சுவிசேஷத்தில் மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிமுறை
உங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவால் அதிகம் நிறைத்தால், அது எவ்வாறு மாற்றமளிக்கும்?
நீங்கள் எப்போதாவது எங்கள் சொந்த மாநிலமான லூசியானாவிற்குச் சென்றிருந்தீர்களானால், அநேகமாக எங்களின் பல சுவையான உணவுகளுக்கு நீங்கள் பரிச்சயப்பட்டிருக்கலாம்—கம்போ, ஜம்பலாயா, எடூஃபி, என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
நானும் அந்த சுவையான உணவுவகைகளில் ஒன்றை சமைக்க அவ்வப்போது தைரியமாக முயற்சி செய்கிறேன். தேவையான அனைத்து பொருட்களையும் கலந்து விரிவான செய்முறைகளைப் பின்பற்றிய பிறகு, எழுதப்படாத இறுதிக்குறிப்பு என்னவெனில், ஏதாவது விடுபட்டுள்ளதா என்று இறுதியாக சுவை பரிசோதனை செய்வதே ஆகும். அந்த நேரத்தில், “இன்னும் கொஞ்சம் டோனியின் மசாலா சேர்க்கலாம்” என்று க்ரீயோல் சமையல் நிபுணர்கள் என் காதுகளில் மெல்லப்பேசுவதை போல உணர்ந்தேன். டோனியின் மசாலா என்பது லூசியானா மாநிலத்தின் ஓபலூசாஸ் எனும் என் சொந்த ஊரில் தயாரிக்கப்படும் க்ரீயோல் சுவையூட்டுப் பொடியாகும். சமையல் குறிப்பை பின்பற்றி செய்யும்பொழுது குறைபாடுகள் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக இது ஒரு “இரகசிய மூலப்பொருளாக“ அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
லூசியானாவில் ஊழியத் தலைவர்களாக சேவை செய்யும் பாக்கியம் எனக்கும் எனது மனைவி மிச்செலுக்கும் கிடைத்தது. ஊழியம் முடிந்து ஊழியக்காரர்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன்பு, ஊழிய இல்லத்தில் அவர்களின் கடைசி இரவன்று, மிச்செலின் சிறப்பான ஜம்பலாயா சமையல் முறையை எப்படி செய்வது என்று ஊழியக்காரர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை எங்களின் பாரம்பரியமாக வைத்திருந்தோம். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்தைப் பற்றிய அவர்களின் சாட்சியங்களுடன், எங்கள் சமையல் செய்முறைகளையும் நன்மதிப்போடு பெற்றுக் கொண்டு ஊழியத்திலிருந்து கடந்து சென்றார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, நான் சபை ஊடக நூலகத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது தலைவர் ரசல் எம். நெல்சனுடன் மறுஸ்தாபிதத்தின் உரையாடல்கள் என்று அழைக்கப்படும் குறும்படத் தொகுப்புக்கான இணைப்பைக் கண்டேன். அந்த பட்டியலில் இருந்த குறும்படங்கள் ஒன்றின் தலைப்பு என் கவனத்தை ஈர்த்து, புன்னகைக்க வைத்தது. அதன் பெயர் “வேதங்கள் தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான தேவனின் வழிமுறை” என்று இருந்தது. நான் உடனே அந்த இரண்டு நிமிட குறும்படத்தைத் திறந்து பார்த்தேன், அதில் தலைவர் நெல்சன், ஆரம்ப வகுப்பு பிள்ளைகளின் ஒரு குழுவிடம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பற்றிய எளியதும், ஆனால் வல்லமையுள்ள செய்தியை கற்பித்திருந்தார். “நீங்கள் ஒரு கேக் செய்கிறீர்கள் என்றால், அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவீர்கள் அல்லவா?” என்று கேட்டார். “அதனால் ஒவ்வொருநேரமும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும், இல்லையா?”
மேலும், தாம் விரைவில் 95 வயது ஆகப் போவதாகச் சொல்லி: “நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என மக்கள் கேட்கிறார்கள் உங்களின் இரகசியம் என்ன?” “அந்த இரகசியம் வேதங்களே என அவர் பதிலளித்தார். நீங்கள் அவற்றை வாசித்து பின்பு முயற்சியுங்கள்.”
இதோ, நமக்குத் தேவையான பதில் கிடைத்துவிட்டதே. மகிழ்ச்சியான வாழ்விற்கான எளிய இரகசியம் என்னவென்றால், வேதங்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் வழிமுறைகளை பின்பற்றுவதே ஆகும். நான் அதை “சுவிசேஷத்தில் மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிமுறை” என்று அழைக்கிறேன்.”
சமையல் செய்முறையைப் பின்பற்றும் போது ஏதாவது தவறு நடந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இறுதியில் எல்லாம் நன்றாயிருக்கும்படிக்கு, ஒரு “இரகசிய மூலப்பொருள்” சுவிசேஷத்தில் புதைந்துள்ளது. எப்போதும் இதன் பதில் இயேசு கிறிஸ்துவே.
நான் நினைக்கிறேன், நம்மில் ஒவ்வொருவருக்கும் சில நேரங்களில் நம்முடைய மூலப்பொருட்கள் போதுமானவையாக இல்லாமல் தோன்றும், வழிமுறைகளை சரியாக பின்பற்ற முடியாமல் போராடுவோம், சில சமயங்களில் தவறாக ஏதாவது செய்கின்றோம், அல்லது நம்மால் கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகளும் நடக்கின்றன, இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.
அதற்கான தீர்வு என்ன? அதற்கான எளிய தீர்வு என்னவென்றால், இயேசு கிறிஸ்துவை உங்களது வாழ்வில் வரவேற்கச் செய்யும் காரியங்களை மென்மேலும் அதிகப்படுத்துவதேயாகும்.
அப்படியெனில், உங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவால் அதிகம் நிறைத்தால், அது எவ்வாறு மாற்றமளிக்கும்?
ஊழியத்தலைவராக சேவை செய்யும்போது, எங்கள் இளம் ஊழியக்காரர்களோடு ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கொருமுறை ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தனியாக சந்திக்கும்போது, ஊழியக்காரர்கள் தங்கள் துணை ஊழியக்காரருடனான கூட்டுறவை வலுப்படுத்த வழிகாட்டல் கேட்பது வழக்கமாக இருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு ஊழியக்காரர் அவரின் தனிப்பட்ட நேர்காணலுக்காக வந்து அமர்ந்தார். அவரது உடல் மொழியைப் பார்த்தாலே அவரின் மனதில் ஏதோ பாரம் கனமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. “மூப்பரே, இன்று நீங்கள் என்ன கலந்துரையாட விரும்புகிறீர்கள்?”என்று நான் கேட்டேன். அவர் தனது துணை ஊழியக்காரருடன் சந்தித்த சில சவால்களையும், ஊழியப்பணியைச் செய்யும் திறனை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் விவரித்தார். தனது கண்களில் கண்ணீருடன், என்னைப் பார்த்து, “தலைவரே, நான் என்ன செய்ய வேண்டும்?” என கேட்டார்.
அந்த நேரத்தில், உண்மையாகவே எப்படி பதிலளிக்கவேண்டுமென்றே எனக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து, நாங்கள் சேர்ந்து முழங்காலில் நின்று ஆவியானவரின் வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்வதற்கு அவருக்கு சம்மதமா என்று கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார், நாங்கள் ஒன்றாக முழங்காலில் நின்று உணர்த்துதலுக்காக ஜெபித்தோம்.
ஜெபித்த பிறகு, நாங்கள் சிறிது நேரம் முழங்காலிலேயே நின்றுவிட்டு, பின்னர் ஒருவருக்கொருவர் எதிராக நாற்காலிகளில் அமர்ந்தோம். நாம் சேர்ந்து ஒரு வேதவாக்கியத்தை வாசிப்போமா என்று கேட்டேன். நாங்கள் எங்கள் வேதங்களைத் திறந்தபோது, நான் கொஞ்சம் நிறுத்திவிட்டு அவரிடம் சொன்னேன், “மூப்பரே, இந்த வேதவாக்கியத்தை வாசிக்கும்போது, தயவுசெய்து பின்வரும் கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் இந்த குணாதிசயங்களை என் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், அது எனது துணை ஊழியக்காரருடனான அன்பையும் எங்கள் ஊழியத்தையும் மேம்படுத்துமா?”
பின்பு நாங்கள் மரோனி 7:45ஐ எடுத்து சத்தமாக வாசித்தோம்: “தயாளத்துவம் நீடிய பொறுமையும் தயவுமுள்ளது, பொறாமைப்படாது, இறுமாப்பு அடையாது, சுயமாய் நாடாது, எளிதில் கோபப்படாது, பொல்லாப்பு நினையாது, அக்கிரமத்தில் களிகூராமல் சத்தியத்தில் களிகூரும், சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.”
பின்பு அந்த மூப்பர் கண்களில் கண்ணீர் மல்க என்னை நோக்கி, “புரிகிறது, தலைவரே, ஆனால் இதை பின்பற்றுவது கடினம்” என்று கூறினார். நான் ஒப்புக்கொண்டதோடு, அவர் தேவனுடைய குமாரன் என்றும், கர்த்தருடன் சேர்ந்து அதைச் செய்யத்தக்க தெய்வீக ஆற்றல் அவருக்கு உண்டு என்றும் அவருக்கு நினைவூட்டினேன்.
பின்னர் எழுபதின்மரின் மூப்பர் க்ளார்க் ஜி. கில்பர்ட் கற்பித்த சரிவின் உவமையை நாங்கள் சுருக்கமாக விவாதித்தோம், இவ்வுவமையானது நாம் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கி, கர்த்தருடன் சேர்ந்து, நேர்மறையான திசையில் முன்னேறி மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை எங்களுக்கு நினைவூட்டியது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை நினைத்து அவர் இன்னும் தவித்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.“அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன“ என்ற வேதவாக்கியத்தைப் பற்றிய அவரது புரிதலை விவரிக்க நான் அவரிடம் கேட்டேன்.“ அற்பமும் சொற்பமுமான காரியங்களை செய்வதன் மூலம் பெரிய காரியங்கள் நடக்கக்கூடும் என்ற கருத்தை அவர் தொடர்ந்து விவரித்தார். ஒரு நிமிடம் ஒதுக்கி, தனது துணை ஊழியக்காரரிடம் தயவு காட்ட அவர் செய்யக்கூடிய இரண்டு அற்பமும் சொற்பமுமான காரியங்களை அடையாளம் காணச் சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து, அவர் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு நிமிடம் ஒதுக்கி, தனது துணை ஊழியக்காரரிடம் பொறுமையோடு இருக்க அவர் செய்யக்கூடிய இரண்டு அற்பமும் சொற்பமுமான காரியங்களை அடையாளம் காணச் சொன்னேன். அவர் கிட்டத்தட்ட உடனே தன் இரண்டு எண்ணங்களைச் சொன்னார். எங்கள் சந்திப்புக்கு முன்னரே அவர் இதைப் பற்றி தியானித்திருந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த சில காரியங்களை ஜெபத்தில் தேவனிடம் எடுத்துச் சென்று, தனது திட்டத்தை உண்மையான நோக்கத்துடன் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து உறுதிப்படுத்தவும், வழிகாட்டவும், வழிநடத்தவும் கேட்கும்படி நான் அவரை அழைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார். நாங்கள் முடித்ததும், அவரது வாராந்திர கடிதத்தில் இதன் முன்னேற்றத்தை சுருக்கமாக எழுதுமாறு நான் அவரிடம் கேட்டேன்.
அடுத்த சில வாரங்கள் செல்லச் செல்ல, காரியங்கள் முன்னேறி வருவதை அவரது வாராந்திர கடிதங்களில் இருந்து என்னால் காண முடிந்தது. மேலும் அந்த முன்னேற்றத்தை அவருடைய வாராந்திர கடிதங்களில் மட்டுமல்ல, அவருடைய துணை ஊழியக்காரரின் வாராந்திர கடிதங்களிலும் என்னால் காண முடிந்தது. எங்களின் அடுத்த தனிப்பட்ட சந்திப்பின் போது, அவரது முகநாடியிலும் மனநிலையிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைக் கண்டேன். நான் அவரிடம் கேட்டேன், “அப்படியானால், மூப்பரே, அன்பு ஒருக்காலும் ஒழியாது என்பது உண்மைதானே?” அவர் முகம் மலர்ந்த புன்னகையுடன் பதிலளித்தார்: “ஆம், அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன.”
சுவிசேஷத்தில் மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிமுறையை நீங்கள் பின்பற்றும் போது, தலைவர் நெல்சனின் போதனையை நினைவில் கொள்ளுங்கள்: “உங்களுக்கு எத்தகைய கேள்விகள் அல்லது பிரச்சனைகள் இருந்தாலும், அதன் பதில் எப்போதும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் அவர் போதனைகளிலும் காணப்படுகின்றது. அவரது பாவநிவர்த்தி, அவரது அன்பு, அவரது இரக்கம், அவரது கோட்பாடு, அவருடைய குணப்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப்பற்றி அதிகமாய் அறிந்து கொள்ளுங்கள். அவரிடம் திரும்புங்கள்! அவரைப் பின்பற்றுங்கள்!”
நீங்கள் “அவருக்குச் செவிகொடுக்க“ வேண்டியிருக்கும் போது, இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு அழைப்பது என்பதை அறிய வேண்டியிருக்கும் போது, தனிப்பட்ட வெளிப்படுத்தலைப் பற்றி தலைவர் நெல்சன் நமக்குக் கற்பித்தவைகளைப் பின்பற்ற கருத்தில் கொள்ளுங்கள்:
“நீங்கள் வழக்கமாக செல்லக்கூடிய அமைதியான இடத்தைக் கண்டு பிடியுங்கள். தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். உங்கள் இருதயத்தை பரலோக பிதாவிடம் ஊற்றுங்கள். பதில்களுக்காகவும் ஆறுதலுக்காகவும் அவரிடத்தில் திரும்புங்கள்.
உங்கள் கவலைகள், பயங்கள், பெலவீனங்கள், ஆம், உங்கள் இருதயங்களின் ஏக்கங்களைப்பற்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபியுங்கள். பின்னர் செவிகொடுங்கள்! உங்கள் மனதில் வருகிற சிந்தனைகளை எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை பதிவுசெய்து, நீங்கள் செய்ய உணர்த்தப்படுகிற செயல்களின் வழியை பின்பற்றுங்கள். நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம், ஆண்டுக்கு ஆண்டு, இதை நீங்கள் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நீங்கள் ‘வெளிப்படுத்தலின் கொள்கையில் வளருவீர்கள்.’”
இயேசு கிறிஸ்துவே நம் இரட்சகரும் மீட்பருமாயிருக்கிறார் என்று நான் சாட்சியமளிக்கிறேன். “பரலோக பிதாவிடம் திரும்பிச் செல்ல நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் நிறைவேற்றியுள்ளார்.” இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.