தேவனின் தீர்க்கதரிசிகள்
இரண்டாம் வருகை வரை ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் பற்றிப்பிடிப்பதற்கு தீர்க்கதரிசியின் குரலைக் கேட்டு கீழ்ப்படிவது மிக முக்கியம்.
அன்புள்ள இளைஞர்களே, எவ்வளவு அழகான மாநாட்டு அமர்வை நாம் பெற்றிருக்கிறோம்! நாம் ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவின் மூன்று ஜீவிக்கும் அப்போஸ்தலர்கள் பேசக் கேட்டோம். என்ன ஒரு அற்புதமான ஆசீர்வாதம்! நாம் இன்னும் ஒருவர் பேசக் கேட்போம், மூப்பர் ஹென்றி பி. ஐரிங். ஆவிக்குரிய விருந்து தொடர்கிறது!
கடந்த வருடம் நான் பேசியபோது, கோலியாத்துடனான தாவீதின் அனுபவத்தின் மூலம் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை நாம் கற்றுக்கொண்டோம். ஐந்து கற்கள் நினைவிருக்கிறதா? இன்று நான் உங்கள் வயதில் படித்த ஒரு பழைய ஏற்பாட்டு கதையைப் பகிர்ந்து கொள்கிறேன், அது என்னை அதன் நாயகனைப் போல இருக்கத் தூண்டியது. வேதாகமம் அவளுடைய பெயரை நமக்குச் சொல்லவில்லை, அதனால் அவளை சூனேம் ஊரைச் சேர்ந்த பெண் என்று அழைப்போம், ஏனென்றால் அது அவளுடைய ஊரின் பெயர்.
ஒரு நாள், தீர்க்கதரிசி எலிசா சூனேம் வழியாகச் சென்று கொண்டிருந்தான், “அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண [கேட்டுக்கொண்டாள்]“ என்று நாம் வாசிக்கிறோம். “அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.” அவளது வீட்டில் சாப்பிட அழைத்ததில் தீர்க்கதரிசி எலிசா மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பான் என்று நான் கற்பனை செய்கிறேன்! அவன் ஏற்கனவே பலமுறை சென்றிருந்தான், ஒரு நாள் அந்தப் பெண் தன் கணவரிடம் சொன்னாள், “தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.”
அந்தப் பெண், “இப்போது காண்கிறேன்“ என்று கூறுகிறாள். எலிசா, தீர்க்கதரிசி என்பதை அறியாமலேயே அவள் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்ததாகத் தெரிகிறது; எலிசா சொன்னதையும் கற்பித்ததையும் கவனமாகக் கேட்டதனால் பரிசுத்த ஆவியின் மூலம் அவள் சாட்சியத்தைப் பெற்றாள். (நினைவில் கொள்ளுங்கள், அந்த நேரத்தில் படங்கள் எதுவும் இல்லை! எனவே தீர்க்கதரிசியை அவனது முகத்தை மட்டும் வைத்து அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.)
ஆனால் கதை அங்கு முடிவடையவில்லை. ஒரு நாள், அந்தப் பெண் தன் கணவரிடம் “அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.”
அந்த விசுவாசமிக்க பெண், பட்டணத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கதரிசி தங்குவதற்கு ஒரு இடம் கிடைக்கும்படி, தன் வீட்டில் ஒரு அறையைக் கட்டத் தயாராக இருந்தாள்!
இன்று, இந்த அனுபவத்திலிருந்து நாம் ஒரு வல்லமை வாய்ந்த பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
எலிசா தேவனுடைய தீர்க்கதரிசி என்று சூனேமின் பெண்ணுக்குக் கர்த்தர் சாட்சியமளித்தார், அவள் அவனை வரவேற்க தன் வீட்டைத் திறந்து வைத்து செயலில் காட்டினாள்.
நாமும் இன்று தேவனின் தீர்க்கதரிசியின் தனிப்பட்ட சாட்சியத்தைப் பெறலாம், மேலும் இந்த பிற்காலங்களில் நமது பரலோக பிதா நமக்காக வைத்திருக்கும் செய்திக்கு நமது இருதயங்களையும் மனதையும்—நமது வீட்டையும்— திறக்கலாம்.
அன்புள்ள இளைஞர்களே, இந்தக் கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ள நான் உங்களை அழைக்கிறேன்: தேவனின் ஜீவிக்கும் தீர்க்கதரிசியைப் பற்றிய தனிப்பட்ட சாட்சியம் எனக்கு இருக்கிறதா?
ஆரம்பத்திலிருந்தே நாம் தொடங்கலாம்.
தீரக்கதரிசி என்றால் என்ன? ஒரு தீர்க்கதரிசி என்பவர் தேவன் தம் சார்பில் பேச அழைத்த ஒரு மனிதர். பண்டைய காலங்களைப் போலவே இன்றும் பூமியில் தீர்க்கதரிசிகள் உள்ளனர்.
தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்கள். அதாவது, மற்றவர்கள் பார்க்க முடியாததை அவர்களால் பார்க்க முடியும், மேலும் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி அவர்களால் தீர்க்கதரிசனம் சொல்ல முடியும். அவர்கள் நம்மை பேரிடர்களுக்கு தயார்படுத்தவும் முடியும். தீர்க்கதரிசிகள் கர்த்தரிடமிருந்து கட்டளைகளையும் வெளிப்படுத்தல்களையும் பெறுகிறார்கள். ஒன்பதாவது விசுவாசப்பிரமாணம் இந்தக் கடைசி நாட்களில் தொடரும் வெளிப்படுத்தலைப் பற்றிப் பேசுகிறது. அது சொல்கிறது, “தேவன் வெளிப்படுத்திய சகலத்தையும், இப்பொழுது அவர் வெளிப்படுத்துகிற சகலத்தையும் நாங்கள் விசுவாசிக்கிறோம், இன்னும் அவர் வெளிப்படுத்தப்போகிற தேவ ராஜ்யத்திற்கு சம்பந்தப்பட்ட அநேக மகத்தான முக்கியமான காரியங்களையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்.”
மூப்பர் கேரி இ. ஸ்டீவன்சன் கூறினார், “கர்த்தர் இன்றும் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்குத் தம்முடைய கட்டளைகளையும் சித்தத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் அடுத்த வாழ்க்கையில் பரலோக மகிமைக்கும் நம்மை வழிநடத்த விரும்புகிறார்.”
தீர்க்கதரிசிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள், மேலும் பூமியிலுள்ள அனைவருக்கும் தேவனின் உணர்த்தப்பட்ட போதகர்களாகவும் தூதுவர்களாகவும் இருக்கிறார்கள்.
பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தீர்க்கதரிசி, ஞானதிருஷ்டிக்காரர் மற்றும் வெளிப்படுத்துபவர். கர்த்தருடைய வழிகாட்டுதலின் கீழ் ஒரு ஆலோசனைக் குழுவாகச் சேவை செய்யும் அவர்கள், அவருடைய சபைக்கான கோட்பாட்டை அறிவிக்கவும், விளக்கவும், கொள்கையை நிறுவவும் அதிகாரம் பெற்றுள்ளனர். இந்தக் குழுமங்களின் முடிவுகள் ஒருமனதாக இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் கவனமாக ஜெபிக்கவும், சிறப்பாக சிந்திக்கவும் செய்கிறார்கள். இந்த வழியில், கர்த்தர் தம்முடைய சித்தம் நிறைவேறும் என்று நமக்கு உறுதியளிக்கிறார்.
தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிக்கிறார்கள்—அவருடைய இருப்பு, அவருடைய ஊழியம் மற்றும் அவருடைய தெய்வீகம்.
மார்மன் புஸ்தகத்திலிருந்து தீர்க்கதரிசிகளின் சில சாட்சியங்களை வாசிப்போம்.
அபிநாதி அறிவித்தான்:
“தேவன் தாமே மனுபுத்திரர் மத்தியிலே வந்து, தம் ஜனத்தை மீட்பார்.
அவர் மாம்சத்திலே வாசமாயிருக்கிறபடியாலும், தேவகுமாரன் என்று அழைக்கப்படுவார்.”
இயேசு கிறிஸ்து என்று லாமானியரான சாமுவேல் சாட்சியமளித்தான், “ஆதியிலிருந்து சகலத்தையும் சிருஷ்டித்தவரும், வானத்திற்கும் பூமிக்கும் பிதாவானவருமான, தேவ குமாரன்.”
தீர்க்கதரிசி மரோனி சொன்னான், “நான் இயேசுவைக் கண்டேனென்றும், அவர் முகமுகமாய் என்னுடன் பேசினார்.”
கிறிஸ்து நேபியர்களைச் சந்தித்தபோது, அவர் செய்த முதல் காரியங்களில் ஒன்று பன்னிரண்டு அப்போஸ்தலர்களை அழைத்தது. மேலும் அவர் ஜனங்களை நோக்கி சொன்னார், “நான் தெரிந்துகொண்ட இந்த பன்னிரெண்டு பேருடைய வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுத்தால், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள்.”
இப்போது, பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். இரட்சிப்பின் திட்டத்தின் உண்மைகளை கர்த்தர் தாமே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கற்பித்தார். பின்னர் அவர் அவர்களிடம் கூறினார், “உன்னுடைய பிள்ளைகளுக்கு சுதந்தரமாக இந்தக் காரியங்களைப் போதிக்க நான் உனக்கு ஒரு கட்டளையைக், கொடுக்கிறேன்.“
சுதந்திரமாக கற்பிப்பது என்றால் என்ன? அது சுவிசேஷத்தின் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதும், அவற்றைப் பற்றிய தனிப்பட்ட சாட்சியத்தைக் கொண்டிருப்பதும், அந்த அறிவை நம் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதுமாகும். இது முறையான மற்றும் முறைசாரா கற்பித்தல் தருணங்களை மேம்படுத்துவதாகும். அது அந்த அறிவு மற்றும் சாட்சியத்தின்படி வாழ்வதாகும்.
மார்மன் புஸ்தகம் 2,060 இளம் வீரர்களை இவ்வாறு விவரிக்கிறது: “அவர்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படிக்கும், அவருக்கு முன்பாக தலைநிமிர்ந்து நடக்கவும் போதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் சத்தியமும் தெளிவுமுள்ள மனுஷராயிருந்தார்கள்.” அந்த இளைஞர்கள் அந்த நேரத்தில் அவர்களின் இராணுவத் தலைவராகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்த ஏலமனுக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்தனர், மேலும் அவர்களின் தாய்மார்கள் அவர்களின் இருதயங்களை சத்தியத்தாலும் விசுவாசத்தாலும் நிரப்பியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
பெற்றோர்களே, பல குரல்களும் சில சமயங்களில் அதிக இருளும் இருக்கும் இந்த உலகில், நம் பிள்ளைகளை ஒளியிலும் சத்தியத்திலும் வளர்க்கும்படி தேவன் தாமே நமக்குக் கட்டளையிட்டுள்ளார். நம் பிள்ளைகளுக்கு சுவிசேஷத்தின் இரட்சிக்கும் சத்தியங்களைக் கற்பிக்கும் பொறுப்பை அவர் நம்மிடம் ஒப்படைத்தார். நாம் அவ்வாறு செய்யத் தவறினால், உலகம் அதைச் செய்யாது.
அன்புள்ள இளம் நண்பர்களே, உங்களுக்காக ஒரு அழைப்பு வைத்திருக்கிறேன்: வரும் நாட்களில், மண்டியிட்டு, உங்கள் இருதயங்களைத் திறந்து, பரலோக பிதாவிடம் விசுவாசத்துடன் ஜெபிக்க உங்களை அழைக்கிறேன், இன்று பூமியில் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசியும் அப்போஸ்தலர்களும் அவருடைய குரலாக இருப்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள்.
பரிசுத்த ஆவியின் மூலமாக நாம் அந்த சாட்சியைப் பெற முடியும் என்று சூனேமின் பெண் நமக்குக் கற்பித்தாள். அவர்கள் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்பதை நாம் அறிந்தவுடன், நமது தொடர்ச்சியான சவால்கள் இருந்தபோதிலும், நம்பகத்தன்மை, விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் அவர்களின் குரலுக்குக் கீழ்ப்படிவதால், நமது வாழ்க்கை எளிதாக இருக்கும் என்று நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நமது இரட்சகரின் இரண்டாம் வருகை வரை ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் பற்றிப்பிடிப்பதற்கு தீர்க்கதரிசியின் குரலைக் கேட்டு கீழ்ப்படிவது மிக முக்கியம்.
உலகின் துன்மார்க்கம் வளர்ந்து வருகிறது, ஆனால் இயேசு கிறிஸ்துவின் சபை மற்றும் அவரது ராஜ்யம் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளது. சீயோன் அதன் அழகிய ஆடைகளை அணிந்துகொள்கிறது, கிறிஸ்துவின் சிம்மாசனம் விழாது. நம் சாட்சிகளில் நாம் வலுவாக இருக்க வேண்டும், விசுவாசத்தால் நிறைந்திருக்க வேண்டும், தினமும் மனந்திரும்ப வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பணியைத் தொடர நம் ஒவ்வொருவரையும் நம்பியிருக்கிறார்.
ஒருமுறை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார், “சகோதரரே, ஒரு மகத்தான காரணத்திற்காக நாம் போகக்கூடாதோ?“ இருப்பினும், இந்தச் செய்தி முக்கியமாக இளைஞர்களாகிய உங்களுக்கானதால், சகோதரர்கள் என்பதற்குப் பதிலாக இளைஞர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்புகிறேன். தயாரா?
“[இளைஞர்களே] ஒரு மகத்தான காரணத்திற்காக நாம் போகக்கூடாதோ? முன்னோக்கிச் செல்லுங்கள், பின்னோக்கியல்ல. தைரியம் கொள்ளுங்கள் [இளைஞர்களே], முன்னேறுங்கள் ஜெயத்தை நோக்கி!” உங்கள் இருதயங்கள் களிகூர்வதாக, மிகுந்த சந்தோஷப்படுவீர்களாக.”
வாழும் தீர்க்கதரிசிகளின் வழிகாட்டுதலுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முயற்சிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்று பூமியில் அவருடைய ராஜ்யத்தை முன்னெடுத்துச் செல்லவும், ஸ்தாபிக்கவும், வழிநடத்தவும் அவர்கள் தேவனால் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு நான் உங்களுக்கு எனது மனமார்ந்த சாட்சியத்தை அளிக்கிறேன். அது எப்போதும் அப்படித்தான் இருக்கும். எப்போதும் கர்த்தரே தம்முடைய ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.