2020–2024
நீ சுத்தமாகு
அக்டோபர் 2024 பொது மாநாடு


9:43

நீ சுத்தமாகு

பரிசுத்த ஆவியின் மூலம் கர்த்தரின் வழிநடத்துதலைப் பகுத்தறிய தினசரி மனந்திரும்புதல் வழியமைக்கிறது.

எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, கோட் டி’ ஐவரி என்ற என்னுடைய சிறு கிராமத்தில் சபைக்குப் பின்னால் எனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தேன். இரட்சகரின் வருகைக்கு ஆயத்தமாக தங்கள் ஆடைகளைச் சுத்தம் செய்யுமாறு போதகர் தனது சபைக்கு அழைப்பு விடுத்தது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. சிறுவனாக இருந்ததால், இந்த அழைப்பை நான் உண்மையில் எடுத்துக் கொண்டேன். என் குட்டிக் கால்கள் எவ்வளவு வேகமாக என்னைச் சுமக்கக்கூடுமோ அவ்வளவு வேகமாக வீட்டிற்கு ஓடி, நான் கறையற்றவனாகவும், மறுநாள் இரட்சகரின் வருகைக்குத் தயாராகவும் இருக்க, எனது சில ஆடைகளை சுத்தம் செய்யும்படி என் அம்மாவிடம் கெஞ்சினேன். இரட்சகரின் உடனடி வருகையைப் பற்றி என் அம்மா சந்தேகித்தாலும், அவள் என் சிறந்த ஆடையைத் துவைத்துத் தந்தாள்.

அடுத்த நாள் காலையில், நான் இன்னும் சற்று ஈரமாகவே இருந்த ஆடையை அணிந்து கொண்டு இரட்சகரின் வருகையின் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். அந்த நாள் கடந்து விட்டது, எதுவும் நடக்கவில்லை, நான் சபைகூடுமிடத்திற்கு செல்ல முடிவு செய்தேன். சபை காலியாக இருப்பதைக்கண்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன் அது மட்டுமல்லாமல் இரட்சகரும் வரவில்லை. எனது வீட்டிற்கு மெதுவாக நடந்து செல்லும்பொழுது இருந்த என் உணர்வுகளை நீங்கள் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேர்வதற்கான தயாரிப்பில் நான் ஊழியக்காரரின் பாடங்களை கற்றுக்கொண்டிருந்தபோது, நான் பின்வருவனவற்றைப் படித்தேன்: “அசுத்தமான ஒன்றும் அவருடைய ராஜ்யத்தினுள் பிரவேசிக்க முடியாது; ஆதலால் தங்களுடைய விசுவாசத்தினிமித்தமும், தங்களுடைய சகல பாவங்களிலிருந்தும் மனந்திரும்பியதினிமித்தமும், முடிவுபரியந்தம் தங்களுடைய விசுவாசத்தினிமித்தமும், என் இரத்தத்தால் தங்களுடைய வஸ்திரங்களைக் கழுவியோரைத் தவிர வேறொருவரும் அவருடைய இளைப்பாறுதலினுள்ளே பிரவேசிப்பதில்லை.”

அந்த நேரத்தில் நான் பெற்ற தெளிவு பல ஆண்டுகளுக்கு முன்பு என் இளம் மனதில் இருந்து தவறவிட்ட முக்கியமான சத்தியத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவிற்று. போதகரின் செய்தியானது ஆவிக்குரிய தூய்மையின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டிருந்தது. மனந்திரும்புதலைத் தேடவும், தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யவும், மீட்பிற்காக இரட்சகரிடம் திரும்பவும் அவர் சபையை வலியுறுத்தினார்.

நம் பரலோக பிதா நம்முடைய பூலோகப் பயணத்தையும், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பாவத்தின் தன்மையையும் புரிந்துகொள்கிறார். நம்முடைய மீறுதல்களுக்குப் பரிகாரம் செய்ய நமக்கொரு இரட்சகரை ஈந்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இரட்சகரின் மீட்பின் தியாகத்தின் மூலம், நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, மன்னிப்பைத் தேடி, பரிசுத்தமாக இருக்க முடியும். மனந்திரும்புதல், சுவிசேஷத்தின் அடிப்படைக் கொள்கை மற்றும் நம் வாழ்க்கையின் சவால்களை கடந்து செல்லும்போது நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் நீடிய பொறுமைக்கும் அவசியமானது.

ஏப்ரல் 2022 பொது மாநாட்டின் போது, தலைவர் ரசல் எம். நெல்சன் சபையின் ஒவ்வொரு உறுப்பினரையும் அன்றாட மனந்திரும்புதலின் சந்தோஷத்தை அனுபவிக்க அழைப்பு விடுத்தார். அவர் சொன்னார்:

தயவுசெய்து பயப்படாதீர்கள் மனந்திரும்புவதையும் தாமதப்படுத்தாதீர்கள். உங்கள் துயரத்தில் சாத்தான் மகிழ்ச்சி அடைகிறான். அதை குறைத்து விடுங்கள். அவனது கட்டுப்பாட்டை உங்கள் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியுங்கள்! சுபாவ மனிதனை அப்புறப்படுத்தும் சந்தோஷத்தை அனுபவிக்க இன்றே தொடங்குங்கள். இரட்சகர் நம்மை எப்போதும் நேசிக்கிறார், அதுவும் விசேஷமாக நாம் மனந்திரும்பும்போது. …

“நீங்கள் உடன்படிக்கையின் பாதையில் இருந்து வெகுதூரம் அல்லது மிக நீண்ட தூரம் சென்றுவிட்டதாக உணர்ந்தால், திரும்புவதற்கு வழி இல்லை என்றால், அது உண்மையல்ல.”

முழுவதுமாக மனந்திரும்பாமல் உங்களில் ஏதேனும் இருப்பின், தலைவர் நெல்சனின் அழைப்பை ஏற்று மனந்திரும்புவதை தாமதிக்கவேண்டாம் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். இதை செயல்படுத்தும்பொழுது சிறிது தைரியம் தேவைப்படலாம்,இருப்பினும், உண்மையான மனந்திரும்புதலில் இருந்து வெளிப்படும் சந்தோஷமானது நம் புரிதலை கடந்தது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மனந்திரும்புதலின் மூலம், நமது குற்ற உணர்வின் பாரங்கள் அகற்றப்பட்டு சமாதானம் மற்றும் நிலையான அமைதியின் உணர்வுகள் இடமாறும். நாம் உருக்கத்தோடு மனந்திரும்பும்போது, பரிசுத்த ஆவியின் தூண்டுதல்கள் மற்றும் தாக்கத்தில் நமது உணர்திறன் அதிகரித்து, இரட்சகரின் இரத்தத்தின் மூலம் நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம்.

எனது நித்திய துணைவி, செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்தார், இதன் விளைவாக, செவிப்புலன் கருவிகளை அவர் அணிய வேண்டும். தூசி மற்றும் வியர்வை இந்த சாதனங்களின் செயல்திறனை பாதிக்கலாம், எனவே ஒவ்வொரு காலையிலும் அவர் கருவிகளை அணிவதற்கு முன்பு இணைக்கும் குழாய்களை விடாமுயற்சியுடன் சுத்தம் செய்வதை நான் கவனிக்கிறேன். இந்த எளிய மற்றும் சீரான வழக்கம் எல்லா அழுக்கு, ஈரப்பதம் அல்லது சுருக்கம் ஆகியவற்றை நீக்கி, அதன் மூலம் திறம்பட கேட்கும் திறன் மற்றும் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது. இந்த தினசரி வழக்கத்தை அவர் கவனிக்கவில்லை என்றால், அவருடைய கேட்கும் திறன் நாள் முழுவதும் பாதிக்கப்படுகிறது; பேசும் வார்த்தைகள் படிப்படியாக மங்கி இறுதியில் செவி கேட்காமல் போகிறது. அவருடைய செவிப்புலன் கருவியை தினசரி சுத்தம் செய்வது அவர் தெளிவாகக் கேட்க அனுமதிப்பது போல, தினசரி மனந்திரும்புதல் கர்த்தரின் வழிநடத்துதலை பரிசுத்த ஆவியின் மூலம் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது.

கர்த்தரின் பூலோக ஊழியத்தின் முடிவில், கெத்செமனே தோட்டத்திற்கு அவர் புறப்படுவதற்கு முன்பு, வரவிருக்கும் சோதனைகளை எதிர்கொள்ள அவர் தம் சீஷர்களை தயார்படுத்தினார். அவர்களுக்கு அவர் உறுதி அளித்ததாவது: “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.”

பரிசுத்த ஆவியின் இன்றியமையாத செயல்பாடுகளில் ஒன்று, மென்மையான, உள்குரலைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை, வழிநடத்துதல் மற்றும் வழிகாட்டுவதாகும். செவிப்புலன் கருவியின் அடைக்கப்பட்ட தகவல்தொடர்பு குழாய்கள் சரியான செயல்பாட்டிற்கு இடையூறாக இருப்பதைப் போலவே, நமது பரலோக பிதாவுடனான நமது ஆவிக்குரிய தொடர்பும் பலவீனமடையலாம். அது ஆபத்தான தவறான எண்ணங்களுக்கு வழிவகுக்கும் அல்லது அவருடைய ஆலோசனைக்கு செவிசாய்க்கத் தவறச்செய்யும். இணையத்தின் வருகை முன்னெப்போதையும் விட தகவல்களை மிகவும் எளிதாக அடையத்தக்கதாக ஆக்கியுள்ளது. இது வழிகாட்டுதலுக்காக தேவனை விட உலகை நோக்கி நம்மைத் திருப்ப வழிவகுக்கலாம். “வரும் நாட்களில், பரிசுத்த ஆவியின் வழிநடத்தும், வழிகாட்டும், ஆறுதலளிக்கும், மற்றும் இடைவிடாத செல்வாக்கில்லாமல் ஆவிக்குரிய விதமாக பிழைத்திருத்தல் சாத்தியமில்லை.” என தலைவர் ரசல் எம்.நெல்சன் போதித்தார்.

நாம் ஒவ்வொருவரும் திடப்படுத்தும் நியமம் மூலம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் நம்மால் பெறமுடிகிறது என்பதில் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இருப்பினும், “பரிசுத்த ஆவியின் வரத்தின் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் நாம் அதற்கு பாத்திரவானாயிருப்பதில் வரையறுக்கப்பட்டுள்ளது; கர்த்தருடைய ஆவி அசுத்த ஆலயங்களில் வாசம் பண்ணுவதில்லை.“என்று தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் எச்சரித்தார். [ஏலமன் 4:24].”

தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வழிகாட்டுதலை நாம் உணர்வுபூர்வமாகப் பின்பற்றத் தேர்ந்தெடுக்கும்போது, பரிசுத்த ஆவியானவரை ஒரு நிரந்தர துணையாகப் பெறுவதற்கான நமது திறன் வளர்கிறது. பரிசுத்த ஆவியானவர் நமது பரலோக பிதாவின் சித்தத்துடன் துணைபோகும் எண்ணங்கள் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தி முடிவெடுப்பதில் தெளிவு கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரை ஒரு நிரந்தர துணையாக வைத்திருப்பது நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முக்கியமானது.

சமீபத்தில் யூட்டாவில் உள்ள சால்ட் லேக் கிரேன்ஜர் வெஸ்ட் பிணையத்தில் நடந்த பிணைய மாநாட்டிற்கு தலைமை தாங்க நான் நியமிக்கப்பட்டேன். இந்த நிகழ்வின் போது, நீதியான வாழ்க்கை மற்றும் தினசரி மனந்திரும்புதல் மூலம் பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களை பிரித்தறியும் திறனை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொண்ட ஒரு பிணையத் தலைவரை நான் சந்தித்தேன். எங்கள் ஊழிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாங்கள் ஒருங்கிணைந்து மூன்று வீடுகளுக்குச் சென்றோம். எங்கள் கடைசி சந்திப்பை முடித்ததும், எங்கள் அடுத்த நிகழ்ச்சிக்கு இன்னும் 30 நிமிடங்கள் எஞ்சியிருப்பதைக் கண்டோம். நாங்கள் பிணைய மையத்திற்குத் திரும்பிச் சென்றபோது, தலைவர் செஸ்நட் கூடுதலாக ஒரு குடும்பத்தை பார்வையிடும் எண்ணத்தைப் பெற்றார். நாங்கள் இருவரும் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்ற ஒப்புக்கொண்டோம்.

நாங்கள் ஜோன்ஸ் குடும்பத்தைப் பார்க்கச் சென்றோம், அங்கு சகோதரி ஜோன்ஸ் நோய் காரணமாக படுக்கையில் இருப்பதைக் கண்டறிந்தோம். அவருக்கு ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதம் தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவரின் அனுமதியுடன், நாங்கள் அவருக்குக் கொடுத்தோம். நாங்கள் புறப்படத் தயாரானபோது, ஆசீர்வாதத்திற்கான அவசரத் தேவையை நாங்கள் எப்படி அறிந்தோம் என்று சகோதரி ஜோன்ஸ் கேட்டார். உண்மை என்னவென்றால், எங்களுக்குமே தெரியாது. இருப்பினும், அவரின் தேவைகளை அறிந்திருந்த நம் பரலோக பிதா, தலைவர் செஸ்நட்டை அவருடைய வீட்டிற்குச் செல்லுமாறு ஏவினார். அமர்ந்த, மெல்லிய சத்தத்தின் வழிகாட்டுதலை நாம் ஏற்றுக்கொள்ளும் போது, தேவைப்படுபவர்களுக்கு மிகவும் திறம்பட ஊழியம் செய்ய நம்மை சிறப்பாக தயாராக்குகிறார்.

கருணை நிறைந்த மற்றும் அன்பான பரலோக பிதாவுக்கு நான் சாட்சியம் கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவே மனுக்குலத்தின் இரட்சகரும் மீட்பருமாவார். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி உண்மையானது என்றும், பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைப் பின்பற்ற நாம் கற்றுக் கொள்ளும்போது, அவர் நம்மை மனந்திரும்பவும், இரட்சகரின் பாவநிவர்த்தியின் வல்லமையை நம் வாழ்வில் பயன்படுத்தவும் வழிநடத்துவார் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன். இப்பூமியில், தலைவர் ரசல் எம். நெல்சன் அனைத்து ஆசாரியத்துவத் திறவுகோல்களுடன் கூடிய, கர்த்தரின் உண்மையான மற்றும் ஜீவிக்கும் தீர்க்கதரிசி ஆவார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. 3 நேபி 27:19.

  2. Russell M. Nelson, “The Power of Spiritual Momentum,” Liahona, May 2022, 98–99.

  3. யோவான் 14:26.

  4. Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 96.

  5. Dallin H. Oaks, “Always Have His Spirit,” Ensign, Nov. 1996, 61.

  6. ஜோன்ஸ் என்ற பெயர் நாங்கள் சந்தித்த குடும்பத்தின் பெயர் அல்ல. அவர்களது தனியுரிமை கருதி ஒரு தொடர்பில்லா பெயரை பயன்படுத்தியுள்ளேன். தலைவர் செஸ்நட்டின் பெயரையும் அவரது பிணையத்தின் பெயரையும் பயன்படுத்த எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்றுள்ளேன்.