உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் பங்கைச் செய்யுங்கள்
உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் பங்கைச் செய்வதில் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுவதற்கு இரட்சகரை நம்புங்கள்
நான் கடந்த ஆண்டு ஐரோப்பா பயணத்தின் போது பிராங்பர்ட் விமான நிலையத்தில் எனது பழைய பணியிடமான லுப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸுக்குச் சென்றேன்.
அதன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க, அவர்கள் பல அதிநவீன முழு-இயக்க விமான சிமுலேட்டர்களை இயக்குகிறார்கள், அவை கிட்டத்தட்ட எந்த சாதாரண மற்றும் அவசர பறக்கும் நிலையையும் மீட்டுருவாக்க முடியும். ஒரு விமான நிறுவன கேப்டனாக எனது பல ஆண்டுகளில், எனது விமானி உரிமத்தை செல்லுபடியாக வைத்திருக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் விமான சிமுலேட்டரில் ஒரு சோதனை பறப்பதில் தேர்ச்சிபெற வேண்டியிருந்தது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் தீவிரமான தருணங்களை நான் நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன், ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற்ற பிறகு சாதனை உணர்வும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் அப்போது இளமையாக இருந்தேன், சவாலை நேசித்தேன்.
எனது சந்திப்பின் போது, லுப்தான்சா நிர்வாகிகளில் ஒருவர், நான் அதை மீண்டும் முயற்சி செய்து 747 சிமுலேட்டரில் மறுபடியும் ஒரு முறை பறக்க விரும்புகிறேனா என்று கேட்டார்.
கேள்வியை முழுமையாக வடிவமைக்க எனக்கு நேரம் கிடைப்பதற்கு முன்பு, ஒரு குரலைக் கேட்டேன்—வியக்கத்தக்க வகையில் என் சொந்த குரல் போலவே ஒலித்தது— “ஆம், நான் அதை மிகவும் விரும்புகிறேன்.“
நான் அந்த வார்த்தைகளைச் சொன்னவுடனேயே, என் மனதில் எண்ணங்களின் சுனாமி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நான் 747 இல் பறந்து நீண்ட காலமாகிவிட்டது. முன்பு நான் ஒரு இளம் மற்றும் தன்னம்பிக்கையுள்ள கேப்டனாக இருந்தேன். இப்போது முன்னாள் தலைமை விமானி என்ற பெருமைக்கு நான் தகுதியானவனாக இருக்கிறேன். இந்த நிபுணர்களுக்கு முன்னால் நான் என்னை சங்கடப்படுத்துவேனா?
ஆனால் பின்வாங்க மிகவும் தாமதமாகிவிட்டது, எனவே நான் கேப்டனின் இருக்கையில் அமர்ந்து, பரிச்சயமான மற்றும் விருப்பமான கட்டுப்பாடுகளில் என் கைகளை வைத்தேன், மீண்டும் ஒரு முறை, பெரிய ஜெட் ஓடுபாதையில் பேரொலியுடன் பரந்த நீல வானத்தில் புறப்பட்டதை மீண்டும் உணர்ந்தேன்.
பயணம் வெற்றிகரமாக இருந்தது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், விமானம் சேதமடையாமல் இருந்தது, என் சுய மதிப்பும் அப்படியே இருந்தது.
அப்படியிருந்தும், அந்த அனுபவம் எனக்குத் தாழ்மையை அளித்தது. நான் என் உச்சநிலையில் இருந்தபோது, பறப்பது கிட்டத்தட்ட மிகவும் பரிச்சயமாயிருந்தது. இப்போது, அடிப்படையான காரியங்களைச் செய்ய என் முழு கவனமும் தேவைப்பட்டது.
சீஷத்துவத்திற்கு ஒழுக்கம் தேவையாயிருக்கிறது
விமான சிமுலேட்டரிலான எனது அனுபவம்—பறப்பது, படகு ஓட்டுவது, விதைப்பது அல்லது அறிவது போன்ற—எதிலும் திறமையாயிருக்க நிலையான சுய ஒழுக்கம் மற்றும் பயிற்சி தேவையாயிருக்கிறது என்ற ஒரு முக்கியமான நினைவூட்டலாக இருந்தது.
ஒரு திறனைப் பெறுவதற்கு அல்லது தாலந்தை வளர்ப்பதில் நீங்கள் பல ஆண்டுகள் செலவிடலாம். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்கலாம், அது உங்களுக்கு மிகவும் பரிச்சயமாக மாறும். ஆனால் நீங்கள் பயிற்சி செய்வதையும் படிப்பதையும் நிறுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒரு முறை பெரும் செலவில் பெற்ற அறிவையும் திறன்களையும் படிப்படியாக இழக்கிறீர்கள்.
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது, இசைக்கருவி வாசிப்பது மற்றும் விமானத்தை பறக்கவிடுவது போன்ற திறன்களுக்கு இது பொருந்தும். இது கிறிஸ்துவின் சீஷனாக மாறுவதற்கும் பொருந்தும்.
எளிமையாகச் சொன்னால், சீஷத்துவத்திற்கு சுய ஒழுக்கம் தேவையாயிருக்கிறது.
இது ஒரு சாதாரண முயற்சி அல்ல, மேலும் இது தற்செயலாக நடப்பதில்லை.
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் ஒரு வரமாயிருக்கிறது, ஆனால் அதைப் பெறுவது என்பது ஒரு விழிப்புடனான தேர்வாகும், அதற்கு நமது “ஊக்கம், மனம் மற்றும் பலம்“ அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். இது தினமும் செய்யும் பயிற்சி. ஒவ்வொரு மணி நேரமும். இதற்கு நிலையான கற்றல் மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு தேவை. நமது விசுவாசம், இரட்சகருக்கு நமது விசுவாசம், பூலோக வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கு எதிராக சோதிக்கப்படுவதால் அது வலுவடைகிறது. நாம் தொடர்ந்து அதைப் போஷிப்பதால், முனைப்புடன் பிரயோகித்துக் கொண்டே இருப்பதால், நாம் ஒருபோதும் கைவிடாதிருப்பதால் அது நிலைத்திருக்கிறது
மறுபுறம், விசுவாசத்தையும் அதன் நம்ப வைக்கும் வல்லமையையும் பயன்படுத்தி அதை செயல்படுத்தத் தவறினால், நாம் ஒரு காலத்தில் பரிசுத்தமானதாக வைத்திருந்த விஷயங்களின் மீது நம் உறுதிப்பாடு குறைந்துவிடும்— ஒரு காலத்தில் உண்மை என்று நாம் அறிந்த விஷயங்களின் மீது நமக்கு நம்பிக்கை குறைந்துவிடும்.
நம்மை ஒருபோதும் கவர்ந்திழுக்க முடியாத சோதனைகள் குறைவான மோசமானதாகவும் அதிக ஈர்ப்புடையதாகவும் தோன்றத் தொடங்குகின்றன.
நேற்றைய சாட்சியத்தின் நெருப்பு நம்மை சிறிது காலத்திற்கு மட்டுமே சூடேற்ற முடியும். பிரகாசமாக எரிந்து கொண்டே இருக்க நிலையான போஷிப்பு தேவை.
புதிய ஏற்பாட்டில், இரட்சகர் ஒரு எஜமானனைப் பற்றிய ஒரு உவமையைக் கற்பித்தார். அவன் தனது ஊழியக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசுத்த நம்பிக்கையைக் கொடுத்தான்—அது தாலந்துகள் என்று அழைக்கப்படும் பணத்தின் அளவு. தங்கள் தாலந்துகளை கருத்தாய் பயன்படுத்திய ஊழியக்காரர்கள் அவைகளை அதிகரித்தனர். தனது தாலந்தை புதைத்த வேலைக்காரன் இறுதியில் அதை இழந்தான்.
படிப்பினை என்ன? தேவன் நமக்கு வரங்களைக் கொடுக்கிறார்—அறிவு, திறமை, வாய்ப்பு —மற்றும் அவைகள் நம்மை ஆசீர்வதிக்கவும் அவரது மற்ற பிள்ளைகளை ஆசீர்வதிக்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் பெருக்கவும் அவர் விரும்புகிறார். அந்த வரங்களை நாம் அவ்வப்போது போற்றும் ஒரு வெற்றிகோப்பையைப் போல ஒரு அலமாரியில் வைத்தால் அது நடக்காது. நாம் அவற்றைப் பயன்படுத்தும்போதுதான் நமது வரங்கள் விரிந்து பெருகுகின்றன.
நீங்கள் வரம் பெற்றவர்
“ஆனால் மூப்பர் உக்டர்ப், குறைந்தபட்சம், அவ்வளவு மதிப்புமிக்க எதுவும் இல்லை—என்னிடம் எந்த வரங்களோ தாலந்துகளோ இல்லை என்று நீங்கள் சொல்லலாம்.“ ஒருவேளை நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிறீர்கள், அவர்களின் வரங்கள் வெளிப்படையானவை மற்றும் ஈர்க்கக்கூடியவை, ஒப்பிடுகையில் நீங்கள் மிகவும் சாதாரணமாக உணர்கிறீர்கள். பூலோக வாழ்க்கைக்கு முந்தைய வாழ்வில், பெரிய வரம் மற்றும் திறமை உணவு மேசை வைக்கப்பட்டிருந்த அந்த நாளில், உங்கள் தட்டு சோகமாக குறைவாகவே தோன்றியது என்று நீங்கள் கருதலாம்—குறிப்பாக மற்றவர்களின் அடுக்கப்பட்ட மற்றும் நிரம்பி வழியும் தட்டுகளுடன் ஒப்பிடும்போது.
நான் உங்களைத் தழுவி, இந்த பெரிய உண்மையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ விரும்புகிறேன்: நீங்கள் ஒளியின் ஆசீர்வதிக்கப்பட்ட நபர், ஒப்பற்ற தேவனின் ஆவிக் குழந்தை! உங்கள் சொந்த கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு ஆற்றலை நீங்கள் உங்களுக்குள் சுமக்கிறீர்கள்.
கவிஞர்கள் குறிப்பிட்டது போல, நீங்கள் பூமிக்கு “மகிமையின் மேகங்களைப் பின்தொடர்ந்து“ வருகிறீர்கள்!
உங்கள் தொடக்கக் கதை தெய்வீகமானது, உங்கள் இலக்கும் அப்படித்தான். நீங்கள் பரலோகத்தை விட்டு இங்கு வந்தீர்கள், ஆனால் பரலோகம் உங்களை ஒருபோதும் விட்டு விலகவில்லை!
நீங்கள் சாதாரணமானவர் அல்ல.
நீங்கள் வரம் பெற்றவர்!
கோட்பாடும் உடன்படிக்கைகளுமில், தேவன் அறிவித்தார்:
“அநேக வரங்களுண்டு, தேவனின் ஆவியால் ஒவ்வொரு [மனுஷனுக்கும்] ஒரு வரம் அளிக்கப்படுகிறது.
“அதனால் அனைவரும் நன்மையடையத்தக்கதாக. சிலருக்கு ஒன்று கொடுக்கப்படுகிறது, சிலருக்கு மற்றொன்று அளிக்கப்படுகிறது.”
நமது வரங்களில் சில வேதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. பல இல்லை.
தீர்க்கதரிசி மரோனி சொன்னது போல், “நீங்கள் தேவ வரங்களை மறுதலிக்க வேண்டாம், ஏனெனில் அவைகள் அநேகமுண்டு; அவைகள் ஒரே தேவனிடத்திலிருந்து வருகின்றன.“ அவைகள் தங்களை “வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம் … ; ஆனால் அதே தேவன் இவையனைத்தின் மூலமாகவும் கிரியை செய்கிறார்.”
நம்முடைய ஆவிக்குரிய வரங்கள் எப்போதுமே கவர்ச்சிகரமானவை அல்ல என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் அவை குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அர்த்தமல்ல. உலகெங்கிலும் உள்ள உறுப்பினர்களிடம் நான் கவனித்த சில ஆவிக்குரிய வரங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா? இது போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரங்களால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று சிந்தியுங்கள்:
-
மனதுருக்கம் காட்டுதல்.
-
கவனிக்கப்படாதவர்களைக் கவனித்தல்.
-
மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களைக் கண்டறிதல்.
-
சமாதானம் பண்ணுகிறவராக இருத்தல்.
-
சிறிய அற்புதங்களைக் கவனித்தல்.
-
நேர்மையான பாராட்டுக்களை வழங்குதல்.
-
மன்னித்தல்.
-
மனந்திரும்புதல்.
-
நிலைத்திருத்தல்.
-
விஷயங்களை எளிமையாக விளக்குதல்.
-
பிள்ளைகளுடன் இணைதல்.
-
சபைத் தலைவர்களை ஆதரித்தல்
தொகுதி தாலந்து நிகழ்ச்சியில் இந்த வரங்கள் காட்சிப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அவை கர்த்தருடைய பணிக்கு எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதையும், உங்கள் வரங்களால் தேவனின் பிள்ளைகளில் ஒருவரை நீங்கள் எவ்வாறு தொட்டிருக்கலாம், ஆசீர்வதித்திருக்கலாம் அல்லது இரட்சித்திருக்கலாம் என்பதை நீங்கள் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள்: “அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன”.
உங்கள் சிறிய பங்கைச் செய்யுங்கள்
என் அன்பான சகோதர சகோதரிகளே, அன்பான நண்பர்களே, தேவன் உங்களுக்குக் கொடுத்த வரங்களையும் தாலந்துகளையும் அடையாளம் காண ஆவியானவர் உங்களுக்கு உதவுவார் என்று நான் ஜெபிக்கிறேன். அப்பொழுது, நாமும், கர்த்தருடைய உவமையிலுள்ள உண்மையுள்ள ஊழியக்காரர்களைப் போல, அவைகளை அதிகரித்து பெரிதாக்குவோமாக.
நமது உக்கிராணத்துவத்தின் கணக்கைக் கொடுக்குபடி பரலோகத்திலுள்ள நமது மனதுருக்கமுள்ள பிதாவுக்கு முன்பாக நாம் நிற்கும் நாள் வரும். அவர் நமக்குக் கொடுத்த வரங்களை நாம் என்ன செய்தோம்—குறிப்பாக, அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க நாம் அவைகளை எவ்வாறு பயன்படுத்தினோம் என்பதை அவர் அறிய விரும்புவார். நாம் உண்மையிலேயே யார், நாம் யாராக ஆகுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளோம் என்பதை தேவன் அறிவார், எனவே நம்மைப் பற்றிய அவருடைய எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஆனால் அங்கு செல்ல நாம் சில மகத்தான, வீரமான அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்ட பாய்ச்சலை எடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் சிருஷ்டித்த உலகில், வளர்ச்சி படிப்படியாகவும் பொறுமையாகவும்—ஆனால் சீராகவும் இடைவிடாதும் நிகழ்கிறது.
நினைவுகூருங்கள், இயேசு கிறிஸ்து மரணத்தையும் பாவத்தையும் ஜெயித்தபோது ஏற்கனவே மனித வல்லமைக்கு அப்பாற்பட்ட பங்கைச் செய்தார்.
கிறிஸ்துவைப் பின்பற்றுவதே நமது பங்கு. பாவத்திலிருந்து விலகி, இரட்சகரை நோக்கித் திரும்பி, அவருடைய வழியில் நடப்பது நமது பங்காகும், ஒரு நேரத்தில் ஒரு அடி. கருத்துடனும் விசுவாசத்துடனும், நாம் இதைச் செய்யும்போது, நாம் இறுதியில் குறைபாடுகள் மற்றும் தவறுகளின் கட்டுக்களை அகற்றிவிட்டு, நாம் கிறிஸ்துவில் பரிபூரணமடையும் அந்த சரியான நாள் வரைக்கும், மெதுவாக சுத்திகரிக்கப்படுவோம்.
ஆசீர்வாதங்கள் அடையக்கூடியவை. வாக்குறுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கதவு அகலமாகத் திறந்திருக்கிறது. உள்ளே நுழைவது மற்றும் ஆரம்பிப்பது நமது விருப்பம்.”
ஆரம்பம் சிறியதாக இருக்கலாம். ஆனால் பரவாயில்லை.
விசுவாசம் பலவீனமாக இருக்கும் இடத்தில், சுத்தப்படுத்தவும், சுத்திகரிக்கவும் அவருடைய வல்லமையுடன் கிறிஸ்து இயேசுவில் நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.
விசுவாசம் மற்றும் சீஷத்துவத்தின் இந்த சவாலை நாம் சாதாரண சுற்றுலாப் பயணிகளாக அணுகாமல், பாபிலோனை விட்டு வெளியேறி, தங்கள் இருதயங்களையும், மனதையும், சீயோனை நோக்கி அடியெடுத்து வைக்கும் முழு மனதுடன் கூடிய விசுவாசிகளாக அணுக வேண்டும் என்று நமது பிதா கேட்கிறார்.
நமது முயற்சிகள் மட்டுமே நம்மை சிலஸ்டியலாக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவைகள் நம்மை இயேசு கிறிஸ்துவுக்கு விசுவாசிகளாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் மாற்ற முடியும், மேலும் அவர் நம்மை சிலஸ்டியலாக மாற்ற முடியும்.
நமது அன்பான இரட்சகரின் காரணமாக, வெற்றி இல்லாத காட்சி என்று எதுவும் இல்லை. நாம் அவர் மீது நம்பிக்கையும் விசுவாசமும் வைத்தால், நமது வெற்றி நிச்சயம். அவருடைய பலம், அவருடைய வல்லமை, அவருடைய மிகுதியான கிருபை ஆகியவற்றை அணுகும்படி அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்கிறார். படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக, நாம் அவருடனும் நம் அன்புக்குரியவர்களுடனும் நித்திய மகிமையில் வாழும் அந்த பெரிய மற்றும் சரியான நாளுக்கு நெருக்கமாக இருப்போம்.
அங்கு செல்ல, நாம் இன்றும் ஒவ்வொரு நாளும் நமது பங்கைச் செய்ய வேண்டும். நேற்று நாம் எடுத்து வைத்த அடிகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் நாம் அங்கு நிற்கவில்லை. நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை நாம் அறிவோம், ஆனால் அது நம்மை ஊக்கமிழக்க நாம் அனுமதிப்பதில்லை.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக—நாம் யார் என்பதன் சாராம்சம் இதுதான்.
உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கும்படியும், ஒரு நாள், பிதாவுக்குள்ள சகலமும் நீங்கள் பெறுவீர்கள் என்று உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் பங்கைச் செய்வதில், பொறுமையுடனும் கருத்துடனும் ஈடுபடுவதற்கு போதுமான இரட்சகரை நம்பும்படி சபையின் ஒவ்வொரு உறுப்பினரையும் நான் வலியுறுத்துகிறேன், ஆசீர்வதிக்கிறேன். இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சி பகருகிறேன், ஆமென்.