பொது மாநாடு
மார்மன் புஸ்தகம்—நமது பயணத்தில் ஒரு அளவிட முடியாத பொக்கிஷம்
அக்டோபர் 2025 பொது மாநாடு


9:47

மார்மன் புஸ்தகம்—நமது பயணத்தில் ஓர் அளவிட முடியாத பொக்கிஷம்

நாம் மார்மன் புஸ்தகத்தில் காணப்படும் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிக்கும்போது, ​​நித்திய சத்தியங்களைப் புரிந்துகொள்ள நமக்கு ஆவியானவர் உதவுவார்.

உங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு பரிசை யாராவது உங்களுக்குக் கொடுத்த தருணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த அக்டோபர் மாதம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றை நான் பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, ​​எங்கள் சக மாணவர்களில் ஒருவரிடம் மற்ற இளைஞர்களைவிட வேறுபட்ட ஒரு வெளிச்சம் இருப்பதைக் கவனித்தேன். நான் அவரோடு இருப்பது எனக்கு பிடித்திருந்தது. ஒரு நாள், அவர் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர் என்று என்னிடம் கூறினார். பின்னர் அவர் எனக்கு ஒரு பரிசை வழங்கினார்: மார்மன் புஸ்தகத்தின் ஒரு பிரதி. அவர் என்னை சில பக்கங்களைப் படித்து, என் கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய இரண்டு நண்பர்களைச் சந்திக்க அழைத்தார். அந்த நண்பர்கள் ஊழியக்காரர்களாய் இருந்தார்கள்.

நான் ஊழியக்காரர்களைச் சந்தித்தபோது, ​​அவர்கள் எனக்கு கிறிஸ்துவின் கோட்பாட்டைக் கற்பித்து, தீர்க்கதரிசியாகிய மரோனியின் அழைப்பைப் பின்பற்ற என்னை அழைத்தார்கள்: “இக்காரியங்களை நீங்கள் பெறும்போது, நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில், இக்காரியங்கள் சத்தியமற்றவையா என்று கேட்கவேண்டுமென்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்; நீங்கள் அக்கறையுள்ள இருதயத்தோடும், உண்மையான நோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துக் கேட்பீர்களானால், அவர் அதன் சத்தியத்தை உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலே வெளிப்படுத்துவார்” (மரோனி 10:4).

நான் மார்மன் புஸ்தகத்தின் பல பக்கங்களைப் படித்து ஜெபித்தேன். ஊழியக்காரர்கள் எனக்குக் கற்பிக்கும் அனைத்து விஷயங்களையும் நான் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், நான் படித்துக்கொண்டிருந்தது நல்லது என்றும் தேவனிடமிருந்து வந்தது என்றும் என் இருதயத்தில் உணர்ந்தேன். மரோனியின் வாக்குறுதியின் உறுதிப்படுத்தலைப் பெற்றேன்: “பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே, நீங்கள் சகலத்தையும்பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள்” மரோனி 10:5).

நான் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, சில நண்பர்கள் நான் தவறான முடிவை எடுத்துவிட்டேன் என்று என்னை நம்ப வைக்க முயன்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அத்தகைய சந்தேகங்களையோ அல்லது எதிர்ப்பையோ எதிர்கொண்டபோது, ​​வேதங்களைப் படிப்பதன் மூலமும், நான் தேவனுடன் செய்த உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருக்க ஜெபிப்பதன் மூலமும் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தலைப் பெற்றேன். அப்போதிலிருந்து, மார்மன் புஸ்தகம் என் தோழனாக, என் பூலோக பயணத்தில் அளவிட முடியாத பொக்கிஷமாக மாறிவிட்டது.

மார்மன் புஸ்தகம் வெறும் ஒரு புத்தகம் மாத்திரம் அல்ல. அதையும் விஞ்சியது. இது தீர்க்கதரிசனம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவி மூலம் பல பூர்வ கால தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடாகும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நேபியர்களுக்குள்ளே அவருடைய தனிப்பட்ட ஊழியம் தான் மார்மன் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான நிகழ்வாகும். மார்மன் புஸ்தகம் “சுவிசேஷத்தின் கோட்பாடுகளை முன் வைத்து, இரட்சிப்பின் திட்டத்தை வரையறுத்து, மனுஷர்களுக்கு இந்த வாழ்க்கையில் சமாதானத்தையும், இனி வரவிருக்கிற வாழ்வில் நித்திய இரட்சிப்பையும் பெற அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்கின்றது” (மார்மன் புஸ்தகத்தின் முன்னுரை ).

இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடாகிய மார்மன் புஸ்தகத்தின் முதல் பதிப்பு மார்ச் 1830 இல் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வெளியிடப்பட்டது. 1829 ஆம் ஆண்டு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இந்தப் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பை முடித்தபோது அவருக்கு வயது 23 தான். அவர் 75 நாட்களுக்குள் கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் மொழிபெயர்த்து முடித்தார், மேலும் அச்சிடும் செயல்முறைக்கு சுமார் ஏழு மாதங்கள் பிடித்தது.

இன்று, 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 80,000 முழுநேர ஊழியக்காரர்கள் தன்னார்வலர்களாக சேவை செய்கிறார்கள், மார்மன் புஸ்தகம் உண்மை என்றும் அது இயேசு கிறிஸ்துவை குறித்து சாட்சியமளிக்கிறது என்பதற்கு சாட்சியாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய ஊழியத் தலைவர்களுக்கான மிகச் சமீபத்திய கருத்தரங்கில், தலைவர் ரசல் எம். நெல்சன் மார்மன் புஸ்தகத்தைப் பற்றிய தனது வல்லமைவாய்ந்த சாட்சியத்தைப் பகிர்ந்து கொண்டார்: “மார்மன் புஸ்தகம்… தேவனின் வார்த்தை. இது கிறிஸ்துவின் கோட்பாட்டைப் போதிக்கிறது, வேறு எந்த புத்தகத்தையும் விட இரட்சகரின் பாவநிவர்த்தியைப் பற்றி அதிகமாக விளக்குகிறது.”

மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவிடம் நமது மனமாற்றத்தை ஆழப்படுத்த உதவும் மூன்று பரிந்துரைகளை நான் வழங்க விரும்புகிறேன்:

1. உங்கள் தினசரி படிப்பில் கருத்துடனும், சீராகவும் இருங்கள்.

ஆல்மாவையும் மோசியாவின் குமாரர்களையும் போலவே, நாமும் “தேவனுடைய வசனத்தை அறியும்பொருட்டு, வேதங்களை கருத்தாய் [ஆராய்ந்தவர்களாய்] [நாம்] சத்தியத்தின் ஞானத்தில் பெலன்கொண்டிருக்கவேண்டும்]. (ஆல்மா 17:2).

ஜார்ஜியா அட்லாண்டா ஊழியத்தில் ஊழியத் தலைவர்களாக பணியாற்றும்போது, ​​ஒவ்வொரு ஊழியக்காரரும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் மார்மன் புஸ்தகத்தைப் படிக்க நானும் எனது மனைவியும் ஊக்குவித்தோம். அந்த அர்ப்பணிப்பு எங்கள் விசுவாசத்தை அதிகரித்து, அற்புதங்களை தேடவும் எதிர்பார்க்கவும் எங்களுக்கு உதவியது.

ஊழியத்திற்குப் பிறகு தினசரி வேதப் படிப்புக்கு நமக்கு அதே அளவு நேரம் கிடைக்காமல் போகலாம், ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபத்துடன் மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதை உண்மையாகவே முன்னுரிமைப்படுத்தினால், கர்த்தரிடத்திலும் அவருடைய வாக்குறுதிகளிலும் அதிக ஆவிக்குரிய பெலத்தையும் நம்பிக்கையையும் காண்பீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.

2. கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பார்ப்பதன் மூலம் உங்கள் படிப்பை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குங்கள்.

நேபி போதித்தான், “கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பாருங்கள்; ஏனெனில் இதோ, நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும், கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குச் சொல்லும்.” (2 நேபி 32:3).

ருசிப்பது என்பது வெறும் வாசிப்பை விட அதிகமானதைக் குறிக்கிறது—அதை ருசிப்பது, சிந்திப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதைக் குறிக்கிறது. நீங்கள் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது, ​​உங்கள் வேதப் படிப்பை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கான வழிகளைக் கவனியுங்கள். உதாரணமாக:

  • சுவிசேஷ நூலக பயன்பாட்டில் கிடைக்கும் படிப்பு உதவிகளைப் பயன்படுத்தவும்.

  • தேவனுடைய திட்டத்தைப் புரிந்துகொள்ளவும், நமது பரலோக பிதாவுடன் உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்ளவும் நம்மை வழிநடத்தும் நித்திய சத்தியங்களை அடையாளம் காணுங்கள்.

  • உங்கள் படிப்பின் போது நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பாதுகாக்க, குறிப்பிடத்தக்க சொற்றொடர்களை கோடிட்டுக் காட்டி, உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

நமது ஆத்தும கேள்விகளுக்கு பதிலளிக்க மார்மன் புஸ்தகம் வல்லமை பெற்றது. நேபி சொன்னான், “எங்களுடைய ஆதாயத்திற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் அவைகள் இருக்கவேண்டுமென, நான் எல்லா வசனங்களையும் எங்கள் செயல்களுக்கு ஒப்பிட்டேன்” (1 நேபி 19:23).

கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்துப் பார்க்க நான் உங்களை அழைக்கிறேன், அவை வெளிப்பாட்டிற்கான கதவைத் திறந்து, உங்கள் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் அவரிடம் நெருங்கி வர நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்பிக்கும்.

3. மார்மன் புஸ்தகத்தின் உண்மைத்தன்மைக்கு உங்கள் சாட்சியத்தை வழங்குங்கள்.

ஜீவ விருட்சத்தின் கனியை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள லேகி விரும்பியது போல (1 நேபி 8:12ஐப் பார்க்கவும்), மார்மன் புஸ்தகத்தின் சாட்சியத்தை நாம் பெறும்போது, ​​இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவதிலிருந்து வரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்படியான ஒரு வாஞ்சையையும் வளர்த்துக் கொள்கிறோம்.

மார்மன் புஸ்தகத்துடன் சகோதரி பென்சன்

இந்த அமர்வில் நம்முடன் கலந்துகொண்டிருக்கும் எங்கள் ஊழியக்காரர்களில் ஒருவரான சகோதரி பென்சன், தனது இளைய சகோதரனுக்கு உதவ வேண்டும் என்ற தனது விருப்பத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அந்த நேரத்தில், அவன் கல்லூரியில் சேரத் தயாராகி வந்தான், ஒரு ஊழியத்தைச் செய்வது பற்றி உறுதியாக தெரியவில்லை. சகோதரி பென்சனின் ஊழியத்தின் முதல் நான்கு மாதங்களில் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கவும், அவருக்குப் பிடித்த வசனங்களைக் குறித்து வைக்கவும், பின்னர் அந்த நகலை அவளது சகோதரருக்கு அனுப்பவும் நான் அழைக்க நான் உணர்த்தப்பட்டேன்.

சகோதரி பென்சன் மார்மன் புஸ்தகத்தின் குறிக்கப்பட்ட பிரதியை அனுப்பி, ஒவ்வொரு இரவும் அதைப் படிக்க தனது சகோதரனை அழைத்தாள். பின்னர் அவள் என்னுடன் பகிர்ந்து கொண்டாள்: “எனது ஊழியத்திற்கு முன்பு, என் சகோதரனுக்கு முழுநேர ஊழியம் செய்ய விருப்பமா என்று உறுதியாகத் தெரியவில்லை. மெதுவாக, காலப்போக்கில், அவன் மார்மன் புஸ்தகத்தைப் படித்தபோது, ​​அவன் தனது வாழ்க்கையில் அதிகரிக்கும் மகிழ்ச்சியைக் கண்டான், மேலும் ஊழியம் செய்வதைக் கருத்தில் கொள்ளத் தொடங்கினான்” என்று என்னுடன் பகிர்ந்து கொண்டாள்.

மூப்பர் பென்சன்

சகோதரி பென்சன் தனது ஊழியத்தை முடிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவளது சகோதரன் தனது ஊழிய அழைப்பைப் பெற்றான். அவன் இப்போது மெக்சிகோ டக்ஸ்ட்லா குட்டியர்ரெஸ் ஊழியத்தில் பணியாற்றி வருகிறான். மார்மன் புஸ்தகத்தின் மூலம், மூப்பர் பென்சன் தனது வாழ்க்கையின் ஆவிக்குரிய தெளிவை உணரத் தொடங்கினான், இது அவனை கர்த்தருக்கு ஊழியம் செய்ய தீர்மானிக்க நடத்திச்சென்று காரியங்கள் நடந்தேறும் என்று நம்பச் செய்தது. அந்த முடிவு ஓர் அற்புதம்—கிறிஸ்துவின் வார்த்தைகளின் வல்லமையால் செல்வாக்கு பெற்றது.

எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே, மார்மன் புஸ்தகத்தைப் பற்றிய உங்கள் படிப்பை ஆழப்படுத்த உங்கள் ஒவ்வொருவரையும் நான் ஊக்குவிக்கிறேன். மார்மன் புஸ்தகத்தில் காணப்படும் கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் ருசிக்கும்போது, ​​ஆவியானவர் நித்திய சத்தியங்களைப் புரிந்துகொள்ளவும், கர்த்தர் தம்முடைய செய்தியைக் கேட்க ஆயத்தம் செய்தவர்களுடன் நமது சாட்சியங்களை உறுதியுடன் பகிர்ந்து கொள்ளவும் நமக்கு உதவுவார் என்பதை நான் அறிவேன். கர்த்தர் சொன்னார், “எனது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எனது சத்தத்தைக் கேட்பார்கள், தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தமாட்டார்கள்”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:7). விசுவாசத்தோடு தேவனிடம் கேட்பவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மார்மன் புஸ்தகத்தின் சத்தியத்தையும் தெய்வீகத்தையும் பற்றிய சாட்சியத்தைப் பெறுவார்கள் என்று நான் சாட்சியமளிக்கிறேன். இதைக் குறித்து நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியமளிக்கிறேன், ஆமென்.

குறிப்பு

  1. Russell M. Nelson, “Sacrament Meeting” (address given at the seminar for new mission leaders, June 23, 2025).