போய் அந்தப்படியே செய்
சேவைப் பணிகளுக்கு அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் நமக்கு முன்மாதிரிகளாக இருக்கின்றனர்.
இரட்சகர் பெத்சாயிதா வழியாகப் பயணித்தபோது, சிலர் குருடன் ஒருவனை அவரிடம் அழைத்து வந்தனர். ஒருவேளை அவர்கள் ஒரு அதிசயத்தை நேரில் காண எதிர்பார்த்திருக்கலாம். இரட்சகர் “குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய்,” அவனைத் தனியாகக் குணப்படுத்தினார். ஆரம்பத்தில், குணப்படுத்துதல் குறைவான பலனைத் தந்தது. அந்த மனுஷன் “ஏறிட்டுப்பார்த்து, நடக்கிற மனுஷரை மரங்களைப்போல் காண்கிறேன்” என்றான். இயேசு இரக்கமுள்ளவராக, “மறுபடியும் அவனுடைய கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப்பார்க்கும்படி செய்தார்.” இரட்சகரின் கைகளின் கூடுதல் தொடுதலால், அந்தக் குருடன் இப்போது “தெளிவாய்க் கண்டான்.”
இரட்சகரின் வாழ்க்கை எவ்வாறு பணிவான சேவைச் செயல்களால் வகைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவர் “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய வந்தார்“ என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். பின்னர், கூடுதல் மைல் தூரம் சென்று, தம்மிடம் கேட்பவர்களுக்குக் கொடுத்து, நாம் பிறனிடத்தில் அன்புகூர்வதின் மூலம் தமது உதாரணத்தைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார். எனக்குப் பிறன் யார்? என்று கேட்கப்பட்ட போது, “போய் அந்தப்படியே செய்” என்று கட்டளையுடன் கிறிஸ்து நல்ல சமாரியன் உவமையை பகிர்ந்து கொண்டார்.
பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஊழியக்காரர்கள், கிறிஸ்து நம்மை நல்ல சமாரியனாக மாற அழைக்கும் தற்கால உதாரணங்களாக இருக்கிறார்கள். சேவைப் பணிகளுக்கு அழைக்கப்பட்ட ஊழியக்காரர்களை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். சேவை எப்படி (1) இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு இருதயங்களைத் திறக்கிறது என்பதற்கும், (2) நம் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் நம் அனைவரையும் ஊழியம் செய்ய அனுமதிக்கிறது என்பதற்கும், (3) கிறிஸ்துவினுடைய வல்லமையை நம் வாழ்க்கையில் கொண்டுவருகிறது என்பதற்கும் அவர்கள் நமக்கு உதாரணங்கள்.
முதலாவதாக, சேவை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு இருதயங்களைத் திறக்கிறது.
கி.மு. 91-ல், அம்மோன், ஒரு மார்மன் புஸ்தக ஊழியக்காரன், தன்னை லாமோனி ராஜாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, “நான் சாகும் நாள் வரைக்கும், இந்த ஜனத்திற்குள்ளே வாசமாயிருக்க வாஞ்சையாயிருக்கிறேன் … [மேலும்] நான் உமது ஊழியக்காரனாய் இருப்பேன்,” என்று கூறினான். ராஜாவுக்கு அவன் செய்த சேவையின் காரணமாக, அம்மோனுக்கு “தைரியமாகப் பே[சவும்], … [லாமோனி ராஜாவிடம்], …எந்த வல்லமையைக் கொண்டு“ தனது சேவையைச் செய்தான் என்பதைச் சொல்லவும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்குப் பதிலாக, “[அம்மோன்] விரும்புகிற எதையும் … [ராஜா] தருவேன்“ என்று ராஜா வாக்குறுதி அளித்தான். அம்மோனின் ஒரே வேண்டுகோள், ராஜா இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் செய்தியைக் கேட்க வேண்டும் என்பதுதான். அம்மோனின் சேவை “மனந்திரும்புதலுக்குள்ளாக ஆயிரமாயிரம் ஆத்துமாக்களைக் கொண்டு வரும்படியாக“ முடிந்தது.
நமது நாட்களில், சேவை மற்றவர்களை சுவிசேஷத்திற்கு வழிநடத்திச் செல்கிறது. சகோதரி பெவன் ஒரு கற்பிக்கும் ஊழியக்காரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியதால், சிகிச்சைக்காக வீடு திரும்ப வேண்டியிருந்தது. அப்பணியை விட்டு வருவதற்குப் பதிலாக, வீட்டிலிருந்தே ஒரு சேவை ஊழியக்காரியாகத் தொடர்ந்து பணியாற்ற முடிந்தது.
ஒரு பூங்காவுக்குச் சென்றபோது, சகோதரி பெவனும் சிநேகிதி ஒருத்தியும் நான்கு இளம் குழந்தைகளின் தாயிடம் பேசத் தூண்டப்பட்டனர், ஆனால் அவர்கள் தயங்கினர், குடும்பம் விலகிச் சென்றுவிட்டது. மறுநாள், இந்தக் குடும்பம் அங்கே இருக்க வேண்டும் என்று ஜெபம் செய்தவர்களாய் அவர்கள் பூங்காவிற்குத் திரும்பிப் போனார்கள். அதிசயமாக, அந்தத் தாய் முந்தைய நாள் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். இம்முறை சகோதரி பெவனும் அவளது சிநேகிதியும் அந்தத் தாயை அணுகி, அவளைப் பற்றி அறிந்துகொண்டு, அவளுக்கு உலகப்பிரகார உதவி மிகவும் தேவைப்படுவதைக் கண்டறிந்தனர். அவர்கள் உதவி செய்து, பின்னர் சுவிசேஷத்தைப் பற்றி அறிய அவளை அழைத்தார்கள்.
அந்த சேவை மற்றும் அழைப்பின் காரணமாக, தாயும் அவளது மூத்த பிள்ளையும் ஞானஸ்நானம் பெற்றனர், அதைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து அடுத்த மூத்த பிள்ளை ஞானஸ்நானம் பெற்றது. அவர்கள் இன்று ஆர்வமிக்க உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அனுபவம் தெய்வீக உணர்த்துதலினாலானது என்பதை சகோதரி பெவன் அறிந்திருந்தாள், மேலும் அது “தேவன் [அவர்] எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று சித்தம்கொண்டிருந்தாரோ அந்த இடத்தில் [அவர்] இருப்பதை நிரூபித்தது.”
அம்மோன் மற்றும் சகோதரி பெவனைப் போல, நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது, “நல்ல உதாரணங்களாக அவர்களுக்கு இருக்கும் பொருட்டும்“, மேலும் அவர்கள் “[நம்மில்] இருக்கும் நம்பிக்கையைக் குறித்து விசாரித்துக் கேட்கவும்“ விரும்புகிறார்கள்.
இயேசு நம்மை “போய் அந்தப்படியே செய்” என்று அழைக்கிறார்.
இரண்டாவதாக, நமது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஊழியம் செய்ய சேவை நம் அனைவரையும் அனுமதிக்கிறது.
“ஒவ்வொரு தகுதியான, திறமையான வாலிபனையும் ஊழியத்திற்குத் தயாராகவும் சேவை செய்யவும்,” மேலும் ஒவ்வொரு திறமையான இளம் சகோதரியையும் “கர்த்தர் [தன்னை] ஊழிய சேவை செய்யும்படி விரும்புகிறாரா என்பதை அறிய ஜெபிக்க வேண்டும்” என்றும் தலைவர் ரசல் எம். நெல்சன் அழைப்பு விடுத்தார். “மனமாற்றம் செய்யும் ஊழியமோ அல்லது சேவை ஊழியமோ எதுவாக இருந்தாலும், ஊழியம் செய்வதென்ற உங்கள் முடிவு உங்களையும் அநேகரையும் ஆசீர்வதிக்கும்” என்று அவர் வாக்களித்தார். சேவை ஊழியங்கள் இயலும் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மாற்றிப்போட்டன. இப்போது கர்த்தருக்காக முழுநேர ஊழியம் செய்ய விரும்பும் ஒவ்வொரு தகுதியான வாலிபனும் இளம் பெண்ணும், மிகக் குறைந்த விதிவிலக்குகளுடன், ஊழியம் செய்யலாம்.
தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் சேவை செய்ய முடியும் என்பதற்கு மூப்பர் ஹோல்கடோ ஒரு எடுத்துக்காட்டு. அவர் ஒரு அரிய மரபணு கோளாறுடன் பிறந்தார், இது அவரை ஒரு கற்பிக்கும் ஊழியத்தில் பணியாற்றுவதைத் தடுத்தது. மூப்பர் ஹோல்கடோ ஒரு சேவை ஊழியராக அழைக்கப்பட்டு, ஆயர்களின் பண்டகசாலையில் தன்னார்வத் தொண்டு செய்தார், அங்கு மற்றவர்கள் தேவையான உதவிகளைப் பெற அவர்களுக்கு அவர் உதவினார். அவர் அலமாரிகளில் பொருட்களை சேமித்து வைத்தார், காய்கறிகளைப் பைகளில் அடைத்தார், அட்டைப் பெட்டிகளை சுருக்கினார்.
தனது ஊழியத்திற்குப் பிறகு திருவிருந்துக் கூட்டத்தில் மூப்பர் ஹோல்கடோ பேசுகையில், “தேவனுக்கு சேவை ஊழியர்கள் தேவை என்பதைப் பகிர்ந்தார். மற்றவர்களை நேசிக்கவும் சேவை செய்யவும்அவருக்கு ஜனங்கள் தேவை. இந்த ஜனங்கள் கழிப்பறை காகிதங்களை அடுக்கி வைக்கிறார்கள், ப்ரோக்கோலியை பைகளில் வைக்கிறார்கள், மரச்சாமான்கள் உருவாக்குகிறார்கள், மக்களுக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள்” என்று பகிர்ந்து கொண்டார்.
நன்மை செய்ய உங்களுக்கு சேவைப் பணியோ அல்லது பெயர்ப்பட்டையோ தேவையில்லை. சேவை செய்யும் ஒவ்வொரு செயலும் இரட்சகரால் அங்கீகரிக்கப்படுகிறது. அன்பான தயவுடன் சேவை செய்வதன் மூலம், மற்றவர்கள் கிறிஸ்துவிடம் வர நாம் அனைவரும் உதவ முடியும். நாம் அனைவரும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் கிறிஸ்துவின் நாமத்தில் ஒருவருக்கு ஊழியம் செய்து, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தின் முன்மாதிரிகளாக வாழலாம். சேவை நம்மை தேவனுக்குப் பிரியமான ஜீவ பலிகளாக கொடுக்க அனுமதிக்கிறது.
இயேசு நம்மை “போய் அந்தப்படியே செய்” என்று அழைக்கிறார்.
மூன்றாவதாக, சேவை கிறிஸ்துவின் வல்லமையை நம் வாழ்வில் கொண்டுவருகிறது
ஒரு கற்பித்தல் பணியிலிருந்து சேவை பணிக்கு மாற்றப்பட்ட ஒரு இளம் ஊழியக்காரர், சில தனிப்பட்ட சவால்களுடன் போராடினபடியால் கிறிஸ்துவின் குணப்படுத்தும் வல்லமை அவருக்குத் தேவைப்பட்டது. அர்ப்பணிப்புள்ள சேவை அந்த வல்லமையை அவரது வாழ்க்கையில் கொண்டு வந்தது. “நான் போராடும்போது, கிறிஸ்து என்னை உயர்த்துவதை உணர முடிந்தது. உணவுப் பண்டகசாலையின் மூலமாகவும், ஆலயத்திலும், அவருடைய சுவிசேஷத்தின் மூலமாகவும் அவர் மக்களை ஆசீர்வதிப்பதைக் காண்பதில் ஒரு சிறப்பு இருக்கிறது.”
இந்த மூப்பர் ஆழ்ந்த மகிழ்ச்சியை உணரத் தொடங்கினார், மேலும் அவர் புதிதாகக் கண்டறிந்த உற்சாகம் அவரையும் அவரது முழு குடும்பத்தையும் ஆசீர்வதித்தது. ஆவியானவர் அவர்களுடைய இல்லத்தில் அபரிமிதமாக பிரவேசித்தார். அவர்கள் தொடர்ந்து ஒன்றாக ஆலயத்திற்குச் சென்றார்கள், கிறிஸ்துவின்மேல் அவர்களுடைய குடும்பம் அதிக கவனம் செலுத்தியது. கிறிஸ்து தனது உயிரைக் காப்பாற்றி, சேவையின் மூலம் தனது குடும்பத்தை ஆசீர்வதித்தார் என்று இந்த ஊழியக்காரர் நம்புகிறார்.
“ஒருவர் மற்றவர்களுக்கு சேவை செய்து பெலப்படுத்த மனமுவந்திருத்தல், அவர் இரட்சகரின் மீட்பின் வல்லமையால் குணமடைய தயாராக இருத்தலின் அடையாளமாகும்” என்று தலைவர் நெல்சன் போதித்தார்.
இயேசு நம்மை “போய் அந்தப்படியே செய்” என்று அழைக்கிறார்.
சேவை ஊழியக்காரர்கள் இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிக்கப்பட்ட சீஷர்களுக்கான எடுத்துக்காட்டுகள்.
நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரோ ஒரு சேவை ஊழியக்காரராக அழைக்கப்பட்டால், அது கொண்டாடப்பட வேண்டிய தருணம். உங்கள் குடும்பத்தில் இப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு தனித்துவமான பிரதிநிதி உங்கள் வீட்டில் வசிக்கிறார். அது உங்கள் அனைவரையும் நன்மைக்கேதுவாக மாற்றும். சேவை செய்வதற்கான எந்தவொரு அழைப்பிலும் ஏமாற்றம் இருக்கக்கூடாது. “நீர் எங்கே போக விரும்புகிறீரோ அங்கே நான் போவேன்“ என்றும், “நீர் எப்படி இருக்க விரும்புகிறீரோ அப்படியே நான் இருப்பேன்“ என்றும் நாம் பாடுகிறோம். நாம் சொல்வதை உண்மையிலேயே செய்கிறோம் என்பதைக் காட்ட இதோ ஒரு வாய்ப்பு!
சேவை செய்யும் உங்கள் அனைவரையும், குறிப்பாக 4,000 க்கும் மேற்பட்ட இளம் ஊழியக்காரர்களாகிய உங்களை நாங்கள் நேசிக்கிறோம்! கற்பிக்கும் ஊழியக்காரர்கள் கர்த்தருடைய வாயென்றால், சேவை ஊழியக்காரர்கள் கர்த்தருடைய கரங்களாய் இருக்கிறார்கள், எனவே நீங்கள் இரண்டாம் தரத்தவர் அல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் இஸ்ரவேல் கூடுகைக்கு இன்றியமையாதவர்கள். “தேவனுடன் தங்கள் உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்வதற்கு எவருக்கும் உதவும் எதையும் நாம் செய்யும்போதெல்லாம், இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க நாம் உதவுகிறோம்“ என்று தலைவர் நெல்சன் கற்பித்தார்.
சேவை ஊழியக்காரர்களாகிய நீங்கள் ஒவ்வொரு நாளும் பல வழிகளில் இஸ்ரவேலைச் கூட்டிச் சேர்க்கிறீர்கள், உங்கள் சேவை வாழ்க்கையை மாற்றுகிறது. பெரும்பாலும் உங்கள் சேவையின் பயனாளி யார் என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் தேவனுக்குத் தெரியும். “இவர்களில் மிகச் சிறியவர்களில் ஒருவருக்கு நீங்கள் செய்யும் [சேவையானது], … நீங்கள் [அவருக்கு செய்யும் சேவையே]“ என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சபை அழைப்பு மையங்களில் தன்னார்வத் தொண்டு செய்யும்போது உங்கள் குரல்களை நாங்கள் கேட்கிறோம்; சமூக அமைப்புகளில் நீங்கள் உதவும்போது உங்கள் புன்னகையை நாங்கள் காண்கிறோம்; மேலும் ஆலயங்களில் நீங்கள் சேவை செய்யும்போது உங்கள் வெளிச்சத்தை நாங்கள் உணர்கிறோம். பசியாயிருப்போருக்கு போஜனமளிக்கிறீர்கள் வஸ்திரமில்லாதவருக்கு வஸ்திரமளிக்கிறீர்கள் தாகமாயிருப்போருக்குக் குடிக்கக் கொடுக்கிறீர்கள்.
நாம் யாவரும் போய் அந்தப்படியே செய்யவேண்டும்.
சேவையே கிறிஸ்துவின் சீஷர்களின் உயிர்நாடி
சேவையானது சுவிசேஷத்திற்கு இருதயங்களைத் திறக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது, மேலும் நம் அனைவரையும் கிறிஸ்துவுக்கு நம் முழு ஆத்துமாவையும் கொடுக்க அனுமதிக்கிறது. அது நம் இருதயங்களை அவரைப் போல ஆக மாற்றுகிறது, மேலும் இந்தச் செயல்பாட்டில், நாம் மற்றவர்களை உயர்த்துகிறோம். “ஆவிக்குரியச் சிதைவால் பாதிக்கப்பட்ட இந்த உலகில், தனிநபர்கள் … ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?” என்று தலைவர் நெல்சன் ஒருமுறை கேட்டார், அவருடைய பதில்: “ஆம்! … “மிகுந்த மகிமையில் தேவனுடைய வல்லமையால் … ஆயுதம் தரித்தவர்களாக கர்த்தருடைய உடன்படிக்கை ஜனம், … அனைத்து மனிதகுலத்தின் வாழ்க்கையையும் உயர்த்த முடியும்.“ சேவையின் மூலம் நாம் இருதயங்களையும் உலகத்தையும் மாற்றுகிறோம்.
கிறிஸ்து “நன்மைசெய்கிறவரா[ய்] சுற்றித்திரிந்தார். அவர் நோயாளிகளுக்கு ஊழியம் செய்தார், பார்வையற்றவர்களுக்கு பார்வை அளித்தார், ஒடுக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். அவர் உணவு சமைத்தார், திருமண விருந்துகளில் உதவினார், பசியால் வாடிய ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்தார். கிறிஸ்துவின் நாமத்தில் ஒருவருக்கு நாம் சேவை வழங்கும்போது, நாம் பரிசுத்தத்தில் பலுகி, நித்தியஜீவன் என்ற வரத்துக்கு தகுதி பெறுகிறோம். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். அவர் என்னுடைய மற்றும் உங்களுடைய இரட்சகர். அவர் நமது மீட்பர். ஊழியம் செய்வதில் அவர் நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போய் அந்தப்படியே செய்யவேண்டும் என்று நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.