புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும்
ஆப்பிரிக்காவில் உள்ள நமது பரிசுத்தவான்களின் மகத்துவம் வாழ்க்கையின் சவால்களையும் வளர்ந்து வரும் சபையின் தேவைகளையும் எதிர்கொள்ளும்போது மிக தெளிவாக தெரிகிறது.
ஒரு வருடத்திற்கு சிறிது முன்பு, எழுபதின்மரின் தலைமையில் ஒரு பணியிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன், இந்த மாற்றம் பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பொது அதிகாரிகள் எமரிட்டஸாக ஆகுபவர்களின் பெயர்களை ஒட்டி எனது பெயர் வாசிக்கப்பட்டதால், நானும் எனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டிருக்கிறேன் என்று பலர் கருதினர். மாநாட்டிற்குப் பிறகு, எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நன்றியும் மற்றும் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் ஏராளமான செய்திகளைப் பெற்றேன். சிலர் வடக்கு சால்ட் லேக்கில் உள்ள எனது வீட்டை வாங்க முன்வந்தனர். என்னைத் தேடுவார்கள் என தெரிந்து கொண்டதிலும், நான் முடித்த உடன் எங்கள் வீட்டை விற்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என கொண்டதிலும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் நான் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை.
என்னுடைய புதிய பணி மோனிகாவையும் என்னையும் அழகான ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றது, அங்கு சபை செழித்து வருகிறது. தெற்கு ஆப்பிரிக்கா பகுதியில் விசுவாசமிக்க பரிசுத்தவான்களிடையே சேவை செய்வதும், அவர்கள் மீது கர்த்தரின் அன்பைக் காண்பதும் ஒரு ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. பல வெற்றிகரமான மற்றும் நன்கு படித்த சபை உறுப்பினர்கள் தங்கள் நேரத்தையும் திறமைகளையும் மற்றவர்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பது உட்பட, அனைத்து பின்னணியிலிருந்தும் பல தலைமுறை குடும்பங்களைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.
அதே நேரத்தில், பிராந்தியத்தின் மக்கள்தொகையைப் பொறுத்தவரை, தாழ்மையான மக்கள் பலர் சபையில் சேர்ந்து, தசமபாக விசுவாசத்தின் ஆசீர்வாதங்கள் மற்றும் சபை வழங்கும் கல்வி வாய்ப்புகள் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள். பள்ளியில் வெற்றிபெறு (சக்ஸீட் இன் ஸ்கூல்), ஆங்கில இணைப்பு (இங்கிலீஷ் கனெக்ட்), பி.ஒய்.யு–பாத்வே, மற்றும் தொடர்ச்சியான கல்வி நிதி (பெர்பெச்சுவல் எஜுகேஷன் பண்ட்) போன்ற திட்டங்கள் பலரின் வாழ்க்கையை, குறிப்பாக வளர்ந்து வரும் தலைமுறையினரின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கின்றன.
“இந்த சபை சிறந்த மக்களை ஈர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் பெரும்பாலும் சாதாரண மக்களை சிறந்தவர்களாக ஆக்குகிறது என்று கூறப்படுகிறது“ என்று தலைவர் ஜேம்ஸ் இ. பாஸ்ட் ஒருமுறை கூறினார்.
ஆப்பிரிக்காவில் உள்ள நமது பரிசுத்தவான்களின் மகத்துவம் வாழ்க்கையின் சவால்களையும் வளர்ந்து வரும் சபையின் தேவைகளையும் எதிர்கொள்ளும்போது மிக தெளிவாக தெரிகிறது. அவர்கள் எப்போதும் அதை நேர்மறையான மனப்பான்மையுடன் அணுகுகிறார்கள். தலைவர் ரசல் எம். நெல்சனின் இந்த ஆலோசனையை அவர்கள் நன்றாக உருவகப்படுத்துகிறார்கள்:
“நாம் உணரும் மகிழ்ச்சி, நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளைப் பொருத்தது அல்ல, எல்லாம் நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் பொருத்ததே.
“நமது வாழ்க்கையில் கவனம், தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்திலும் … இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய சுவிசேஷத்திலும் இருக்கும்போது நமது வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருந்தாலும், அல்லது நடக்காவிட்டாலும் நாம் சந்தோஷத்தை உணரமுடியும்.”
சவால்கள் இருந்தபோதிலும் அவர்கள் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். இரட்சகருடனான நமது உறவு, புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும் சிரமங்களை அணுக நமக்கு உதவுகிறது என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.
மொசாம்பிக்கில் தொடங்கி, இந்தக் கொள்கையை விளக்கும் இந்த விசுவாசமிக்க பரிசுத்தவான்களுடன் எனது சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
மொசாம்பிக்
சில மாதங்களுக்கு முன்பு, ஏற்கனவே 10 அங்கங்களைக் கொண்ட ஒரு வருடம் வயதுள்ள பிணைய மாநாட்டிற்கு நான் தலைமை தாங்கினேன். 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் சிறிய கூடுமிடத்தையும் வெளியே அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடாரங்களையும் நிரப்பினர். பிணையத் தலைவருக்கு 31 வயது, அவரது மனைவிக்கு 26 வயது, அவர்களுக்கு இரண்டு சிறிய பிள்ளைகள் உள்ளனர். அவர் எந்த புகாரும் இல்லாமல், சிரித்த முகத்துடனும் நன்றியுள்ள இருதயத்துடனும் மட்டுமே இந்த வளர்ந்து வரும் மற்றும் சவாலான பிணையத்தை வழிநடத்துகிறார்.
அந்த கோத்திரப்பிதாவினுடனான ஒரு நேர்காணலில், அவரது மனைவி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதையும், அவளைப் பராமரிக்க அவர் சிரமப்படுவதையும் நான் அறிந்தேன். பிணையத் தலைவரிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்த பிறகு, நாங்கள் அவளுக்கு ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தைக் கொடுத்தோம். சராசரியாக எத்தனை கோத்திரப்பிதா ஆசீர்வாதங்களை அவர் வழங்குகிறார் என்று நான் கோத்திரப்பிதாவிடம் விசாரித்தேன்.
“எட்டு முதல் பத்து“ என்றார் அவர்.
நான், “மாதத்திற்கா?” என்று கேட்டேன்.
அவர், “வாரத்திற்கு!“ என்று பதிலளித்தார். வார இறுதியில் இவ்வளவு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என்று நான் அவருக்கு அறிவுரை கூறினேன்.
அவர் கூறினார் “மூப்பர் கோடோய், அவர்கள் ஒவ்வொரு வாரமும் வருகிறார்கள், புதிய உறுப்பினர்கள் மற்றும் பல இளைஞர்கள் உட்பட.“ மீண்டும், எந்த புகாரும் இல்லை, புன்னகைக்கும் முகமும் நன்றியுணர்வுள்ள இருதயமும் மட்டுமே.
பிணைய மாநாட்டின் சனிக்கிழமை மாலை அமர்வுக்குப் பிறகு, ஹோட்டலுக்குச் செல்லும் வழியில், இரவில் தாமதமாக மக்கள் சாலையோரத்தில் உணவு வாங்குவதைக் கவனித்தேன். பகலில் இல்லாமல் இருட்டாக இருக்கும்போது ஏன் இதைச் செய்கிறார்கள் என்று என் ஓட்டுநரிடம் கேட்டேன். அதைச் செய்வதற்கு பணம் பெறுவதற்காக அவர்கள் பகலில் வேலை செய்கிறார்கள் என்று அவர் பதிலளித்தார்.
“ஓ, அவர்கள் நாளைக்கு சாப்பிட இன்றைக்கு வேலை செய்தார்கள்,“ என்று நான் சொன்னேன்.
ஆனால் அவர் என்னைத் திருத்தினார்: “இல்லை, அவர்கள் இன்றிரவு சாப்பிட பகலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.“ நமது உறுப்பினர்கள் சிறந்த சூழ்நிலையில் இருப்பார்கள் என்று நான் நம்பினேன், ஆனால் நாட்டின் அந்தப் பகுதியில் பலர் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டதை அவர் உறுதிப்படுத்தினார். மறுநாள் காலை, எங்கள் ஞாயிற்றுக்கிழமை அமர்வின் போது, அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றி புதிதாக அறிந்தபோது, அவர்களின் புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும் என்னை இன்னும் அதிகமாக அசைத்தன.
ஜாம்பியா
ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்குச் செல்லும் வழியில், ஒரு குழந்தை மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளுடன் சாலையில் நடந்து செல்லும் ஒரு தம்பதியை நானும் பிணையத் தலைவரும் பார்த்தோம். நாங்கள் அவர்களை ஏற்றிச் செல்ல நின்றோம். அவர்கள் ஆச்சரியப்பட்டு மனமகிழ்ந்தனர். கூடுமிடத்திற்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று நான் கேட்டபோது, குழந்தைகளின் வேகத்தைப் பொறுத்து 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகலாம் என்று தகப்பன் பதிலளித்தார். இந்தப் பயணத்தை அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எந்தப் புகாரும் இல்லாமல் எதிர்கொண்டனர்—புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும் மட்டுமே.
மாலாவி
ஒரு பிணைய மாநாட்டிற்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை, பொதுப் பள்ளிகளை கூடுமிடங்களாகப் பயன்படுத்தும் இரண்டு கிளைகளுக்குச் சென்றேன். அடிப்படை வசதிகள் கூட இல்லாத, தாழ்மையான, எளிமையான கட்டிடங்களைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அங்கு சில உறுப்பினர்களைச் சந்தித்தபோது, அவர்களின்கூடுமிடங்களின் போதுமான வசதிகள் இல்லாததற்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இருந்தேன், ஆனால் வழக்கமான நீண்ட நடைப்பயணத்தைத் தவிர்த்து, அருகில் கூடுவதற்கு ஒரு இடம் கிடைத்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீண்டும், எந்த புகார்களும் இல்லை—புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும் மட்டுமே இருந்தன.
ஜிம்பாப்வே
சனிக்கிழமை தலைமைத்துவப் பயிற்சிக்குப் பிறகு, பிணையத் தலைவர் என்னை ஒரு வாடகை வீட்டில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளுக்கு அழைத்துச் சென்றார். 240 பேர் கலந்து கொண்டனர். பின்னர் ஆயர் அந்த வாரம் ஞானஸ்நானம் பெற்ற 10 புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். சபை இரண்டு சிறிய அறைகளில் பரவியிருந்தது, சில உறுப்பினர்களும் கட்டிடத்திற்கு வெளியே அமர்ந்து, ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மீண்டும், எந்த புகார்களும் இல்லை—புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும் மட்டுமே இருந்தன.
லெசோதோ
ஒரு சபை சேகரம் ஒரு பிணையமாக மாறத் தயாராகி வருவதைப் பார்க்க “மலை ராஜ்யம்“ என்றும் அழைக்கப்படும் இந்த அழகான சிறிய நாட்டிற்கு நான் சென்றேன். சனிக்கிழமை கூட்டங்களுக்குப் பிறகு, அவர்களின் ஒரு கிளையில் வாடகை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளில் கலந்துகொண்டேன். திருவிருந்து அறை நிரம்பி வழிந்தது, மக்கள் பங்கேற்க கதவுக்கு வெளியே நின்றிருந்தனர். கிளைத் தலைவரிடம் ஒரு பெரிய வீடு தேவை என்று நான் சொன்னேன். நான் ஆச்சரியப்படும் விதமாக, இது அவருடைய உறுப்பினர் எண்ணிக்கையில் பாதி மட்டுமே என்று அவர் எனக்குத் தெரிவித்தார். இரண்டாவது மணிநேரத்திற்குப் பிறகு மற்ற பாதி பேர் இரண்டாவது திருவிருந்துக் கூட்டத்தில் கலந்து கொள்வார்களாம். மீண்டும், எந்த புகார்களும் இல்லை—புன்னகைக்கும் முகங்களும் நன்றியுணர்வுள்ள இருதயங்களும் மட்டுமே இருந்தன.
நமது இளைஞர்கள் பலர் ஒரு பயங்கரமான போக்குவரத்து விபத்தில் சிக்கியதால், நான் பின்னர் லெசோதோவுக்குத் திரும்பினேன். இதைப்பற்றி மூப்பர் டி.டாட் கிறிஸ்டாபர்சன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். நான் அந்தக் குடும்பங்களையும் தலைவர்களையும் சந்தித்தபோது, ஒரு இருண்ட சூழ்நிலையை எதிர்பார்த்தேன். அதற்கு பதிலாக, சூழ்நிலையை மேம்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் சமாளித்துக் கொண்டிருந்த வலிமையான மற்றும் உறுதியான பரிசுத்தவான்களை நான் சந்தித்தேன்.
இந்தப் படத்தில் உள்ள விபத்தில் இருந்து தப்பிய 14 வயது போ அனிசியா ஙு, அவளது சொந்த வார்த்தைகளில் இதை நன்றாக விளக்குகிறார்: “இயேசுவை நம்புங்கள், எப்போதும் அவரை நோக்கிப் பாருங்கள், ஏனென்றால் அவர் மூலம் நீங்கள் சமாதானம் காண்பீர்கள், மேலும் அவர் குணப்படுத்தும் செயலில் உங்களுக்கு உதவுவார்.“
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருப்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறையை நாம் காணக்கூடிய சில உதாரணங்கள் இவை. உதவியையும் நம்பிக்கையையும் எங்கே கண்டுபிடிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும்.
இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை
நம் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் இரட்சகர் ஏன் அவர்களுக்கும் நமக்கும் உதவ முடியும்? இதற்கான பதிலை வேதங்களில் காணலாம்:
“அவர் போய் சகலவித துன்பங்களையும், உபத்திரவங்களையும், சோதனைகளையும் அனுபவிப்பார். …
“… தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்தின் பிரகாரமாய், ஒத்தாசை புரிவதெப்படி என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும் … தாம் உருக்கமான இரக்கத்தினால் நிறைக்கப்படும்படிக்கும், … அவர்களுடைய பெலவீனங்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்.”
மூப்பர் பெட்னார் கற்பித்தபடி, இரட்சகர் அறியாத எந்த உடல் வலி, வேதனை அல்லது பலவீனமும் நாம் அனுபவிக்கவில்லை. “நீங்களும் நானும் ஒரு பலவீனமான தருணத்தில், யாரும் புரிந்துகொள்வதில்லை [நான் என்ன கஷ்டப்படுகிறேன்] என்று கூக்குரலிடலாம், ‘எந்த மனுஷருக்கும் தெரியாமலிருக்கலாம். ஆனால் தேவனுடைய குமாரனோ முழுமையாக அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார். ஏன்? ஏனென்றால், நாம் எப்போதும் செய்வதற்கு முன்பே அவர் நம் சுமைகளை உணர்ந்து சுமந்தார்.”
மத்தேயு 11-ல் காணப்படும் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பற்றிய எனது சாட்சியத்துடன் நான் முடிக்கிறேன்:
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”
ஆப்பிரிக்காவில் உள்ள அந்த பரிசுத்தவான்களைப் போலவே, இந்த வாக்குறுதி உண்மையானது என்று நான் அறிகிறேன். அது அங்கேயும் உண்மைதான், எல்லா இடங்களிலும் உண்மைதான். இதைக் குறித்து நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.