண்டும். ஊழியத் தலைவர்கள், அவர்கள் பரிபூரணமின்மையாய் இருந்தபோதிலும், உங்கள் தனிப்பட்ட மனமாற்றத்தின் பயணத்தில் உங்களை வழிநடத்துவதில் “வீசுவதிலிருந்து ஓயாத [அந்த] காற்றாக“ உங்களுக்கு சேவை செய்ய உங்களிடம் இருப்பார்கள்.

“பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்“ நீங்கள் உங்கள் ஊழியத்தில் சேவை செய்வீர்கள், நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் மறுபிறப்பு எடுப்பீர்கள், இயேசு கிறிஸ்துவிடம் நீங்கள் நெருங்கி வரும்போது அவரது வாழ்நாள் முழுவதுமான சீஷராகுவீர்கள். நீங்கள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சிலர் நிவாரணத்திற்காக “வெகு காலம்“ காத்திருக்கலாம், ஏனென்றால் அவர்களுக்கு இதுவரை உதவக்கூடிய “ஒருவருமில்லை“ என்றாலும், ஒருவரும் அவரால் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குப் போதித்திருக்கிறார். மாறாக, அவருடைய அநித்திய ஊழியத்தின் ஒவ்வொரு தருணத்திலும் ஒருவரைத் தேடுவதில் அவர் ஒரு பரிபூரண முன்னுதாரணம்.

நாம் ஒவ்வொருவரும், நம்மைச் சுற்றியுள்ளவர்களும், நம்மை தினமும் மூழ்கடிக்கின்ற நமது சொந்த எதிர்ப்புப் புயல்களையும் சோதனைகளின் அலைகளையும் எதிர்கொள்கிறோம். ஆனால் “காற்று வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு நேராய் வீசுவதிலிருந்து ஓய்வது [இல்லை] … ; இப்படியாக [நாம்] காற்றுக்கு முன்பாகத் தள்ளப்படுவோம்.“

நாம் ஒவ்வொருவரும் இந்த காற்றின் ஒரு பகுதியாக இருக்க முடியும்—யாரேதியர்களை அவர்களின் பயணத்தில் ஆசீர்வதித்த அதே காற்றைப் போல, மேலும் அதே காற்று, நமது உதவியுடன், அடையாளம் காணப்படாத மற்றும் மறக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த வாக்குத்தத்தத்தின் தேசங்களை சென்றடைய ஆசீர்வதிக்கும்.

இயேசு கிறிஸ்து பிதாவுடன் நமது பரிந்து பேசுபவராக இருக்கிறார். அவர் ஜீவனுள்ள தேவன், உடன்படிக்கையின் பாதையில் நம்மை எப்போதும் வழிநடத்தும் பலத்த காற்றாக செயல்படுகிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. ஜெ.ரூபன் கிளார்க் லா சொசைட்டி என்பது வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற சங்கமாகும் மற்றும் உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட அத்தியாயங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பிரதான தலைமையில் ஒரு ஆலோசகராக பல ஆண்டுகள் ஊழியம் செய்த யோசுவா ரூபன் கிளார்க் ஜூனியரின் நினைவாக இது பெயரிடப்பட்டது.

  2. மோசியா 2:17

  3. புரோ போனோ என்பது லத்தீன் மொழியில் உள்ள சொற்றொடரின் குறைக்கப்பட்ட வடிவமாகும் புரோ போனோ பப்லிகோ என்பது ”பொது நலனுக்காக” அல்லது ”பொதுமக்களின் நலனுக்காக” என்று பொருள்படும். இது தன்னார்வ வேலையின் ஒரு வடிவமாகும், இது பாரம்பரிய தன்னார்வத்தைப் போலல்லாமல், தொழில்முறை தகுதிகள் தேவைப்படுகிறது, இருப்பினும் இது ஊதியம் பெறாதது.

  4. ஏத்தேர் 6:6.

  5. ஏத்தேர் 6:5

  6. 2 நேபி 2:14, 16 பார்க்கவும்.

  7. ஏத்தேர் 6:8

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:106 பார்க்கவும்.

  9. ஆபிரகாம் 3:25 பார்க்கவும்.

  10. 2 நேபி 2:2; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122:7 ஐயும் பார்க்கவும்

  11. Russell M. Nelson, “Preaching the Gospel of Peace,” Liahona, May 2022, 6.

  12. Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), Gospel Library.

  13. 1 நேபி 4:6-7.

  14. எரேமியா 1:6.

  15. யாத்திராகமம் 4:10.

  16. எரேமியா 1:7.

  17. யாத்திராகமம் 4:12.

  18. மோசியா 3:19 பார்க்கவும்.

  19. 2 நேபி 28:30.

  20. ஆல்மா 26:22 பார்க்கவும்.

  21. Neil L. Andersen, “The Faith to Find and Baptize Converts,” (address given at the seminar for new mission presidents, June 25, 2016), 6.

  22. உபாகமம் 11:8–9 பார்க்கவும்.

  23. இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீஷர்களாக மாறுதல்,” என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி(3), - 4 பார்க்கவும்.

  24. யோவான் 5:6-7.

  25. லூக்கா 10:29 பார்க்கவும்.

  26. ஏத்தேர் 6:8

  27. தலைவர் டாலின் எச். ஓக்ஸ் மேனார்ட் டிக்சனின் மறக்கப்பட்ட மனிதன் என்ற தலைப்பில் ஒரு ஓவியத்தைக் குறிப்பிட்டார், அது சால்ட் லேக் சிட்டியில் உள்ள சபை நிர்வாக கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தொங்குகிறது: ”சூரியன் அவரது தலையில் பிரகாசிப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.” அவர் அங்கிருப்பதை அவருடைய பரலோக பிதா அறிவார். கடந்து செல்லும் ஜனக்கூட்டத்தால் அவர் மறக்கப்பட்டார், ஆனால் அவரது போராட்டங்களில், அவர் அங்கே இருப்பதை அவரது பரலோக பிதா அறிந்திருந்தார். நான் அந்த ஓவியத்துடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இருக்கிறேன், அது என்னுடன் பேசுகிறது மற்றும் நான் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை நினைவூட்டுகிறது”(in Sarah Jane Weaver, “What I Learned from President Oaks about the ‘Forgotten Man,’” Church News, Sept. 18, 2022, thechurchnews.com).