மகிழ்ச்சியின் சபைக்கு நல்வரவு
மீட்பு தரும் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையினாலும் அவரது ஊழியத்தினாலும், நாம் பூமியில் மிகவும் மகிழ்ச்சியான மக்களாக இருக்க முடியும், இருக்கவும் வேண்டும்!
ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்கு முன்பு, 1987-ன் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் நான் ஞானஸ்நானம் பெற்றேன். அது என் வாழ்க்கையிலும், என் நித்திய பயணத்திலும் உண்மையிலேயே ஒரு அற்புதமான நாளாக இருந்தது, மறுபிறப்பின் தண்ணீர்களுக்கு என்னைக் கொண்டு வரும்படி வழியை ஆயத்தப்படுத்திய நண்பர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
உங்கள் ஞானஸ்நானம் நிகழ்ந்தது நேற்றோ அல்லது ஆண்டுகளுக்கு முன்போ, நீங்கள் சந்திப்பது பல தொகுதிகளைக் கொண்ட ஒரு பெரிய சபைக் கட்டிடத்திலோ அல்லது ஒரு ஓலை விதானத்தின் கீழோ, இரட்சகரின் நினைவாக நீங்கள் திருவிருந்தைப் பெறுவது தாய் மொழியிலோ அல்லது சுவாஹிலி மொழியிலோ, நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், மகிழ்ச்சியின் சபைக்கு நல்வரவு! மகிழ்ச்சியின் சபைக்கு நல்வரவு!
மகிழ்ச்சியின் சபை
பரலோக பிதாவின் ஒவ்வொரு பிள்ளைகளுக்குமான அவரது அன்பான திட்டத்தினாலும், மீட்பு தரும் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையினாலும் அவரது ஊழியத்தினாலும், நாம் பூமியில் மிகவும் மகிழ்ச்சியான மக்களாக இருக்க முடியும், இருக்கவும் வேண்டும்! ஓயாத தொந்தரவுகள் நிறைந்த இந்த உலக வாழ்க்கையின் புயல்கள் நம்மீது தாக்கும்போதும், கிறிஸ்துவின் மீதான நமது நம்பிக்கையினாலும், அழகான மகிழ்ச்சியின் திட்டத்தில் நமது சொந்த இடத்தைப் பற்றிய நம்முடைய புரிதலினாலும், வளர்ந்து நிலைத்திருக்கும் மகிழ்ச்சியையும் உள் அமைதியையும் நம்மால் விளைவிக்க முடியும்.
கர்த்தரின் பிரதான அப்போஸ்தலனான தலைவர் ரசல் எம்.நெல்சன், சபையின் தலைவரானதிலிருந்து அவர் கொடுத்த ஒவ்வொரு உரையிலும் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கையிலிருந்து வரும் மகிழ்ச்சியைப்பற்றி பேசியிருக்கிறார். அவர் அதை மிகவும் சுருக்கமாக கூறினார்: “மகிழ்ச்சி அவரிடமிருந்தும் அவராலுமே வருகிறது. … பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு இயேசு கிறிஸ்துவே மகிழ்ச்சி.”
நாம் அனைவரும் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள். நாம் அனைவரும் மகிழ்ச்சியின் சபையின் உறுப்பினர்கள்! எல்லா சந்தோஷத்திற்கும் ஊற்றுமூலராய் இருப்பவரை ஆராதிக்க திருவிருந்துக் கூட்டங்களில் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் நாம் ஒன்றுகூடும் போது தவிர ஒரு ஜனமாக நம்முடைய மகிழ்ச்சி வேறெங்கும் அதிகமாக வெளிப்படாது கர்த்தருடைய இராப்போஜனத்தின் திருவிருந்து, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நமது விடுதலை, இரட்சகரின் வல்லமையான கிருபை, ஆகியவற்றைக் கொண்டாட இங்கே நாம் நமது தொகுதி மற்றும் கிளை குடும்பங்களுடன் கூடுகிறோம்! இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் அடையும் மகிழ்ச்சி, அடைக்கலம், மன்னிப்பு, நன்றி மற்றும் சொந்தமாகுதல் ஆகியவற்றை அனுபவிக்க இங்கே வருகிறோம்!
கிறிஸ்துவிலே கூட்டு களிகூறுதலின் இந்த ஆவியில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? இதைத்தான் நீங்கள் கொண்டு வருகிறீர்களா? இதற்கும் உங்களுக்கும் அதிக சம்பந்தம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம், அல்லது வழக்கமாக செய்யப்பட்டு வரும் காரியங்களுக்கு நீங்கள் வெறுமனே பழகியிருக்கலாம். ஆனால் நம்முடைய திருவிருந்துக் கூட்டங்களை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், கிறிஸ்துவை மையப்படுத்தினதாகவும், முடிந்த வரையில் வரவேற்கும் மணிநேரமாகவும், மகிழ்ச்சியான பயபக்தியின் ஆவியினால் உயிரூட்டப்பட்டதாகவும் உருவாக்க நம் அனைவராலும் நம்முடைய வயதும் அழைப்பும் எதுவாக இருப்பினும் பங்களிக்க முடியும்.
மகிழ்ச்சியான பயபக்தி
மகிழ்ச்சியான பயபக்தி? “அப்படி ஒன்று இருக்கிறதா?“ என்று நீங்கள் கேட்கலாம். ஆம், இருக்கிறது! நாம் நம் தேவனை ஆழமாக நேசிக்கிறோம், கனப்படுத்துகிறோம், மதிக்கிறோம் மேலும் கிறிஸ்துவின் நிறைவான அன்பு, இரக்கம் மற்றும் இரட்சிப்பில் களிகூரும் ஒரு ஆத்துமாவிலிருந்து நமது பயபக்தி வழிந்தோடுகிறது! கர்த்தருக்கான இந்த மகிழ்ச்சியான பயபக்தி நமது பரிசுத்த திருவிருந்துக் கூட்டங்களைத் தன்மைப்படுத்த வேண்டும்.
இருப்பினும், பலருக்கு, பயபக்தி என்பது இதுதான்: நமது கைகளை நமது மார்புகளைச் சுற்றி இறுக்கமாக மடித்து, நமது தலைகளைக் குனிந்து, கண்களை மூடி, அசையாமல் வைத்திருப்பது - காலவரையின்றி! சுறுசுறுப்பான இளம் பிள்ளைகளுக்கு கற்பிக்க இது ஒரு பயனுள்ள வழியாக இருக்கலாம், ஆனால் நாம் வளரும்போதும் கற்றுக்கொள்ளும்போதும், பயபக்தியில் மேலும் பல உள்ளன என்பதை நாம் காண்போம். இரட்சகர் நம்மோடு இருந்தால் நாம் இப்படித்தான் இருப்போமா? இல்லை, ஏனென்றால் “[அவருடைய] சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு“!
நம்மில் அநேகருக்கு திருவிருந்து ஆராதனைகளில் இந்த மாற்றத்திற்கு பயிற்சி தேவைப்படும்
கலந்துகொள்வது எதிராக ஆராதிப்பது
ஓய்வுநாளில் திருவிருந்துக் கூட்டத்தில் வெறுமனே கலந்துகொள்வதற்கும் பட்டியலில் இருந்து சரிபார்க்கவும் நாம் கூடுவதில்லை. நாம் ஆராதிப்பதற்காக ஒன்று கூடுகிறோம். இரண்டுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. கலந்துகொள்வது என்றால் சரீரப்பிரகாரமாக ஒரு இடத்தில் இருப்பது ஆனால் ஆராதனை என்பது நம்மை மாற்றிக்கொள்ளும் வகையில் தேவனை மனப்பூர்வமாக துதிப்பதும் வணங்குவதும் ஆகும்.
மேடையிலும் சபையாரிலும்
இரட்சகரையும் அவர் சாத்தியமாக்கிய மீட்பையும் நினைவுகூர நாம் ஒன்றுகூடினால், நமது முகங்கள் நமது மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் பிரதிபலிக்க வேண்டும்! மூப்பர் எஃப். என்சியோ புஸ்சே ஒருமுறை அவர் ஒரு கிளைத் தலைவராக இருந்தபோது, கூட்டத்தாரில் ஒரு சிறுவன் மேடையில் அவரைப் பார்த்து சத்தமாக கேட்டான், “முறைத்த முகத்துடன் அந்த மனிதன் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்?“ மேடையில் அமர்ந்திருப்பவர்கள்—செய்தி அளிப்பவர்கள், தலைவர்கள், பாடற்குழு— மேலும் சபை ஆராதனைக்கு கூடிவருவோர் ஒருவருடன் ஒருவர் இந்த “மகிழ்ச்சியின் சபைக்கான நல்வரவை“ அவர்களின் முகத்தில் சூடியிருக்கும் வெளிப்பாடுகளால் தெரிவிக்கிறார்கள்!
பாடல் பாடுதல்
நாம் பாடும்போது, நமது குரல்களின் தரத்தைப் பொருட்படுத்தாமல், நமது தேவனையும் ராஜாவையும் துதிக்க நாம் ஒன்றிணைகிறோமா அல்லது வார்த்தைகளை முணுமுணுக்கிறோமா அல்லது பாடுவதே இல்லையா? நீதிமான்களின் பாடல் தேவனுக்கு ஒரு ஜெபமாக இருக்கிறது அதில் அவர் ஆத்துமா களிகூருகிறது என்று வேதம் பதிவு செய்கிறது எனவே நாம் பாடுவோம்! அவரைத் துதிப்போம்!
செய்திகளும் சாட்சிகளும்
பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்து மற்றும் தாழ்மையுடன் அவர்களின் சுவிசேஷத்தை வாழ்வதன் கனிகள், “இனிமையானவைகள் எல்லாவற்றிற்கும் மேல் இனிமையான“ கனிகள் ஆகிவற்றில் நமது பேச்சுக்களையும் சாட்சியங்களையும் நாம் மையப்படுத்த வேண்டும். அப்பொழுது நாம் பசியாமலும் தாகமாகாமலும் இருக்கும்படி, திருப்தியாகும் வரையிலும் மெய்யாகவே விருந்துண்டு சாப்பிடுகிறோம். குமாரனுடைய மகிழ்ச்சியினால் நம்முடைய பாரங்கள் இலகுவாகின்றன.
திருவிருந்து
நமது ஆராதனையின் மகிமையான மையப்புள்ளி திருவிருந்தை ஆசீர்வதித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல், இது நமது கர்த்தரின் பாவநிவாரண வரத்தை குறிப்பிடும் அப்பமும் தண்ணீரும் மற்றும் நமது ஒன்றுகூடலின் முழு நோக்கமும் ஆகும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளவும், இரட்சகரை எப்போதும் நினைவுகூரவும் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும் உடன்படிக்கையை மீண்டும் செய்ய நாம் தயாராக இருக்கிறோம் என நாம் புதிதாக சாட்சியளிக்கும் போது இது “ஆவிக்குரிய புதுப்பித்தலின் பரிசுத்த நேரமாயிருக்கிறது.“
வாழ்க்கையின் சில காலங்களில், கனத்த இருதயங்களோடும் மிகுந்த சுமைகளோடும் நாம் திருவிருந்தை அணுகலாம். மற்ற நேரங்களில், கவலைகள் மற்றும் தொல்லைகளிலிருந்து நாம் விடுபட்டு வருகிறோம். அப்பம் மற்றும் தண்ணீரின் ஆசீர்வாதங்களை நாம் உன்னிப்பாகக் கேட்கும்போது மேலும் அந்த பரிசுத்த அடையாளங்களில் பங்கேற்கும்போது இரட்சகரின் தியாகம், கெத்சமனேயில் அவரது வேதனைகள், சிலுவையில் அவரது வேதனை, நமக்காக அவர் சகித்த துக்கங்கள் மற்றும் பாடுகளை நாம் சிந்திக்க.நினைக்கலாம். நம்முடைய பாடுகளை அவருடன் இணைக்கும்போது, அதுவே நமது ஆத்துமாக்களை விடுவிக்கின்றது. மற்ற நேரங்களில், இயேசுவின் மகத்தான ஈவு, நமது வாழ்க்கையிலும் நமது நித்தியங்களிலும் சாத்தியமாக்கியுள்ள நேர்த்தியான மற்றும் இனிமையான மகிழ்ச்சியைக் கண்டு நன்றியுணர்வுடன் ஆச்சரியப்படுவோம்! இனி வரவிருக்கும் காரியங்களுக்காக நாம் களிகூருவோம்—அது நமது அன்பான பிதாவுடனும் உயிர்த்தெழுந்த இரட்சகருடனும் நமது நேசத்துக்குரிய மறு ஐக்கியம்.
ஆராதனையில் அமர்ந்து முந்தைய வாரத்தில் நாம் குழப்பம் செய்த எல்லா வழிகளையும் பற்றி மட்டுமே சிந்திப்பது திருவிருந்தின் நோக்கம் என்று கருதுவதற்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நடைமுறையை தலைகீழாக மாற்றலாம். அந்த அமைதியில், அந்த வாரம் பல வழிகளில் கர்த்தர் தம்முடைய அற்புதமான அன்பினால் நம்மை இடைவிடாமல் நாடி தொடர்ந்ததை கண்டு நாம் அவற்றைச் சிந்திக்கலாம்! “தினசரி மனந்திரும்புதலின் மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பது“ என்றால் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கலாம் நமது போராட்டங்களிலும் நமது வெற்றிகளிலும் இரட்சகர் நுழைந்த நேரங்களுக்காகவும், அவரது கிருபை, மன்னிப்பு மற்றும் வல்லமையை நாம் உணர்ந்த சந்தர்ப்பங்களுக்காகவும், நமது கஷ்டங்களை மேற்கொள்ளவும், பொறுமையுடனும் உற்சாகத்துடனும் நமது சுமைகளைத் தாங்கவும் நமக்கு பெலன் கொடுத்த சந்தர்ப்பங்களுக்காகவும் நாம் நன்றி செலுத்தலாம்.
ஆம், நம்முடைய பாவங்களுக்காக நமது மீட்பருக்கு இழைக்கப்பட்ட பாடுகளையும் அநீதிகளையும் நாம் சிந்திக்கிறோம், அது தெளிந்த சிந்தனையை ஏற்படுத்துகிறது. ஆனால் நாம் சில நேரங்களில் அங்கேயே மாட்டிக் கொள்கிறோம் - தோட்டத்தில், சிலுவையில், கல்லறைக்குள். கல்லறை உடைந்து திறக்கப்பட்டதையும், மரணத்தின் தோல்வியையும், சமாதானத்தைப் பெற்று நமது பரலோக வீட்டிற்குத் திரும்புவதைத் தடுக்கக்கூடிய எல்லாவற்றின் மீதுமான கிறிஸ்துவின் வெற்றியையும் நோக்கி நாம் மகிழ்ச்சியில் மேல்நோக்கி நகரத் தவறிவிடுகிறோம். திருவிருந்தின் போது நாம் துக்கத்தினால் கண்ணீர் சிந்தினாலும், நன்றியினால் கண்ணீர் வடித்தாலும், அது நற்செய்தியாகிய பிதாவின் வரமாகிய அவருடைய குமாரனின் மீதான அற்புதமான வியப்பினாலயே இருக்கட்டும்!
இளம் அல்லது சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்
இப்போது, இளம் அல்லது சிறப்புத் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு, திருவிருந்தின் போது அமைதி மற்றும் அமைதியான பிரதிபலிப்பு நேரம் போன்ற எதுவும் பெரும்பாலும் இருப்பதில்லை ஆனால், அவருடைய சிறு ஆட்டுக்குட்டிகளை நீங்கள் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும்போது, இரட்சகருக்காகவும் அவரிடமிருந்தும் நீங்கள் உணரும் அன்பு, நன்றியுணர்வு மற்றும் மகிழ்ச்சியை வாரம் முழுவதிலும் சிறு தருணங்களில் உதாரணத்தின் மூலம் கற்பிக்கலாம். இந்த பயணத்தில் எந்த முயற்சியும் வீண் போகாது. தேவன் உங்களை நன்கு அறிந்திருக்கிறார்.
குடும்ப, தொகுதி, மற்றும் கிளை ஆலோசனைக்குழுக்கள்
அதேபோல், சபையில் நமது நேரத்திற்கான நமது நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும், வீட்டிலிருந்தே அதிகரிக்க ஆரம்பிக்கலாம். குடும்ப ஆலோசனைக் கூட்டங்களில், மகிழ்ச்சியின் சபைக்கு அனைவரையும் வரவேற்க ஒவ்வொரு நபரும் எவ்வாறு அர்த்தமுள்ள வழிகளில் பங்களிக்க முடியும் என்பதை நாம் விவாதிக்கலாம்! நாம் சபையில் ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை திட்டமிட்டு எதிர்பார்க்கலாம்.
தொகுதி மற்றும் கிளை ஆலோசனைக்குழுக்கள் அவர்கள் திருவிருந்து நேரத்திற்கு ஒரு மகிழ்ச்சியான பயபக்தியின் கலாச்சாரத்தை கற்பனை செய்து உருவாக்கலாம், நடைமுறை படிகளையும் காட்சிக் குறிப்புகளையும் கொண்டு உதவ அடையாளம் காணலாம்.
மகிழ்ச்சி.
மகிழ்ச்சி வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாகத் தெரிகிறது. சிலருக்கு, அது வாசலில் உற்சாகமான வாழ்த்துக்களாக இருக்கலாம். மற்றவர்களுக்கு, அமைதியான முறையில் புன்னகைப்பதன் மூலமும், கனிவான மற்றும் திறந்த இதயத்துடன் மக்களுக்கு அருகில் உட்காருவதன் மூலமும் அவர்களை வசதியாக உணரச் செய்ய உதவுதாக இருக்கலாம். ஒதுக்கப்பட்டவர்களாக அல்லது விளிம்பு நிலையில் இருப்பதாக உணருபவர்களுக்கு, இந்த வரவேற்பின் அரவணைப்பு முக்கியமானதாக இருக்கும். இறுதியில், நமது திருவிருந்து நேரம் எப்படி இருக்க வேண்டும் என்று இரட்சகர் விரும்புவார் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் எப்படி வரவேற்கப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும், போஷிக்கப்பட வேண்டும், மற்றும் நேசிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புவார்? அவரை நினைவுகூர்ந்து ஆராதிப்பதன் மூலம் நாம் புதுப்பிக்கப்படும்போது நாம் எப்படி உணர வேண்டும் என்று அவர் விரும்புவார்?
முடிவுரை
எனது விசுவாச பயணத்தின் தொடக்கத்தில், இயேசு கிறிஸ்துவில் மகிழ்ச்சி எனது முதல் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது, அது என் உலகத்தை மாற்றியது. இந்த மகிழ்ச்சியை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், அதன் தேடலைத் தொடங்குங்கள். இது ஒவ்வொரு ஓய்வுநாளிலும், இரட்சகரின் வரமான சமாதானம், ஒளி மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும், அதில் களிப்பதற்கும், அதைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கும், அதில் களிகூருவதற்குமான ஒரு அழைப்பு.
மார்மன் புஸ்தகத்தில் அம்மோன் இவற்றைச் சொல்லும்போது என் இருதயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்:
இப்போது நாம் களிகூர்ந்திருக்க நமக்குக் காரணமில்லையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். களிகூர்ந்திருக்க நமக்கு உண்டான காரணத்தைப்போல், உலக ஆரம்ப முதல், வேறே [எந்த மனுஷருக்கும்] உண்டாயிருக்கவில்லை; என் சந்தோஷம் என் தேவனில் மேன்மை பாராட்டும்படியாகப் பெருகுகிறது; ஏனெனில் அவர் சகல வல்லமையையும், சகல ஞானத்தையும், சகல அறிவையும் பெற்றிருக்கிறார். அவர் சகலத்தையும் அறிகிறார். மனந்திரும்பி, தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்புக்கேதுவாய் அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறார்.
“இது மேன்மை பாராட்டலாய் இருந்தால், நான் இன்னும் மேன்மை பாராட்டுவேன்; ஏனெனில் இதுவே என் ஜீவனும், என் வெளிச்சமும், என் சந்தோஷமும், … என் பெரிய நன்றி செலுத்தலுமாய் இருக்கிறது.
மகிழ்ச்சியின் சபைக்கு நல்வரவு! இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.