மறக்கக் கூடாத நாட்கள்
வரவிருக்கும் தருணங்கள் எல்லா இடங்களிலும் உள்ள சபை உறுப்பினர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றிய மகிழ்ச்சியான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள அதிக வாய்ப்புகளை வழங்கும்.
முன்னுரை
எனக்கு அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இந்த ஊழியக்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சபையினுடைய வரலாறானது, கர்த்தர் தம்முடைய சபையை எப்படி வழிநடத்தினார் என்பதை நிரூபிக்கிற தெய்வீக அனுபவங்களால் மிளிர்கிறது. ஆயினும், நம்முடைய வரலாற்றில் ஒரு பத்தாண்டுகள், 1820 லிருந்து 1830 வரையிலான பத்தாண்டுகள், மற்றவைகளைக் காட்டிலும் வியக்கத்தக்கதாய் மேலோங்கி நிற்கிறது. 1820 வசந்தகாலத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் அனுபவமான பரிசுத்தத் தோப்பில் அவர் பிதாவாகிய தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் கண்டது முதற்கொண்டு ஏப்ரல் 6, 1830 வரைக்குமான அந்த பத்தாண்டுகள் வேறு எதைப் போன்றும் இல்லை.
இந்த பிரசித்தமான நிகழ்வுகளை எண்ணிப்பாருங்கள். இளம் தீர்க்கதரிசி, தூதரான மரோனியுடன் சம்பாஷித்து, தங்கத் தகடுகளை மொழி பெயர்த்து, மார்மன் புஸ்தகத்தை வெளியிட்டார். தன் மூலமாய் ஆரோனிய, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவங்கள் மறுஸ்தாபிதம் செய்யப்படுத்துவதற்கு அவர் கருவியாய் இருந்து, பின்பு அவர் சபையை அமைத்தார். ஆலிவர் கௌட்ரி “இந்த நாட்கள் என்றும் மறக்கக் கூடாதவை“ என்று அந்த சகாப்தத்தை சிறப்பாய் விவரித்தார். அற்புத நிகழ்வுகள் இந்நாள் வரைக்குமாய் தொடர்கின்றன.
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்த ஒப்பற்ற நிறுவப்பட்ட பத்தாண்டுகளைத் தொடர்ந்து வந்ததைப் போலவே இந்த ஆண்டும் நாம் ஒரு பத்தாண்டை ஆரம்பித்துள்ளோம் என்று நான் தைரியமாகச் சொல்லலாம்.
நம்முடைய பத்தாண்டுகள்
நான் விளக்குகிறேன். இப்போது, 2024 மற்றும் 2034 க்கு இடையில், சேவை செய்வதற்கும், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஐக்கியப்படுவதற்கும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை முன்னெப்போதையும் விட அதிகமான மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அசாதாரண வாய்ப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளை அனுபவிப்போம்.
தலைவர் ரசல் எம் நெல்சனின் 100வது பிறந்தநாளை பத்து லட்சத்திற்கும் அதிகமானோருடன் நாம் கொண்டாடிய போது மெய்யான வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தின் வல்லமையை நாம் அப்போதுதான் கண்டோம்.
தலைவர் நெல்சனின் பிறந்த நாளை செய்தியாக நியூஸ்வீக் என்ற வார இதழ்: “உலகின் மூத்த மதத்தலைவருக்கு 100 வயதாகிறது” என்று தலைப்பாக வெளியிட்டனர். பின்பு அவர்கள் உலகின் 10 மூத்த மதத்தலைவர்களாகிய போப் பிரான்ஸிஸ், தலாய் லாமா ஆகியோரை உள்ளடக்கிய வரிசையில் முதலிடத்தில் தலைவர் நெல்சன் அவர்களையும் வைத்து பட்டியலிட்டனர்.
நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையின் இந்த அறிக்கையானது சர்வதேச வாசகர்களின் பெரும்பகுதியினரின் உணர்வை பிரதிபலிக்கிறது: “[அமெரிக்காவின்] ஜனாதிபதித் தேர்தல் சுழற்சியில், முதுமை மற்றும் தலைமைத்துவம் பற்றிய ஆன்ம தேடலைத் தூண்டியது, திரு. நெல்சனின் சாதனையானது, குறைந்த பட்சம் அவரது சபையில், மூன்று இலக்க பிறந்தநாள் அதிகம் கையை பிசைய தேவையற்றது. அவர் சபை உறுப்பினர்களுக்குள்ளே பிரபலமானவராய் இருந்து, அவர்கள் தங்களின் தலைவரை நிர்வாகியாக மாத்திரம் பார்க்காமல், தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் பார்க்கிறார்கள்’” என்ற இந்த வாக்கியம் சர்வ தேச ஏக உணர்வை பிரதிபலிக்கிறது.
தலைவர் நெல்சனின் விசேஷ பிறந்தநாள் தேவனின் தீர்க்ககரிசியை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பை நல்கியதற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது என்றும் மறக்க கூடாத கொண்டாட்டமாக இருக்கிறது.
இந்த வசந்தகாலத்தின் தொடக்கத்தில், ஆலய சதுக்கத்திலுள்ள புதுப்பிக்கப்பட்ட பொது வெளியில், சபையை அங்கீகரித்த நாடுகளை குறிக்கிற சர்வதேச கொடிகளைக் கொண்ட காட்சியகம் திறக்கப்பட்டது. அந்த பொது வெளியின் வாசலை இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கருங்கல்லிலான நினைவுச்சின்னம் குறிக்கிறது: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம், பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.”
ஒருவேளை அடுத்த பத்து ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலுக்கான ஒரு வெளிப்பாடாக அறியப்படும்.
அடுத்த பத்தாண்டுகளில் முன்பு என்றும் இல்லாத அளவிற்கு திட்டமிடப்பட்டிருக்கும் திறந்த ஆலயங்களையும் பிரதிஷ்டைகளையும் எண்ணிப் பாருங்கள். 164 ஆலயங்களின் சாத்தியக்கூறுகள் மற்றும் அதிகரித்தலும் கூட. நீங்களும் உங்கள் நண்பர்களுமாக லட்சக்கணக்கானோர், கர்த்தரின் ஆலயத்தினூடே செல்வதை கற்பனைசெய்து பாருங்கள். இந்த நிகழ்வுகளின் அடையாள மையமாக சால்ட் லேக் ஆலயத்தின் மறுபிரதிஷ்டை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இருக்கும். இந்த நாட்கள் என்றும் மறக்கக் கூடாதவைகளாக இருக்கும்.
இரண்டாயிரத்து முப்பதாம் வருடம், சபை ஸ்தாபித்தலின் இருநூறாவது ஆண்டின் நிறைவை நினைவுகூர உலகமெங்கும் வாய்ப்புகளை கொண்டுவரும். இந்த முக்கிய நிகழ்வை சபை எப்படி நினைவுகூரும் என்று இவ்வளவு முன்னமே சொல்லமுடியாது என்றாலும், அது குடும்பத்தையும், நண்பர்களையும், சக ஊழியர்களையும், கனம் பொருந்திய விருந்தாளிகளையும், “வந்து பார்க்கவும்,” சபை மக்களின் வாழ்வுகளில் அதன் வல்லமையான தாக்கத்தை நன்கு அறிந்துகொள்ளவும், அவர்களை அழைக்க நம்மை அனுமதிக்கும்.
2034ல், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் மேடையாக சால்ட் லேக் சிட்டி இருக்கும் என்பதால் அதன் வீதிகளில் ஆயிரக்கணக்கான பிரமுகர்களும், பார்வையாளர்களும், விளையாட்டு வீரர்களும் நிறைந்திருப்பார்கள். உலகளாவிய ஐக்கியத்தை ஒருவேளை ஒலிம்பிக் போட்டிகள் மெய்படுத்துவதைக்காட்டிலும் அதிகமாய் வேறு எங்கும் காண இயலாது. உலகத்தின் கண்கள் சபை மேலும் அதன் உறுப்பினர்கள் மேலும் இருந்து, தொண்டுபுரியவும், சேவிக்கவும், நற்கிரியைகளினால் சந்தோஷ செய்திகளை பகிர பெரும் வாய்ப்புகளை வழங்கிடும்—இது என்றும் மறக்கக் கூடாத நிகழ்வாக இருக்கும்.
இந்த வரவிருக்கிற தருணங்கள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நற்செய்திகளை வார்த்தையிலும் செயலிலும் பகிரும் படியான மிகுதியான வாய்ப்புகளை எங்கெங்குமிருக்கிற சபை உறுப்பினர்களுக்கு வழங்கிடும், என்றும் மறக்கக் கூடாத பத்தாண்டாக இருக்கும்.
நற்செய்திகள்
தன்னுடைய பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில், தலைவர் நெல்சன் அவர்கள் தான் “நற்செய்திகள்“ என்ற சொல்லை போற்றுவதற்கான காரணத்தை பகிர்ந்தார். மேலோட்டமாய் இந்த வார்த்தை, சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அர்த்தமாக கொண்டிருப்பதாக தோன்றலாம் என்று அவர் கூறினார். ஆனால் “நற்செய்தி” இன்னும் அதிகமானவற்றை தெரிவிக்கிறது. “நற்செய்தி” அல்லது “சுவிசேஷம்” என்று நேரடி அர்த்தமுள்ள யுங்ளின் என்ற அசல் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது என்று அவர் இந்த வார்த்தையை குறித்து விவரித்தார். சந்தோஷமும் மகிழ்ச்சியும் இம்மையிலும், மறுமையிலுமாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு தொடர்புடையதாக இருக்கிறது. இப்படியாக நற்செய்தி இந்த இரு அர்த்தங்களை அருமையாக கொண்டிருக்கிறது.
“மனுஷனும் (மனுஷியும்) சந்தோஷமாயிருக்கவே இருக்கிறார்கள்.“ பரலோக பிதா அவருடைய ஆசீர்வாதங்களினூடே சந்தோஷம் வரத்தக்கதாய் மகிழ்ச்சியின் திட்டத்தைத் தந்தருளினார். அவருடைய பிரசன்னத்தில் குடும்பங்களாய் நித்தியத்திற்கும் வாழ்வதும் இதில் பொருந்தும். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி நம்மை மீட்கும்படியான தேவனின் திட்டத்திற்கு மையமாகும். நித்திய ஜீவனைப் பெறுவதற்கு நாம் கிறிஸ்துவிடம் வரவேண்டும். நாம் அப்படி செய்து மற்றவர்களையும் அப்படியே செய்ய உதவும்போது, நாம் தேவனுடைய இரட்சிப்பின் மற்றும் மேன்மையடைதலின் கிரியையில் பங்குபெறுகிறோம்.“
இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் நற்செய்தியினை கொண்டிருக்கும் இந்த செய்தியே பூமியில் மிக முக்கியமான செய்தியாயிருக்கிறது. அங்குதான் சபையின் இளைஞர்களும் இளம் வாலிபர்களும் வருகிறார்கள்.
இளைஞரின் பெலனுக்காக
இப்படியாக, வருகிற பத்தாண்டில் சபையின் ஒவ்வெரு உறுப்பினரும் என்றும் மறக்கமுடியாத நாட்களால் நிறைந்திருப்பினும், இது எழும்புகிற தலைமுறைக்கு விசேஷமாய் பொருந்தும். இப்போது நீங்கள் பூமியில் இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டதால், நீங்கள் இங்கு இப்போது இருக்கிறீர்கள். முன்பு என்றும் இல்லாத அளவிற்கு கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்க நீங்கள் பெலனும் திறமையும் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
தலைவர் ஜார்ஜ் க்யூ. கானன் : “உலகத்தையும், பொல்லாங்கனின் தீமைகள் அனைத்தையும்…எல்லா விளைவுகளுக்கும் பயமின்றி நமது தேவனின் சீயோனை கட்டவும் தைரியமும் தீர்மானமும் உள்ள ஆவிகளை இவ்வூழிய காலத்துக்காக தேவன் வைத்திருந்தார்” என்று போதித்தார்.
இப்படியாக, எழும்புகிற தலைமுறையாகிய உங்களுக்கு என்றும் மறக்கக்கூடாததான அடுத்த பத்தாண்டுகள் எவ்வளவு ஆனந்தமானதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று உங்களை அழைத்து உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். வருகிற இந்த பத்தாண்டில் நீங்கள் அதிகாரம்பெற்று இருக்கும்படியாய் சில எளிய வார்த்தைகளாலான ஆலோசனையையும் ஊக்கத்தையும் கொடுக்கிறேன்.
உங்களில் அநேகரைப்போல, நானும் ஒரு மிடுக்கான கைபேசியை வைத்திருக்கிறேன். அது அவ்வப்போது, தாமதமின்றி, ஒரு குறிப்பிட்ட நாளில் நான் செய்துகொண்டிருந்தவைகளை படத் தொகுப்பாய் வழங்கும். ஒரு சில வருஷங்களுக்குள்ளாக எப்படி காரியங்கள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மாறிப்போனது எப்போதும் ஆச்சரியமாகவே உள்ளது.
உங்களுடைய கைபேசி இன்றிலிருந்து இன்னும் 10 வருஷத்திற்கு சேகரித்துவைத்திருக்கும் படங்களை கற்பனைசெய்து பாருங்கள். நீங்கள் உங்களையே உயர்நிலைப் பள்ளியிலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ பட்டம் பெறுதலையும், உங்களுடைய தரிப்பித்தலைப் பெற்றுக்கொள்ளுதலையும், ஊழியத்திற்கு போவதையும், மணம் செய்வதையும், உங்களுடைய முதல் குழந்தையை வைத்திருப்பதையும் காண்பீர்கள். தனிப்பட்ட முறையில், இந்த பத்தாண்டுகள் என்றும் மறக்க முடியாததாய் இருக்கும். இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் நற்செய்திகள் உங்களுடைய வாழ்க்கையை மாத்திரம் அல்லாமல் உங்கள் குடும்பத்தாரின், நண்பர்களின், சமூக ஊடக பின்பற்றுபவர்களின் வாழ்க்கையையும் எப்படி வளப்படுத்தவும், மேம்படுத்தவும் முடியுமென்று உலகத்திற்கு ஒளியாக இருக்க தீவிரமாக முயற்சிக்கும் போது, நீங்கள் இரண்டு மடங்கானவைகளைப் பெறுவீர்கள்.
இதை எப்படி செய்வதென்று நீங்கள் யோசிக்கலாம்.
தெய்வீகமாய் நியமிக்கப்பட்ட கடமைகளென அழைக்கப்படுகிற நான்கு எளிய நடவடிக்கைகளை கொண்டு இதை நிறைவேற்றலாம் என்று தீர்க்கதரிசிகள் போதித்திருக்கிறார்கள், முதலாவது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல், இரண்டாவது உதவியற்று நிற்போரை ஆதரித்தல், மூன்றாவது அனைவரையும் சுவிசேஷத்தைப் பெற அழைத்தல், நான்காவது குடும்பங்களை நித்தியத்திற்கும் ஒன்றிணைத்தல். குறிப்பிடத்தக்க வகையில், இவை ஒவ்வொன்றும் மிக சாதாரணமும் இயற்கையுமான வழிகளில் செய்யப்படலாம்.
தெய்வீகமாக நியமிக்கப்பட்ட கடமைகள்
இந்த நான்கு தெய்வீகமாக நியமிக்கப்பட்ட கடமைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் இந்த பத்தாண்டுகள் மறக்ககூடாததாய் இருக்கும் என்று உங்களுக்கு வாக்களிக்கிறேன். இது என்னவாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வோம்.
முதலாவது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் படித்து, பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இருதயங்களை அவரிடமாய் சாய்த்து, அவருடைய வழியில் நடக்க முயற்சி செய்யுங்கள். மூப்பர் உலிசஸ் சோயர்ஸ் விவரித்த “உடன்படிக்கையினால் வருகிற நம்பிக்கை“ மூலம் உயர்த்தப்படுங்கள். தம் பங்கிற்கு இரட்சகர் உங்களைப் பலப்படுத்தி ஆதரவளிப்பார் என்பதை அறிந்திருப்பதால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான உடன்படிக்கைகளைச் செய்வதன் மூலம் இந்த நம்பிக்கை வருகிறது,
சுவிசேஷத்தின்படி வாழ்வதில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை உங்கள் நண்பர்கள் பார்க்கட்டும், அவர்கள் பெறும் சிறந்த சுவிசேஷ செய்தியாக நீங்கள் இருப்பீர்கள்.
இரண்டாவதாக, உதவியற்று இருப்போரை கவனித்துக் கொள்ள இரக்கத்துடன் அணுகுங்கள். வழக்கத்திற்கு மாறாக உங்கள் தலைமுறையினர் தங்களை காட்டிலும் குறைவாயிருப்போரிடத்தில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். பேரழிவு ஏற்படும் போதெல்லாம், சபை உறுப்பினர்கள் குப்பைகளை அகற்றவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலளிக்கவும் விரைந்து செல்கிறார்கள். “ஹெல்பிங் ஹேண்ட்ஸ்“ டி-ஷர்ட்களை அணிந்திருக்கும் பெரும்பான்மையானவர்கள் பதின்மவயதினர் மற்றும் இருபது வயதினராக இருப்பதாக தெரிகிறது. “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதல்” அளிப்பது உங்கள் சுபாவமாய் இருக்கிறது. இதைச் செய்வதன் மூலம் நாம் “கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.”
ஒரு இளம் ஆரம்ப வகுப்பு வயதுள்ள சிறுவனான இவான், தனது உள்ளூர் உணவு வங்கிக்கு நன்கொடை அளிப்பதற்கு பீனட் பட்டர் மற்றும் ஜெல்லி சாண்ட்விச்களுக்கான பொருட்களை சேகரிக்க தன் பள்ளி கோடை விடுமுறையை கழிக்க முடிவு செய்தான். அவன் ஜஸ்ட் சர்வ் இணையதளத்தில் திட்டத்தைக் கண்டுபிடித்தான். 700 க்கும் மேற்பட்ட ஜெல்லி ஜாடிகளை சேகரிக்க உதவுவதற்காக இளம் இவான் தனது முழு பள்ளி வகுப்பையும் சேர்த்தான்! நீங்கள் சேவை செய்பவர்களுக்கான உங்கள் அக்கறை, தேவன் மீதான உங்கள் அன்பிலும், உங்கள் அயலாரை உங்களைப் போலவே நடத்துவதற்கான உங்கள் விருப்பத்திலும் வேரூன்றியுள்ளது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மூன்றாவது அனைவரையும் சுவிசேஷத்தைப் பெற அழைத்தல். இந்த ஆண்டு முழுநேர ஊழியம் செய்ய விரும்பும் அனைவருக்கும் இடமளிக்கும் வகையில் உலகளவில் 36 புதிய ஊழியங்களைத் திறந்துள்ளோம். முறையான மத நிகழ்வுகள் யாவிலுமிருந்து அநேக இளைஞர்கள் வெளியேறுகிற இந்த காலத்தில், இப்படிப்பட்டது வியப்பானதாய், உங்களின் சாட்சியங்களின் மகத்துவ தன்மையை பற்றி பேசுகிறது. முழுநேரமாகச் சேவை செய்தாலும் செய்யாவிட்டாலும், உங்கள் சகாக்களை தாக்கம் அடையச்செய்கிற உங்களின் அபாரமான திறனை உணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆராய அவர்களை அழைக்கவும்.
நான்காவது குடும்பங்களை நித்தியத்திற்கும் ஒன்றிணைத்தல். நான் உலகெங்கிலும் உள்ள ஆலயங்களுக்கு செல்லும்போது, ஞானஸ்நான பகுதியில் காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் கூட்டத்தையும், நியம ஊழியர்களாகப் பணியாற்றும் இளம் வாலிபர்களின் மிகுதியான எண்ணிக்கையையும் கண்டு வியக்கிறேன். சமீபத்தில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்து 600 க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்ட இளைஞர் குழு பிரஸ்டன் இங்கிலாந்து ஆலயத்திற்குச் சென்று, 4,000 க்கும் மேற்பட்ட நியமங்களை நிறைவேற்றியது, அவற்றில் பல அவர்களின் உறவினர்களான மரித்த முன்னோர்களுக்கான நியமங்களாகும். குடும்ப வரலாற்றில் ஈடுபடவும், ஆலயத்தில் நேரத்தை செலவிடவும், தன் தகுதிக்கு சமானமாயுள்ள துணையை ஆலயத்தில் திருமணம் செய்யத் தயாராக இருக்கிற மனுஷனாகவோ மனுஷியாகவோ உங்களை கவனமாக தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆலயத்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு சீரான அங்கமாக மாற்றுவதற்கு இப்போது உங்கள் வாழ்க்கையில் ஒரு திட்ட மாதிரியை உருவாக்குங்கள்.
முடிவுரை
சகோதர சகோதரிகளே, என் அன்பான இளம் நண்பர்களே, வரும் நாட்களில் நம் ஒவ்வொருவருக்கும் சிரமங்கள் இருக்கக்கூடும். ஆயினும், முன்பு என்றுமில்லாத தருணங்களைக்கொண்ட இந்த பத்தாண்டில் நாம் நுழையும்போது, வாழ்தல், அக்கறை கொள்ளுதல், அழைத்தல், ஐக்கியமாதல் ஆகியவைகளான எளிய செயல்பாடுகளின் மூலம் நற்செய்திகளைப் பகிர்ந்திடுவோமாக. நாம் அவ்வாறு செய்யும்போது, கர்த்தர் உங்களுக்கு என்றும் மறக்கக் கூடாத அனுபவங்களை அருளுவார்.
உத்தம உள்ளத்தோடும், உண்மை நோக்கத்தோடும் கர்த்தரை அணுகுபவர்களுக்கும், உதடுகளில் இரட்சகரின் பெயரையும், தங்கள் ஆத்துமாவில் பரிசுத்த ஆவியையும் கொண்டிருப்பவர்களுக்கும், இந்த மகத்தானதும் புகழ்பெற்றதுமான புனித பயணத்தை மேற்கொள்பவர்களுக்குமான உங்களுக்கு நான் சாட்சியமளித்து நீங்கள் சிலஸ்டியல் ஆசீர்வாதங்களை அபரிதமாக பெற்று அனுபவிப்பீர்கள் என்றும், தேவன் உங்களுக்குச் செவிசாய்த்து, உங்களை அறிந்து, உங்களை நேசிக்கிறார் என்பதற்கான சாட்சியைப் பெறுவீர்கள் என்றும் உங்களை ஆசீர்வதிக்கிறேன். நீங்கள் என்றும் மறக்க முடியாத நாட்களை அனுபவிப்பீர்கள். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.