நம்முடைய சித்தத்தை அவருடைய சித்தத்திற்கேற்ப ஒருமுகப்படுத்துதல்
நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய சித்தத்தை பின்பற்றுவது—பரலோக ராஜ்ஜியமென்கிற உலகின் விலையேறப்பெற்ற முத்தைக் காண உதவும்.
ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், இரட்சகர் “நல்ல முத்துக்களை“ தேடிக்கொண்டிருந்த ஒரு வியாபாரியைப் பற்றி பேசினார். அந்த வியாபாரி தேடுகையில், அவன் “விலையுயர்ந்த” முத்து ஒன்றைக் கண்டான். இப்படியாக, இந்த அற்புதமான முத்தைப் பெறுவதற்கு இம்மனுஷன் தன்னுடைய சொத்துக்கள் யாவையும் விற்கவேண்டியதாய் இருந்தது. அவன் தாமதமின்றி அப்படியே சந்தோஷமாய் செய்தான்.
இந்த சிறிதும் கருத்துள்ள உவமையின் மூலம் இரட்சகர் பரலோக ராஜ்ஜியம், மெய்யாகவே அனைத்தைக்காட்டிலும் விரும்பப்பட வேண்டிய மிகவும் விலையுயர்ந்த பொக்கிஷமாகிய அந்த விலையேறப்பெற்ற முத்துவிற்கு ஒப்பாயிருக்கிறதென்று அழகாய் போதித்தார். அந்த வியாபாரி இந்த விலையுயர்த்த முத்தைப் பெற தன்னுடைய எல்லா உடமைகளையும் துரிதமாய் விற்றான் என்ற கூற்று கர்த்தருடைய சித்தத்திற்கேற்ப நம்முடைய மனதையும் விருப்பங்களையும் ஒருமுகப்படுத்தவேண்டும் என்றும் தேவ ராஜ்ஜியத்தின் நித்திய ஆசீர்வாதங்களைப் பெற நம்முடைய பூலோக ஜீவிய பயணத்தின்போது நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய மனதுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்றும் தெளிவாக உணர்த்துகிறது.
இப்பெரும் பலனை அடைவதற்கு தகுதியுள்ளவர்களாக, அநேக காரியங்களுள் குறிப்பாக, தன்னல மேன்மைகளுக்கானவைகளை புறந்தள்ள சிரத்தையெடுக்கவும் கர்த்தரிடம் நம்முடைய முழு அர்ப்பணித்தலிலிருந்தும் அவருடைய உன்னதமானதும் பரிசுத்தமுமான வழிகளிலிருந்தும் நம்மை நீக்கிப்போடும் யாதொரு சிக்கலையும் கைவிடுவதும் நிச்சயமாக செய்யவேண்டியவையாய் இருக்கிறது. அப்போஸ்தலர் பவுல் இந்த பரிசுத்தமானவைகளுக்கான தேடல்களை “கிறிஸ்துவின் சிந்தையை கொண்டிருத்தல்” என்று குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டின்படியே “[கர்த்தருக்கு] பிரியமானவைகளை எப்போதும் நம்முடைய வாழ்க்கையில் [செய்தல்]“ அல்லது சிலர் இக்காலங்களில் சொல்வதைப்போல “கர்த்தருக்கு உகந்ததை செய்தல்“ என்பதே இதன் அர்த்தமாகும்.
சுவிஷேச கண்ணோட்டத்தில் [கர்த்தருக்குப்] பிரியமானவைகளை எப்பொழுதும் [செய்வது] நம்முடைய சித்தத்தை அவருடைய சித்தத்திற்கு ஒப்புவித்தல் என்று பொருள்படும். இக்கொள்கையின் முக்கியத்துவத்தை இரட்சகர் தம்முடைய சீஷர்களுக்குக் கற்பிக்கிறபோது கவனத்தோடே போதித்தார்:
“என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.
“அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
“குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவதும்,, என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.”
இரட்சகர் தம்முடைய சித்தம் பிதாவின் சித்தத்தால் ஆட்கொள்ளும்படி அனுமதித்ததினிமித்தம் அவர் பூரணமானதும் தெய்வீக அளவினாலான கீழ்ப்படிதலை பெற்றிருந்தார். அவர் ஒருமுறை “என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை” என்றார். பாவநிவர்த்தியை நிறைவேற்ற உண்டான வியாகுலம், பாடுகள் ஆகியவைகளை பற்றி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திற்கு இரட்சகர் போதித்தபோது:
“ஏனெனில் இதோ, அவர்கள் மனந்திரும்பினால் அவர்கள் பாடுபடாதிருக்க, தேவனாகிய நான் எல்லோருக்காகவும் இவற்றை அனுபவித்தேன்; …
“இந்த வேதனை, சகலத்திற்கும் மேலான தேவனாகிய என்னையே வேதனையினிமித்தம் நடுங்கி, ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் கசிந்து, சரீரம் ஆவி இரண்டிலும் பாடுபடவைத்தது. நான் கசப்பான பானம்பண்ணி குறுகிப்போகாமலிருக்க விரும்புகிறேன்.
“ஆயினும் பிதாவுக்கே மகிமையுண்டாவதாக, மனுபுத்திரருக்காக நான் பங்கெடுத்து எனது ஆயத்தங்களை முடித்தேன்.”
நித்தியமனைத்திற்கும் எது சிறந்தது என்றும், தம்முடைய திட்டத்திற்குள்ளாக பிள்ளைகளுக்கு எது மிகவும் உகந்தது என்றும் பரலோக பிதா நிதர்சனமாய் அறிந்துவைத்திருப்பதை நாம் புரிந்துகொள்வதற்குப் பதிலாக நம்முடைய பூலோக ஜீவிய பயணத்தின்போது நாம் அறிந்தவையுடனும், நாம் மிகவும் சிறந்தது என்று நினைத்தவையுடனும், நமக்கு சரியானது என்று நாம் யூகித்துக்கொள்வதுடனும் அடிக்கடி போராடுகிறோம். குறிப்பாக நம்முடைய காலத்திற்கான வேதவாக்கியங்களில் உள்ள தீர்க்கதரிசனங்களை கருத்தில்கொள்ளும்போது இப்பெரும் போராட்டம் மிகவும் சிக்கலானவையாகக்கூடும். கடைசி நாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும் தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள்.
இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறியதை சுட்டிக்காட்டும் ஒரு அடையாளம் என்னவெனில் ஜனங்கள் தற்பிரியராய் மாறி எதுவானாலும் சரி, என் சுய சத்தியங்கள்படி ஜீவிப்பேன் என்றோ அல்லது எனக்கு சரியாய் படுகிறபடி நான் செய்வேன் என்பதான முழக்கத்தை அநேகர் ஆதரிக்கும் இந்த சமீபத்திய வளர்ந்துவருகிற போக்கேயாகும். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதைப்போல,“அவர்கள் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.“ இப்படிப்பட்ட சிந்தனை, தன்னலமுள்ள தேடுதல்களில் ஈடுபட்டு, தனிப்பட்ட விருப்பங்களில் ஆர்வம் கொண்டு, அல்லது தேவனுடைய அன்பின் திட்டத்திற்கும் தங்களுக்கான அவரது சித்தத்திற்கும் ஒவ்வாத சில வகையான நடபடிகளை நியாயப்படுத்தவேணடும் என்பவர்களால் “அசலானவை“ என்று அடிக்கடி நியாயப்படுத்தப்படுகிறது. நம்முடைய உள்ளத்தையும் மனதையும் இவ்வகையான சிந்தனையை தழுவ அனுமதிக்கும்போது தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக அன்பாய் ஆயத்தம் பண்ணியிருக்கிற நித்திய ஜீவனாகிய அந்த விலைமதிக்க முடியாத முத்துவை பெறுவதற்கு நமக்கு நாமே பெருமளவில் தடைகளை அமைத்துக்கொள்வோம்.
நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சீஷத்துவ பயணத்தை உடன்படிக்கையின் பாதையிலே நம்முடைய உள்ளங்களையும் மனங்களையும் கிறிஸ்து இயேசுவில் மையப்பட்டிருக்க முயற்சித்து பயணப்படுவது உண்மையென்றாலும், நம்முடைய வாழ்வில் இப்படிப்பட்ட உலக தத்துவத்தை ஆதரிக்க சோதனைக்குட்படாதபடிஜாக்கிரதையாயும் விடாது விழித்திருக்கவும் வேண்டும். மூப்பர் க்வென்டின் எல் குக் “நாம் அசலாய் இருப்பதைக்காட்டிலும் உண்மையாகவே கிறிஸ்துவைப்போல இருப்பது இன்னும் முக்கியம் வாய்ந்த இலக்கு “என்று கூறினார்.
எனக்கு அன்பான நண்பர்களே, நம்முடைய தன்னலத்திற்கான தேடல்களின் தாக்கத்தை விட தேவன் சக்திவாய்ந்த செல்வாக்காக நம் வாழ்க்கையில் இருக்க நாம் அனுமதிக்கும் போது, நம்முடைய சீஷத்துவத்தில் நாம் முன்னேறி இரட்சகரோடு நம்முடைய மனதையும் உள்ளத்தையும் ஐக்கியப்படும்படியான நமது திறனை வளர்த்துக்கொள்ளமுடியும். மற்றொரு புறம், நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வழி நிலவ நாம் அனுமதிக்காதபோது நாம் தனியே விடப்படுகிறோம், கர்த்தரின் உணர்த்துகிற வழிநடத்துதல் இல்லாமல் நாம் செய்கிற அல்லது செய்யாத ஏறக்குறைய எதையும் சரியானதே என்று தீர்மானிக்கக் கூடும். விஷயங்களை நம்முடைய சொந்த வழியில் செய்வதன் மூலமும், “நான் எல்லாவற்றையும் என் வழியில் செய்கிறேன்“ என்று சொல்வதன் மூலமும் நமக்கு நாமே சாக்குப்போக்கு சொல்லலாம்.
ஒரு சமயம், இரட்சகர் தம்முடைய கோட்பாட்டினை அறிவித்துக்கொண்டிருக்கும்போது, சிலர், குறிப்பாக சுய நீதியுள்ள பரிசேயர் அவருடைய செய்தியை நிராகரித்து, தங்களுடைய வம்சாவழி தங்களுக்கு தேவ பார்வையில் விசேஷித்த சலுகைகளை அருளும் என்பதாக தாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அறிவித்தார்கள். இந்த மனநிலை அவர்களை தங்களுடைய சுயபுத்தியின்மேல் சாயச்செய்து, இரட்சகர் போதித்ததை நம்ப மறுத்தது. இயேசுவினிடத்தில் பரிசேயரின் நடத்தை அவர்களின் மிதப்பான அணுகுமுறை இரட்சகரின் வார்த்தைகளுக்கும் தேவனின் வழிக்கும் தங்கள் உள்ளத்தில் இடம்கொடுக்கவில்லை என்பதற்கு தெளிவான ஆதாரமாகும். இதற்கு பிரதியுத்திரமாக, இயேசு ஞானமாயும் திடமனதுடனும், அவர்கள் மெய்யாகவே ஆபிரகாமின் உடன்படிக்கையின் பிள்ளைகளாயிருந்திருந்தால், அத்தருணத்தில் தங்களுக்கு முன்பாக நின்று ஆபிரகாமின் தேவன் தங்களுக்கு சத்தியத்தை போதித்துக்கொண்டிருக்கிறார் என்பதை குறிப்பாக கருத்தில்கொண்டு அவர்கள் ஆபிரகாமின் கிரியைகளை செய்திருப்பார்கள் என்று அறிவித்தார்.
சகோதர சகோதரிகளே கர்த்தருக்கு எப்போதும் பிடித்தமானது எது என்பதற்குப் பதிலாக எனக்கு சரியென்று எது படுகிறதோ என்ற மன தாற்பரியங்களின்படி நடப்பது நம்முடைய நாளுக்கேயான தனித்துவமான புதிய போக்கன்று. இது நுற்றாண்டுகளை கடந்த பழமையான மனநிலை மற்றும் தங்களின் சொந்த கண்களுக்கு ஞானிகளாய் தோன்றுபவர்களை, பலமுறை குருடாக்கி அநேக தேவ பிள்ளைகளை தாறுமாறாக்கி கலங்கடிக்கிறது. இப்படியாக இந்த மனநிலை சத்துருவின் பழைய தந்திரமாய் இருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளை சத்தியமும் உண்மையுமான உடன்படிக்கையின் பாதையிலிருந்து ஜாக்கிரதையாய் நடத்திச்செல்லுகிற வஞ்சக பாதையாகும். மரபணு, புவித்தன்மை, சரீர மற்றும் மன குறைபாடுகள் போன்ற தனிப்பட்ட சூழ்நிலைகள் நம்முடைய பயணத்தை பாதித்தாலும், கனம்பொருத்திய காரியங்களில் நம்முடைய வாழ்வுக்கென்று கர்த்தர் ஆயத்தப்படுத்தின முறையை நாம் பின்பற்றவா அல்லது வேண்டாமா என்று தேர்வுசெய்துகொள்ள நாம் சுயாதீனர்களாய் இருக்கக்கூடிய ஓர் உள்ளான இடம் ஒன்று உண்டு. மெய்யாகவே,”அவர் பாதையை வரைந்து, வழிநடத்தினார். ஒவ்வொரு புள்ளியும் [வரையறுக்கப்பட்டுள்ளது].”
கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் அவர் தமது பூலோக ஊழியத்தின் போது விட்டுச்சென்ற பாதையில் நடக்க விரும்புகிறோம். நாம் அவருடைய சித்தத்தையும் அவரை பிரியப்படுத்துகிற அனைத்தையும் செய்ய விரும்புவது மாத்திரமல்ல அவரை போலாகவும் நாடுகிறோம். நாம் பிரவேசித்த ஒவ்வொரு உடன்படிக்கைக்கும் உண்மையாய் இருக்க பாடுபட்டும் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையின்படியேயும்” ஜீவனம் பண்ணும்போது அந்த விலையேறப்பெற்ற முத்துக்களை விட்டு நம்மை வழிநடத்திச்செல்லுகிற தத்துவம், கோட்பாடு ஆகியவைகளின் பிழைகளாகிய உலகத்தின் பாவங்களாலும் அதன் பிழைகளாலும் நாம் பாதிக்கப்படாதபடி பாதுகாக்கப்படுவோம்.
கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்கள் கர்த்தருக்கு உத்தமமானதும் அவருடைய பார்வைக்கு பிரியமானதுமான காரியங்களை தேர்ந்தெடுக்கும்போது, தேவனுக்கு ஆவிக்குரிய வகையில் தாழ்மையாய் இருப்பது எப்படி அவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதைக் குறித்து நான் தனிப்பட்ட முறையில் ஏவப்பட்டிருக்கிறேன். ஊழியத்திற்குச் செல்ல தீர்வு அடையாதிருந்து, சபையில் மூத்த தலைவர் ஒருவர் தன்னுடைய சொந்த சாட்சியத்தையும் ஊழியக்காரனாய் சேவை செய்த பரிசுத்த அனுபவத்தையும் பகிர்வதைக் கேட்டு தானும் போய் கர்த்தருக்கு சேவை செய்ய ஏவப்பட்ட வாலிபன் ஒருவனை நான் அறிவேன்.
இந்த வாலிபன், இப்போது ஊழியத்தை முடித்துவிட்டு வந்தவனாய் தன்னுடைய சொந்த வார்த்தைகளில்: “நான் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் ஒருவரின் சாட்சியத்தை கேட்டபோது, எனக்கான தேவனுடைய அன்பை நான் உணரமுடிந்தது. நான் அந்த அன்பை பிறரிடத்தில் பகிர விரும்பினேன். என்னுடைய பயம், சந்தேகம், கேள்விகள் இருந்தபோதிலும் அக்கணமே நான் ஊழியத்திற்கு செல்லவேண்டும் என்று அறிந்துகொண்டேன். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அருளுகிற ஆசீர்வாதங்களிலும் வாக்குத்தத்தங்களிலும் நான் மிகவும் திட நம்பிக்கையாய் இருக்கிறேன். இன்று நான் ஒரு புதிய மனிதன்: இந்த சுவிசேஷம் உண்மையானதென்றும் இயேசு கிறிஸ்துவின் சபை பூமியில் மறுஸ்தாபிதம் பண்ணப்பட்டது என்றும் சாட்சியத்தை கொண்டிருக்கிறேன்.“என்று சொன்னான். இந்த வாலிபன் கர்த்தருடைய வழியை தெரிந்துகொண்டு எல்லா அம்சத்திலும் உண்மையான சீஷனுக்குரிய எடுத்துக்காட்டு ஆனான்.
ஒரு விசுவாசமான வாலிப பெண் தான் வேலை செய்த ஆடை அலங்கார நிறுவனத்தின் வியாபார பிரிவுக்குத் தகுந்தாற்போல கவர்ச்சியாக ஆடை அணிந்து வரும்படி கேட்டுக்கொண்டபோது அவள் தன் தரத்தை விட்டுக்கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தாள். அவளுடைய சரீரம் பரலோக பிதாவினிடமிருந்து கிடைக்கப்பெற்ற பரிசுத்த ஈவு என்றும், ஆவியானவர் வாசம் செய்யத்தக்கதான ஓர் இடம் என்றும் அறிந்தவளாய், உலகத்தின் தரத்தைக்காட்டிலும் உயர்வான தரத்தின்படி வாழ ஏவப்பட்டாள். இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷ சத்தியங்களின்படி அவள் வாழ்வதை கண்டவர்களின் நம்பிக்கையை பெற்றது மாத்திரம் அல்லாமல், சில தருணங்கள் தன்னுடைய வேலையை இழக்கவிருந்த போதும், அவள் அதையும் விடாது காத்துக்கொண்டாள். உலகத்திற்கு ஒத்துப்போவதைக் காட்டிலும் கர்த்தரின் பார்வைக்குப் பிரியமானதை செய்ய அவளின் விருப்பம் கடின தெரிவுகளுக்கு மத்தியில் அவளுக்கு உடன்படிக்கையினாலான தைரியத்தைக் கொடுத்தது.
சகோதர சகோதரிகளே, நம்முடைய அனுதின பயணத்தில் இப்படிப்பட்ட ஒத்த தீர்மானங்களை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம். தேவனுக்கு நம்மையே அர்ப்பணிக்கும் திறனுக்கு ஊறு விளைவிக்கத்தக்கதாக நம்முடைய வாழ்க்கையில் சரீர பெலவீனம் இருப்பதை ஒப்புக்கொள்ள நேர்மையாகவும் தாழ்மையாகவும் நிதானமாய் முன்னேறி தன்னை சோதித்தறிந்து, முடிவாக நம்முடைய வழிக்குப் பதிலாக அவருடைய வழியை பின்பற்ற தேர்வுசெய்வதற்கு தைரியமும் விருப்பமுமுள்ள உள்ளமும் தேவை. தேவனுடைய சித்தம் நம்முடைய சித்தமாகிட நம்முடைய பழைய சுபாவத்தை விட்டுவிடவும், இழக்கவும், நம்முடைய உள்ளத்தையும் நம்முடைய முழு ஆத்துமாவையும் சமர்ப்பணம் செய்யவும் விரும்புவதில் நம்முடைய சீஷத்துவத்தின் இறுதியான சோதனை அடங்கியுள்ளது.
கர்த்தருக்கு உத்தமமானதும் அவருக்குப் பிரியமானதுமான காரியமும், நமக்கு சரியானது என்ற காரியமும் ஒன்றாகி அவைகளை எப்போதும் செய்வதினால் வருகிற சந்தோஷத்தை நாம் கண்டடையும்போது பூலோக ஜீவியத்தில் வருகிற மிகவும் மகிமையான தருணங்களில் ஒன்று நடந்தேறுகிறது. மாறாது, சந்தேகத்திற்கு இடமின்றி கர்த்தருடைய சித்தத்தை நமது ஆக்கிக்கொள்ள கம்பீரமும் வீரமிக்கதுமான சீஷத்துவம் தேவை. அந்த விசேஷமான சமயத்தில், நாம் கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவர்களாய், நம்முடைய சித்தங்களை அவரிடத்தில் முழுமையாக ஒப்புக்கொடுக்கிறோம். இப்படியான ஆவிக்குரிய கீழ்ப்படிதல் அழகாயும், வல்லமையாயும், மாற்றமடைவதாயும் இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய சித்தத்தை பின்பற்றுவது பரலோக ராஜ்ஜியமென்கிற உலகின் விலையேறப்பெற்ற முத்தைக் காண உதவும் என்று நான் சாட்சியளிக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய நேரத்திலும், முறையின் போதும் உடன்படிக்கையினாலான தைரியத்தைக் கொண்டு பரலோக பிதாவினிடத்திலும் இரட்சகராகிய இயேசு கிறித்துவினிடத்திலும் “உமக்கு எது சரியோ அது எனக்கும் சரியே“ என்று அறிக்கையிடும்படியாக நான் ஜெபிக்கிறேன். இவைகளை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சொல்கிறேன், ஆமென்.