பொது மாநாடு
கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்
அக்டோபர் 2025 பொது மாநாடு


10:41

கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்

தேவன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றவும், அவர் விரும்புகிறவர்களாக நாம் மாற நமக்கு உதவவும், நாம் ஒவ்வொருவரும் நம் இருதயங்களை முழுமையாக அவரிடம் திருப்புவது மட்டுமே அவருக்குத் தேவை.

ஈசாயின் குமாரர்களிலிருந்து இஸ்ரவேலின் புதிய இராஜாவை தேர்ந்தெடுக்கவேண்டுமென கட்டளை கொடுக்கப்பட்டபோது தீர்க்கதரிசியான சாமுவேல் ஈசாயின் மூத்த குமாரனாகிய எலியாபைப் பார்த்தவுடனே “கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன் தானாக்கும்” என்று உற்சாகத்துடன் சொன்னான். ஆனால் எலியாபு கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன் அல்ல. இரட்சகர்: “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று சாமுவேலை எச்சரித்தார்.

தாவீது தன் சகோதரர்களுக்குள் மிகவும் பெலவானாகவோ அல்லது மிகவும் திறமையுள்ளவனாகவோ இல்லாமலிருந்திருக்கக்கூடும், ஆயினும் அவனுடைய இருதயம் தேவனுடைய பார்வையில் பெலப்பட்டிருந்தது. அவன் தேவனை தன் முழு இருதயத்தோடு நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய மிகுந்த வாஞ்சையோடிருந்தான். அவன் தேவனுடைய அன்பிலும், வல்லமையிலும், வாக்குத்தத்த ஆசீர்வாதங்களிலும் அசையாத நம்பிக்கை வைத்திருந்து, பின்னாட்களில் அவன் கர்த்தரின் துணையுடனே கோலியாத்தை பயமின்றி போராடி முறியடித்தபோது நிரூபித்துக் காட்டினான்.

தேவன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றவும் நாம் எப்படி இருக்கவேண்டுமென அவர் விரும்புகிறாரோ அப்படி நாம் மாறத்தக்கதாக அவர் நமக்கு உதவவும் அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இருதயங்களை அவருக்கு ஒப்புக்கொடுப்பதிலிருக்கிறது, என்று இந்த கதை போதிக்கிறது. ஒரு வழக்கறிஞரிடம், அவர் கட்டளையிட்டார், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக.” தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடம், அவர் கூறினார், “இதோ, இருதயத்தையும் உற்சாகமான மனதையும் கர்த்தர் கேட்கிறார்.” மேலும், நேபியர்களுக்கு, உயிர்த்தெழுந்த இரட்சகர் இந்த அழைப்பை வழங்கினார்: நீங்கள் நொறுங்குண்ட இருதயத்தையும், நருங்குண்ட ஆவியையும் எனக்கு பலியாக செலுத்துங்கள்.

அது ஏன் முக்கியமானது? நமது இருதயங்கள் முழுமையாக அவரிடம் திரும்பினால், அவருடைய பாவநிவாரண பலியின் காரணமாக, நமது அநித்திய சவால்களை சமாளிக்கவும், சோதனையை எதிர்க்கவும், வழிகாட்டுதலையும் புரிதலையும் பெறவும், நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உணரவும் நமக்குத் தேவையான பெலத்தினாலும் ஆவிக்குரிய வரங்களினாலும் நாம் ஆசீர்வதிக்கப்படலாம் என்று இரட்சகர் போதித்தார். “சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்.” அவர் “பெலவீனமுள்ளவைகளைப் பெலமுள்ளவைகளாக்கி” இந்த இம்மைக்குரிய வாழ்வில் நாம் வெற்றிபெற்று நித்திய ஜீவனைப் பெறத்தக்கதான காரியங்கள் அனைத்திலும் நம்மை ஆசீர்வதிப்பார் என்றார். “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்”.

எல்லா நேரங்களில் செய்யாவிட்டாலும் கூட இதனால்தான் இயேசு கிறிஸ்து தம்முடைய பூலோக ஊழியத்தில் அடிக்கடி வேதபாரகரையும் பரிசேயரையும் திருத்தினார் என நான் நம்புகிறேன். அவருடைய நியாயப்பிரமாணத்தைக் கருத்தாய் கைக்கொண்டிருந்தாலும், அவர்கள் தவறான காரியங்களுக்காக அப்படி செய்தார்கள். அவர் அவர்களை கடிந்து: “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது,” என்றார்.

இது நம் வார்த்தையும் செயலுமான நாம் முன்னெடுப்பவைகள் மாத்திரமல்ல, நம்முடைய விருப்பங்களையும் நோக்கங்களையும் உள்ளடக்கியதும், நாம் செய்ய வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறதுமானவைகளை, நாம் செய்வதற்கும் முகாந்திரமாயுமிருக்கிறது என்பதே அவருடைய சீஷர்கள் யாவருக்குமான தெளிந்த நினைவூட்டலாய் இருக்கிறது. அவர்: “ஏனெனில், அவர்களுடைய கிரியைகளின் படியும், அவர்களுடைய இருதயங்களின் வாஞ்சைகளின் படியும் கர்த்தராகிய நான் எல்லா மனுஷர்களையும் நியாயந்தீர்ப்பேன்” என்றார். நம்முடைய பரலோக பிதா தம்முடைய பிள்ளைகளிடத்திலிருந்து இயந்திரத்தனமான கீழ்ப்படிதல், சேவை ஆகிய செயல்களுக்கும் மிஞ்சியவற்றை எதிர்பார்க்கிறார். நாம் அவரை முழு இருதயத்தோடு நேசிப்பதால், நாம் அந்தக் காரியங்களை உண்மையான நோக்கத்துடன் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவரைப்போல ஆகவேண்டுமென்ற ஆசை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இப்போது, ​​நமது இருதயங்களின் ஆவிக்குரிய ஆரோக்கியம் இரட்சகரின் முக்கிய அக்கறையாக இருந்தால்—அவர் ஒரு உண்மையான சீடரிடம் எதை எதிர்பார்க்கிறார் —நம் இருதயத்தை எவ்வாறு ஆராய்ந்து, அது தேவனின் பார்வையில் சரியானதா என்பதை அறிய முடியும்?

சமீபத்தில் நானும் என் மனைவியும் போர்ச்சுகல் தேசத்தில் எங்களுடைய ஊழியத்திலிருந்து வந்தபிறகு, எங்களின் உடல்நிலையைக் குறித்து அறிந்துகொள்ள உடல்நல சோதனைகள் பலவற்றை எடுத்தோம். அந்த சோதனைகளில் சில நமது இருதய ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டிருந்தன—இரத்தப் பரிசோதனைகள், எக்கோ கார்டியோகிராம்கள் மற்றும் மன அழுத்தப் பரிசோதனைகள் போன்றவை. நம்முடைய இருதயத்தின் ஆவிக்குரிய நிலையை நாம் அறியத்தக்கதாக இரட்சகர் ஆவிக்குரிய சோதனைகளின் தொகுப்பையும் நமக்கு கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன். நான் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

ஆவிக்குரிய சோதனைகள் மூலம் உங்கள் இருதயத்தை மதிப்பிடுதல்

முதலாவதாக, நம்முடைய கவனம், முன்னுரிமைகள், மற்றும் நோக்கங்கள்

“உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என்று இயேசு போதித்தார். பொக்கிஷம் என்பது நமக்கு விலைமதிப்புமிக்கது, அதற்காக நாம் முயற்சியும் சிரத்தையும் எடுக்கிறோம். நம்முடைய நேரத்தை எங்கு செலவிடுகிறோமோ, சிதறாமல் நம்முடைய கவனத்தை எதன் மீது வைக்கிறோமோ, நாம் செயல்படுத்த எது நம்மை உந்துகிறதோ, அவைகள் நம்முடைய இருதயங்களைப் பற்றி அநேகவற்றை சொல்லுகின்றன. அநேகர் அவரால் அழைக்கப்பட்டிருப்பினும் சிலரே தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், “ஏனெனில் அவர்களின் இருதயங்கள் இந்த உலகத்தின் காரியங்கள் மீது மிகுதியாக இருக்கிறது, மனுஷர்களின் புகழை வாஞ்சிக்கிறது” என்று இரட்சகர் எச்சரித்தார். நான் என்னுடைய வாழ்க்கையில் இரட்சகரை முதன்மையாக வைக்கிறேனா? நான் செய்கிற எல்லாமும் அவரின் மகிமைக்கென்ற ஒரே நோக்கத்துடன் இருக்கிறதா?

இரண்டாவதாக, தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமது இசைவு

வேதம் முழுவதும், கர்த்தரும் அவருடைய தீர்க்கதரிசிகளும், பெருமையையும் கீழ்ப்படியாமையையும் கடின இருதயத்துடன் தொடர்புபடுத்தியுள்ளனர். நேபி தன் சகோதரர்களிடத்தில்: “நீங்கள் ஏன் கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்வதில்லை? உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம், நீங்கள் ஏன் அழிந்துபோகிறீர்கள்?“ என்று உபதேசித்தான். மிசௌரியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு, கர்த்தர்: “தான் கட்டளையிடப்படும்வரை எதையும் செய்யாதவனும், இருதயத்தில் சந்தேகத்தோடு ஒரு கட்டளையை பெறுகிறவனும், சோம்பேறித்தனத்தோடு அதைக் கைக்கொள்ளுகிறவனுமான அவன் ஆக்கினைக்குள்ளாவான்” என்று எச்சரித்தார். தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதில் பூரணத்தை இரட்சகர் எதிர்பார்ப்பதில்லை என்றாலும் நாம் அவைகளை நம்முடைய முழு இருதயத்தோடு கைக்கொள்ள வாஞ்சிக்கவும் முயற்சிக்கவும் வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

மூன்றாவதாக, வேதங்களைப் படிப்பதிலும் வெளிப்பாட்டைத் தேடுவதிலும் நமது விடாமுயற்சி.

ஆலிவர் கௌட்ரிக்கு கர்த்தர்: “இந்த வார்த்தைகளை உனது இருதயத்துக்குள் பொக்கிஷப்படுத்து,” என்று அறிவுரை கூறினார். நாம் வேதங்களைக் கருத்தாய் ஆராயவும், பரிசுத்த ஆவியின் வல்லமையால், நமது இருதயங்களில் சுவிசேஷத்தின் உண்மைத்தன்மையின் புரிதலையும் சாட்சியையும் பெற முயலவும் அழைக்கப்படுகிறோம்.

துன்மார்க்க இராஜாவாகிய நோவாவின் ஆசாரியர்கள் அப்படிச் செய்யாததற்காக அவர்களை தீர்க்கதரிசியாகிய அபிநாதி: “நீங்கள் உங்கள் இருதயங்களிலே புரிந்துகொள்ளாததினிமித்தம், புத்திமான்களாய் இருக்கவில்லை” என்று கடிந்துகொண்டார். வேதவாக்கியங்களை அனுதினமும் படித்து, ஜெபத்தின் மூலம் அவற்றைப் புரிந்துகொள்ளும்படி என் இருதயத்தைப் பிரயோகப்படுத்த நான் உண்மையாக முயற்சிக்கிறேனா?

நான்காவதாக, நமது எண்ணங்களும் வார்த்தைகளும்

“இருதயத்திலிருந்து பொல்லாப்பான எண்ணங்கள் புறப்பட்டுவரும்” என்றும் “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்றும் இரட்சகர் போதித்தார். நமது எண்ணங்கள், வார்த்தைகள் ஆகியவைகளின் தரம் நமது இருதயங்களின் தூய்மையைக் காட்டும் ஒரு நல்ல குறிகாட்டியாகும். மற்றவர்களின் செயல்கள் அல்லது நோக்கங்களைப் பற்றியோ, அல்லது என்னைப் பற்றியோ கூட நான் அதிகமாக எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறேனா? நான் மற்றவர்களை நியாயந்தீர்க்கவும், ஆக்கினைக்குள்ளாக நிதானிக்கவும் துரிதமாக முற்படுகிறேனா? என்னுடைய தவறுகளுக்கு சாக்குப்போக்குகளை தேடவோ அல்லது நியாயப்படுத்தவோ முற்படுகிறேனா? என் வார்த்தைகள் எப்படிப்பட்டதோ? அவை என்னைச் சுற்றியுள்ளவர்களை உயர்த்தி ஊக்கமளிக்கின்றனவா? அல்லது அவை பெரும்பாலும் மோதலையும் வெறுப்பையும் உருவாக்குகின்றனவா?

எனது உடல் பரிசோதனைகள் முடிந்த பிறகு, ஏக முடிவாக, எனது இருதயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சில கவலை தரக்கூடிய விஷயங்கள் தீவிரமடைவதற்கு முன்பாகவே, இப்பொழுதே கவனிக்கப்பட வேண்டும் என்றும் என் மருத்துவர் என்னிடம் கூறினார். பின்னர் அவர் சில வாழ்க்கை முறை மாற்றங்களைப் பரிந்துரைத்தார். அதேபோல், உங்கள் இருதயத்தின் இந்த ஆவிக்குரிய மதிப்பீட்டைச் செய்து ​​சில எதிர்மறை அறிகுறிகள் உள்ளே வரத் தொடங்குவதைக் கவனிக்கும்போது, ​​தயவுசெய்து பீதி அடைய வேண்டாம்! உங்களுக்கு உதவ இரட்சகர் சிறந்த ஆவிக்குரிய மருந்தையும் சிகிச்சையையும் வழங்கியுள்ளார். அவர் உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்! உங்கள் இருதயத்தின் ஆவிக்குரிய பெலத்தை மேம்படுத்தக்கூடிய சில செயல்கள் இங்கே:

உங்கள் இருதயத்தின் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

முதலாவதாக, கிறிஸ்துவுடனான உங்கள் உறவை வலுப்படுத்துங்கள்.

கிறிஸ்துவிடம் நெருங்கி வர நாம் அனுதினமும் நேரத்தை அர்ப்பணிக்கும்போது, ​​நம் இருதயங்கள் மாற்றமடைகின்றன. தினசரி வேதப் படிப்பு, ஊக்கமான ஜெபம், வழக்கமான உபவாசம் ஆகியவைகளுடன் சேர்ந்து, இரட்சகர் மீதான உங்கள் அன்பை அதிகரித்து, உங்கள் விசுவாசத்தையும் மனந்திரும்புவதற்கான விருப்பத்தையும் பலப்படுத்தி உங்கள் இருதயத்தை தாழ்மையுடனே தேவனிடம் ஒப்படைக்கும். நேபியின் இந்த உதாரணத்தை எண்ணிப்பாருங்கள்: “நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன். இதோ அவர் என்னைச் சந்தித்து, என் இருதயத்தை மிருதுவாக்கினபடியால், என் தகப்பனால் பேசப்பட்ட எல்லா வார்த்தைகளையும் நான் விசுவாசித்தேன்.”

நாம் விசுவாசத்தின் விதையை நமது நீதியுள்ள விருப்பங்களாலும் செயல்களாலும் தொடர்ந்து போஷிக்கும்போது ​​நேபியர்களைப் போலவே நமது இருதயங்களின் பரிசுத்தமாகுதலையும் அனுபவிப்போம்: “அவர்கள் இருதயம் தூய்மையாக்கப்பட்டு, தேவனிடம் தங்கள் இருதயங்களைக் கொடுப்பதினிமித்தமே வருகிற சுத்திகரிப்பினால் சுத்திகரிக்கப்படுமளவிற்கும், அவர்கள் ஆத்துமாக்கள் சந்தோஷத்தாலும், ஆறுதலாலும் நிரப்பப்படும் வரைக்குமாய், அவர்கள் உபவாசமிருந்து, அடிக்கடி ஜெபித்து, தங்கள் தாழ்ச்சியில் மிகுந்த பெலனாயும், கிறிஸ்துவின் விசுவாசத்தில் மிக்க உறுதியாயும் இருந்தார்கள்.”

இரண்டாவதாக, உங்கள் சித்தத்தை அவருடைய சித்தத்துடன் ஒன்றிணங்க செய்க

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று இரட்சகர் போதித்தார். அவரோடு உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் காத்துக்கொள்வதன் மூலம் நமது அன்பை வெளிப்படுத்த அவர் நம்மை அழைக்கிறார். நாம் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள தினமும் சிரத்தை எடுத்து, ​​நமது பாவங்களிலிருந்து உண்மையாய் மனந்திரும்பி, அவருடைய நாமத்தை எடுத்துக்கொள்வதில் நிலைமாறாமல் இருந்து, நம்முடைய சித்தத்தை அவருடைய சித்தத்துடன் ஒன்றிணைக்கும் போது பரிசுத்த ஆவியின் நீங்காத தோழமைத்துவத்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.

நேபி சாட்சியமளித்ததாவது: “ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவினுடைய நாமத்தை, தங்கள்மீது எடுத்துக்கொள்ள மனதுள்ளவர்களாயிருக்கிறீர்கள், என பிதாவுக்குச் சாட்சியளித்து, தேவசமுகத்தில், உள்ளத்தின் முழுநோக்கத்தோடும், மாய்மாலம் புரியாமலும், வஞ்சிக்காமலும், போலியற்ற விருப்பத்தோடும் இருந்து, குமாரனைப் பின்பற்றுவீர்களானால், … இதோ, பரிசுத்த ஆவியானவரைப் பெறுவீர்கள்” என்று அறிந்திருக்கிறேன். பரிசுத்த ஆவி உங்களை வழிநடத்தி, கர்த்தருடைய சித்தத்தை அறிந்துகொள்ளவும், நல்ல தேர்வுகளைச் செய்யவும் உங்களுக்கு உதவுவார்.

கடைசியாக, உங்கள் முழு இருதயத்தோடு தேவனுக்கும் மற்றவர்களுக்கும் ஊழியம் செய்யுங்கள்

இரட்சகர் உங்கள் அனைவரையும் “உங்கள் முழு இருதயத்தோடு, அவருக்கு ஊழியம் செய்ய” அழைக்கிறார். கட்டளைகளைக் கைக்கொள்ளுதல், திருவிருந்தை எடுத்தல், ஆலயத்தில் ஆராதித்தல், மற்றவர்களுக்கு ஊழியம் செய்தல் போன்ற கர்த்தர் நம்மிடம் கோருகின்ற ஒவ்வொரு காரியத்தையும் அக்கறையுள்ள இருதயத்தோடும், உண்மையான நோக்கத்தோடும் செய்ய நாம் தேர்ந்தெடுக்கும்போது, ஊழியம் மற்றும் ஆராதனை ஆகியவையின் ஒவ்வொரு தருணமும் நம்முடைய விசுவாசத்தையும் சாட்சியத்தையும் பெலப்படுத்தி நம்முடைய தேவனுக்கும் நம்முடைய சகமனுஷருக்குமான சந்தோஷத்தாலும் அன்பாலும் நம்முடைய இருதயங்களை நிரப்புகிற ஒரு வல்லமையான ஆவிக்குரிய அனுபவமாக மாறுகிறது.

தீர்க்கதரிசி ஆல்மாவின் கேள்வி இன்றும் எதிரொலிக்கிறது: நீங்கள் தேவனில் ஆவிக்குரிய பிரகாரம் ஜென்மித்தீர்களா? உங்களுடைய முகரூபத்தில் அவரின் சாயலைப் பெற்றீர்களா? இந்த பெரும் மாற்றத்தை உங்கள் இருதயங்களிலே பெற்ற அனுபவமுண்டா?

சகோதர சகோதரிகளே, இன்று உங்கள் முழு இருதயத்தையும் இரட்சகருக்குக் கொடுக்க நான் உங்களை அழைக்கிறேன். ஒவ்வொரு ஆராதனையும் சேவையும் நேர்மையானதாகவும் நோக்கமுடையதாகவும் இருக்கட்டும். உலகத்தின் கவனச்சிதறல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்காக அர்த்தமுள்ள நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். மனந்திரும்பி, உங்கள் முழு இருதயத்தோடு அவரிடம் திரும்புங்கள், அவர் உங்களை மன்னித்து, அவருடைய அன்பின் கரங்களில் உங்களைச் சூழ்ந்து கொள்வார். இந்த உலகத்தின் காரியங்களைத் தேடாதீர்கள், ஆனால் அவருடைய மகிமைக்கென்ற ஒரே நோக்கத்துடன், சிறந்தவற்றின் காரியங்களைத் தேடுங்கள். அவர் உங்கள் எண்ணங்களையும் உங்கள் இருதயத்தின் விருப்பங்களையும் அறிந்திருக்கிறார், நீங்கள் அவரிடம் வரும்போது, ​​அவர் இந்த வாழ்க்கையில் உங்களை பெலன், நம்பிக்கை, சமாதானம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவையினாலும் நித்தியத்திற்கும் அவருடைய பரலோக ராஜ்யத்தில் ஒரு ஸ்தலத்தாலும் ஆசீர்வதிப்பார்.

இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என நான் அறிந்திருக்கிறேன். அவர் நமது மீட்பர். அவர் உங்களையும் என்னையும் தம்முடைய முழு இருதயத்தோடு நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.