2020–2024
கிறிஸ்துவின் வார்த்தைகளும் பரிசுத்த ஆவியும் நம்மை சத்தியத்திற்கு வழிநடத்தும்
அக்டோபர் 2024 பொது மாநாடு


10:6

கிறிஸ்துவின் வார்த்தைகளும் பரிசுத்த ஆவியும் நம்மை சத்தியத்திற்கு வழிநடத்தும்

இந்த மதிப்புமிக்க திட்டத்தை அறிந்துகொள்வது, நாம் தேவனின் பிள்ளைகள் என்பதையும், நாம் அவரைப் போல் ஆக முடியும் என்பதையும் அறிய உதவும்.

தேவன் பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா. நாம் அவருடைய ஆவிப் பிள்ளைகள், நாம் அவருடைய சாயலின்படி சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். எனவே, நாம் ஒவ்வொருவரும், தேவனின் பிள்ளையாக, அவரைப் போல ஆக ஒரு தெய்வீக ஆற்றல் உள்ளது.

நாம் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பு அவருடன் ஆவிகளாக வாழ்ந்தோம். பரலோக பிதா, நம்முடைய ஆவி பெற்றோராக, நம்மை நேசிக்கிறார், நமக்கு சிறந்ததை விரும்புகிறார், மேலும் அவருடைய மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு ஒரு திட்டத்தைத் தயாரித்தார், அவை அழியாமை மற்றும் நித்திய ஜீவன். திட்டத்தின்படி, ஆவிப் பிள்ளைகளாகிய நமக்கு, அவருடைய திட்டத்தைத் தேர்ந்தெடுக்க சுயாதீனம் வழங்கப்படும். பூமிக்கு வருவதன் மூலம், நாம் தேவனின் பிரசன்னத்தை விட்டு வெளியேறுவோம், நமது உலகத்திற்கு முந்தைய வாழ்க்கையை மறந்துவிடுவோம், மாம்சம் மற்றும் எலும்புகளின் உடல்களைப் பெறுவோம், நம்முடைய சொந்த அனுபவத்தைப் பெறுவோம், விசுவாசத்தை வளர்த்துக்கொள்வோம். மாம்சம் மற்றும் எலும்புகள் கொண்ட நமது உடல்களுடன், சுபாவ மனிதனாக, நாம் சோதனைக்கு அடிபணிவோம், அசுத்தமாகி, தேவனிடமிருந்து விலகி, அவருடைய பரிசுத்த பிரசன்னத்திற்குத் திரும்ப முடியாது. பரலோக பிதா நம்மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக, அவர் தம்முடைய முதற்பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக அனுப்பினார். இயேசு கிறிஸ்து தனது தியாகம், பாவநிவர்த்தியின் மூலம், பாவங்களிலிருந்து நாம் மீட்கப்பட்டு, உயிர்த்தெழுந்து நித்திய ஜீவனைப் பெறுவதை சாத்தியமாக்கினார்.

இந்த மகிமையான சத்தியங்களுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்—பிதாவின் இரட்சிப்பின் திட்டம், அவருடைய இரக்கத்தின் திட்டம் அல்லது மகிழ்ச்சிக்கான அவரது திட்டம் என்று நாம் அழைக்கிறோம். இந்த முக்கியமான சத்தியங்களைக் கற்றுக்கொள்வது எனது உண்மையான அடையாளத்தையும், தேவன் நமக்காக மேன்மையடைதல் மற்றும் நித்திய ஜீவனுக்காகத் தயாரித்துள்ள மாபெரும் ஆசீர்வாதங்களையும் அறிய எனக்கு உதவியது. தீர்க்கதரிசி நேபி வழியை நமக்குப் போதித்தான், “ஆகையால் … கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பாருங்கள்; ஏனெனில் இதோ, நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும், கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லும்.” அவர் சொன்னார், “நீங்கள் இந்த வழியாய் உட்பிரவேசித்து, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டால், அது நீங்கள் செய்யவேண்டிய சகல காரியங்களையும் உங்களுக்குக் காண்பிக்கும்.” இன்று, கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் எனது பதின்ம வயதில் இந்த முக்கியமான சமாதானம் தரும் சத்தியங்களைக் கண்டறிய எனக்கு எப்படி உதவியது என்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும், கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லும்.

1 நேபி புத்தகத்தின் ஆரம்ப வசனத்தில் நேபி கூறியது போல், நானும் “நற்கீர்த்தி பெற்ற பெற்றோருக்குப் பிறந்தவன்”. நான் ஜப்பானில் உள்ள நாகானோவில், நேர்மை, விடாமுயற்சி மற்றும் பணிவு ஆகியவை வலுவாக ஊக்குவிக்கப்பட்ட ஒரு வீட்டில் வளர்ந்தேன், மேலும் பழைய பழக்க வழக்கங்களுக்கு இணங்குவது கண்டிப்பாக பின்பற்றப்பட்டது. என் தந்தை மிகவும் மத நம்பிக்கை கொண்டவர். தினமும் காலையிலும் இரவிலும் ஷின்டோ மற்றும் பௌத்த பீடங்களின் முன் அவர் பிரார்த்தனை செய்வதை நான் பார்த்தேன். அவர் யாருக்காக ஜெபிக்கிறார், எதற்காக ஜெபிக்கிறார் என்று எனக்குத் தெரியாதபோதும், ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத வல்லமை அல்லது தேவன் “காக்கும் வல்லமையுள்ளவர்” அல்லது நாம் உண்மையாக ஜெபித்தால் நமக்கு உதவுவார் என்று நான் நம்பினேன்.

மற்ற இளைஞர்களைப் போலவே நானும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். வாழ்க்கை அநியாயமானது, பல ஏற்றத் தாழ்வுகள் உள்ளது என்று நினைத்து போராடினேன். என் வாழ்க்கையில் ஒரு திசையறியாமல் நான் காணாமல் போனதாக உணர்ந்தேன். வாழ்க்கை மிகவும் விரைவானதாகத் தோன்றியது, ஏனென்றால் நாம் இறக்கும் போது அது முடிவடையும். இரட்சிப்பின் திட்டத்தை அறியாமல் வாழ்க்கை எனக்கு குழப்பமாக இருந்தது.

நான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் கற்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, எங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் புதிய ஏற்பாட்டின் நகலைப் பெற்றனர். நாங்கள் ஆங்கிலப் படிப்பை அப்போதுதான் தொடங்கியிருந்தாலும், அதை வாசித்துத்தான் ஆங்கிலத்தை படிக்க வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் சொன்னார். நான் அதைத் திறந்து அதன் உள்ளடக்கங்களை மதிப்பாய்வு செய்தேன். புதிய ஏற்பாட்டில் உள்ள வார்த்தைகள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஜப்பானிய மொழியில் வார்த்தைகள் சமமாக கடினமாக இருந்தன. இருப்பினும், இந்த கிதியோன் வேதாகமத்தில் உள்ள வேதாகம உரைக்கு சற்று முன்பு சேர்க்கப்பட்டுள்ள ஆத்துமா பற்றிய கேள்விகளின் பட்டியலுக்கு நான் ஈர்க்கப்பட்டேன்—தனிமையாக உணர்தல், தன்னம்பிக்கை குறைபாடு, குழப்பமடைவது, வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொள்வது மற்றும் பல. பட்டியலில் உள்ள ஒவ்வொரு உருப்படியும் புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் மற்றும் பக்கங்களைக் குறிக்கும். நான் குறிப்பாக “நீங்கள் சோர்வாக இருக்கும்போது” என்ற கேள்விக்கு ஈர்க்கப்பட்டேன். அக்குறிப்பு மத்தேயு 11:28–30, ஐத் திறக்க என்னை வழிநடத்தியது, அதில் இயேசு தம் சீஷர்களிடம் கூறினார்:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”

இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நான் படித்த முதல் வசனம் இதுதான் என்று நினைவுகூறுகிறேன். அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் எனக்குப் புரியவில்லை என்றாலும், அவருடைய வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளித்தது, என் ஆத்துமாவை உயர்த்தியது, நம்பிக்கையைத் தந்தது. அவருடைய வார்த்தைகளை நான் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக அவருடைய வார்த்தைகளின் நற்பண்பை முயற்சி செய்ய வேண்டும் என்று நான் உணர்ந்தேன். அன்று நான் உணர்ந்தது போல் நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. நான் நேசிக்கப்பட்டதாக உணர்ந்தேன். இயேசு கிறிஸ்து எனக்கு தெரிந்த ஒருவர் என்று உணர்ந்தேன்.

நான் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, ​​“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்” என்று அவர் சொன்னபோது, ​​அவர் என்னிடம் நேரடியாகப் பேசுவது போல் உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் என் உணர்வுகளை என்னால் சரியாக விவரிக்க முடியாவிட்டாலும் அவரது வார்த்தைகள் என் இதயத்தை நிரப்பின. இயேசு கிறிஸ்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமில்லாத ஒரு நாட்டில் வாழ்ந்தாலும், அவருடைய வார்த்தைகளை முழு மனதுடன் நம்பலாம் என்று நினைத்தேன். எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள், நான் இயேசு கிறிஸ்துபற்றி அதிகமாக கற்பேன் என்று நம்பினேன்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்னும் சகல காரியங்களையும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் காண்பிப்பார்.

அது சில வருடங்களுக்குப் பிறகு அந்த ஒரு நாள் வந்தது. நான் மிகவும் அர்ப்பணிப்புள்ள, இளம், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் முழுநேர ஊழியக்காரர்களை சந்தித்தேன். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சிக்கும் அன்பான மற்றும் மகிழ்ச்சியான பிற்காலப் பரிசுத்தவான்களின் ஒரு சிறிய குழுவை நான் விரைவில் சந்தித்தேன். அவர்களை முழுவதுமாக நம்புவதற்கு எனக்கு சிறிது நேரம் பிடித்தாலும், நான் புதிய ஏற்பாட்டில், ​​இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் மற்றும் அவற்றிலிருந்து வரும் நம்பிக்கை மற்றும் சமாதானம் ஆகியவற்றைப் படித்தபோது நான் ஏங்குவதை மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தில் பார்த்தேன்.

ஊழியக்காரர்கள் எனக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தது குறிப்பாக ஒரு பரிசுத்தமான அனுபவம். நாம் தேவனை பெயரால் அழைக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். நாம் ஜெபிக்கும்போது, ​​நம் இதயத்திலிருந்து பேச வேண்டும், நம் நன்றியை வெளிப்படுத்த வேண்டும், நம் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் சொல்ல விரும்புவதை எல்லாம் சொன்னவுடன், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்” என்று சொல்லி ஜெபத்தை முடிக்கிறோம். அவருடைய நாமத்தில் ஜெபிக்கும்படி இயேசு கட்டளையிட்டதால் இதைச் செய்கிறோம். பரலோக பிதாவிடம் ஜெபிப்பது, அவர் யார் என்பதையும் அவருடனான எனது உறவையும் தெரிந்துகொள்ள எனக்கு உதவியது—நான் அவருடைய அன்புக்குரிய ஆவி குமாரன் என்பதை. பரலோக பிதா என்னை அறிந்திருப்பதால், என்னை நேசிப்பதால், அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில், தனித்துவமாக, பரிசுத்த ஆவியின் மூலம் நாம் புரிந்துகொள்ளும் விதங்களில் பேசுவார் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

பரிசுத்த ஆவியை என்னால் உண்மையில் அடையாளம் காண முடியாத ஒரு காலம் இருந்தது. நான் செய்ய வேண்டியதெல்லாம், ஜெபத்தின் படிகளைப் பின்பற்றினால், வியத்தகு ஏதாவது நடக்கும் என்று நினைத்து நான் தவறாகப் புரிந்துகொண்டேன். ஒரு நாள், ஊழியக்காரர்களுடன் ஒரு பாடத்தின் போது, ​​நான் ஓய்வு எடுக்க பாடத்தை விட்டு வெளியேறினேன். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் உண்மையாக இருந்தால், என் வாழ்வில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் இன்னும் குழப்பத்தில் இருந்தேன்.

ஊழியக்காரர்கள் காத்திருந்த அறைக்கு நான் திரும்பப் போகையில், ஊழியக்காரர்களில் ஒருவரின் குரல் கேட்டது. என் பெயரைக் கேட்டேன். கதவைத் திறப்பதற்குப் பதிலாக, கதவின் மறுபக்கத்தில் இருந்து, குரலைக் கேட்டேன். நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் பரலோக பிதாவிடம் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஜெபம் சொன்னவர், என் ஜெபத்தைக் கேட்க வேண்டும் என்று தேவனிடம் மன்றாடினார். அவருடைய ஜப்பானிய மொழி சரளமாக இல்லாவிட்டாலும், அவருடைய நேர்மையான ஜெபத்தைக் கேட்டது என் இதயத்தை மென்மையாக்கியது. ஏன் என் மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்று யோசித்தேன். என் சார்பாக அவர்கள் செய்த ஜெபம் பரலோக பிதாவின் பிரதிபலிப்பாகவும் இரட்சகர் என்மீது கொண்ட அன்பாகவும் இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். அந்த அன்பு எனக்கு நம்பிக்கையைத் தந்தது, அதன் பிறகு, நான் தேவனிடம் விசுவாசத்துடனும் உண்மையான நோக்கத்துடனும் கேட்டேன். நான் அப்படிச் செய்தபோது, ​​நான் உண்மையிலேயே தேவனின் பிள்ளை என்றும், எனக்கு தெய்வீக ஆற்றல் மற்றும் இலக்கு இருப்பதாகவும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான உணர்வை உணர்ந்தேன். இரட்சிப்பின் திட்டம் என் இதயத்தில் ஆழமாக பதிந்தது.

தலைவர் நெல்சன் கூறினார், “நீங்கள் யார் என்பதைப் பற்றி நீங்கள் நினைக்கும் விதம் … நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் பாதிக்கிறது.” என்னைப் பொருத்தவரை அது மிகவும் உண்மை. ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவதன் மூலம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான தீர்மானம் நான் நினைத்ததை விட என் வாழ்க்கையை ஆசீர்வதித்தது. நாம் தேவனுடன் ஞானஸ்நான உடன்படிக்கையில் பிரவேசிக்கும்போது, ​​​​இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது ஏற்றுக்கொள்வதற்கும், தேவ கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கும், நம் வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம். நம்முடைய பரலோக பிதா, பரிசுத்த ஆவியின் தொடர்ச்சியான வழிகாட்டுதலின்படி, அவருடைய ஆவி நம்முடன் எப்போதும் இருக்க முடியும் என்று நமக்கு வாக்களிக்கிறார்.

“[நீங்கள்] செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும்,” கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியின் வார்த்தைகள் உங்களுக்குக் காண்பிக்கும் என்று நேபி நமக்குக் கற்பித்த செய்தியில் விசுவாசம் வைக்க உங்களை அழைக்கிறேன். அனைத்தையும்! இது தேவன் கொடுத்த மதிப்புமிக்க பரிசு.

சகோதர சகோதரிகளே, நமது பரலோக பிதாவின் மகிழ்ச்சிக்கான திட்டத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் நம்மை நேசிப்பதால், தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் அவருடைய பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கான வழியை ஆயத்தம் செய்தார். இந்த மதிப்புமிக்க திட்டத்தை அறிந்துகொள்வது, நாம் தேவனின் பிள்ளைகள் என்பதையும், நாம் அவரைப் போல் ஆக முடியும் என்பதையும் அறிய உதவும். இந்த முக்கியமான சத்தியத்துக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியின் வார்த்தைகள் மற்றும் பரிசுத்த ஆவி நித்திய ஜீவனைப் பெற நம்மை வழிநடத்தும் என்று நான் உங்களுக்கு சாட்சியளிக்கிறேன். அந்த வார்த்தைகள் உண்மை என்று நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.