2020–2024
கிறிஸ்துவைப் பின்பற்றுதல்
அக்டோபர் 2024 பொது மாநாடு


13:31

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, நமது பரிபூரண முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் போதித்து சாட்சியமளிப்போமாக. பிணக்கைக் கைவிடுவதன் மூலம் அவரைப் பின்பற்றுவோம்.

இந்த ஆண்டு “என்னைப் பின்பற்றி வாருங்கள்“ என்ற இரட்சகரின் அழைப்பால் அறியப்பட்ட சுவிசேஷ படிப்பு திட்டத்தால் இலட்சக்கணக்கானவர்கள் உணர்த்தப்பட்டுள்ளனர். கிறிஸ்துவைப் பின்பற்றுவது ஒரு சாதாரணமான அல்லது எப்போதாவதான பழக்கம் அல்ல. இது எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நம்மை வழிநடத்த வேண்டிய ஒரு தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கை முறையாகும். இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு சீஷனுக்கும் அவரது போதனைகளும் அவரது முன்னுதாரணமும் பாதையை வரையறுக்கின்றன. அனைவரும் இந்த பாதைக்கு அழைக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர் அனைவரையும் தம்மிடம் வருமாறு அழைக்கிறார்,“வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்திரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் அவர் மறுப்பதில்லை, … அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே.”

I.

கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான முதல் படி, “நியாயப்பிரமாணத்தில் உள்ள பிரதானமான கற்பனை“ என்று அவர் வரையறுத்ததற்குக் கீழ்ப்படிவதாகும்:

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

“இது முதலாம் பிரதான கற்பனை.

“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே.”

“இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.”

தகப்பனும் மகனும் பட்டத்தைப் பறக்க விடுதல்.

தேவனுடைய கட்டளைகள் நம் வாழ்வில் வழிகாட்டுதலையும் நிலையான சக்தியையும் அளிக்கின்றன அநித்தியத்தில் நமது அனுபவங்கள் காற்று வீசும் நாளில் சிறுவனும் அவனது தந்தையும் பட்டம் பறக்கவிடுவதைப் போன்றது. பட்டம் உயரே எழும்பியபோது காற்று வீசியதால் சிறுவனின் கையில் இருந்த இணைப்பு நூலை அது இழுத்தது. பலமான காற்றின் வேகத்தில் அனுபவமில்லாத அவன், பட்டம் உயரே எழும்புவதற்காக நூலை வெட்ட யோசனை சொன்னான். அவனது புத்திசாலித்தனமான தந்தை வேண்டாம் என்று அறிவுரை கூறினார், நூல் தான் பலமான காற்றுக்கு எதிராக பட்டத்தை பிடித்துக் கொண்டுள்ளது என்று விளக்கினார். நூலின் மீதான பிடியை நாம் இழந்தால், பட்டம் உயராது. அது பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு தவிர்க்க முடியாமல் பூமியில் மோதும்.

அந்த அத்தியாவசிய நூல், தேவனாகிய நமது பரலோக பிதாவுடனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் நம்மை இணைக்கும் நமது உடன்படிக்கைகளை பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர்களின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அவர்களின் மீட்பின் திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலமும் நாம் அந்த உடன்படிக்கைகளை மதிக்கும்போது, ​​அவர்களின் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் சிலஸ்டியல் உயரங்களுக்கு எழும்ப நமக்கு உதவுகின்றன.

கிறிஸ்துவே “உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார்“ என்று மார்மன் புஸ்தகம் அடிக்கடி அறிவிக்கிறது. உயிர்த்தெழுந்த கர்த்தர் நேபியர்களுக்குத் தோன்றியபோது, “நான் உங்களுக்காக உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்“ என்று கூறி அந்த போதனையை விளக்கினார். இதோ, நீங்கள் நான் செய்ததைக் கண்டிருப்பதாலே, நானே நீங்கள் உயரப்பிடிக்க வேண்டிய வெளிச்சமாயிருக்கிறேன்.  அவர்தான் நமக்கு முன்மாதிரி. தலைவர் ரசல் எம்.நெல்சன் நம்மை செய்யுமாறு அறிவுறுத்தியபடி, வேதங்களைப் படிப்பதன் மூலமும் தீர்க்கதரிசன போதனைகளைப் பின்பற்றுவதன் மூலமும் அவர் என்ன சொன்னார் மற்றும் செய்தார் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். திருவிருந்தின் நியமத்தில், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் நாம் “அவரை எப்போதும் நினைவுகூரவும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும்“ உடன்படிக்கை செய்கிறோம்.

II.

மார்மன் புஸ்தகத்தில்—நமது நாளுக்கான வேதத்தில்—“கிறிஸ்துவின் கோட்பாடு“ என்று அவர் அழைத்ததன் அடிப்படைகளை கர்த்தர் நமக்குக் கொடுத்தார். இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுதல் இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல் மற்றும் ஒரு சிறு பிள்ளையைப் போலாகுதல், இவற்றின் அர்த்தம் கர்த்தரை நம்பி, அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் அனைத்திற்கும் கீழ்ப்படிவதாகும்.

கர்த்தருடைய கட்டளைகள் இரண்டு வகையானவை, கிறிஸ்துவின் கோட்பாடுகளைப் போல நிரந்தரமானவை, மற்றது தற்காலிகமானவை. தற்காலிக கட்டளைகள் தற்காலிக சூழ்நிலைகளில் கர்த்தரின் சபை அல்லது விசுவாசிகளின் தேவைகளுக்கு அவசியமானவை, ஆனால் தேவை கடந்துவிட்டபோது ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். பரிசுத்தவான்களை நியூயார்க்கிலிருந்து ஒஹாயோவுக்கும், மிசௌரி, இல்லினாய்க்கும் நகர்த்துவதற்கும், இறுதியாக இன்டர்மவுண்டன் வெஸ்டுக்கு முன்னோடிகளின் யாத்திரையை வழிநடத்துவதற்கும் சபையின் ஆரம்பகால தலைமைக்கு கர்த்தரின் வழிகாட்டுதல்கள், தற்காலிக கட்டளைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. தற்காலிகமானதாக இருந்தாலும், இன்னும் நடைமுறையில் இருக்கும் போது இந்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

சில நிரந்தர கட்டளைகள் பொதுவாக கடைப்பிடிக்கப்படுவதற்குக் கணிசமான நேரத்தை எடுத்துள்ளன உதாரணமாக, தலைவர் லோரென்சோ ஸ்னோவின் புகழ்பெற்ற தசமபாக நியாயப்பிரமாணம் பற்றிய பிரசங்கம் முன்பு கொடுக்கப்பட்ட ஆனால் சபை உறுப்பினர்களால் இன்னும் பொதுவாக கடைப்பிடிக்கப்படாத ஒரு கட்டளையை வலியுறுத்தியது. சபையும் அதன் உறுப்பினர்களும் அப்போது எதிர்கொண்ட சூழ்நிலைகளில் இது மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டியிருந்தது. பிற்காலப் பரிசுத்தவான்கள் அல்லது சபை எதிர்கொள்ளும் தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாக மறுபரிசீலனைகளின் சமீபத்திய எடுத்துக்காட்டுகள் தேவைப்படுகின்றன. ஒரு தலைமுறைக்கு முன்பு தலைவர் கார்டன் பி. ஹிங்க்லியால் வெளியிடப்பட்ட குடும்பத்தின் பிரகடனம் மற்றும் சபை அதன் வெளிப்படுத்தப்பட்ட பெயரால், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அறியப்பட வேண்டுமென்ற தலைவர் ரசல் எம். நெல்சனின் சமீபத்திய அழைப்பு போன்றவை உள்ளடக்கியது.

III.

நமது இரட்சகரின் மற்றொரு போதனை, நமது நாளின் சூழ்நிலைகளில் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டியதாகத் தெரிகிறது.

நமது பொதுத் தொடர்புகளிலும், சில சமயங்களில் நமது குடும்பங்களிலும் கூட பல கடுமையான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளின் நேரமாய் இது இருக்கிறது. பொதுக் கொள்கை பிரச்சினைகளில் கூர்மையான வேறுபாடுகள் பெரும்பாலும் பொது மற்றும் தனிப்பட்ட உறவுகளில் விரோதப் போக்கை - வெறுப்பு கூட - விளைவிக்கின்றன. பெரும்பாலான குடிமக்கள் பொது நலனுக்காக சில நடவடிக்கைகளின் அவசரத் தேவையைக் காண்கிற வேளையில் இந்த பகைமை சூழல் சில நேரங்களில் முக்கியமான விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கான திறன்களை முடக்குகிறது,

நச்சு தகவல்தொடர்புகளின் இந்த நேரத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்ன போதிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும்? அவரது போதனைகள் மற்றும் முன்னுதாரணங்கள் என்ன?

நேபியர்களுக்குப் போதிக்கும் இரட்சகர்.

இயேசு நேபியர்களுக்குத் தோன்றியபோது போதித்த முதல் கொள்கைகளில் ஒன்று பிணக்குகளைத் தவிர்ப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மதக் கோட்பாடுகளின் மீதான சர்ச்சைகளின் பின்னணியில் அவர் இதை போதித்தாலும், அவர் கொடுத்த காரணங்கள் அரசியல், பொதுக் கொள்கை மற்றும் குடும்ப உறவுகளில் தகவல்தொடர்புகள் மற்றும் உறவுகளுக்குத் தெளிவாக பொருந்தும். இயேசு போதித்தார்:

பிணக்கின் ஆவியையுடையவன் என்னுடையவனல்ல. பிணக்குகளின் தகப்பனாயாகிய பிசாசினுடையவன். அவன் மனுஷர் ஒருவரோடு ஒருவர் கோபத்தோடு சண்டையிடவேண்டுமென்று அவர்களுடைய இருதயங்களைத் தூண்டிவிடுகிறான்.”

“இதோ, மனுஷ இருதயங்களைக் கோபத்தோடு ஒருவருக்கு விரோதமாய் மற்றொருவரைத் தூண்டிவிடுவது என்னுடைய உபதேசம் அல்ல; ஆனால், அப்படிப்பட்டவைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே என்னுடைய உபதேசமாயிருக்கிறது.”

நேபியர்கள் மத்தியில் அவரது எஞ்சியிருந்த ஊழியத்தில், இயேசு பிணக்குகளைத் தடை செய்வதோடு நெருக்கமான தொடர்புடைய பிற கட்டளைகளைப் போதித்தார். அவர் முன்பு இவை ஒவ்வொன்றையும் அவரது மலைப்பிரசங்கத்தில் போதித்திருந்தார், பொதுவாக துல்லியமாக அவர் பின்னர் நேபியர்களுடன் அதே மொழியைப் பயன்படுத்தினார். பரிச்சயமான வேதாகம மொழியை நான் மேற்கோள் காட்டுவேன்

எருசலேமில் இரட்சகர் போதிக்கிறார்.

“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” என்று இயேசு போதித்தார்.

இது கிறிஸ்துவின் மிகவும் அறியப்பட்ட கட்டளைகளில் ஒன்றாகும்—மிகவும் புரட்சிகரமானது மற்றும் பின்பற்ற மிகவும் கடினமானது. ஆயினும் அனைவரும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்பது அவரது அழைப்பின் மிக அடிப்படையான பகுதியாகும். தலைவர் டேவிட் ஓ. மெக்கே போதித்தபடி, “ஒருவரின் சக மனிதர்களிடம் சுயநலமற்ற அன்பைக் காட்டுவதை விட தேவனிடம் அன்பை வெளிப்படுத்த சிறந்த வழி எதுவும் இல்லை.“

மத்தியஸ்தத்தில் எதிரெதிர் கட்சிகள்.

நம்முடைய முன்மாதிரியாக இருப்பவரின் மற்றொரு அடிப்படை போதனை இங்கே: “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.“

“சமாதானம் பண்ணுகிறவர்கள்! கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நமது எல்லா தகவல்தொடர்புகளிலும் கடுமையான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளை கைவிட்டால் அது தனிப்பட்ட உறவுகளை எவ்வாறு மாற்றும்.

கடந்த ஆண்டு பொது மாநாட்டில், தலைவர் ரசல் எம்.நெல்சன் இந்த சவால்களை நமக்குக் கொடுத்தார்:

இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவரை அடையாளம் காண்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று, அந்த நபர் மற்றவர்களிடம் எவ்வளவு இரக்கத்துடன் நடந்துகொள்கிறார் என்பதுதான்.

“… சமாதானம் பண்ணுகிறவர்களே இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள்.

“… இரட்சகரை நாம் மதிக்கும் சிறந்த வழிகளில் ஒன்று சமாதானம் பண்ணுகிறவர்களாக மாறுவது.”

அவரது போதனைகளை முடிக்கிறார்: “பிணக்கு ஒரு தேர்ந்தெடுப்பு. சமாதானம் பண்ணுதல் என்பது ஒரு தேர்ந்தெடுப்பு. பிணக்கு அல்லது ஒப்புரவாதலை தேர்ந்தெடுக்க உங்கள் சுயாதீனம் உங்களிடம் உள்ளது. இப்போதும் எப்பொழுதும் சமாதானம் பண்ணுகிறதைத் தேர்ந்தெடுக்கும்படி நான் உங்களை வலியுறுத்துகிறேன்.

சாத்தியமான எதிரிகள் அனைவரும் உடன்படும் பொதுவான அடிப்படையை அடையாளம் காண்பதன் மூலம் தங்கள் விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

இவ்வாறு, நம்முடைய பரிபூரண முன்மாதிரியையும் அவருடைய தீர்க்கதரிசியையும் பின்பற்ற, பொன் விதி என்று பிரபலமாக அறியப்படுவதை நாம் கடைப்பிடிக்க வேண்டும்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” நாம் அனைவரையும் நேசித்து நன்மை செய்ய வேண்டும். நாம் பிணக்குகளைத் தவிர்த்து, நமது எல்லா தகவல்தொடர்புகளிலும் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். இது நமது கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளை சமரசம் செய்வதை அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் மற்றவர்களை அவர்களுடையதற்காக கடுமையாகத் தாக்குவதை நிறுத்த வேண்டும். இதைத்தான் நம்முடைய பரிபூரண முன்மாதிரி அவருடைய ஊழியத்தில் செய்தார். அவரைப் பின்பற்ற அவர் நம்மை அழைத்ததால், அதுவே அவர் நமக்கு வைத்த முன்னுதாரணம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநாட்டில், தலைவர் நெல்சன் நமது நாளுக்கான ஒரு தீர்க்கதரிசன சவாலை நமக்குக் கொடுத்தார்:

நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவன் மேற்கொள்ள அனுமதிக்க விரும்புகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு, தேவனாக இருக்க அனுமதிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் செயல்களில் செல்வாக்கு செலுத்த அவருடைய வார்த்தைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய உடன்படிக்கைகளையும் நீங்கள் அனுமதிப்பீர்களா? வேறு எதையும் விட அவருடைய குரல் முன்னுரிமை எடுக்க நீங்கள் அனுமதிப்பீர்களா?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, நமது பரிபூரண முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் போதித்து சாட்சியமளிப்போமாக. பிணக்கைக் கைவிடுவதன் மூலம் அவரைப் பின்பற்றுவோம். பொது நடவடிக்கைகளில் நமது விருப்பமான கொள்கைகளை நாம் பின்பற்றும்போது, சமாதானம் பண்ணுகிறவர்களின் மொழி மற்றும் முறைகளைப் பயன்படுத்தி அவரது ஆசீர்வாதங்களுக்குத் தகுதி பெறுவோம். நம் குடும்பங்களிலும் பிற தனிப்பட்ட உறவுகளிலும் கடுமையானவற்றையும் வெறுக்கத்தக்கவற்றையும் தவிர்ப்போம் நமது இரட்சகரைப் போல பரிசுத்தமாக இருக்க நாடுவோம், அவருடைய பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியமளிக்கிறேன், பரிசுத்தவான்களாக இருக்க நமக்கு உதவ அவரது ஆசீர்வாதத்தை நாடுவோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.