குடும்பத்தை மையமாகக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்
நமது கோட்பாடும், நித்திய குடும்பங்களில் நமக்குள்ள நம்பிக்கையும், நம்மை பலப்படுத்தி பிணைக்கின்றன
என் அன்பான சகோதர சகோதரிகளே, எனக்காக நீங்கள் செய்த ஜெபங்களுக்கு நன்றி. நான் அவற்றை உணர்ந்திருக்கிறேன்.
I.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் கோட்பாடு குடும்பத்தை மையமாகக் கொண்டது. நமது குடும்பக் கோட்பாட்டிற்கு இன்றியமையாதது ஆலயம். அங்கு பெறப்பட்ட நியமங்கள், நமது பரலோக பிதாவின் பிரசன்னத்திற்கு நித்திய குடும்பங்களாகத் திரும்ப நமக்கு உதவுகின்றன.
ஏப்ரல் 2025 பொது மாநாட்டின்படி, தலைவர் ரசல் எம். நெல்சன் 200 புதிய ஆலயங்களைக் கட்டுவதாக அறிவித்திருந்தார். ஒவ்வொரு பொது மாநாட்டின் முடிவிலும் புதிய ஆலயங்களை அறிவிப்பதை அவர் விரும்பினார், நாங்கள் அனைவரும் அவருடன் மகிழ்ந்தோம். இருப்பினும், திட்டமிடல் மற்றும் கட்டுமானத்தின் ஆரம்ப கட்டங்களில் தற்போது அதிக எண்ணிக்கையிலான ஆலயங்கள் இருப்பதால், புதிய ஆலயங்கள் குறித்த அறிவிப்பை மெதுவாக்குவது பொருத்தமானது. எனவே, பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் ஒப்புதலுடன், இந்த மாநாட்டில் எந்த புதிய ஆலயங்களையும் நாங்கள் அறிவிக்க மாட்டோம். புதிய ஆலயங்களின் கட்டுமானத்தை எப்போது, எங்கு அறிவிப்பது என்பது உட்பட, உலகம் முழுவதும் உள்ள சபை உறுப்பினர்களுக்கு ஆலயத்தின் நியமங்களை வழங்குவதில் இப்போது நாம் முன்னேறுவோம்.
நான் இப்போது பேசிய உரையின் பகுதி, நமது அன்பான தலைவர் ரசல் எம். நெல்சனின் மரணத்திற்குப் பிறகு எழுதப்பட்டது. இப்போது பின்வருவது அநேக வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் கர்த்தரால் உணர்த்தப்பட்ட எனது போதனைகளைக் குறிக்கிறது.
II.
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட குடும்ப பிரகடனமானது, “குடும்பம் தேவனால் நியமிக்கப்பட்டது” மற்றும் “அவரது பிள்ளைகளின் நித்திய இலக்கிற்கு சிருஷ்டிகரின் திட்டத்தின் மையமாகும்,” என்றும் அறிவிக்கிறது. அதேபோல் “நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று அவருடைய பிள்ளைகளுக்கு இட்ட தேவனின் கட்டளை, இன்னமும் நடைமுறையில் உள்ளது” என்றும் அது அறிவிக்கிறது. மேலும் “சந்ததியை விருத்தி செய்கிற பரிசுத்தமான வல்லமைகள் சட்டப்படி திருமணமான கணவனும் மனைவியுமாகிய ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமே பிரயோகிக்கப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார் என நாங்கள் அறிவிக்கிறோம்.” அப்போதைய மூப்பரான ரசல் எம். நெல்சன், பிரிகாம் யங் பல்கலைக்கழக பார்வையாளர்களுக்கு கற்பித்தபடி, குடும்பம் “தேவனின் திட்டத்திற்கு முக்கியமானது. … உண்மையில், திட்டத்தின் ஒரு நோக்கம் குடும்பத்தை மேன்மையடைய செய்வதாகும்” என்று அப்போது–மூப்பராயிருந்த ரசல் எம். நெல்சன், பி.ஒய்.யு. மாணவர்களுக்குப் போதித்தார்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, சில சமயங்களில் குடும்பத்தை மையமாகக் கொண்ட சபையாக அறியப்படுகிறது. அது சரிதான்! தேவனுடனான நமது உறவும், நமது பூலோக வாழ்க்கையின் நோக்கமும் குடும்பத்தின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், அவருடைய ஆவிப் பிள்ளைகளின் ஆதாயத்துக்காக நமது பரலோக பிதாவின் திட்டமாகும். ஆரம்பத்தில் சுவிசேஷத் திட்டமானது, ஒரு நித்தியக் குடும்பத்தின் ஆலோசனைக்குழுவில் கற்பிக்கப்பட்டது, அது நம் பூலோகக் குடும்பங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது, மேலும் அதன் இலக்கு நித்திய குடும்பங்களில் தேவனின் பிள்ளைகளை மேன்மைப்படுத்துவதாகும்.
III.
அந்தக் கோட்பாட்டு உள்ளடக்கம் இருந்தபோதிலும், எதிர்ப்பு இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருமணமும் குழந்தை பெறுதலும் குறைந்து வருவதால் நாம் சிரமப்படுகிறோம். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக திருமணமான தம்பதிகள் தலைமை தாங்கும் குடும்பங்களின் விகிதம் குறைந்துள்ளது, பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நமது சபை உறுப்பினர்களின் திருமணங்களும் பிறப்பு விகிதங்களும் நேர்மறையான நிலையில் இருந்தாலும், அவையும் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளன. பிற்காலப் பரிசுத்தவான்கள் திருமணத்தின் நோக்கத்தையும், பிள்ளைகளின் மதிப்பையும் புரிந்துகொள்வதை எப்போதும் இழக்காமலிருப்பது அவசியமாகும். அந்த எதிர்காலத்திற்காகத் தான் நாம் பாடுபடுகிறோம். “மேன்மையடைதல் என்பது ஒரு குடும்ப விவகாரம்,“ என்று தலைவர் நெல்சன் நமக்குக் கற்பித்துள்ளார். “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் இரட்சிப்பு நியமங்கள் மூலம் மட்டுமே குடும்பங்கள் மேன்மையடைய முடியும்.”
திருமணமும் குழந்தை பெறுதலும் தேசிய அளவில் குறைவடைவது வரலாற்று காரணங்களுக்காக புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால், பிற்காலப் பரிசுத்தவான்களின் விழுமியங்களும் நடைமுறைகளும் அந்த—போக்குகளை—பின்பற்றாமல் மேம்பட வேண்டும்.
80 ஆண்டுகளுக்கு முன்பு, எனது சிறுவயதில், நான் என் பாட்டி-தாத்தாவின் பண்ணையில் வாழ்ந்தேன்; அன்றைய தினசரி நிகழ்வுகள் பெரும்பாலும் குடும்பத்தின் வழிகாட்டுதலின்படி நடந்தன. குடும்ப நிகழ்வுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப தொலைக்காட்சியோ அல்லது பிற மின்னணு சாதனங்களோ இல்லை. நேர்மாறாக, இன்றைய நகர வாழ்க்கையில், குடும்பத்தை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து அனுபவிப்பவர்கள் மிகக் குறைவு. நகர வாழ்க்கை, நவீனப் போக்குவரத்து, திட்டமிட்ட பொழுதுபோக்கு மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பு ஆகியவை, இளைஞர்கள் தங்கள் இல்லங்களை ஒரு விடுதிபோலக் கருதச் செய்துவிட்டன, அங்கே அவர்கள் தூங்குகிறார்கள், எப்போதாவது உணவுண்ணச் செல்கிறார்கள், ஆனால் அவர்களின் செயல்களில் பெற்றோரின் வழிகாட்டுதல் மிகக் குறைவாகவே உள்ளது.
தற்போதைய சபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர், தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கும் விதத்தினாலும் பெற்றோரின் செல்வாக்கு குறைந்து வருகிறது. கடந்த காலங்களில், குடும்பங்களை ஒன்றிணைத்த பெரும் செல்வாக்குகளில் ஒன்று, வனப்பகுதியை பண்படுத்துவது அல்லது வாழ்க்கைக்காக சம்பாதிப்பது போன்ற ஒரு பொதுவான இலக்கை அடைய ஒன்றாகப் போராடும் முயற்சியாகும். குடும்பம் பொருளாதார உற்பத்தி அமைப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இன்று பெரும்பாலான குடும்பங்கள் செலவழிக்கும் பொருளாதார அமைப்பாக உள்ளன; இதற்கு அதிக அளவிலான குடும்ப அமைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவையில்லை.
IV.
பெற்றோரின் செல்வாக்கு குறைந்துவருகையில், பிள்ளைகளை நித்தியத்தில் குடும்ப இலக்குக்கு ஆயத்தப்படுத்த தங்கள் பிள்ளைகளுக்குப் போதிப்பது பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு தேவன் அளித்த பொறுப்பாகும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25). நம் குடும்பங்கள் அனைத்தும் பாரம்பரியமானவை அல்ல என்றாலும், நம்மில் பலர் இதைச் செய்ய வேண்டும். விவாகரத்து, மரணம், பிரிவு ஆகியவை யதார்த்தங்கள். என்னை வளர்த்த குடும்பத்தில் நான் அதை நேரடியாக அனுபவித்தேன்.
எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அப்பா மரணமடைந்தார்; அதனால், என் தம்பியும் தங்கையும் நானும் ஒரு விதவைத் தாயால் வளர்க்கப்பட்டோம். மிகக் கடினமான சூழ்நிலைகளில் கூட, அவர் முன்நோக்கி சென்றார். அவள் தனிமையாகவும் உடைந்தவளாகவும் இருந்தாள், ஆனால் கர்த்தரின் உதவியுடன், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் கோட்பாட்டின் அவருடைய வல்லமைவாய்ந்த போதனை எங்களை வழிநடத்தியது. தன் பிள்ளைகளை வளர்ப்பதற்காக பரலோகத்தின் உதவியை நாடி அவர் ஜெபித்தார், அதனால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார்! நாங்கள் ஒரு மகிழ்ச்சியான வீட்டில் வளர்ந்தோம், எனது தாயார் தனது கணவர் இறந்துவிட்டார் என்ற உண்மையை புறக்கணிக்கவில்லை. எங்களுக்கு ஒரு அப்பா இருந்தார், தனக்கு ஒரு கணவர் இருந்தார், அவர்களின் ஆலய திருமணத்தால் நாங்கள் எப்போதும் ஒரு குடும்பமாக இருப்போம் என்று அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். கர்த்தர் எங்கள் அப்பாவை வேறொரு பணிக்காக அழைத்ததால், அவர் தற்காலிகமாக சிறிது தூரத்தில் இருக்கிறார்.
பல குடும்பங்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் தனிமையிலுள்ள ஒவ்வொரு தாயும் பரலோக பிதாவின் அன்பையும், ஆலயத் திருமணம் கொண்டுவரும் இறுதியான ஆசீர்வாதங்களையும் கற்பிக்க முடியும். இதை உங்களாலும் செய்ய முடியும்! பரலோக பிதாவின் திட்டம் ஒவ்வொருவருக்கும் இந்த சாத்தியத்தை உறுதி செய்கிறது. ஆலய திருமணத்திற்கும், நித்திய குடும்பமாக முத்திரிக்கப்படுவதன் வருங்கால ஆசீர்வாதங்களுக்கும் நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என் அம்மாவைப் போலவே, லேகி தனது குமாரன் யாக்கோபுக்கு அளித்த வாக்குறுதியை மேற்கோள்காட்ட நாங்கள் விரும்புகிறோம், “உன் உபத்திரவங்களை, உனது ஆதாயத்திற்கென மாற்றுவார்” (2 நேபி 2:2). முழுமையான அல்லது, தற்போது முழுமையடையாத ஒவ்வொரு பிற்காலப் பரிசுத்தவான் குடும்பத்திற்கும் இது பொருந்தும். நாம் ஒரு குடும்ப சபை.
நமது கோட்பாடும், நித்திய குடும்பங்களில் நமக்குள்ள நம்பிக்கையும், நம்மை பலப்படுத்தி பிணைக்கின்றன நாங்கள் யூட்டாவின் பேசன் அருகே தாய் வழி தாத்தாவின் பண்ணையில் வாழ்ந்தபோது, அவர் அளித்த வாக்குறுதியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். என் அப்பா தொலைதூர கொலராடோவின் டென்வரில் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தியை அவர் எனக்குக் கூறினார். நான் படுக்கையறைக்குள் ஓடினேன், படுக்கையின் அருகே முழங்காலிட்டு, என் இதயபூர்வமாக அழுதேன். தாத்தா என்னைப் பின்தொடர்ந்து வந்து என் அருகில் முழங்காலிட்டு, “நான் உனக்கு அப்பாவாக இருப்பேன்” என்று சொன்னார். குடும்பங்கள் ஒரு உறுப்பினரை இழக்கும்போது அல்லது அருகில் தவறவிடும்போது ஏற்படும் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய தாத்தா பாட்டி என்ன செய்ய முடியும் என்பதற்கு அந்த மென்மையான வாக்குறுதி ஒரு வலிமையான எடுத்துக்காட்டாகும்.
பெற்றோர்கள், தனிமையானவர்கள் அல்லது திருமணமானவர்கள்—மற்றும் குழந்தைகளுக்காக அந்தப் பாத்திரத்தை வகிக்கும் தாத்தா பாட்டி போன்ற மற்றவர்கள்—தலைசிறந்த ஆசிரியர்கள். அவர்களின் மிகவும் பயனுள்ள கற்பித்தல், முன்மாதிரியாக இருப்பதே. திருமணம் மற்றும் குழந்தைகளின் முக்கியத்துவம், வாழ்க்கையின் நோக்கம் மற்றும் மகிழ்ச்சியின் உண்மையான ஆதாரம் போன்ற நித்திய விழுமியங்களைக் கற்றுக்கொள்வதற்கும் அவற்றைச் செயலில் காட்டவும் குடும்ப வட்டம்தான் சிறந்த இடம். தயவு, மன்னிப்பு, சுய கட்டுப்பாடு, கல்வியின் மதிப்பு, நேர்மையான உழைப்பு போன்ற வாழ்க்கையின் பிற அத்தியாவசிய பாடங்களை கற்றுக்கொள்ளவும் சிறந்த இடம் குடும்பமே.
நிச்சயமாகவே, சபை உறுப்பினர்கள் பலரின் வாழ்க்கையில், சுவிசேஷத்தின் விழுமியங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாத அன்பான குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர், அப்படிப்பட்டவர்களுக்கு தேவை நமது அன்பும் பொறுமையும்தான். ஒருவருக்கொருவர் ஒப்பிடும்போது, நாம் தேடும் பரிபூரணம், இப்பூலோக வாழ்க்கையின் மனஅழுத்தமான சூழ்நிலைகளுக்குள் மட்டுமே சுருக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:57–59 இல் உள்ள மாபெரும் போதனை நமக்கு உறுதியளிப்பதென்னவெனில், இப்பூலோக வாழ்க்கைக்கு பிறகு வரும் ஆவி உலகிலும் மனந்திரும்புதலும் ஆவிக்குரிய வளர்ச்சியும் தொடரும். மிக முக்கியமாக, குடும்பங்கள் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் பெலப்படுத்தும் போது, இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் பாவங்களும் தவிர்க்க முடியாத குறைகளும் மனந்திரும்புதலின் மூலம் இயேசு கிறிஸ்துவின் மகிமையான மற்றும் இரட்சிக்கும் பாவநிவர்த்தியின் காரணமாக மன்னிக்கப்பட முடியும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்,
V.
நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவே, நமது மிகச் சிறந்த உதாரணம். அவருடைய போதனைகள் மற்றும் சுய தியாகத்தின்படி நம் வாழ்க்கையை வடிவமைத்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். கிறிஸ்துவை பின்பற்றி, நம் வாழ்வை ஒருவருக்கொருவர் சேவை செய்வதில் கொடுப்பதுதான், இன்று பரவலாகவுள்ள சுயநலம் மற்றும் தனித்துவத்திற்கு சிறந்த தீர்வாகும்.
சுவிசேஷக் கோட்பாடுகள் மட்டுமின்றி, நடைமுறை அறிவையும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பாகும். அர்த்தமுள்ள காரியங்களை செய்யும்போது குடும்பங்கள் ஒன்றுபடுகின்றன. குடும்பத் தோட்டங்கள் குடும்ப உறவுகளை வளர்க்கின்றன. மகிழ்ச்சியான குடும்ப அனுபவங்கள் குடும்ப உறவுகளை வலுப்படுத்துகின்றன. முகாமிடுதல், விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பிற பொழுதுபோக்குகள் குடும்பங்களை பிணைக்க விசேஷமாக மதிப்புடையவை. குடும்பங்கள் தங்கள் மூதாதையர்களை நினைவுகூரும் வகையில் ஆலயத்தை நோக்கி வழிநடத்தும் குடும்ப சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வீடு மற்றும் தோட்டத்தில் வேலை செய்வது உட்பட அடிப்படை வாழ்க்கை திறன்களை கற்றுத்தர வேண்டும். மொழிகளைக் கற்றுக்கொள்வது ஊழியம் செய்வதற்கும் தற்கால வாழ்க்கைக்கும் ஒரு பயனுள்ள ஆயத்தமாகும். இந்தப் பாடங்களின் ஆசிரியர்கள் பெற்றோர்களாகவோ, தாத்தா பாட்டிகளாகவோ அல்லது நீட்டிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களாகவோ இருக்கலாம். குடும்பங்கள் ஒரு குழுவாகக் கற்றுக்கொண்டு, குடும்பம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு அக்கறையுள்ள அனைத்து விஷயங்களிலும் ஒன்றாக ஆலோசனை செய்யும்போது குடும்பங்கள் செழித்து வளரும்.
“ஆனால் அதற்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை”, என்று சிலர் கூறலாம். உண்மையிலேயே பயனுள்ளதைச் செய்ய நேரம் ஒதுக்க, பல பெற்றோர்கள் தங்கள் தொழில்நுட்ப கருவிகளை அணைத்துவிட்டால் தங்கள் குடும்பத்துடன் நெருங்கிவிட நேரம் இருக்கிறது என்பதைக் காண்பார்கள். பெற்றோர்களே, நினைவில் கொள்ளுங்கள், உங்கள் பிள்ளைகள் உண்மையாக விரும்பும் இரவு உணவு உங்களுடன் இருக்கும் நேரம்தான்.
காலையும் மாலையும் முழங்காலில் நின்று, பெற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுவான அக்கறைகளுக்காக ஒன்றுபட்டு ஜெபிக்கும் குடும்பங்களுக்கு, மகத்தான ஆசீர்வாதங்கள் வருகின்றன. குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து சபைக் கூட்டங்களிலும், ஆராதனை சூழலிலும் ஆராதிக்கும்போது, ஆசீர்வதிக்கப்படுகின்றனர். குடும்பக் கதைகள் கூறுவதாலும், குடும்ப மரபுகளை உருவாக்குதன் மூலமும், பரிசுத்தமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதினாலும் குடும்ப பிணைப்புகள் இன்னும் வலுவடைகின்றன. “நமது சொந்த வாழ்விலும், நமது முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்தும் உள்ள உணர்த்தும் கதைகள் … வல்லமையுள்ள போதனைக் கருவிகளாகும்,” எனத் தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் நினைவூட்டினார்.” அவை பெரும்பாலும் நமக்கும் நம் சந்ததியினருக்கும் உணர்த்துதலின் மிகச் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன.
நமது நித்திய பிதாவாகிய தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் சாட்சியமளிக்கிறேன். பரலோக குடும்ப மறுசந்திப்புக்கு வழிவகுக்கும் உடன்படிக்கைப் பாதையைப் பின்பற்ற அவர் நம்மை அழைக்கிறார். கர்த்லாந்து ஆலயத்தில் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட திறவுகோல்களால் இயக்கப்படும் ஆசாரியத்துவத்தின் முத்திரிக்கும் வல்லமைகள், குடும்பங்களை நித்தியத்திற்கும் ஒன்றிணைக்கின்றன (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:13–16 பார்க்கவும்). அவை தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கர்த்தரின் ஆலயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது உண்மையானது. அதில் நாமும் ஒரு பங்கு வகிப்போமாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.