2020–2024
கர்த்தரின் மனந்திரும்புதல் வரத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்
அக்டோபர் 2024 பொது மாநாடு


11:35

கர்த்தரின் மனந்திரும்புதல் வரத்தைத் தழுவிக்கொள்ளுங்கள்

தேவனிடம் திரும்புவதற்கு முன்பு காரியங்கள் கடினமாகும் வரை காத்திருக்க வேண்டாம். உண்மையிலேயே மனந்திரும்ப நம் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருக்க வேண்டாம்.

அன்பான பரலோக பிதாவைக் குறித்து நான் சாட்சியம் கூறுகிறேன். ஏப்ரல் 2019 பொது மாநாட்டில், ஒரு பொது அதிகாரி எழுபதின்மராக எனது புதிய பொறுப்பில் ஆதரிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பாடகர் குழு “நான் ஆச்சரியத்தோடு நிற்கிறேன்.“ என்ற பாடலைப் பாடியது, என் இருதயத்தையும் ஆன்மாவையும் துளைத்தது.

சொந்தம் கொண்டாடவும், மீட்கவும், நியாயப்படுத்தவும்

அவர் என்னைப் போன்றவர்களிடம் தனது மிகுந்த அன்பை கொடுக்கும்படியாய்,

என்னைப் போல கலகமும் பெருமையுமுள்ள ஒரு ஆத்துமாவை மீட்க,

அவர் தெய்வீக சிம்மாசனத்திலிருந்து இறங்குவார் என்று நான் வியக்கிறேன்.”

எனக்குப் பின்னாலிருந்து அந்த வார்த்தைகள் பாடப்படுவதைக் கேட்டபோது, நான் ஆச்சரியப்பட்டேன். என்னுடைய போதாமைகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், “அவருடைய பெலத்தினால் நான் சகலத்தையும் செய்யக்கூடும்“ என்பதை அறிய கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார்.

போதாமை, பலவீனம் அல்லது தகுதியற்றது போன்ற பொதுவான உணர்வு நம்மில் பலர் சில நேரங்களில் போராடும் ஒன்று. நான் இன்னும் இதோடு போராடுகிறேன்; நான் அழைக்கப்பட்ட நாளில் அதை உணர்ந்தேன். நான் அதை பல முறை உணர்ந்திருக்கிறேன், இப்போதும் உங்களுடன் பேசும்போது நான் அதை உணர்கிறேன். இருப்பினும், இந்த உணர்வுகளுடன் நான் தனியாக இல்லை என்பதை நான் கற்றுக்கொண்டேன். உண்மையில், இதேபோன்ற உணர்வுகளை உணர்ந்ததாகக் காணப்பட்ட நபர்களின் பல விளக்கங்கள் வேதங்களில் உள்ளன. உதாரணமாக, நேபியை கர்த்தரின் விசுவாசமுள்ள மற்றும் பராக்கிரமமுள்ள ஊழியராக நாம் அவரை நினைவுகூருகிறோம். ஆனால் சில நேரங்களில், அவரும் தகுதியற்றவராக, பலவீனம் மற்றும் போதாமை போன்ற உணர்வுகளுடன் போராடினார்.

அவர் சொன்னார், “அவருடைய பெரிதும், மகத்துவமுமான கிரியைகளை எனக்குக் காண்பிப்பதில், கர்த்தருடைய மகா நன்மை இருப்பினும், நிர்ப்பந்தமான மனுஷனாக இருக்கிறேனே, என்று என் இருதயம் ஓலமிடுகிறது. ஆம், என் மாம்சத்தினிமித்தம் என் இருதயம் வருத்தமடைகிறது; என் அக்கிரமங்களினிமித்தம் என் ஆத்துமா துக்கமடைகிறது.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் தனது இளமையில் “[அவருடைய] பலவீனங்களுக்காகவும் நிறைவின்மைக்காகவும் அடிக்கடி “குற்றப்படுத்தப்பட்டதாக“ பேசினார். ஆனால் ஜோசப்பின் போதாமை மற்றும் கவலையின் உணர்வுகள் அவரை சிந்திக்கவும், படிக்கவும், கற்றுக்கொள்ளவும், ஜெபிக்கவும் வழிநடத்திய ஒரு பகுதியாகும். சத்தியத்தையும் சமாதானத்தையும் மன்னிப்பையும் கண்டுபிடிக்க அவர் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தோப்புக்குப் போய் ஜெபம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். “ஜோசப், என் குமாரனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கர்த்தர் சொல்வதை அவர் கேட்டார். உன் வழியே போ, என் கொள்கைகள் படி நட, என் கட்டளைகளைக் காத்துக்கொள். இதோ, நான் மகிமையின் தேவன். என் நாமத்தை நம்புபவர்கள் யாவரும் நித்திய ஜீவனைப் பெறும்படியாக, நான் உலகத்துக்காக சிலுவையிலறையப்பட்டேன்.”

மனந்திரும்பி தன் ஆத்துமாவின் இரட்சிப்பைத் தேடுவதற்கான ஜோசப்பின் உண்மையான வாஞ்சை இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவருடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற அவருக்கு உதவியது. இந்த அனுபவம் கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் தொடர்ச்சியான மறுஸ்தாபிதத்திற்கான கதவைத் திறந்தது.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் இந்த குறிப்பிடத்தக்க அனுபவம், பலவீனம் மற்றும் போதாமையின் உணர்வுகள் நமது வீழ்ச்சியடைந்த இயல்பை அடையாளம் காண எவ்வாறு உதவும் என்பதை விளக்குகிறது. நாம் தாழ்மையுள்ளவர்களாக இருந்தால், இது இயேசு கிறிஸ்துவின் மீது நாம் சார்ந்திருப்பதை அங்கீகரிக்க நமக்கு உதவக்கூடும், முழு நோக்கத்தோடு இரட்சகரிடம் திரும்பவும், நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பவும் அவை நமது இருதயங்களுக்குள் உண்மையான வாஞ்சையைத் தூண்டக்கூடும்

நண்பர்களே, மனந்திரும்புதலே சந்தோஷமானது! இனிமையான மனந்திரும்புதல் என்பது ஒரு அன்றாட செயல்முறையின் ஒரு பகுதியாகும், இதன் மூலம், “வரிவரியாயும், கட்டளை கட்டளையாயும்,” கர்த்தர் தனது போதனைகளை மையமாகக் கொண்ட வாழ்க்கையை வாழ நமக்குப் போதிக்கிறார் ஜோசப் மற்றும் நேபியைப் போல, நாம் “இரக்கத்திற்காக [தேவனிடம்] கூக்குரலிடலாம்; அவர் இரட்சிக்க வல்லவர்.“ அவர் எந்த நீதியான ஆசையையும் அல்லது ஏக்கத்தையும் நிறைவேற்ற முடியும், நம் வாழ்க்கையிலுள்ள எந்த காயத்தையும் குணமாக்க முடியும்.

மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு, இதில் உண்மையான மனந்திரும்புதலின் மூலம் கிறிஸ்துவிடம் எவ்வாறு வருவது என்பதைக் கற்றுக்கொண்ட தனிநபர்களின் எண்ணற்ற விவரங்களை நீங்களும் நானும் காணலாம்.

எனக்குப் பிரியமான சொந்த தீவான பியோர்டோ ரிக்கோவில் நடந்த ஒரு அனுபவத்தின் மூலம் கர்த்தரின் கனிவான இரக்கங்களின் உதாரணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது சொந்த ஊரான போன்ஸில், சபையின் ஒரு சகோதரியான சிலியா குரூஸ், மார்மன் புஸ்தகத்தை ஒரு நண்பருக்குக் கொடுக்கப் போகிறதாக தீர்மானித்தாள். அவள் வைரங்களையும், மாணிக்கக் கற்களையும் விட மதிப்பு வாய்ந்த இந்தப் பரிசை உறையிட்டுக் கொடுக்கச் சென்றாள். அவள் செல்லும் வழியில் ஒரு திருடன் அவளை அணுகி, அவளுடைய பணப்பையை பறித்துக் கொண்டு, உள்ளே இருந்த சிறப்புப் பரிசையும் எடுத்துக்கொண்டு ஓடினான்.

இந்த கதையை அவள் சபையில் சொன்னபோது, “யாருக்குத் தெரியும்? ஒரு வேளை சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள இது உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக இருக்கலாம்!” என்று அவளுடைய தோழி சொன்னாள்.

சரி, சில நாட்கள் கழித்து, என்ன நடந்தது தெரியுமா? சிலியாவுக்கு ஒரு கடிதம் வந்தது. சிலியா என்னுடன் பகிர்ந்து கொண்ட அந்தக் கடிதத்தை இன்று என் கையில் வைத்திருக்கிறேன். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமதி. குரூஸ்.

என்னை மன்னித்துவிடுங்கள், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைத் தாக்கியதற்காக நான் எவ்வளவு வருத்தப்படுகிறேன் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். ஆனால் அதன் காரணமாக, என் வாழ்க்கை மாறிவிட்டது, தொடர்ந்து மாறும்.

“அந்த புஸ்தகம் [மார்மன் புஸ்தகம்] என் வாழ்க்கையில் எனக்கு உதவியது. அந்த தேவ மனிதனின் சொப்பனம் என்னை உலுக்கிவிட்டது. உங்கள் ஐந்தை [டாலர்களை] நான் திருப்பித் தருகிறேன், ஏனென்றால் என்னால் அவற்றை செலவிட முடியாது. உங்களைச் சுற்றி ஒரு பிரகாசம் இருப்பதாகத் தோன்றியது என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த ஒளி என்னை (உங்களுக்குத் தீங்கு விளைவிப்பதிலிருந்து) தடுக்கிறது என்று தோன்றியது, அதனால் அதற்குப் பதிலாக நான் ஓடிவிட்டேன்.

நீங்கள் என்னை மறுபடியும் பார்ப்பீர்கள் என்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன், ஆனால் நீங்கள் என்னைப் பார்க்கும்போது, நீங்கள் என்னை அடையாளம் காண மாட்டீர்கள், ஏனென்றால் நான் உங்கள் சகோதரனாக இருப்பேன். … இங்கே, நான் வசிக்கும் இடத்தில், நான் கர்த்தரைக் கண்டுபிடித்து, நீங்கள் சார்ந்த சபைக்குச் செல்ல வேண்டும்.

அந்த புத்தகத்தில் நீங்கள் எழுதிய செய்தி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. புதன்கிழமை இரவிலிருந்து என்னால் அதைப் படிப்பதை நிறுத்த முடியவில்லை. நான் ஜெபித்தேன், என்னை மன்னிக்கும்படி கடவுளிடம் கேட்டேன், [மேலும்] நீங்கள் என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். … நீங்கள் உறையிட்டு வைத்திருந்த பரிசு நான் விற்கக்கூடிய ஒன்று என்று நினைத்தேன். [அதற்கு பதிலாக,] அது என் வாழ்க்கையை மாற்ற விரும்பியது. மன்னித்துவிடுங்கள், என்னை மன்னித்துவிடுங்கள், நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

காணாமல் போன உங்கள் நண்பர்.

சகோதர சகோதரிகளே, நமது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், இரட்சகரின் ஒளி நம் அனைவரையும் சென்றடைய முடியும். “கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் எல்லையற்ற ஒளியால் பிரகாசிப்பதைக் காட்டிலும் கீழே மூழ்குவது சாத்தியமில்லை“ என்று தலைவர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் சொன்னார்.

சிலியாவின் பரிசாகிய மார்மன் புஸ்தகத்தை எதிர்பாராமல் பெற்றுக்கொண்டவரைப் பொறுத்தவரை, இந்த சகோதரர் கர்த்தரின் இரக்கத்திற்கு அதிக சாட்சியளிக்கும்படி தொடந்தார் . அந்த சகோதரர் தன்னை மன்னிக்கக் கொஞ்ச காலம் எடுத்தாலும், மனந்திரும்புவதில் அவர் சந்தோஷத்தைக் கண்டார். என்னே ஒரு அற்புதம்! ஒரு உண்மையுள்ள சகோதரி, ஒரு மார்மன் புஸ்தகம், உண்மையான மனந்திரும்புதல், மற்றும் இரட்சகரின் வல்லமை ஆகியவை கர்த்தரின் ஆலயத்தில் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் பரிசுத்த உடன்படிக்கைகளின் முழுமையை அனுபவிக்க வழிநடத்தின. மற்ற குடும்ப அங்கத்தினர்கள் முழுநேர ஊழிய சேவை உட்பட கர்த்தரின் திராட்சைத் தோட்டத்தில் பரிசுத்த பொறுப்புகளைப் பின்பற்றி ஏற்றுக்கொண்டனர்.

நாம் இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, நமது உண்மையான மனந்திரும்புதலின் பாதை இறுதியில் இரட்சகரின் பரிசுத்த ஆலயத்திற்கு நம்மை வழிநடத்தும்.

பரிசுத்த ஆலய உடன்படிக்கைகளின் மூலம் நமது பரலோக பிதாவும் அவரது குமாரனும் சாத்தியமாக்கிய ஆசீர்வாதங்களின் முழுமைக்கு தகுதியுள்ளவர்களாக இருக்க - சுத்தமாயிருக்க முயற்சிப்பதற்கு எத்தகைய நீதியான உள்நோக்கம்! கர்த்தரின் ஆலயத்தில் தவறாமல் சேவை செய்வதும், அங்கு நாம் செய்யும் பரிசுத்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள முயற்சிப்பதும், நாம் இரட்சகரைப் போல மாறுவதற்குத் தேவையான இருதயம், வல்லமை, மனம் மற்றும் ஆத்துமாவின் மாற்றத்தை அனுபவிக்க நமது விருப்பத்தையும் திறனையும் அதிகரிக்கும். “[ஆலயத்தில் ஆராதிப்பதற்கும்] அதிகமாக வேறெதுவும் வானத்தைத் திறக்காது,“ என்று தலைவர் ரசல் எம்.நெல்சன் சாட்சியமளித்தார். வேறெதுவுமில்லை!”

எனக்குப் பிரியமான நண்பர்களே, நீங்கள் போதாமையாக உணர்கிறீர்களா? நீங்கள் தகுதியற்றவராக உணர்கிறீர்களா? எடுத்த முடிவு சரியானதுதானா என்று யோசிக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் கவலைப்படலாம் மற்றும் கேட்கலாம்: என்னால் நன்றாக செய்யமுடியுமா? எனக்கு நேரம் கடந்து விட்டதா? என்னால் முடிந்தவரை முயற்சி செய்யும் போதும் நான் ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறேன்?

சகோதர சகோதரிகளே, நிச்சயமாக நாம் நம் வாழ்க்கையில் தவறுகளைச் செய்வோம். ஆனால் மூப்பர் கெரிட் டபிள்யூ. காங் போதித்தது போல, “நமது இரட்சகரின் பாவநிவர்த்தி அளவில்லாதது, நித்தியமானது. நாம் ஒவ்வொருவரும் அலைந்து திரிகிறோம், குறைவுள்ளவர்களாகிறோம். சிலநேரங்களில் நமது வழியை இழக்கிறோம். நாம் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், திரும்பி வர முடியாது என்றில்லை என அன்புடன் தேவன் நமக்கு உறுதியளிக்கிறார். நம்மைத் தழுவிக்கொள்ள ஆயத்தமாக அவர் காத்திருக்கிறார்.”

என் அன்பு மனைவி கேரி லூ எனக்குக் கற்றுக் கொடுத்தபடி, நாம் அனைவரும் மனந்திரும்ப வேண்டும், திரும்பச் சுற்றி, ஒவ்வொரு நாளும் நேரத்தை “பூஜ்ஜிய மணிக்கு“ மீட்டமைக்க வேண்டும்.

தடைகள் வரும். தேவனிடம் திரும்புவதற்கு முன்பு காரியங்கள் கடினமாகும் வரை காத்திருக்க வேண்டாம். உண்மையிலேயே மனந்திரும்ப நம் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, இந்த நேரத்தில் உடன்படிக்கை பாதையின் எந்தப் பகுதியில் நாம் இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் வல்லமையிலும், அவரிடம் நாம் திரும்புவதற்கான பரலோக பிதாவின் வாஞ்சையிலும் இப்போது கவனம் செலுத்துவோம்.

கர்த்தரின் ஆலயம், அவரது பரிசுத்த வேதங்கள், அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் கோட்பாட்டின் மூலம் தனிப்பட்ட பரிசுத்தத்தை நோக்கி முயற்சி செய்ய நம்மை ஊக்குவிக்கிறார்கள்.

மேலும் நேபி சொன்னான்: “இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, … இதுவே வழி; இதைத் தவிர வானத்தின் கீழே தேவனுடைய ராஜ்யத்தில் மனுஷன் [மனுஷியும்] இரட்சிக்கப்படும்படிக்கு வேறு வழியோ நாமமோ கொடுக்கப்படவில்லை. இதோ, இது கிறிஸ்துவின் கோட்பாடு, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஒரே உண்மையான உபதேசம்.

தேவனுடன் “பாவநிவர்த்தி“ செய்யும் நமது செயல்முறையை சவாலாக உணரலாம். நீங்களும் நானும் இடைநிறுத்தலாம், அமைதியாக இருக்கலாம், இரட்சகரை நோக்கிப் பார்க்கலாம், அவர் நம்மை மாற்ற விரும்புவதைக் கண்டுபிடித்து செயல்பட நாடலாம். நாம் முழு நோக்கத்துடன் அவ்வாறு செய்தால், அந்த குணப்படுத்துதலை நாம் காண்போம். மனந்திரும்புதலான கர்த்தரின் பரிசை நாம் தழுவிக்கொள்ளும்போது நமது சந்ததியினர் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்!

குயவனாகிய போதகர், என் அப்பா கற்பித்தபடி, நம்மை வார்த்தெடுத்து செம்மைப்படுத்துவார். இது கடினமாக இருக்கும். ஆயினும்கூட, குணமாக்கும் போதகர் உண்மையில் நம்மை சுத்திகரிப்பார். அந்த குணப்படுத்தும் வல்லமையை நான் அனுபவித்தேன், தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் அன்றாட மனந்திரும்புதலின் மூலம் வருகிறது என நான் சாட்சியமளிக்கிறேன்.

ஓ, அவர் என்னை கவனித்துக்கொள்வது அற்புதம்

எனக்காக மரிக்கவும் இருக்கிறார்!

தேவனின் அன்பைக் குறித்தும், அவரது குமாரனின் பாவநிவர்த்தியின் எல்லையற்ற வல்லமையைக்குறித்தும் நான் சாட்சியமளிக்கிறேன். நாம் உண்மையாகவும் முழு இருதயத்தோடும் மனந்திரும்பும்போது அதை ஆழமாக உணர முடியும்.

என் நண்பர்களே, தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக சுவிசேஷத்தின் மகிமையான மறுஸ்தாபிதம் மற்றும் அவரது தீர்க்கதரிசியும் வாயாகவுமான தலைவர் ரசல் எம்.நெல்சன் மூலமாக இரட்சகரின் தற்போதைய தெய்வீக வழிநடத்துதலுக்கும் நான் சாட்சியாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்றும், அவர் நமது ஆத்துமாக்களின் குணமாக்கும் போதகர் என்றும் நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, இந்தக் காரியங்கள் உண்மையானவை என்பது எனக்குத் தெரியும் என நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. “I Stand All Amazed,” Hymns, no.193.

  2. ஆல்மா 26:12.

  3. 2 நேபி 4:17; வசனங்கள் 18:-19 ஐயும் பார்க்கவும்.

  4. ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:29.

  5. Joseph Smith, “History, circa Summer 1832,” 3, josephsmithpapers.org; punctuation and capitalization standardized.

  6. மோசியா 4:11-12 பார்க்கவும்.

  7. தலைவர் ரசல்.எம். நெல்சன் போதித்தார்: “நாம் மனந்திரும்பத் தெரிந்துகொள்ளும்போது, மாற்றத்தைத் தேர்வு செய்கிறோம்! நம்மை நம்முடைய சிறந்த பதிப்பாக மாற்ற இரட்சகரை அனுமதிக்கிறோம். ஆவிக்குரிய விதமாக வளரவும், அவரில் மீட்பின் சந்தோஷமான சந்தோஷத்தைப் பெறவும் நாம் தேர்ந்தெடுக்கிறோம். நாம் மனந்திரும்ப தெரிந்தெடுக்கும்போது, அநேகமாக இயேசு கிறிஸ்துவைப் போலாக மாற நாம் தெரிந்தெடுக்கிறோம்!” (“We Can Do Better and Be Better,” Liahona, May 2019, 67).

  8. 2 நேபி 28:30.

  9. ஆல்மா 34:18.

  10. “என் சகோதர சகோதரிகளே, மார்மன் புஸ்தகம் உங்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்கதாக இருக்கிறது? “உங்களுக்கு வைரங்கள் அல்லது மாணிக்கங்கள் அல்லது மார்மன் புஸ்தகம் வழங்கப்பட்டால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உண்மையில், எது உங்களுக்கு மிக மதிப்புள்ளதாய் இருக்கிறது?” (Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?,” Liahona, Nov. 2017, 61).

  11. In F. Burton Howard, “Missionary Moments: ‘My Life Has Changed,’” Church News, Jan. 6, 1996, thechurchnews.com; see also Saints: The Story of the Church of Jesus Christ in the Latter Days, vol. 4, Sounded in Every Ear, 1955–2020 (2024), 472–74, 477–79.

  12. Jeffrey R. Holland, “The Laborers in the Vineyard,” Liahona, May 2012, 33.

  13. ஒரு நொடி நின்று நம் சந்ததியினரைப் பற்றி சிந்திக்கலாமா? நமது கிட்டப்பார்வை காரணமாக, நாம் இப்போது அதை பார்க்க முடியாது, ஆனால் இருதயத்தின் முழு நோக்கத்துடனும் கர்த்தரிடம் திரும்புவதற்கான நமது விருப்பம், மாற்றம்; மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தழுவுவது தலைமுறைகளை செல்வாக்கு செலுத்தும்! மிகவும் அசௌகரியமான சூழ்நிலைகளிலும் ஒரு ஆத்துமாவின் தாழ்மை, சாந்தம், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் ஆகியவற்றிலிருந்து மலரக்கூடிய கூடுதல் ஆசீர்வாதங்களை கற்பனை செய்து பாருங்கள்!

  14. செப்டம்பர் 10, 2024 அன்று மூப்பர் ஹோர்ஹே ஆல்வராடோவுடனான தனிப்பட்ட உரையாடலில் சகோதரி சிலியா குரூஸ் இந்த விவரங்களை விவரித்தார்.

  15. Russell M. Nelson, “Rejoice in the Gift of Priesthood Keys,” Liahona, May 2024, 122.

  16. நாம் இப்படி கேள்விகளை கேட்கிறதுபோல் காணும்பொழுது, அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நினைவில்கொள்வது முக்கியம்:

    “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? …

    “இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

    மரணமானாலும், ஜீவனானாலும், தூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,

    “உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:35, 37–39).

  17. Gerrit W. Gong, “Our Campfire of Faith,” Liahona, Nov. 2018, 41.

  18. நேபி இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவர் விளக்கினார்:

    “என் ஆத்துமாவே, விழித்தெழு! பாவத்தில் இனிமேலும் தளர்ந்திராதே; என் இருதயமே களிகூறு, என் ஆத்துமாவின் சத்துருவுக்கு இனிமேலும் இடங்கொடாதே.

    கர்த்தாவே, என் ஆத்துமாவை நீர் மீட்டுக் கொள்வீரா? என் சத்துருக்களின் கைகளிலிருந்து என்னை நீர் விடுவித்தருளுவீரா? பாவத்தின் தோற்றத்திலேயே, நான் நடுங்கும்படி என்னை நீர் செய்தருளுவீரா? (2 Nephi 4:28, 31).

  19. தலைவர் டாலின் எச்.ஓக்ஸ் போதித்தார், “ஒரு நபர் [மனந்திரும்புதலின்] செயல்முறையினூடாக செல்லும்போது, இரட்சகர் அந்த நபரை பாவத்திலிருந்து சுத்திகரிப்பதையும் விட அதிகமாக செய்கிறார், அவர் அவனுக்கு அல்லது அவளுக்கு புதிய பெலனையும் கொடுக்கிறார். சுத்திகரிப்பின் நோக்கத்தை உணர அந்த பெலப்படுத்துதல் நமக்கு அவசியம், அதாவது நமது பரலோக பிதாவிடம் திரும்புவதாகும் அவருடைய பிரசன்னத்தில் அனுமதிக்கப்படுவதற்கு, நாம் சுத்தமாக இருப்பதை விட அதிகமாக இருக்க வேண்டும். நாம் பாவம் செய்து ஒழுக்க ரீதியில் பலவீனமான நபரிலிருந்து, பாவத்தை எதிர்க்கும் வலிமையையும், தேவனுடைய சமுகத்தில் வாசம்பண்ணுவதற்கான ஆவிக்குரிய அந்தஸ்தையும் கொண்ட ஒரு பலமான நபராக மாற்றப்பட வேண்டும்“ (“The Atonement and Faith,“ Ensign, Apr. 2010, 33–34).

  20. 2 நேபி 31:21.

  21. மனந்திரும்புதல் மற்றும் நல்ல வாழ்க்கை வாழ முயற்சிப்பதன் மூலம் நமது குடும்பத்தையும் பரலோக பிதாவையும் கனம் பண்ணுகிறோம்.

  22. Hymns, no. 193.