2020–2024
யேகோவாவுடன் தொடர்புகொண்ட மனுஷன்
அக்டோபர் 2024 பொது மாநாடு


11:8

யேகோவாவுடன் தொடர்புகொண்ட மனுஷன்

அவர் “கடைசி ஊழியக்காலத்தைத் திறக்க ஆசீர்வதிக்கப்பட்டார்,” அவர் அப்படிச் செய்ததால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம்.

இன்றும் எப்பொழுதும் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன், உலகத்தை சிருஷ்டித்தவரும், உலகத்தின் இரட்சகரும், நம்மை விடுவிப்பவரும் மீட்பருமானவர் என்று சாட்சியம் கூறுவதே எனது நோக்கம். ஏனென்றால், “நம்முடைய மதத்தின் அடிப்படைக் கொள்கைகள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியத்தால்,” ஒரு முக்கிய அப்போஸ்தலர் மற்றும் தீர்க்கதரிசியின் வாழ்க்கை மற்றும் போதனைகளால் பலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட இரட்சகரைப் பற்றிய எனது அறிவையும் சாட்சியத்தையும் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஞானத்தின் ஆரம்பம்

1820 வசந்த காலத்தின் தொடக்கத்தில் ஒரு அழகான தெளிவான நாளின் காலையில், 14 வயதான ஜோசப் ஸ்மித் தனது பாவங்களைப் பற்றி ஜெபிக்கவும் எந்த சபையில் சேர வேண்டும் என்று கேட்கவும் தனது குடும்பத்தின் வீட்டிற்கு அருகிலுள்ள மரங்களின் தோப்பில் நுழைந்தார். அசையாத விசுவாசத்துடன் செய்த, அவரது நேர்மையான ஜெபம், பிதா மற்றும் குமாரன் உட்பட பிரபஞ்சத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த வல்லமைகளின் கவனத்தைப் பெற்றது. பிசாசினுடையதும் கூட. இவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த ஜெபத்தின் மீதும் அந்த பையன் மீதும் தீவிர ஆர்வம் இருந்தது.

நாம் இப்போது முதல் தரிசனம் என்று அழைப்பது, இந்த கடைசி ஊழியக்காலத்தில் எல்லாவற்றையும் மறுஸ்தாபிதம் செய்வதற்கான தொடக்கத்தைக் குறித்தது. ஆனால் ஜோசப்பைப் பொறுத்தவரை, அந்த அனுபவம் தனிப்பட்டதாகவும் ஆயத்தமாகவும் இருந்தது. அவர் விரும்பியதெல்லாம் மன்னிப்பும் வழிகாட்டுதலும் மட்டுமே. கர்த்தர் அவருக்கு இரண்டையும் கொடுத்தார். “[அச்சபைகள்] எதிலும் சேர வேண்டாம்” என்ற அறிவுறுத்தல் வழிகாட்டலாக இருந்தது. “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்ற சொற்றொடர் மீட்பதாக இருந்தது.

அந்த முதல் தரிசனத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து அழகான சத்தியங்களில், ஒருவேளை ஜோசப்பின் முக்கிய கருத்து, “ஞானத்தில் குறைவுள்ள மனுஷன் தேவனிடம் கேட்க வேண்டும், பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யாக்கோபின் சாட்சியம் சத்தியமானது என நான் கண்டுகொண்டேன்.”

ஒரு அறிஞர் குறிப்பிட்டது போல்: “இன்று முதல் தரிசனத்தின் உண்மையான அதிர்வு, ஞானம் இல்லாதவர்களுக்குக் கொடுப்பது தேவனின் இயல்பு என்பதை அறிவதாகும். … பரிசுத்தத் தோப்பில் ஜோசப் ஸ்மித்துக்கு தன்னை வெளிப்படுத்தும் தேவன், இக்கட்டான சமயங்களில் பதின்ம வயதினருக்கு பதிலளிக்கும் தேவன்.”

தோப்பில் ஜோசப்பின் அனுபவம், அவரது வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு மற்றும் வழிகாட்டுதலைக் கேட்க அவருக்கு நம்பிக்கை அளித்தது. அவரது அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு மற்றும் வழிகாட்டுதல் கேட்க எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

வழக்கமான மனந்திரும்புதல்

செப்டம்பர் 21, 1823 இல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோப்பில் பெற்ற அனுபவம் காரணமாக, பரலோகம் மீண்டும் பதிலளிக்கும் என்ற நம்பிக்கையுடன் ஜோசப் மன்னிப்புக்காக ஊக்கமாக ஜெபித்தார். அது பதிலளித்தது. ஜோசப்புக்கு அறிவுரை வழங்கவும், தேவனின் வரம் மற்றும் வல்லமையால் அவர் பின்னால் மொழிபெயர்க்கப்போகும் ஒரு பழங்கால பதிவேட்டைப்பற்றி —மார்மன் புஸ்தகம், அவருக்கு தெரிவிக்கவும் கர்த்தர் ஒரு தூதனாகிய மரோனியை அனுப்பினார்.

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கர்த்லாந்து ஆலயத்தில் ஜோசப் மற்றும் ஆலிவர் கவுட்ரி புனிதமான, மௌன ஜெபத்தில் முழங்காற்படியிட்டனர். அவர்கள் எதற்காக ஜெபித்தார்கள் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் அவர்களின் ஜெபங்களில் மன்னிப்புக்கான வேண்டுகோள் இருந்திருக்கலாம், ஏனென்றால் அவர்கள் எழுந்தவுடன், இரட்சகர் தோன்றி அறிவித்தார், “இதோ, உங்களுடைய பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன; எனக்கு முன்பாக நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்.”

இந்த அனுபவத்திற்குப் பிறகு பல மாதங்கள் மற்றும் ஆண்டுகளில், ஜோசப் மற்றும் ஆலிவர் மீண்டும் பாவம் செய்வார்கள். மீண்டும். ஆனால், அந்தத் தருணத்தில், அந்தத் தருணத்துக்காக, அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, நடக்கவிருந்த திறவுகோல்களின் மகிமையான மறுஸ்தாபிதத்துக்கான ஆயத்தமாக, இயேசு அவர்களைப் பாவமற்றவர்களாக ஆக்கினார்.

“நாம் இரக்கத்தைப் பெற, தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேர,” ஜோசப்பின் வழக்கமான மனந்திரும்புதல் வாழ்க்கை எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. இயேசு கிறிஸ்து உண்மையிலேயே “மன்னிக்கும் குணம் கொண்டவர்” என்பதை நான் கற்றுக்கொண்டேன். கண்டனம் செய்வது அவருடைய ஊழியமும் அல்ல, அவருடைய இயல்பும் அல்ல. அவர் இரட்சிக்க வந்தார்.

கர்த்தரிடத்தில் கேட்டல்

வாக்களிக்கப்பட்ட “எல்லாவற்றையும் மீட்டெடுப்பதன்” ஒரு பகுதியாக, ஜோசப் ஸ்மித் மூலம் கர்த்தர் மார்மன் புஸ்தகத்தையும் அவருடைய சுவிசேஷத்தின் முழுமையைக் கொண்ட பிற வெளிப்பாடுகளையும் கொண்டு வந்தார். ஜோசப் மீண்டும் மீண்டும் வழிநடத்துதலை நாடியதால், முக்கிய சத்தியங்களுக்கு தெளிவும் முழுமையும் கொடுக்கப்பட்டது. பின்வருவனவற்றைக் கருத்தில்கொள்ளவும்:

  1. பிதாவும் குமாரனும் தொட்டுணரத்தக்க மனிதனுடைய சரீரங்களைப் போலவே சரீரங்களைக் கொண்டுள்ளனர்.

  2. இயேசு நம்முடைய பாவங்களை மட்டுமல்ல, நம்முடைய நோய்களையும், துன்பங்களையும், பலவீனங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டார்.

  3. அவரது பாவநிவர்த்தி மிகவும் வேதனையானது, அது அவருக்கு ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் வரச் செய்தது.

  4. “நம்மால் முடிந்த எல்லாவற்றுக்கும் பிறகு” அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

  5. கிறிஸ்துவின் இரக்கத்துக்கு நிபந்தனைகள் உள்ளன.

  6. நாம் கிறிஸ்துவிடம் வரும்போது, ​​அவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாமல், “நாம் இனி தீமை செய்ய விரும்பாதவாறு” நம் இயல்பையும் மாற்றுவார்.

  7. கிறிஸ்து எப்பொழுதும் தம்முடைய மக்களுக்கு ஆலயங்களைக் கட்டும்படி கட்டளையிடுகிறார், அங்கு அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார், மேலும் உன்னதத்திலிருந்து அவர்களுக்கு வல்லமையைக் கொடுக்கிறார்.

இவை அனைத்தும் உண்மை மற்றும் அவசியமானவை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். ஜோசப் ஸ்மித் மூலம் இயேசு கிறிஸ்து மறுஸ்தாபிதம் செய்த பரிபூரணத்தின் ஒரு பகுதி மட்டுமே என அவை ஜோசப்பின் வழிகாட்டுதலுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கின்றன.

இந்த ராஜ்யம் பரவுதல்

1842-ல் ஜோசப் இந்த கடைசி காலத்தில் நடக்கும் அற்புதமான விஷயங்களைப் பற்றி எழுதினார். நம்முடைய நாளில், “பரலோக ஆசாரியத்துவம் பூமிக்குரியவர்களுடன் ஒன்றிணைந்து, அந்தப் பெரிய நோக்கங்களை நிறைவேற்றும்; தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பரப்புவது பொதுவான காரணத்திற்காக நாம் ஒன்றுபட்டாலும், பரலோக ஆசாரியர்கள் சோம்பலான பார்வையாளர்கள் அல்ல,” என அவர் அறிவித்தார்.

பின்னர், அவரது நண்பர் பெஞ்சமின் ஜான்சனுக்கு இது தொடர்பான அறிக்கையில், ஜோசப், “பெஞ்சமின், [நான் இறந்தால்] நான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்க மாட்டேன், திரையின் மறுபுறத்தில் இருந்தால், இந்த ராஜ்யத்தின் மீது அதிகம் பரவ வல்லமையுடன் நான் இன்னும் உங்களுடன் வேலை செய்வேன்.”

ஜூன் 27, 1844 இல், ஜோசப் ஸ்மித் மற்றும் அவரது சகோதரர் ஹைரம் கொலை செய்யப்பட்டனர். ஜோசப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது, ஆனால் அவரது சாட்சியம் உலகம் முழுவதும் மற்றும் என் உள்ளத்தில் தொடர்ந்து எதிரொலிக்கிறது:

“நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன் அதை நான் அறிவேன், அதை தேவன் அறிவாரென நான் அறிவேன், அதை என்னால் மறுக்க முடியாது.”

“நான் பரிபூரணமானவன் என்று நான் உன்னிடம் ஒருபோதும் சொல்லவில்லை—ஆனால் நான் கற்பித்த வெளிப்பாடுகளில் எந்தப் பிழையும் இல்லை.“

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார், “நமது மதத்தின் அடிப்படைக் கொள்கைகள், இயேசு கிறிஸ்து மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார், பரலோகத்திற்கு ஏறினார் என்பதற்கான அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியமே; நமது மதத்தைப்பற்றிய மற்ற எல்லா விஷயங்களும் அதனுடன் இணைப்புகள் மட்டுமே”

யோவான் ஸ்நானன் பற்றி கூறப்பட்டதை ஜோசப் ஸ்மித்தைப் பற்றியும் கூறலாம்: “தேவனால் அனுப்பப்பட்ட ஒருவன் இருந்தார், அவனுடைய பெயர் [ஜோசப்]. … அவன் அந்த ஒளியல்ல, அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி … அந்த ஒளியைக் குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.”

நான் நம்புகிறேன். ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசுவே கிறிஸ்து என்று உறுதியாக நான் நம்புகிறேன். . ஜீவனுள்ள தேவன் நம்முடைய அன்பான பிதா என்று சாட்சி கூறுகிறேன். இதை நான் அறிவேன், ஏனென்றால் கர்த்தருடைய சத்தம் என்னோடு பேசியது, மேலும் ஜோசப் ஸ்மித் உட்பட அவருடைய ஊழியர்கள், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் குரல்களும் பேசியிருக்கின்றன.

ஜோசப் ஸ்மித் தேவனின் தீர்க்கதரிசியாகவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சாட்சியாகவும் ஊழியராகவும் இருந்தார் என்று நான் சாட்சியம் கூறுகிறேன். அவர் “கடைசி ஊழியக்காலத்தைத் திறக்க ஆசீர்வதிக்கப்பட்டார்,” அவர் செய்ததால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டோம்.

கர்த்தர் ஆலிவருக்கும் நம் அனைவருக்கும், “விசுவாசத்துடன் என் ஊழியக்காரன் ஜோசப்புக்கு ஆதரவாக இருங்கள்“ என்று கட்டளையிட்டார். கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு ஆதரவாகவும், அவர் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மறுஸ்தாபிதத்திலும் நிற்கிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன்.

ஜோசப் ஸ்மித் தான் பேசிய அந்த பரலோக ஆசாரியத்துவத்தின் ஒரு பகுதியாக இப்போது இருக்கிறார். அவர் பெஞ்சமின் ஜான்சனுக்கு உறுதியளித்தபடி, அவர் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இல்லை, மேலும் திரையின் மறுபுறத்தில், இந்த ராஜ்யத்தில் பரவும் வல்லமையைப் பெரிதும் அதிகரிக்க, அவர் இன்னும் நம்முடன் வேலை செய்கிறார். மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும், “யேகோவாவுடன் தொடர்பு கொண்ட மனுஷனைப் புகழ்ந்து” என் குரலை உயர்த்துகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த மனுஷனுடன் தொடர்புகொண்ட யேகோவாவைத் துதிக்கிறேன்! இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.