2020–2024
வேர்களை போஷிக்கவும், கிளைகள் வளரும்
அக்டோபர் 2024 பொது மாநாடு


14:31

வேர்களை போஷிக்கவும், கிளைகள் வளரும்

உங்கள் சாட்சியின் கிளைகள், பரலோக பிதா மற்றும் அவருடைய நேச குமாரன் மீதான உங்கள் ஆழமான விசுவாசத்திலிருந்து பலத்தைப் பெறும்.

ஸ்விக்காவில் உள்ள ஒரு பழைய கூடுமிடம்

2024 ஆம் ஆண்டு எனக்கு ஒரு முக்கிய ஆண்டு. நான் ஞானஸ்நானம் பெற்று, ஜெர்மனியின் ஸ்விக்காவ் நகரில் உள்ள பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில், உறுப்பினராக திடப்படுத்தப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இயேசு கிறிஸ்துவின் சபையில் எனது அங்கத்தினரத்துவம் எனக்கு மதிப்புமிக்கது. என் சகோதர சகோதரிகளே, உங்களோடு, தேவனின் உடன்படிக்கையின் மக்களிடையே, எண்ணப்படுவது என் வாழ்வின் மிகப்பெரிய பெருமைகளில் ஒன்றாகும்.

எனது தனிப்பட்ட சீஷத்துவப் பயணத்தைப் பற்றி நான் நினைக்கும் போது, ​​​​என் மனம் அடிக்கடி ஸ்விக்காவில் உள்ள ஒரு பழைய வில்லாவுக்குச் செல்கிறது, அங்கு நான் சிறுவயதில் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் திருவிருந்து கூட்டங்களில் கலந்துகொண்டதை நினைவுகூருகிறேன். அங்குதான் எனது சாட்சியத்தின் நாற்று அதன் ஆரம்ப போஷிப்பைப் பெற்றது.

இந்த கூடுமிடத்தில் ஒரு பழைய காற்றால் இயக்கப்படும் ஆர்கன் இருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு இளைஞன் ஆர்கன் வேலை செய்ய பெல்லோக்களை இயக்கும் உறுதியான நெம்புகோலை மேலும் கீழும் தள்ள நியமிக்கப்பட்டான். இந்த முக்கியமான பணியில் உதவி செய்யும் பெரும் சிலாக்கியம் எனக்கு சில சமயங்களில் கிடைத்தது.

சபையினர் நாங்கள் நேசிக்கிற பாடல்களைப் பாடியபோது, ​​​​ஆர்கனுக்கு காற்று குறைவில்லாமலிருக்க நான் எனது முழு பலத்தையும் பிரயோகித்துத் தள்ளுவேன். பெல்லோஸ் ஆபரேட்டர் இருக்கையில் இருந்து, சில பிரமிப்பூட்டும் வண்ணக் கண்ணாடி ஜன்னல்களை நான் நன்றாகப் பார்த்தேன், ஒன்று இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை சித்தரித்தது, மற்றொன்று பரிசுத்த தோப்பில் ஜோசப் ஸ்மித்தை சித்தரித்தது.

பரிசுத்தவான்களின் சாட்சியங்களைக் கேட்கும்போதும், சீயோனின் பாடல்களைப் பாடும்போதும் சூரிய ஒளியில் ஒளிரும் ஜன்னல்களைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட பரிசுத்தமான உணர்வுகள் இன்னும் நினைவில் உள்ளன.

அந்தப் பரிசுத்த ஸ்தலத்தில், தேவனுடைய ஆவியானவர் என் மனதிற்கும் இருதயத்திற்கும் அது உண்மை என சாட்சி கொடுத்தார்—இயேசு கிறிஸ்து உலக இரட்சகர். இது அவரது சபை. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் பிதாவாகிய தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பார்த்தார் மற்றும் அவர்களின் குரலைக் கேட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவில் பணியில் இருந்தபோது, ​​ஸ்விக்காவுக்குத் திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த நேசத்துக்குரிய பழைய கூடுமிடம் இப்போது இல்லை. பெரிய அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன் அது இடிக்கப்பட்டது.

எது நித்தியமானது, எது இல்லை?

எனது குழந்தைப் பருவத்திலிருந்தே இருந்த இந்த நேசத்துக்குரிய கட்டிடம் இப்போது ஒரு நினைவாக உள்ளது என்பதை அறிவது வருத்தமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது எனக்கு ஒரு பரிசுத்தமான கட்டிடம். ஆனால் அது வெறும் கட்டிடமாகவே இருந்தது.

இதற்கு நேர்மாறாக, பல ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியால் நான் பெற்ற ஆவிக்குரிய சாட்சி மறைந்துவிடவில்லை. உண்மையில், அது வலுவாக வளர்ந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி என் இளமைப் பருவத்தில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் என் வாழ்நாள் முழுவதும் எனக்கு உறுதியான அடித்தளமாக இருந்தன. ஸ்விக்காவ் கூடுமிடம் அகற்றப்பட்டு, வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள் காணாமல் போன பிறகும், என் பரலோக பிதாவுடனும் அவருடைய நேச குமாரனுடனும் நான் ஏற்படுத்திய உடன்படிக்கை இணைப்பு என்னுடன் இருந்தது.

இயேசு சொன்னார், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.”

“மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, கர்த்தர் சொல்லுகிறார்.”

இந்த வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று நித்தியமானது மற்றும் அல்லாதது ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசம். அதைப் புரிந்துகொண்டவுடன், எல்லாமே மாறுகிறது—நம் உறவுகள், நாம் செய்யும் தேர்வுகள், மக்களை நடத்தும் விதம்.

எது நித்தியமானது மற்றும் எது அல்லாதது என்பதை அறிவது இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சபைபற்றிய சாட்சியத்தை வளர்ப்பதற்கு முக்கியமாகும்.

வேர்கள் என கிளைகளை தவறாக எண்ணாதீர்கள்

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கற்பித்தது போல், “அனைத்தையும், சத்தியத்தின் ஒவ்வொரு பொருளையும் அணைத்துக்கொள்கிறது.” ஆனால் எல்லா உண்மைகளும் சம மதிப்புள்ளவை என்று அர்த்தமல்ல. சில உண்மைகள் நம் நம்பிக்கையின் வேராக, முக்கியமானமை, அத்தியாவசியமானவை. மற்றவை இணைப்புகள் அல்லது கிளைகள்—மதிப்புமிக்கவை, ஆனால் அவை அடிப்படைகளுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார், “நமது மதத்தின் அடிப்படைக் கொள்கைகள், இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார், பரலோகத்திற்கு ஏறினார் என்பதற்கான அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியமே; நமது மதத்தைப்பற்றிய மற்ற எல்லா விஷயங்களும் அதனுடன் இணைப்புகள் மட்டுமே”

வேறு வார்த்தைகளில் எனில், இயேசு கிறிஸ்து மற்றும் அவரது பாவநிவாரண பலி நமது சாட்சியின் வேர். மற்ற அனைத்தும் கிளைகள்.

கிளைகள் முக்கியமற்றவை என்று சொல்ல முடியாது. ஒரு மரத்திற்கு கிளைகள் தேவை. ஆனால் இரட்சகர் தம் சீஷர்களிடம் கூறியது போல், “கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாது.” இரட்சகருடன் தொடர்பு, வேர்களில் காணப்படும் போஷாக்கு, இல்லாமல், ஒரு கிளை வாடி இறந்துவிடுகிறது.

இயேசு கிறிஸ்து பற்றிய நமது சாட்சியங்களை போஷிக்கும் போது, ​​நாம் சில சமயங்களில் கிளைகளை வேர்கள் என்று தவறாக நினைக்கிறோமோ என்று எண்ணுகிறேன். இதுவே இயேசு தம் காலத்து பரிசேயர்களிடம் கவனித்த தவறு. நியாயப்பிரமாணத்தின் ஒப்பீட்டளவில் சிறிய விவரங்களுக்கு அவர்கள் மிகவும் கவனம் செலுத்தினர், இரட்சகர் “முக்கியமான விஷயங்கள்” என்று அழைத்ததை அவர்கள் புறக்கணித்தனர்—“நீதி மற்றும் இரக்கம் மற்றும் விசுவாசம்” போன்ற அடிப்படைக் கோட்பாடுகள்.

நீங்கள் ஒரு மரத்தை போஷிக்க விரும்பினால், கிளைகளில் தண்ணீரை தெளிக்காதீர்கள். நீங்கள் வேர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். அதுபோலவே, உங்கள் சாட்சியின் கிளைகள் வளர்ந்து கனிகொடுக்க வேண்டுமெனில், வேர்களை போஷிக்கவும். ஒரு குறிப்பிட்ட கோட்பாடு அல்லது நடைமுறை அல்லது சபை வரலாற்றின் கூறுபாடு பற்றி நீங்கள் நிச்சயமற்றவராக இருந்தால், இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்துடன் தெளிவை நாடுங்கள். உங்களுக்காக அவருடைய தியாகத்தையும், உங்களுக்காக அவருடைய அன்பையும், உங்களுக்காக அவருடைய சித்தத்தையும் புரிந்துகொள்ள முயலுங்கள். பணிவுடன் அவரைப் பின்பற்றுங்கள். உங்கள் சாட்சியின் கிளைகள், பரலோக பிதா மற்றும் அவருடைய நேச குமாரன் மீதான உங்கள் ஆழமான விசுவாசத்திலிருந்து பலத்தைப் பெறும்.

உதாரணமாக, மார்மன் புஸ்தகத்தின் வலுவான சாட்சியை நீங்கள் விரும்பினால், இயேசு கிறிஸ்துவின் சாட்சியில் கவனம் செலுத்துங்கள். மார்மன் புஸ்தகம் அவரைப் பற்றி எவ்வாறு சாட்சியமளிக்கிறது, அவரைப் பற்றி அது என்ன கற்பிக்கிறது, மேலும் அவரிடம் வருமாறு அது உங்களுக்கு உணர்த்தி எவ்வாறு அழைக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

சபைக் கூட்டங்களில் அல்லது ஆலயத்தில் நீங்கள் அதிக அர்த்தமுள்ள அனுபவத்தை தேடுகிறீர்களானால், அங்கு நாம் பெறும் பரிசுத்த நியமங்களில் இரட்சகரைத் தேட முயற்சிக்கவும். கர்த்தரை அவருடைய பரிசுத்த வீட்டில் கண்டுபிடியுங்கள்.

உங்கள் சபை அழைப்பால் நீங்கள் எப்போதாவது சோர்ந்துவிட்டதாக அல்லது அதிக பாரமாக உணர்ந்தால், உங்கள் சேவையை இயேசு கிறிஸ்துவில் மீண்டும் கவனம் செலுத்த முயற்சிக்கவும். அவர் மீதான உங்கள் அன்பின் வெளிப்பாடாக அதை ஆக்குங்கள்.

வேர்களை போஷிக்கவும், கிளைகள் வளரும். மேலும் காலப்போக்கில் அவை பலனைத் தரும்.

“அவரில் வேரூன்றி கட்டியெழுப்பப் படுங்கள்”

இயேசு கிறிஸ்து மீது பலத்த விசுவாசம் உடனே நடப்பதில்லை. இல்லை, இந்த உலகில், சந்தேகத்தின் முட்களும் குறுக்குகளும் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆரோக்கியமான, பலனளிக்கும் விசுவாசத்தின் மரத்திற்கு மனமுவந்த முயற்சி தேவை. நாம் கிறிஸ்துவில் உறுதியாக வேரூன்றியிருப்பதை உறுதி செய்வதே அந்த முயற்சியின் முக்கிய பகுதியாகும்.

உதாரணமாக: முதலில், நாம் இரட்சகரின் சுவிசேஷம் மற்றும் சபைக்கு ஈர்க்கப்படலாம், ஏனென்றால் நட்பான உறுப்பினர்கள் அல்லது அன்பான ஆயர் அல்லது சபையின் தூய்மையான தோற்றத்தால் நாம் ஈர்க்கப்படலாம். இந்த சூழ்நிலைகள் சபையை வளர்க்க நிச்சயமாக முக்கியம்.

இருந்தபோதிலும், நம்முடைய சாட்சியத்தின் வேர்கள் அதைவிட ஆழமாக வளரவில்லை என்றால், குறைவான சுவாரசியமான கட்டிடத்தில் சந்திக்கும் ஒரு தொகுதிக்கு, அவ்வளவு நட்பாக இல்லாத உறுப்பினர்களுடன், ஆயர் நம்மை புண்படுத்தும் ஒன்றைச் சொன்னால் என்ன நடக்கும்?

மற்றொரு உதாரணம்: கட்டளைகளைக் கடைப்பிடித்து, ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டு, ஒரு பெரிய, மகிழ்ச்சியான குடும்பத்துடன் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்று நம்புவது, பிரகாசமான கீழ்ப்படிதலுள்ள குழந்தைகளுடன், அவர்கள் அனைவரும் சபையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், ஊழியம் செய்கிறார்கள், தொகுதி பாடகர் குழுவில் பாடுகிறார்கள் மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் கூடுமிடத்தை சுத்தம் செய்ய தன்னார்வத் தொண்டு செய்கிறார்கள் என்பது நியாயமாகத் தோன்றவில்லையா?

இதை நாம் அனைவரும் நம் வாழ்வில் காண்போம் என்று நிச்சயமாக நம்புகிறேன். ஆனால் அது நடக்கவில்லையென்றால் என்ன செய்வது? எந்த சூழ்நிலையிலும் இரட்சகரை நம்பி— அவருடைய நேரத்தை நம்பி அவருக்குக் கட்டுப்பட்டிருப்போமா?

நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: என்னுடைய சாட்சி என் வாழ்வில் நடக்கும் என்று நான் நம்புவதை அடிப்படையாகக் கொண்டதா? இது மற்றவர்களின் செயல்கள் அல்லது மனநிலைகளைச் சார்ந்ததா? அல்லது வாழ்க்கையின் மாறிவரும் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அது இயேசு கிறிஸ்துவில் உறுதியாக அஸ்திபாரப்பட்டு, “அவருக்குள் வேரூன்றி கட்டமைக்கப்பட்டதா”?

மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் விசுவாசம்

“தேவ நியமங்களை ஆசரிப்பதில் உறுதியாயிருந்த” மக்களைப் பற்றி மார்மன் புத்தகம் சொல்கிறது. ஆனால் பின்னர் கோரிகோர் என்ற சந்தேக நபர் வந்து, இரட்சகரின் சுவிசேஷத்தைக் கேலி செய்து, அதை “பைத்தியமான” மற்றும் “உங்களின் பிதாக்களுடைய வீணான பாரம்பரியத்தினிமித்தமே” என்று அழைத்தான். கோரிகோர், “அநேகரின் இருதயங்களை வழிநடத்தி, அவர்களுடைய துன்மார்க்கத்திலே அவர்கள் தங்கள் சிரசுகளை உயர்த்தும்படி செய்து” வழிநடத்தினான். ஆனால் மற்றவர்களை அவனால் ஏமாற்ற முடியவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு பாரம்பரியத்தை விட அதிகமானதாக இருந்தது.

தனிப்பட்ட அனுபவம், இயேசு கிறிஸ்துவுக்கான தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தல், நமது மரபுகள் எதுவானாலும் அல்லது மற்றவர்கள் என்ன சொல்லலாம் அல்லது என்ன செய்யலாம் என்பதைப் பொருட்படுத்தாமல் அது ஆழமான வேர்களைக் கொண்டிருக்கும்போது விசுவாசம் வலுவாக இருக்கும்.

நமது சாட்சியம் சோதிக்கப்பட்டு பரீட்சிக்கப்படும். ஒருபோதும் சோதிக்கப்படாவிட்டால் விசுவாசம் என்பது விசுவாசம் அல்ல. ஒருபோதும் எதிர்க்க்கப்படாவிட்டால் விசுவாசம் பலமாகாது. எனவே உங்களுக்கு விசுவாசத்தின் சோதனைகள் அல்லது பதிலளிக்கப்படாத கேள்விகள் இருந்தால் விரக்தியடைய வேண்டாம்.

நாம் செயல்படுவதற்கு முன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அது விசுவாசம் இல்லை. ஆல்மா போதித்தபடி, “காரியங்களைக் குறித்து பூரண ஞானத்தைப் பெற்றிருப்பது விசுவாசமல்ல” நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் வரை செயல்படக் காத்திருந்தால், நாம் சாதிக்கக்கூடிய நல்லதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறோம், மேலும் நமது விசுவாசத்தின் வல்லமையைக் கட்டுப்படுத்துகிறோம்.

விசுவாசம் அழகானது, ஏனென்றால் எதிர்பார்த்தபடி ஆசீர்வாதங்கள் வராதபோதும் அது நிலைத்திருக்கும். நாம் எதிர்காலத்தைப் பார்க்க முடியாது, எல்லா பதில்களும் நமக்குத் தெரியாது, ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை நம்பலாம், ஏனெனில் நாம் முன்னோக்கி மற்றும் மேல்நோக்கிச் செல்கிறோம், ஏனென்றால் அவர் நம்முடைய இரட்சகரும் மீட்பருமாக இருக்கிறார்.

நம்பிக்கையானது வாழ்க்கையின் சோதனைகளையும் நிச்சயமற்ற நிலைகளையும் தாங்குகிறது, ஏனெனில் அது கிறிஸ்துவிலும் அவருடைய கோட்பாட்டிலும் உறுதியாக வேரூன்றியுள்ளது. இயேசு கிறிஸ்துவும், அவரை அனுப்பிய பரலோகத்திலுள்ள நமது பிதாவும், ஒன்றாகவே நம் நம்பிக்கையின் மாறாத, முற்றிலும் நம்பகமானவர்களாக இருக்கிறார்கள்.

சாட்சியம் என்பது நீங்கள் ஒருமுறை கட்டியெழுப்பி , அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதல்ல. இது நீங்கள் தொடர்ந்து வளர்க்கும் ஒரு மரத்தைப் போன்றது. தேவனுடைய வார்த்தையை உங்கள் இதயத்தில் விதைப்பது முதல் படி மட்டுமே. உங்கள் சாட்சியம் வளர ஆரம்பித்தவுடன், உண்மையான வேலை தொடங்குகிறது! நீங்கள் “மிகுந்த ஜாக்கிரதையாய்ப் போஷிப்பதால், அது வேர் விட்டுவளர்ந்து, கனி கொடுக்கும்.” அதற்கு “அதிக கருத்து” மற்றும் “வார்த்தையில் பொறுமை” தேவை. ஆனால் கர்த்தருடைய வாக்குறுதிகள் உறுதியானவை: “இவ்விருட்சம் உங்களுக்குக் கனியை கொடுக்கக் காத்திருந்து, உங்கள் விசுவாசம், உங்கள் கருத்து, பொறுமை, மற்றும், நீடிய சாந்தத்தினிமித்தம், பலனை அறுவடை செய்வீர்கள்.”

அன்புள்ள சகோதர சகோதரிகளே, பழைய ஸ்விக்காவ் கூடுமிடத்தையும் அதன் வண்ணக் கண்ணாடி ஜன்னல்களையும் தவறவிட்ட ஒரு பகுதி என்னுள் இருக்கிறது. ஆனால், கடந்த 75 வருடங்களாக, நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிலிர்ப்பான வாழ்க்கைப் பயணத்தில் இயேசு கிறிஸ்து என்னை வழிநடத்தினார். அவர் என் துன்பங்களில் எனக்கு ஆறுதல் அளித்தார், என் பலவீனங்களை அடையாளம் காண எனக்கு உதவினார், என் ஆவிக்குரிய காயங்களைக் குணப்படுத்தினார், மேலும் என் வளர்ந்து வரும் விசுவாசத்தில் என்னை போஷித்தார்.

இரட்சகர் மீதும், அவருடைய கோட்பாட்டிலும், அவருடைய சபையிலும் நம்முடைய விசுவாசத்தின் வேர்களை நாம் தொடர்ந்து போஷிக்க வேண்டும் என்பதே எனது உருக்கமான ஜெபம் மற்றும் ஆசீர்வாதம். இதைப் பற்றி நான் நம்முடைய இரட்சகர், நமது மீட்பர், நமது போதகரின் பரிசுத்த நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சாட்சி கூறுகிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. 2024 ஆம் ஆண்டு பொது அதிகாரியாக என் அழைப்புக்கு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது மற்றும் அந்த அழைப்பின் விளைவாக எங்கள் குடும்பம் ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று 25 ஆண்டுகள் ஆகின்றன. ஏறக்குறைய சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு—அக்டோபர் 2, 2004 அன்று—நான் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழும உறுப்பினராகவும், “உலகெங்கும் கிறிஸ்துவின் நாமத்திற்கு” ஒரு சிறப்பு சாட்சியாகவும் ஆதரிக்கப்பட்டேன்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:23).

  2. சில வழிகளில், அந்த கட்டிடத்தைப் பற்றிய எனது உணர்வுகள், ஆல்மாவின் மக்கள் மார்மன் தண்ணீரைப் பற்றி உணர்ந்ததைப் போன்றது—அது அவர்களுக்கு ஒரு அழகான இடமாக இருந்தது, ஏனென்றால் “அங்கே [அவர்கள்] தங்கள் மீட்பரைப்பற்றிய ஞானத்திற்கு வந்தார்கள்” (மோசியா 18:30).

  3. மத்தேயு 24:35; ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1:35, ஐயும் பார்க்கவும்.

  4. ஏசாயா 54:10; மற்றும் 3 நேபி 22:10 ஐயும் பார்க்கவும்.

  5. தலைவர் தாமஸ் எஸ். மான்சன் இந்த வார்த்தைகளுடன் இதே சத்தியத்தைப் போதித்தார்: “பூமியில் இருக்கும் இந்த குறுகிய பயணத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடங்களில் எது முக்கியமானது எது அல்ல என்பதை வேறுபடுத்திப் பார்க்க உதவும் பாடங்கள் என்று நான் நம்புகிறேன். அந்த மிக முக்கியமான விஷயங்கள் உங்களை கடந்து செல்ல அனுமதிக்கவேண்டாம் என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.” (“Finding Joy in the Journey,” Liahona, Nov. 2008, 85). இதேபோல், தலைவர் ரசல் எம். நெல்சன் சமீபத்தில் நம்மை “சிலஸ்டியலாக சிந்திக்க“ ஊக்குவித்தபோது, “ “மிகப்பெரிய நித்தியமான காரியங்களைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக்கொள்வதில் உலக வாழ்க்கை என்பது ஒரு பிரதான வகுப்பு.“ (“Think Celestial!,“ Liahona, Nov. 2023, 118).

  6. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 264; see also Teachings of Presidents of the Church: Brigham Young (1997), 16–18.

  7. Teachings: Joseph Smith, 49.

  8. யோவான் 15:4.

  9. மத்தேயு 23:23, New Revised Standard Version.

  10. பண்டைய அமெரிக்க கலாச்சாரங்களுக்கும், மார்மன் புஸ்தக மக்களுக்கும் இடையே உள்ள தொல்பொருள் ஒற்றுமைகளைக் குறிப்பிடுவது சுவாரஸ்யமானதா? அது இருக்க முடியும். ஜோசப் ஸ்மித் மார்மன் புஸ்தகத்தை எவ்வாறு மொழிபெயர்த்தார் என்ற விவரங்களைப் பற்றி எழுத்தாளர்கள் மற்றும் பிறருடைய விவரங்களிலிருந்து கற்றுக்கொள்வது உதவியாக இருக்கிறதா? அது சிலருக்கே. ஆனால் இவை எதுவுமே மார்மன் புஸ்தகம் தேவனுடைய வார்த்தை என்பதற்கு ஒரு நிலையான சாட்சியாக இல்லை. அதற்கு, உங்களோடு பேசும் அவருடைய குரலைக் கேட்க, மார்மன் புஸ்தகத்தில் இரட்சகரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது நடந்தவுடன், பழங்கால நகரமான சாரகெம்லா உண்மையில் எங்கிருந்தது அல்லது ஊரிம் மற்றும் தும்மிம் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு முக்கியமாயிருக்காது அவை தேவைப்பட்டால் உங்கள் மரத்திலிருந்து கத்தரிக்கக்கூடிய கிளைகள், ஆனால் மரம் அப்படியே இருக்கும்.

  11. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–20 பார்க்கவும்.

  12. See Joy D. Jones, “For Him,” Liahona, Nov. 2018, 50–52 பார்க்கவும்.

  13. ஆதியாகமம் 3:18 பார்க்கவும்.

  14. தலைவர் நெல்சன் நம் அனைவரையும் “இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய சுவிசேஷத்தின் [நம்] சொந்த சாட்சியத்துக்கு பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக உழைத்திடுங்கள். Nurture it so that it will grow” (“Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 97).

  15. கொலோசெயர் 2:7.

  16. ஆல்மா 30:3.

  17. ஆல்மா 30:12–16, 31 பார்க்கவும்.

  18. ஆல்மா 30:18.

  19. சுவாரஸ்யமாக, சமீபத்தில் மனமாற்றம் செய்யப்பட்ட லாமானியர்கள், அம்மோன் மக்களிடையே (ஆல்மா 30:19–20 ஐப் பார்க்கவும்), கோரிகோரின் விவாதங்கள் முற்றிலும் நம்பத்தகாததாயிருந்தது, ஏனெனில் அவர்கள் தங்கள் பிதாக்களின் பாரம்பரியத்தின் காரணமாக மட்டும் கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை.

    இதற்கு நேர்மாறாக, “தங்கள் பிதாக்களின் பாரம்பரியத்தை அவர்கள் நம்பாததால்” கர்த்தரின் சபையில் இருந்து தங்களைப் பிரித்த இளைஞர்களின் தலைமுறையைப் பற்றியும் மார்மன் புஸ்தகம் கூறுகிறது. (மோசியா 26:1–4 பார்க்கவும்). குடும்பங்கள் நீதியான மரபுகளை நிறுவுவது நல்லது. ஆனால் அந்த மரபுகளுக்குப் பின்னால் உள்ள ஏன் காரணத்தை குடும்பங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நாம் ஏன் தினமும் காலையிலும் இரவிலும் ஜெபிக்கிறோம்? நமக்கு ஏன் குடும்ப வேதப் படிப்பு இருக்கிறது? வாரந்தோறும் இல்ல மாலை, குடும்ப செயல்பாடுகள் மற்றும் சேவை திட்டங்கள் மற்றும் பலவற்றை ஏன் நடத்துகிறோம்? பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் இந்த மரபுகள் நம்மை எவ்வாறு நெருக்கமாக்குகின்றன என்பதை நம் பிள்ளைகள் புரிந்து கொண்டால், அவர்கள் தங்கள் சொந்த குடும்பங்களில் அவற்றைத் தொடரவும், அவைகளை மேம்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது.

  20. ஆல்மா 32:21. விசுவாசம் வல்லமை வாய்ந்தது, அது அறிந்தவற்றால் அல்ல, ஆனால் அது செயல்படுவதால்.

  21. எபிரெயர் 10:23 பார்க்கவும்.

  22. ஆல்மா 32:37, 41–43.