ஆவிக்குரிய கேள்விகளுக்கு பதில் தேடுதல்
நம்முடைய நேர்மையான சுவிசேஷ கேள்விகள் பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நாம் வளர உதவும் வாய்ப்புகளை வழங்க முடியும்.
இது ஆச்சரியமாக இருக்கலாம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நமது சூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருப்பதாக எங்கள் பள்ளியில் கற்பித்தது எனக்கு நினைவிருக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி உள்ளது. அந்த கிரகங்களில் ஒன்றான புளூட்டோ, 1930இல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டின் 11 வயது வெனிஷியா பர்னி என்பவரால் அதன் பெயரைப் பெற்றது, 1992 வரை, புளூட்டோ நமது சூரிய மண்டலத்தில் மிக தொலைதூர பொருளாக நம்பப்பட்டது. இந்த நேரத்தில், வகுப்பறைகள் மற்றும் அறிவியல் கண்காட்சிகளில் நமது கிரக சுற்றுப்புறத்தை சிறுவயது காகிதக்கூழ் மாதிரிகளை காண்பது பொதுவானது, ஒவ்வொன்றும் அறியப்பட்ட எல்லையில் புளூட்டோவின் நிலையை விளக்கியது. பல விஞ்ஞானிகள் அந்த விளிம்பிற்கு அப்பால் வெளிப்புற சூரிய மண்டலம் வெற்று இடத்தைக் கொண்டுள்ளது என்று நம்பினர்.
இருப்பினும், வானியலாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை வால்நட்சத்திரத்தின் தோற்றம் குறித்து விஞ்ஞான சமூகத்தில் நீடித்த கேள்வி உள்ளது. நமது சூரிய மண்டலத்தின் மற்றொரு தொலைதூரப் பகுதியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்தக் கேள்வி பல தசாப்தங்களாக நீடித்தது. தங்களுக்கு இருக்கும் வரையறுக்கப்பட்ட அறிவைக் கொண்டு, விஞ்ஞானிகள் இடைப்பட்ட பல தசாப்தங்களைப் பயன்படுத்தி, மேலும் ஆய்வு மற்றும் கண்டுபிடிக்க அனுமதிக்கும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களை உருவாக்கினர். அவர்களின் இறுதி கண்டுபிடிப்பு நமது கிரக மண்டலத்தை மறுசீரமைத்தது மற்றும் புளூட்டோவை இந்த புதிய விண்வெளி பகுதி வீட்டுக்கு மாற்றியமைத்தது, மற்றும் நமது சூரிய மண்டலம் எட்டு கிரகங்களைக் கொண்டதாய் உள்ளது.
புளூட்டோவை நெருக்கமாக ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு முன்னணி கிரக விஞ்ஞானி மற்றும் நியூ ஹொரைசன்ஸ் விண்வெளிப் பயணத்தின் முதன்மை ஆய்வாளர் இந்த அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “நமது சூரிய மண்டலத்தின் புவியியல் பற்றி நாங்கள் புரிந்துகொண்டோம் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் புரிந்திருக்கவில்லை. நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் எண்ணிக்கையைப் புரிந்து கொண்டோம் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது தவறு.”
விண்வெளி ஆய்வு வரலாற்றின் இந்த காலகட்டத்தில் எனக்கு ஆச்சரியமாக இருப்பது, விஞ்ஞான எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான உருவக நாட்டத்திற்கும் தேவனின் குழந்தைகளாகிய நாம் நமது ஆவிக்குரிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதற்கும் மேற்கொள்ளும் பயணத்திற்கும் இடையிலான சில இணைகள் மற்றும் முக்கிய வேறுபாடுகள். குறிப்பாக, நமது ஆவிக்குரிய புரிதலின் வரம்புகளுக்கு நாம் எவ்வாறு பதிலளிப்பது மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வது மற்றும் உதவிக்கு நாம் எங்கு திரும்பலாம்.
வரி வரியாய்
கேள்விகளைக் கேட்பதும் அர்த்தத்தைத் தேடுவதும் நமது பூலோக அனுபவத்தின் இயல்பான மற்றும் சாதாரண பகுதியாகும். சில சமயங்களில், முழுமையான பதில்களைக் கொண்டிருக்காமல் இருப்பது, நமது புரிதலின் விளிம்பிற்கு நம்மைக் கொண்டு வரலாம், மேலும் அந்த வரம்புகள் விரக்தியாகவோ அல்லது பாரமாகவோ உணரலாம். வியக்கத்தக்க வகையில், பரலோக பிதா நம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் திட்டம், நம்முடைய வரம்புகள் இருந்தபோதிலும் முன்னேறவும், எல்லாவற்றையும் பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் நம்மால் சாதிக்க முடியாததைச் சாதிக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவனின் திட்டம் நமது மனிதகுலத்தின் வரம்புகளைக்குறித்து இரக்கம் பாராட்டுகிறது; நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு நல்ல மேய்ப்பராக வழங்குகிறது; மேலும் அவரைத் தேர்ந்தெடுக்க நமது சுயாதீனத்தைப் பயன்படுத்த நமக்கு உணர்த்துகிறது.
“கேள்விகளைக் கேட்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல”, மாறாக “அது வளர்ச்சியின் முன்னோடி” என்று மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப் கற்பித்தார். சத்தியத்தைத் தேடுபவர்களாகிய நமது தனிப்பட்ட முயற்சியைப் பற்றி நேரடியாகப் பேசுகையில், நமது தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், நமக்கு “ஆழ்ந்த வாஞ்சை” இருக்க வேண்டும் என்றும், “[இயேசு] கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து, நேர்மையான இதயத்துடன் [மற்றும்] உண்மையான நோக்கத்துடன் கேட்க வேண்டும் என்று போதித்துள்ளார்.” “’உண்மையான நோக்கம்’ என்பது, கொடுக்கப்பட்ட தெய்வீக வழிகாட்டுதலைப் பின்பற்ற ஒருவர் உண்மையாகவே விரும்புவது” என்று அவர் மேலும் கற்பித்தார்.
ஞானத்தை வளர்ப்பதற்கான நமது தனிப்பட்ட முயற்சி, சிக்கலான அல்லது வேறுவிதமாக, நமது கேள்விகளை காரணம் மற்றும் விளைவுகளின் உருப்பெருக்கி மூலம் ஆராயவும், வடிவங்களைத் தேடவும், அடையாளம் காணவும், பின்னர் நம் புரிதலுக்கு வடிவம் கொடுக்கவும், அறிவில் உணரப்பட்ட இடைவெளிகளை நிரப்பவும் வழிவகுக்கும். எவ்வாறாயினும், ஆவிக்குரிய அறிவைப் பின்தொடர்வதை நாம் கருத்தில் கொள்ளும்போது, இந்த சிந்தனை செயல்முறைகள் சில சமயங்களில் உதவியாக இருக்கலாம், ஆனால் பரலோக பிதா மற்றும் நமது இரட்சகரான இயேசு கிறிஸ்து, அவர்களின் சுவிசேஷம், அவர்களின் சபை, நம் அனைவருக்கும் அவர்களின் திட்டம் மற்றும் தொடர்பான விஷயங்களை நாம் பகுத்தறிந்து பார்க்கும்போது அவை முழுமையடையாததாக இருக்கலாம்.
பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரன் அவர்களின் ஞானத்தை நமக்கு வழங்குவதற்கான வழி, இயேசு கிறிஸ்துவை நம் வாழ்விலும், நம் விசுவாச தேடலிலும் அவர்களின் பதில்களையும் அவற்றின் அர்த்தத்தையும் தேடும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமையை நம்முடைய தனிப்பட்ட ஆசிரியராக அழைப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பரிசுத்த வேதங்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் உண்மையைக் கண்டறியவும், தற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களால் நமது நாளுக்காகவும் நம் காலத்திற்காகவும் வழங்கப்பட்ட பிற்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைத் தேடவும் அவை நம்மை அழைக்கின்றன. கர்த்தருடைய வீட்டில் வழக்கமான, ஆராதனை நேரத்தை செலவிடவும், “பரலோகத்திலிருந்து தகவல்களைப் பெற” ஜெபத்தில் முழங்காலிடவும் அவர்கள் நம்மை அழைக்கிறார்கள். இயேசுவின் மலைப் பிரசங்கத்தைக் கேட்கக் கூடியிருந்தவர்களுக்கு இயேசு கொடுத்த வாக்குறுதி, அவருடைய பூலோக ஊழியத்தின்போது இருந்ததைப் போலவே, நம்முடைய நாளிலும் நமக்கு உண்மையாக இருக்கிறது: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுக்கிறார்” என நமது இரட்சகர் உறுதியளிக்கிறார்.
கர்த்தரின் கற்பித்தல் முறை, “வரிவரியாயும், கட்டளை கட்டளையாயும்,” ஆகும் நமது தற்போதைய புரிதலுக்கும் அடுத்ததாக வழங்கப்பட உள்ளதற்கும் இடையே உள்ள இடைவெளியில் நாம் “கர்த்தருக்குக் காத்திருக்க” வேண்டியிருக்கலாம். இந்தப் பரிசுத்தமான இடமானது நமது மிகப்பெரிய ஆவிக்குரிய சீரமைப்பு நிகழக்கூடிய—நாம் “பொறுமையோடே சகித்திருக்கும்”இடமாக உடன்படிக்கையின் மூலம் தேவனுக்கு நாம் செய்த பரிசுத்தமான வாக்குறுதிகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க நமது தீவிரமான தேடுதல் மற்றும் நமது பலத்தைப் புதுப்பிக்கும் இடமாக இருக்கலாம்.
பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான நமது உடன்படிக்கை உறவு, தேவனுடைய ராஜ்யத்தில் நாம் இருக்கும் குடியுரிமையின் அடையாளமாக இருக்கிறது. மேலும் அதில் நாம் தங்கியிருப்பது தெய்வீகக் கொள்கைகளுக்கு நம் வாழ்க்கையை பொருத்துவதும், ஆவிக்குரிய ரீதியில் வளர முயற்சி செய்வதும் தேவைப்படுகிறது.
கீழ்ப்படிதல்
மார்மன் புஸ்தகம் முழுவதும் கற்பிக்கப்படும் ஒரு முக்கிய கொள்கை என்னவென்றால், தேவ பிள்ளைகள் கீழ்ப்படிதலைக் காட்டவும், தங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் தொடர்ந்து ஆவிக்குரிய வழிகாட்டுதலையும் வழிநடத்துதலையும் பெறுகிறார்கள். கீழ்ப்படிதல் மற்றும் விடாமுயற்சியின் மூலம் நாம் அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பெறலாம் என்று கர்த்தர் நமக்குச் சொல்லியிருக்கிறார். தேவனின் நியாயப்பிரமாணங்களும் கட்டளைகளும் நம் வாழ்க்கையில் ஒரு தடையாக வடிவமைக்கப்படவில்லை, ஆனால் தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் ஆவிக்குரிய கல்விக்கு ஒரு வல்லமைவாய்ந்த நுழைவாயில். தலைவர் நெல்சன், “தேவனிடமிருந்து வெளிப்படுவது எப்போதும் அவருடைய நித்திய நியாயப்பிரமாணத்துத்துடன் ஒத்துப்போகிறது” மேலும் “அது அவரது கோட்பாட்டிற்கு ஒருபோதும் முரண்படாது” என்ற முக்கியமான சத்தியத்தைக் கற்பித்தார். தேவனின் கட்டளைகளுக்கு நீங்கள் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிவது, அவருடைய காரணங்களைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாவிட்டாலும், அவருடைய தீர்க்கதரிசிகளின் தோழமையில் உங்களை வைக்கிறது. மோசே 5 ஆதாமுக்கும் கர்த்தரின் தூதனுக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட உரையாடல் பற்றி நமக்குக் கற்பிக்கிறது.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கர்த்தர் “தங்களுடைய தேவனாகிய கர்த்தரை தொழுது கொள்ள வேண்டுமென்றும், தங்களுடைய மந்தைகளின் முதற்பலன்களை கர்த்தருக்கு காணிக்கையாக பலி செலுத்தவேண்டுமெனவும் கட்டளைகளைக் கொடுத்தபோது,” வேதம் சொல்கிறது, “ஆதாம் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான்.” நாம் தொடர்ந்து வாசிக்கிறோம், “பல நாட்களுக்குப் பிறகு, கர்த்தருடைய தூதன் ஆதாமுக்குத் தோன்றி சொன்னான்: “நீ ஏன் கர்த்தருக்குப் பலி செலுத்துகிறாய்? ஆதாம் அவனுக்குச் சொன்னான்: கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டதைத்தவிர வேறெதையும் நான் அறியேன்.”
ஆதாமின் கீழ்ப்படிதல் அவனது புரிதலுக்கு முந்தியது மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் பரிசுத்த அடையாளத்தில் அவன் பங்கேற்கிறான் என்ற பரிசுத்தமான அறிவைப் பெற அவனை தயார்படுத்தியது. நம்முடைய தாழ்மையான கீழ்ப்படிதல், அதுபோலவே, நம் ஒவ்வொருவருக்கும் தேவனுடைய வழிகளையும் அவருடைய தெய்வீக நோக்கத்தையும் பற்றிய நமது ஆவிக்குரிய பகுத்தறிதலுக்கு வழி வகுக்கும். நம்முடைய கீழ்ப்படிதலை உயர்த்துவது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் நம்மை நெருங்க வைக்கிறது, ஏனென்றால் அவருடைய நியாயப்பிமாணங்கள் மற்றும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது அவரைக் கிட்டிச் சேர்வதற்கேயாகும்.
கூடுதலாக, சுவிசேஷக் கொள்கைகள் மற்றும் பரிசுத்த உடன்படிக்கைகளை உண்மையாக கடைப்பிடிப்பதன் மூலம் நாம் ஏற்கனவே பெற்றுள்ள அறிவு மற்றும் ஞானத்திற்கான நமது விசுவாசம், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து தகவல் தொடர்புகளைப் பெறுவதற்கும் அதன் பொறுப்பாளர்களாக இருப்பதற்கும் நாம் தயாராக இருப்பதற்கு முக்கியமான ஆயத்தமாகும்.
பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் எல்லா சத்தியங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார்கள். மற்றும் அவர்களின் ஞானத்தை தாராளமாக பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், தேவனைச் சார்ந்தேயல்லாமல் எந்த தனிப்பட்ட அறிவும் நம்மிடம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது யாரிடம் திரும்புவது மற்றும் நமது முதன்மை நம்பிக்கையை எங்கு வைக்க வேண்டும் என்பதை அறிய உதவுகிறது.
ஆழ்ந்த நம்பிக்கை
எலிசா தீர்க்கதரிசியால் தொழுநோயிலிருந்து குணமடைந்த இராணுவத் தலைவனான நாகமானைப் பற்றிய பழைய ஏற்பாட்டு விவரம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு “சிறு பணிப்பெண்ணின்” உறுதியான நம்பிக்கை ஒரு மனிதனின் வாழ்க்கையின் போக்கை எவ்வாறு மாற்றியது மற்றும் அனைத்து விசுவாசிகளுக்கும், அவர் மீதும் அவருடைய தீர்க்கதரிசி மீதும் நம்பிக்கை வைப்பவர்களுக்கு தேவனின் இரக்கத்தின் வரம்பை வெளிப்படுத்தியது என்பதை கதை விளக்குகிறது. பெயரில்லாமல் இருந்தாலும், இந்த இளம் சிறுமியும் நம் புரிதலை முன்னோக்கி தள்ள உதவினாள். அவளுடைய சாட்சியில் நாகமானின் நம்பிக்கை, தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைக்காரனிடம் குணமடைவதற்காக அவனுடைய விண்ணப்பத்தை எடுத்துச் செல்ல அவனுக்கு உணர்த்தியது.
யோர்தான் நதியில் கழுவ வேண்டும் என்ற தீர்க்கதரிசி எலிசாவின் அறிவுரைகளுக்கு நாகமானின் பதில் முதலில் சந்தேகமாகவும் கோபமாகவும் இருந்தது. ஆனால் தீர்க்கதரிசியின் அறிவுரைக்குக் கீழ்ப்படிவதற்கான அழைப்பு, அவன் குணமடையவும் தேவன் உண்மையானவர் என்பதை அவன் வியத்தகு முறையில் புரிந்துகொள்ளவும் வழிவகுத்தது.
நம்முடைய சில ஆவிக்குரிய விண்ணப்பங்கள் நியாயமான முறையில் புரிந்துகொள்ளக்கூடிய பதில்களைக் கொண்டிருப்பதை நாம் காணலாம் மற்றும் நமக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை உருவாக்காமல் இருக்கலாம். அல்லது, நாகமானைப் போல, மற்ற தேவைகள் மிகவும் சவாலானவையாக இருப்பதையும், நமக்குள் கடினமான மற்றும் சிக்கலான உணர்வுகளை உருவாக்குவதையும் நாம் காணலாம். அல்லது, நமது சூரிய மண்டலத்தைப் பற்றிய வானியலாளர்களின் ஆரம்பகால முடிவுகளின் விளக்கத்தைப் போலவே, ஆவிக்குரிய சத்தியத்தைத் தேடுவதில், நாம் நமது சொந்த வரையறுக்கப்பட்ட புரிதலை மட்டுமே நம்பியிருந்தால், குறைவான துல்லியமான விளக்கங்களை அடையலாம், இதன் துக்ககரமான மற்றும் திட்டமிடப்படாத விளைவு, உடன்படிக்கைப் பாதையிலிருந்து நம்மை விலக்கி வைக்கலாம். மேலும், “சகல வல்லமையும்,” “சகல ஞானத்தையும், சகல அறிவையும்” கொண்ட தேவன், “சகலத்தையும் அறிகிறார்,” அவருடைய இரக்கத்தில் அவருடைய நாமத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையின் மூலம் தெளிவை வழங்கும் வரை சில கேள்விகள் தொடரலாம்.
தேவனுடைய நியாயப்பிமாணங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதை எதிர்ப்பது நம் வளர்ச்சியை தள்ளிப்போடலாம் அல்லது தாமதப்படுத்தலாம் என்பது நாகமானின் விவரத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க எச்சரிக்கை. இயேசு கிறிஸ்து நமக்கு தலைசிறந்த குணப்படுத்துபவராக இருப்பதற்காக நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். தேவனின் பிரமாணங்கள் மற்றும் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவது, நமக்கான அவரது பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைத் திட்டத்தின்படி, நமக்குத் தேவை என்று அவர் அறிந்திருக்கும் புரிதலையும் குணப்படுத்துதலையும் நம் இரட்சகர் நமக்கு வழங்க வழி திறக்கும்.
மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட், “இந்த வாழ்க்கை ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு அனுபவம்—இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை, அவருடைய போதனைகளில் நம்பிக்கை, இப்போது மகிழ்ச்சிக்காகவும், நோக்கமுள்ள, மிக மகிழ்ச்சியான நித்திய வாழ்வுக்காகவும் அந்தப் போதனைகளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் நமது திறனில் நம்பிக்கை. நம்பிக்கை என்பது ஆரம்பத்திலிருந்தே முடிவை அறியாமல் விருப்பத்துடன் கீழ்ப்படிவதாகும் (நீதிமொழிகள். 3:5–7 பார்க்கவும்). பலனைத் தருவதற்கு, உங்கள் சொந்த உணர்வுகள் மற்றும் அனுபவத்தின் மீதான உங்கள் நம்பிக்கையை விட, கர்த்தர் மீதான உங்கள் நம்பிக்கை அதிக வல்லமை வாய்ந்ததாகவும் நீடித்ததாகவும் இருக்க வேண்டும்.”
மூப்பர் ஸ்காட் தொடர்கிறார், “விசுவாசத்தைப் பிரயோகிப்பது என்பது, கர்த்தர் உங்களுடன் என்ன செய்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்றும், அவர் அதை எப்படிச் செய்ய முடியும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், உங்கள் நித்திய நன்மைக்காக அவர் அதை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புவதாகும்.”
நிறைவு சாட்சியம்
அன்பான நண்பர்களே, நம்முடைய உண்மையான சுவிசேஷ கேள்விகள் பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நாம் வளர உதவும் வாய்ப்புகளை வழங்க முடியும் என்று நான் சாட்சியமளிக்கிறேன். எனது சொந்த ஆவிக்குரிய கேள்விகளுக்கு—கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம்—தேவனிடம் இருந்து பதில்களைத் தேடுவதற்கான எனது தனிப்பட்ட முயற்சி, எனது புரிதலுக்கும் தேவனுடைய புரிதலுக்கும் இடையே உள்ள இடைவெளியை அவருக்குக் கீழ்ப்படிதலையும், தற்போது நான் கொண்டிருக்கும் ஆவிக்குரிய அறிவுக்கு விசுவாசத்தையும் பயிற்சி செய்வதற்கும் என்னை அனுமதித்தது.
பரலோக பிதா மீதும், அவர் அனுப்பிய அவருடைய தீர்க்கதரிசிகள் மீதும் நீங்கள் நம்பிக்கை வைப்பது, ஆவிக்குரிய ரீதியில் உங்களை உயர்த்தவும், தேவனின் விரிவாக்கப்பட்ட அடிவானத்தை நோக்கி உங்களைத் தள்ளவும் உதவும் என்று நான் சாட்சியமளிக்கிறேன். நீங்கள் மாறுவீர்கள் என்பதால் உங்கள் விருப்பம் மாறும். நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்களால் பார்க்க முடியும் என்பதை தேவன் அறிவார். அந்த ஏற்றத்துக்கு நமது இரட்சகர் உங்களை அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.