பொது மாநாடு
இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண அன்பு
அக்டோபர் 2025 பொது மாநாடு


14:34

இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண அன்பு

குணப்படுத்தலாகிலும், மன்னித்தலாகிலும் இவை ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண அன்பு அவைகளின் பரிபூரணத்தில் காணப்படுகிறது.

தலைவர் ரசல் எம். நெல்சன் மீது என் அன்பையும் நம் ஒவ்வொருவர் மீதும் அவர் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க செல்வாக்கிற்காக என் நன்றியறிதலையும் நான் வெளிப்படுத்துகிறேன். தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸின் உன்னத வாழ்க்கையைப் பாதுகாத்து மேன்மையடையச் செய்ததிற்காக நம் அனைவரின் சார்பாக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

வருடங்கள் கடந்து செல்ல செல்ல, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பேரிலும், அவருடைய இரக்கமுள்ள பாவநிவர்த்தியின் பேரிலும் நான் பேரன்பை உணர்கிறேன். மரணத்தின்மீதும் பாவத்தின்மீதும் வெற்றிபெற்ற அவரது உயர்ந்த தியாகமானது, மனித வரலாறு அனைத்திலும் மிகவும் பயனுள்ள பங்களிப்பாகும். அவருடைய தெய்வீக ஈவைப் புரிந்துகொள்வது, கல்லறைக்கு அப்பாலும் தொடரக்கூடிய ஒரு முடிவற்ற பரலோக கற்றல் பயிற்சியாகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

பாவங்களை மன்னிப்பதிலும், மற்றவர்களின் பாவங்களால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதிலுமான இரட்சகரின் வல்லமையான மனதுருக்கம், தேவனுடைய அன்புகூருதலின் மிக அற்புதமான வெளிப்பாடாகும்.

மிகக் கடுமையான பாவங்களுக்கு மன்னிப்பு தேடுபவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதும், மற்றவர்களின் கடுமையான பாவங்களால் ஏற்பட்ட வேதனையான காயங்களிலிருந்து குணமடைவதை நாடுபவர்களுக்கு ஆறுதலை வழங்குவதும் எனது விருப்பமாயிருக்கிறது.

குணப்படுத்தலாகிலும், மன்னித்தலாகிலும் இவை ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண அன்பு அவைகளின் பரிபூரணத்தில் காணப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்

நீங்கள் கடுமையான பாவங்களை செய்துவிட்டு மனத்திரும்பும் போக்கிலிருந்தாலோ அல்லது முழுமையாக மனந்திரும்பி மன்னிப்பின் சொல்லமுடியாத மகிழ்ச்சியை உணர விரும்பினாலோ, தயவு செய்து இந்த அதிசயம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “என்னிடத்தில் வாருங்கள்” என்று இரட்சகர் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார்.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்துவதால், அவரை அறியவும், அவரை நம்பவும், உங்கள் இருதயத்தை அவருக்குக் கொடுக்கவும் தக்கதாக உங்கள் ஆத்துமாவின் ஏக்கத்தைத் தூண்டிவிடும். “கர்த்தாவே, அது எப்படி நடந்தது?” என்று ஏனோஸ் தனக்கு கிடைத்த மன்னிப்பைப் பற்றிக் கேட்டான். “நீ முன்னே கேட்டும் கண்டுமிராத, கிறிஸ்துவிலே விசுவாசித்ததினிமித்தமே” என்று கர்த்தர் பதிலளித்தார்.

“நீங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும் உங்களை விலக்கிக் காத்து, தேவனில் உங்கள் முழு ஊக்கத்தோடும் மனதோடும் பெலத்தோடும் அன்புகூருவீர்களானால் அவருடைய கிருபை உங்களுக்குப் போதுமானதாயிருக்கும்” என்று மரோனி மேலும் கூறினான்.

பாவத்திலிருந்து விலகி தேவனிடம் திரும்புவதும் இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்துவதும் ஓர் அழகான தொடக்கமாகும் உங்கள் சித்தத்தை தேவனிடம் தாழ்மையுடன் சமர்ப்பித்தல் என்பது உங்கள் ஆயரிடமோ அல்லது தலைவரிடமோ கடுமையான பாவங்களை ஒப்புக்கொள்வதை உள்ளடக்கியதாகும், ஆயினும் உங்கள் முழு மன்னிப்பும் இரட்சகரிடமிருந்து வருகிறது. மன்னிப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம் வழங்கப்படும் ஒரு தெய்வீக வரம்.

நேர்மை

உண்மையிலேயே தேவனிடம் திரும்புவதற்கான வாஞ்சை, உங்கள் பரலோக பிதாவுடனும், உங்களுடனும், பாதிக்கப்பட்டவர்களுடனும், உங்கள் ஆசாரியத்துவத் தலைவருடனும் முற்றிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடனே வருகிறது. நொறுங்குண்ட இருதயத்துடனும், நருங்குண்ட ஆவியுடனும் தம்மிடம் வருவதற்கான உங்கள் தீர்மானத்தைக் கண்டு உங்கள் பரலோக பிதா களிகூர்கிறார். நருங்குண்ட ஆவியைக் கொண்டிருத்தல் என்பது உங்களைத் தாழ்மையுடன் தேவனுடைய கைகளில் ஒப்படைப்பதாகும்; நொறுங்குண்ட இருதயத்தைக் கொண்டிருத்தல் என்பது அப்போஸ்தலனாகிய பவுல் ”தேவ துக்கம்” என்று விவரித்தபடி என்ன விலையாயினும் கொடுத்தாவது அவரிடம் திரும்புவதற்கான ஆத்துமாவின் ஆழ்ந்த ஏக்கத்தைக் கொண்டுவருகிறது.

உடைந்ததை மீட்டெடுப்பது

உங்கள் ஏக்கம், நீங்கள் உடைத்ததை சரிசெய்ய விரும்புவதற்கு உங்களை வழிநடத்துகிறது. ஆயினும், சில விஷயங்களை சரி செய்வது உங்கள் பெலனில் இல்லை என்று உணர்ந்து உங்கள் செயல்களின் விளைவாக காயமடைந்தவர்களைக் குணப்படுத்த கர்த்தர் தமது கிருபையால் உதவும்படியாக நீங்கள் மனமுவந்து ஜெபிக்கிறீர்கள்.

மற்றவர்கள் மீது ஏற்படும் கடுமையான பாவத்தின் விளைவுகளை மேற்கொண்டுவருவது பெரும்பாலும் வேதனையுள்ளதாக சமாளிக்க கடினமானதாக அமையும். “தாங்கள் செய்திருந்த சகல குறைகளையும் ஊக்கத்தோடே நிவர்த்தி செய்த” மோசியாவின் குமாரர்களுடைய முன்மாதிரியை உங்கள் முயற்சிகள் பின்பற்றுகின்றனவா,? நீங்கள் காணாதிருக்கிறவைகள் என்ன என்பதைப் பற்றி நீங்கள் மதிப்பு வைத்திருப்போரிடம் பேசுங்கள்.

நான் இந்த செய்தியை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்தபோது, ​​மனந்திரும்பி, சபைக்குத் திரும்ப விரும்பும் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு எதிர்பாராத மின்னஞ்சல் வந்தது. அவரது முன்னாள் மனைவி இன்னும் ”[அவர்களின்] நித்திய திருமண இழப்பு, [குழந்தைகளால் சிரமங்கள்], நிதி பாதுகாப்பின் நஷ்டம், … செலவுகளைச் சமாளிக்க முடியாமை, [மற்றும்] காட்டிக் கொடுக்கப்படும் ஆழ்ந்த மூச்சுத் திணறல் உண்டாக்கும் உணர்வுகள்” ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார்.

“[தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தான் இன்னும் என்ன செய்ய முடியும்] என்று ஜெபத்தோடு சிந்திக்கும்படி [தன்னை கேட்க] எப்படி தனது ஆசாரியத்துவத் தலைவர் உணர்த்தப்பட்டார்,“ என்பதை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அனுமதியுடன் நான் அவரது மின்னஞ்சலின் ஒரு பகுதியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

“விவாகரத்து ஆணையில் நான் கொடுத்த [பணம்] மிகவும் தாராளமானது என்று நான் [முதலில்] நினைத்தேன், ஆனால் என் கிளைத் தலைவர் அதைப் பற்றி உபவாசம் இருந்து ஜெபிக்கும்படி என்னை ஊக்குவித்தார். …

“ஆரம்பத்தில், மேலும் சீர்படுத்தும்கருத்து குறித்து நான் போராடினேன். என்னுடைய பாவங்கள் நிதி சார்ந்தவை அல்ல என்பதால், ‘தாராளமான இழப்பீடு‘ என்பதின் உண்மையான அர்த்தம் என்னவென்று யோசித்தேன் … [ஆனால்] அது வெறும் பணத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதை நான் விரைவில் உணர்ந்தேன்.

“எனது ஆசாரியத்துவத் தலைவர்கள் [எனது முன்னாள் மனைவி] மற்றும் என் குழந்தைகளைச் சந்தித்து, அவர்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், குணமடையவில்லை என்பதை உணர்ந்தார்கள். …

“எனது புதிய குறிக்கோள் நம்பிக்கையுடன் முன்னேறுவதாகும். … எந்த நிபந்தனையும் இல்லாமல் உதவ வேண்டும் என்ற எனது விருப்பத்தை நான் வெளிப்படுத்தினேன். … எனது நிகர சம்பளத்தில் குறிப்பிடத்தக்க பகுதியாக ஒவ்வொரு சம்பளத்தின் போதும் [எனது முன்னாள் மனைவிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்ப] முடிவு செய்தேன். முதல் கட்டணத்தைச் செலுத்துவதற்கு சற்று முன்பு, [அந்தத் தொகையை விட இரு மடங்கு] செலுத்த வேண்டும் என்று தேவன் [என் மனதில் உணர்த்தினார்].

“சீர்ப்படுத்துதல் என்பது வெறும் பணத்தைப் பற்றியது அல்ல என்பதை நான் கற்றுக்கொண்டேன். இது என் வாழ்க்கையைத் தாழ்மையுடன் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதைப் பற்றியது. … என்னுடைய மோசமான தேர்வுகளால் என் குடும்பத்திடமிருந்து நான் பறித்ததை மாற்றிப்போடுவதற்கு இப்பணம் உதவும். இது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாக்குறுதிகளைக் கொடுப்பதும் காப்பாற்றுவதும் பற்றியதும், செலவுகள் அவளைக் கவலைகொள்ளச் செய்திராமல் ஆவியானவரை அவள் தேடும்படியாக உதவுவதுமாகும்.”

நீங்கள் உடைத்ததை மீட்டெடுக்கும் உங்கள் முயற்சிகள் பணத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நீங்கள் தாழ்மையுடன் கர்த்தரிடம் ஆலோசிக்கும்போது, இன்னும் செய்ய அதிகம் உண்டு என்பதை​​ நீங்கள் காணக்கூடும்.

படிப்படியாக தெய்வீக ஒப்புதல்கள் வரும்

கர்த்தருடைய மன்னிப்பைத் தேடும்போது அவருடைய பூரண ஒப்புதலைப் பெற காத்திருக்கும் நீங்கள் ​​பொறுமையாக இருங்கள். இந்த வசனத்தைக் கருத்தில் கொள்ளவும்:

“தாழ்மையின் ஆழங்களிலே தங்களைத் தாழ்த்தி தேவனிடத்தில் ஊக்கமாய் கூக்குரலிட்டார்கள். … நாள் முழுவதும் கூக்குரலிட்டார்கள். [ஆனால்] கர்த்தர் அவர்களின் அக்கிரமங்களினிமித்தம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்க தாமதித்தார்.”

“இருப்பினும் கர்த்தர் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு, அவர்களின் பாரங்களை லகுவாக்கி, … அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தேசத்திலே விருத்தியடையத் தொடங்கினார்கள்,”என்ற இந்த வசனத்தைக் கருத்தில்கொள்ளுங்கள்.

ஏனெனில் கர்த்தர் உங்களுக்குப் படிப்படியாக தமது ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் கொடுக்கும்போது பொறுமையாக இருங்கள்.

கர்த்தருக்கேற்ற காலத்தில் “இக்காரியங்கள் இனி ஒருபோதும் உன்னைச் சஞ்சலப்படுத்தாமல் இருப்பதாக” என்ற அவருடைய குரல் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் உணர்வீர்கள். ஒரு நாள், நீங்கள் இரட்சகரிடம் தொடர்ந்து திரும்பிவருகிறபோது உங்களுடைய பரலோக பிதா [உங்களின் இருதயங்களிலிருக்கும்] குற்றவுணர்வை, தம்முடைய குமாரனின் நற்கிரியையினால் நீக்கிப்போடுவார்.”

காயமடைந்து துன்பப்படுதல்

மற்றவர்களினுடைய கடும்பாவங்களினால் நியாயமற்று மிகவும் காயப்பட்டிருக்கும் உங்களுக்காக நான் இரட்சகரின் அன்பையும், மனதுருக்கத்தையும், அவருடைய ஆறுதலையும், சமாதானத்தையும் பகிர்ந்துகொள்ள ஏங்குகிறேன்.

நீங்கள் உணர்ந்த சோகம், மனவேதனை, இழப்பு, துரோகத்தின் மூச்சுத் திணறல் உணர்வு, நீங்கள் எண்ணியபடியே உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது—இரட்சகர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை நேசிக்கிறார் என்பதை நான் உங்களுக்கு முழுமையாக உறுதியளிக்கிறேன். அவரிடம் செல்லுங்கள். அவரே உங்களின் ஆறுதலும் பெலனுமானவர்; உங்களைத் தாங்கிக்கொள்ள அவர் தம்முடைய தூதர்களை அனுப்புவார். எப்போது உங்கள் வலி நீங்கும், உங்கள் துக்கம் அடங்கும், தேவையற்ற நினைவுகள் மறக்கப்படும்? எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் துன்பத்தின் சாம்பலிலிருந்து அழகைக் கொண்டுவர அவருக்கு வல்லமை உண்டு என்று எனக்குத் தெரியும்.

கிராண்ட் பிளாங்க், மிஷிகன் மாகாணத்திலுள்ள நம்முடைய பிரியமான சகோதரர்களும் சகோதரிகளும் இயேசு கிறிஸ்துவிலுள்ள தங்களுடைய கலக்கமற்ற விசுவாசத்தோடும், தங்களுடைய தைரியம் மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவைகளைக் கொண்டும், இரட்சகரின் ஒப்பற்ற அன்பையும் கிருபையையும் பெற்றிருக்கிறார்கள், வரும் வாரங்களிலும் மாதங்களிலும் அபரிமிதமாக பெறுவார்கள்.

நீங்கள் தொடர்ந்து அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, ​​உங்களின் காரிருள் மேகங்களும், இரவில் வியாகுலமிக்க அழுகையும் காலை வெளிச்சத்தில் ஆனந்தத்தில், சமாதானத்தில் ததும்பும் கண்ணீராக மாறும். “உங்களின் துக்கம் சந்தோஷமாக மாறும். … உங்கள் சந்தோஷத்தை [ஒருவனும்] உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.” அத்தருணம் வரும். அது வரும் என்று சாட்சியம் கொடுக்கிறேன்.

தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ்

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாக்குகிற அன்பு மிகவும் கடினமான சூழ்நிலைகளில் காணலாம், ஆனால் நம் அனைவருக்கும் நம் இரட்சகரின் பாவநிவர்த்தியாக்குகிற கிருபை தொடர்ந்து தேவை. தலைவர் டாலின் எச். ஓக்ஸ்: “உலகவாழ்வில் நம்முடைய இரட்சகர் தம்முடைய பாவநிவர்த்தியின் அனுபவங்களினிமித்தம் அவர் எங்குமுள்ள ஆண்களையும் பெண்களையும் ஆறுதலளித்து குணப்படுத்தி பெலப்படுத்தக்கூடும், ஆனாலும் அவர் தன்னைத் தேடி தன்னுடைய உதவியைக் கேட்பவர்களுக்கு மாத்திரம் அப்படி செய்கிறார் என்று நான் நம்புகிறேன். ‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு போதித்தான்’ (யாக்கோபு 4:10). நாம் அவரை விசுவாசித்து அவருடைய உதவிக்காக ஜெபிக்கும்போது அந்த ஆசீர்வாதத்திற்குத் தகுதியாகிறோம்” என்று போதித்திருக்கிறார்.

மூப்பர் நீல் எல். ஆன்டர்சென்னுடன் மூப்பர் ராபர்ட் ஈ. வெல்ஸ்

மூப்பர் ராபர்ட் ஈ. வெல்ஸ்

தற்போது 97 வயதான எனது அன்பான நண்பரும் எழுபதின்மரும் மேனாள் பொது அதிகாரியுமான மூப்பர் ராபர்ட் இ. வெல்ஸிடமிருந்து, 60 ஆண்டுகளுக்கு முந்தைய அவருடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதி பெற்றேன்:

1960 ஆம் ஆண்டில் ராபர்ட் வெல்ஸ் தனது 32வது வயதில் பராகுவேயில் வசித்து, சர்வதேச வங்கியாளராகப் பணியாற்றியபோது, தன் மனைவியாகிய மெரிலுடன், இரண்டு வெவ்வேறு விமானங்களில் தனித்தனியே விமானிகளாக உருகுவேயிலிருந்து பராகுவேயிலுள்ள தங்கள் வீட்டிற்கு பறக்கலாயினர். அடர்ந்த மேகங்களை எதிர்கொண்டதால், ராபர்ட்டும் மெரிலும் ஒருவருக்கொருவர் நேரடியாக பார்வையையும் வானொலி தொடர்பையும் இழந்தனர். ராபர்ட் விரைவாக தரையிறங்கினார், அங்கு அவர் தனது மனைவியின் விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து கொண்டார். அவரது மனைவியும் அவருடன் பயணித்த இரண்டு நண்பர்களும் உயிர் பிழைக்கவில்லை. அசுன்சியன் நகரில் உள்ள வீட்டிலிருந்த அவரது பிள்ளைகளின் வயது ஏழு, ஐந்து மற்றும் இரண்டு ஆகும்.

வெல்ஸ் குடும்பம்

மூப்பர் வெல்ஸ் தனது துயரத்தைப் பற்றிப் பேசியதாவது:

“எனக்குள் பெருகி, என் உணர்ச்சிகளை விழுங்கி, என் புலன்களை மரத்துப் போகச் செய்த வலியை வெளிப்படுத்த வார்த்தைகள் என்றென்றும் போதுமானதாக இருக்காது. துயரத்தின் பெருக்கத்தினால் கண்ணீர் நிற்கவில்லை. என் மனைவியின் மறைவின் பேரழிவு உணர்வை என் மனம் சமாளிக்க முயன்றபோது, ​​நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, விபத்துக்கு நான்தான் காரணம் என்று எனக்குள் மிகப்பெரிய குற்ற உணர்வு ஏற்பட்டது.

விமானத்தை முழுமையாக ஆய்வு செய்யாததற்கும், தனது மனைவிக்கு கருவிகளைக்கொண்டு பறப்பதற்கு சிறப்பான பயிற்சியை கொடாமல் இருந்ததற்கும் ராபர்ட் தன்னைத்தானே குற்றம் சாட்டிக் கொண்டார். இவைகளைப் புறக்கணித்ததற்காக தானே குற்றவாளி என்று அவர் உணர்ந்தார்.

ராபர்ட்:

“என் மனம் இருண்ட மயக்கத்தில் மூழ்கியது. … நான் [பிள்ளைகளுக்காக உயிர் வாழ்ந்தேன்], வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. …

“நான்… தொடர வேண்டும் என்ற என் விருப்பத்தை இழந்துவிட்டேன்“ என்றார்.

காலப்போக்கில், ராபர்ட் ஒரு ஆழ்ந்த ஆவிக்குரிய அனுபவத்தால் ஆசீர்வதிக்கப்பட்டார். அவர் நினைவுகூர்ந்ததாவது:

“சுமார் ஒரு வருடம் கழித்து, ஒரு மாலை நேரத்தில், நான் முழங்காலில் நின்று ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது, ​​ஒரு அதிசயம் நிகழ்ந்தது. என் பரலோக பிதாவிடம் ஜெபித்து மன்றாடும்போது, ​​இரட்சகர் என் பக்கத்தில் வந்தது போல உணர்ந்தேன், கேட்கக்கூடிய குரலினால் என் ஆத்துமாவிற்கும் என் காதுகளுக்கும் இந்த வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டேன்: ‘ராபர்ட், உன் பாவங்களையும் உன் தவறுகளையும் என்னுடைய பாவநிவாரண பலி விலைக்கிரயம் கொடுத்தது. உன் மனைவி உன்னை மன்னிக்கிறாள். உன் நண்பர்கள் உன்னை மன்னிக்கிறார்கள். நான் உன் சுமையைத் தூக்குவேன். …’

“அந்த தருணத்திலிருந்து, குற்ற உணர்ச்சியின் [மற்றும் விரக்தியின்] பாரம் என்னிடமிருந்து அதிசயமாக நீங்கியது. நான் காப்பாற்றப்பட்டேன்! இரட்சகரின் பாவநிவர்த்தி உள்ளடக்கிய வல்லமையையும் அது எனக்கு நேரடியாகப் பொருந்தியது என்றும் நான் உடனடியாகப் புரிந்துகொண்டேன். … நான் … இதற்கு முன்பு அறிந்திராத வெளிச்சத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தேன். … நான் சம்பாதிக்காத ஒரு ஈவு—கர்த்தருடைய கிருபையின் ஈவு—எனக்குக் கொடுக்கப்பட்டது. … நான் அதற்கு தகுதியானவன் அல்ல—அதற்கு தகுதியாக நான் எதுவும் செய்யவில்லை, ஆனாலும் அவர் அதை எனக்குக் கொடுத்தார்.”

சகோதர சகோதரிகளே, நாம் ஒவ்வொருவரும் “தேவ கிருபையினால் கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலின்மூலம் நீங்கள் கிறிஸ்துவில் பரிசுத்தப்பட்[டு], …கறையற்றவர்களாக, பரிசுத்த[மாவோமாக].”

நமது இரட்சகரும் மீட்பருமானவரின் அன்பையும், இரக்கத்தையும், கிருபையையும் குறித்து நான் சாட்சியமளிக்கிறேன். அவர் ஜீவிக்கிறார். நாம் அவருடையவர்கள்; நாம் உடன்படிக்கையின் பிள்ளைகள். நாம் அவரை விசுவாசித்து, அவரை பின்பற்றி, அவரை நம்பும்போது அவர் நம்முடைய துக்கங்களிலிருந்தும் நம்முடைய பாவங்களிலிருந்தும் நம்மை உயர்த்துவார். பின்பு, இந்த பூலோக வாழ்வுக்கும் அப்பால் நம்முடைய பிதாவின் வீட்டிலே அவரோடுகூட நாம் என்றென்றுமாய் ஜீவித்திருப்போம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:16).

    “தம்முடைய ஜனத்தைக் கட்டியிருக்கிற மரணக்கட்டுக்களை அவிழ்க்கும்பொருட்டு அவர் மரணத்தை தம்மீது ஏற்றுக்கொள்வார்; தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்தின் பிரகாரமாய், ஒத்தாசை புரிவதெப்படி என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும் மாம்சத்தின்படி தாம் உருக்கமான இரக்கத்தினால் நிறைக்கப்படும்படிக்கும், அவர்களுடைய பெலவீனங்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்” (ஆல்மா 7:12).

  2. “இதோ, தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிறவன் மன்னிக்கப்படுகிறான், கர்த்தராகிய நான் அவற்றை நினைவுகூரமாட்டேன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42; மோசியா 26:30 ஐயும் பார்க்கவும்).

  3. மத்தேயு 11:28.

  4. உங்களின் அதிகரித்து வரும் விசுவாசம் உங்கள் ஜெபங்களை மிகவும் நேர்மையானதாகவும், உங்கள் வேதப் படிப்பை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் உங்கள் விருப்பங்களை மிகவும் துல்லியமாகவும் மாற்றும்.

  5. ஏனோஸ் 1:7

  6. ஏனோஸ் 1:8

  7. மரோனி 10:32.

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:43 பார்க்கவும்.

  9. மோசியா 26:29 பார்க்கவும்.

  10. “ஆம், உனது சிந்தனைகளையும் உனது இருதயத்தின் நோக்கங்களையும் தேவனைத் தவிர வேறு யாரும் அறியார்களென நீ அறிவாய் என நான் உனக்குச் சொல்லுகிறேன்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:16).

  11. 3 நேபி 9:20; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:8 பார்க்கவும்.

  12. 2 கொரிந்தியர் 7:8–11 பார்க்கவும்.

  13. மோசியா 27:35

  14. தனிப்பட்ட மின்னஞ்சல் ஆகஸ்ட் 22, 2025 அன்று பெறப்பட்டது.

  15. மோசியா 21:14–15.

  16. மோசியா 21:15–16.

  17. ஆல்மா 42:29.

  18. ஆல்மா 24:10.

  19. ஏசாயா 61:3 பார்க்கவும்.

  20. யாக்கோபு 3:1–2 பார்க்கவும்.

  21. யோவான் 16:20, 22.

  22. Dallin H. Oaks, “Strengthened by the Atonement of Jesus Christ,” Liahona, Nov. 2015, 64.

  23. Neil L. Andersen, The Divine Gift of Forgiveness, (2019), 260.

  24. மரோனி 10:33.