2020–2024
நம் பிதாவில் நம்பிக்கையாயிருத்தல்
அக்டோபர் 2024 பொது மாநாடு


10:20

நம் பிதாவில் நம்பிக்கையாயிருத்தல்

பல முக்கிய முடிவுகளை எடுக்க தேவன் நம்மை நம்புகிறார், எல்லா விஷயங்களிலும், அவரை நம்பும்படி அவர் நம்மிடம் கேட்கிறார்.

1843, ஜூன் 1-ல், அடிசன் பிராட் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க இலினாயிலுள்ள நாவூவிலிருந்து ஹவாய் தீவுகளுக்கு செல்ல நேர்ந்ததால் தன்னுடைய மனைவியான லூயிசா பார்ன்ஸ் பிராட்டை அவர்களின் இளங்குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அங்கேயே விட்டு சென்றார்.

நாவூவில் துன்புறுத்தல்கள் தீவிரமடைந்து, பரிசுத்தவான்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது, பின்னர் குளிர்கால குடியிருப்புகளில் சால்ட் லேக் பள்ளத்தாக்கிற்கு குடிபெயரத் தயாராகும்போது, லூயிசா பயணத்தை மேற்கொள்ளலாமா என்ற முடிவை எதிர்கொள்ள நேர்ந்தது. தனியாக பயணம் செய்வதை காட்டிலும் அடிசன் திரும்பி வரும் வரை தங்கி காத்திருந்திருப்பதே எளிதாக இருந்திருக்கும்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், தீர்க்கதரிசி ப்ரிகாம் யங்கிடமிருந்து அவள் வழிகாட்டுதலை நாடினாள், அவர் அவளை புறப்பட்டுச் செல்லுமாறு ஊக்குவித்தார். மிகுந்த சிரமம் மற்றும் அவளது தனிப்பட்ட தயக்கம் இருந்தபோதிலும், அவள் ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக பயணத்தை மேற்கொண்டாள்.

ஆரம்பத்தில் பயணம் செய்யும்பொழுது, லூயிசா கொஞ்சம் சந்தோஷத்தையே உணர்ந்தாள். இருப்பினும், அவள் விரைவில் பச்சை பசும் புல்வெளிகள், வண்ணமயமான காட்டுப்பூக்கள் மற்றும் ஆற்றங்கரையோர தரை திட்டுகளை வரவேற்கத் தொடங்கினாள். “என் மனதில் இருந்த இருள் படிப்படியாக மறைந்தது,“ என்று அவள் குறிப்பிட்டாள், “முழு குழுவிலும் அவளை விட சந்தோஷமான பெண் யாரும் இல்லை.“

லூயிசாவின் கதை என்னை ஆழமாகக் கவர்ந்தது. தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைக்க அவள் தயாராக இருந்தது, அவளின் தேவனை நம்பும் திறன், அவளுடைய கிரியை நிறைந்த விசுவாசத்தின் மூலம் சூழ்நிலையை எவ்வாறு வித்தியாசமாகப் பார்த்தாள் என்பதையும் நான் பாராட்டுகிறேன்.

பரலோகத்தில் நமக்கு ஒரு அன்பான பிதா இருக்கிறார் நாம் எங்கிருந்தாலும் அவர் நம்மை கவனித்துக்கொள்கிறார், நாம் வேறு யாரையும் அல்லது எதையும் விட அவரை நம்பலாம் என்று அவள் எனக்கு நினைவூட்டுகிறாள்,

உண்மையின் ஆதாரம்

பல முக்கிய முடிவுகளை எடுக்க தேவன் நம்மை நம்புகிறார், எல்லா விஷயங்களிலும், அவரை நம்பும்படி அவர் நம்மிடம் கேட்கிறார். நமது நியாயம், அல்லது பொது அபிப்பிராயம், அவரின் பிள்ளைகளுக்கான அவருடைய சித்தத்திலிருந்து வேறுபடும்போது குறிப்பாக இது கடினமாகிறது.

எது சரி மற்றும் எது தவறு ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகளை நாம் மீண்டும் வரைய வேண்டும் என்றும், சத்தியம் என்பது ஒப்பிடப்படத்தக்கது, யதார்த்தம் சுயமாக வரையறுக்கப்பட்டது என்றும், மட்டுமல்லாமல் தேவன் மிகவும் தாராளமானவர், நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் உண்மையில் கவனிப்பதில்லை என்றும் சிலர் பரிந்துரைக்கின்றனர்.

தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் நாம் கற்றுக்கொள்ளும்போது சரியானதிற்கும் தவறானதிற்கும் இடையிலான எல்லைகளை நாம் வரையறுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள உதவியாக இருக்கும். நம்முடைய நன்மைக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் நித்திய சத்தியங்களின் அடிப்படையில் தேவன் இந்த எல்லைகளை தாமே ஸ்தாபித்திருக்கிறார்.

தேவனுடைய நித்திய சத்தியத்தை மாற்றுவதற்கான விருப்பத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. உலகத்தோற்றத்திற்கு முன்பே, சாத்தான் தேவனுடைய திட்டத்திற்கு எதிராக கலகம் செய்து, சுயநலமாக மனித சுயாதீனத்தை அழிக்க முயன்றபோது இது தொடங்கியது. இந்த மாதிரியைப் பின்பற்றி, சேரெம், நிகோர், மற்றும் கோரிகோர் போன்றவர்கள், விசுவாசம் முட்டாள்தனமானது, வெளிப்படுத்தல் பொருத்தமற்றது, நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதுவே சரியானது என்று வாதிட்டனர். வருந்தத்தக்கதென்னவெனில், தேவனுடைய சத்தியத்திலிருந்து இந்த விலகல்கள் பெரும்பாலான நேரங்களில் மிகுந்த சஞ்சலத்திற்கு வழிநடத்தியுள்ளது.

சில காரியங்கள் சந்தர்ப்ப சூழலைப் பொறுத்ததாயினும், எல்லாம் அப்படியிருப்பதில்லை. தேவனின் இரட்சிக்கும் சத்தியங்கள் முழுமையானவை, சுயாதீனமானவை, தேவனாலேயே வரையறுக்கப்பட்டவை என்று தலைவர் ரசல் எம்.நெல்சன் தொடர்ந்து போதித்து வருகிறார்.

நம்முடைய தேர்ந்தெடுப்பு

நாம் யாரை நம்ப வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களில் ஒன்று. பென்யமீன் ராஜா தன் ஜனங்களுக்குக் கற்பித்ததாவது, “தேவனிலே விசுவாசியுங்கள்; அவர் இருக்கிறார் என்று விசுவாசியுங்கள்… ; அவருக்கு சகல ஞானமும் இருக்கிறது என்று விசுவாசியுங்கள் … ; கர்த்தரால் புரிந்துகொள்ளக்கூடிய காரியங்கள் யாவையும் மனுஷனால் புரிந்துகொள்ள இயலாது என்று விசுவாசியுங்கள்.“

அதிர்ஷ்டவசமாக ,தேவனின் சத்தியத்தை அறிந்து கொள்ள உதவுவதற்கு வேதங்களும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வழிநடத்துதலும் நமக்கு இருக்கிறது. நம்மிடமுள்ளதைக்காட்டிலும் தெளிவு தேவைப்பட்டால், தேவனானவர் அதைத் தம் தீர்க்கதரிசிகள் மூலம் தருகிறார். நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத சத்தியங்களைப் புரிந்துகொள்ள முயலும்போது, பரிசுத்த ஆவியின் மூலம் நம்முடைய உண்மையான ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார்.

மூப்பர் நீல் எல். ஆன்டர்சென் ஒருமுறை போதித்தார், ,சில சமயங்களில் [நம்] தனிப்பட்ட கருத்துக்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியின் போதனைகளுடன் ஆரம்பத்தில் ஒத்துப்போகவில்லை என்றால் ஆச்சரியப்பட வேண்டாம். நாம் முழங்காலில் ஜெபிக்கும் பொழுது, இவைகள் கற்றுக்கொள்ளுதல், தாழ்மை ஆகியவற்றின் தருணங்கள் என்று கூறினார். காலப்போக்கில் நமது பரலோக பிதாவிடமிருந்து அதிக ஆவிக்குரிய தெளிவைப் பெறுவோம் என்பதை அறிந்து, தேவனை நம்பி விசுவாசத்தில் முன்னேறுகிறோம்.

எக்காலத்திலும், நாம் அர்ப்பணிக்கும் கவனம் மற்றும் முயற்சிக்கு ஏற்ப தேவன் தம்முடைய வார்த்தையைக் கொடுக்கிறார் என்ற ஆல்மாவின் போதனையை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும். நாம் தேவனின் வார்த்தைக்கு செவிசாய்த்தால், நாம் அதிகம் பெறுவோம்; அவருடைய ஆலோசனையை நாம் புறக்கணித்தால், நாம் குறைவாக குறைவாகப் பெற்று பின் ஒன்றும் இல்லாமல் போவோம். இந்த அறிவின்மைக்கு சத்தியம் தவறானது என்று அர்த்தமல்ல; மாறாக, அதைப் புரிந்துகொள்ளும் திறனை நாம் இழந்துவிட்டோம் என்பதைக் காட்டுகிறது.

இரட்சகரை நோக்கிப்பார்

கப்பர்நகூமில் இரட்சகர் அவருடைய அடையாளம் மற்றும் ஊழியத்தைக் குறித்துக் கற்பித்தார். பலர் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்குக் கடினமாகக் கண்டு “அவருடனேகூட [நடவாமல்] பின்வாங்கிப்போனார்கள்.”

அவர்கள் ஏன் பின்வாங்கிப்போனார்கள்?

ஏனெனில் அவர் சொன்னதெதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்களுடைய சுய தீர்மானத்தில் நம்பிக்கை வைத்து, அவர்கள் பின்வாங்கிப்போனார்கள், அங்கிருந்திருந்தால் வந்திருக்கக்கூடிய ஆசீர்வாதங்களை அவர்களே உதறித்தள்ளிவிட்டு சென்றார்கள்.

நமக்கும் நித்திய சத்தியத்திற்கும் இடையே பெருமை வருவதென்பது எளிதானது. நமக்கு புரியாத போது, நாம் சற்றே நிறுத்தி, நமது உணர்வுகள் அமைதியானதும் எவ்வாறு பதிலளிப்பதென்று தேர்ந்தெடுக்கலாம். இரட்சகர் நம்மிடம், “ஒவ்வொரு எண்ணத்திலும் [என்னை ] நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே” என்று போதித்தார். நாம் இரட்சகரை நோக்கிப்பார்க்கும் போது, நம் விசுவாசம் நம் கவலைகளை வெல்ல தொடங்கும்.

தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் ஊக்கப்படுத்தியது போல,“தயவுசெய்து, உங்கள் விசுவாசத்தை சந்தேகிக்கும் முன்பு முதலில் உங்கள் சந்தேகங்களை சந்தேகியுங்கள். சந்தேகமானது நம்மை ஒருபோதும் சிறைப்படுத்தவிடக்கூடாதது மட்டுமல்லாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் பரிசுத்த அன்பு, சமாதானம் மற்றும் கொடைகளிலிருந்து நம்மை விலக்கி விடக்கூடாது.”

அவரில் தங்குபவர்களுக்கு ஆசீர்வாதங்கள் வரும்

அந்நாளிலே சீஷர்கள் இரட்சகரிடமிருந்து விலகிச்சென்றபோது, பின்னர் அவர் பன்னிருவரையும் நோக்கி: “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?“ என்றார்.

பேதுரு பிரதியுத்தரமாக:

“ஆண்டவரே யாரிடத்தில் போவோம் நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.“

அப்போஸ்தலர்களும் அதே உலகில் வாழ்ந்து, விலகிச் சென்ற சீஷர்களைப் போலவே சமூகப்பிரச்சனைகளை எதிர்கொண்டனர். ஆனாலும் இவ்வேளையில் அவர்கள் விசுவாசத்தைத் தேர்ந்தெடுத்து தேவனை நம்பினார்கள், இதனால் தங்கியிருப்பவர்களுக்கு தேவன் தரும் ஆசீர்வாதங்களை பொக்கிஷப்படுத்தினார்கள்.

ஒருவேளை நீங்களும், என்னைப் போலவே, சில சமயங்களில் இந்தத் தீர்மானத்தின் இருபுறமும் இருப்பதைக் காணலாம். நாம் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ளவும் அதை தழுவவும் கஷ்டப்படும்போது, நாம் எங்கிருந்தாலும் நம்மை நாமிருக்கிறபடியே அவர் நேசிக்கிறார் என்ற நினைவானது ஆறுதலளிக்கிறது. மேலும் அவர் நமக்கு சிறந்ததை வைத்திருக்கிறார். நாம் அவரண்டை சென்றால் அவர் நமக்கு உதவுவார்.

அவரண்டை வருவது கடினமாக இருக்கலாம், அதே வேளையில், தன் மகனுக்கு குணமடையத் தேடிய தகப்பனிடம், இரட்சகரால் சொல்லப்பட்டது போல, “விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்“ நம்முடைய போராட்ட வேளைகளிலும், “என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்“ என்று நாமும் கண்ணீரோடு கதறலாம்.“

அவரின் சித்தத்திற்கு அர்ப்பணித்தல்

மூப்பர் நீல் எ.மேக்ஸ்வெல் ஒருமுறை போதித்தார்: “தேவனின் பலிபீடத்தின் மீது ஒருவரின் விருப்பத்தை சமர்ப்பிப்பது என்பது உண்மையில் தனித்துவமான தனிப்பட்ட காரியம்.” பென்யமீன் ராஜா அவருடைய ஜனங்கள் “சிறுபிள்ளையைப் போலாகி, கீழ்ப்படிந்து, சாந்தமாயும், தாழ்மையாயும், பொறுமையாயும், அன்பால் நிறைந்து, ஒரு பிள்ளை தன் தகப்பனுக்கு கீழ்ப்படிவதுபோல, அவன் மீது சுமத்த தகுதியானது என கர்த்தர் காண்கிற அனைத்திலும் கீழ்ப்படிய சித்தமாயிருக்க, மிகவும் ஆர்வமாக இருந்ததில் ஆச்சரியமில்லை.“

எப்பொழுதும் போலவே, இரட்சகர் நமக்கு பரிபூரணமான முன்மாதிரியை வைத்துப்போனார். கனத்த இதயத்துடன், அவர் செய்ய வேண்டியதான வேதனை மிகுந்த வேலையை அறிந்து, அவர் தனது பிதாவின் சித்தத்திற்கு அடிபணிந்து, அவருடைய மேசியானிய ஊழியத்தை நிறைவேற்றி, உங்களுக்கும் எனக்கும் நித்தியத்தின் வாக்குத்தத்தத்தை திறந்து வைத்தார்.

நம்முடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்கு சமர்ப்பிக்க தேர்ந்தெடுப்பது, நமது சீஷத்துவ இதயத்திலிருந்து வரும் விசுவாசத்தின் கிரியையாகும். நாம் இவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது, நம் சுயாதீனம் குறைவதில்லை; மாறாக, நாம் வேறு எங்கும் காண முடியாத நோக்கம், சந்தோஷம், சமாதானம் மற்றும் நம்பிக்கையை கொண்டுவருகிற பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் மேன்மைப்படுத்தப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது என்று கண்டறிகிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு, நானும் பிணையத் தலைவர் ஒருவரும் அவர் பிணையத்திலுள்ள ஒரு சகோதரியையும் அவரது இளவயது மகனையும் காணச்சென்றோம். வருடங்களாக சபையிலிருந்து விலகியிருந்து, கடினமான மற்றும் கருணையற்ற பாதைகளில் அலைந்து திரிந்து அவள் திரும்ப வந்திருந்தாள். எங்களுடைய சந்திப்பில், அவள் ஏன் திரும்ப வந்தாள் என்று கேட்டோம்.

“நான் என் வாழ்க்கையை குழப்பிவிட்டேன், “மேலும் நான் எங்கு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்“ என்றாள் அவள்.

அவளின் பயணத்தில் கற்றுக்கொண்டதென்ன என்று அவளிடம் கேட்டேன்.

நீண்ட காலம் சபைக்கு வந்து வரத்தவறிய பழக்கத்தை உடைக்க வேண்டுமென்றும், வரவேண்டிய தேவையை கற்றுக்கொண்டதையும், அவள் எங்கு இருக்க வேண்டுமோ அது தான் அவள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் என்ற தேவையையும் உணர்ச்சிப்பூர்வத்துடன் பகிர்ந்து கொண்டாள். அவளின் வருகை எளிதல்ல, ஆனால் அவள் பிதாவின் திட்டத்தில் விசுவாசம் வைத்ததால், ஆவியானவர் திரும்பி வந்ததை உணர்ந்தாள்.

“தேவன் நல்லவர் என்பதையும், அவருடைய வழிகள் என்னுடையதைவிடச் சிறந்தவை என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்,” என்றும் கூறினாள்.

நம்மை நேசிக்கிற நமது நித்திய பிதாவாகிய தேவனுக்கும், நம்மை இரட்சித்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் நான் சாட்சி கொடுக்கிறேன். அவர்கள் நம் காயங்களையும் சவால்களையும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார்கள், நமக்கு எப்படி ஒத்தாசை நல்குவது என்று அவர்கள் அறிவார்கள். நாம் யாரையோ அல்லது எதையோ நம்புவதைக்காட்டிலும் அவர்களை நம்புவதால் நாம் சந்தோஷமாக இருக்க முடியும். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.