பொது மாநாடு
பீடங்களில் பணிவான ஆத்துமாக்கள் மண்டியிடுகின்றன
அக்டோபர் 2025 பொது மாநாடு


11:24

பீடங்களில் பணிவான ஆத்துமாக்கள் மண்டியிடுகின்றன

நாம் நமது உடன்படிக்கைகளைச் செய்து அவற்றை மதிக்கும்போது, ​​நாம் இரட்சகருடன் நம்மை இணைத்துக்கொள்கிறோம், அவருடைய இரக்கம், பாதுகாப்பு, பரிசுத்தப்படுத்துதல், குணப்படுத்துதல் மற்றும் ஓய்வுக்கு அதிக நெருக்கம் பெறுகிறோம்.

சேர்ந்திசைக் குழுவே, அந்தப் புதிய பாடலின் மூலம் உங்கள் சாட்சியத்திற்கு நன்றி.

“ஜீவ அப்பம், ஜீவத் தண்ணீர்“ என்ற புதிய திருவிருந்துப் பாடல் என் ஆத்துமாவை நிரப்புகிறது. இந்தப் பாடலின் ஒரு வரி, “இப்போது நான் பீடத்திற்கு முன்பாக வந்து, என் நொருங்குண்ட இருதயத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்“ என்று கூறுகிறது.

2015 ஆம் ஆண்டில் எங்கள் குடும்பம் கலிபோர்னியாவின் நியூபரி பார்க்கிலிருந்து யூட்டா ஆக்டன் ஊழியத்தில் பணியாற்ற புறப்பட்ட பிறகு, அந்த வார்த்தைகளைப் பற்றிய எனது புரிதல் விரைவில் ஆழமடைந்தது. யூட்டாவின் லேட்டனில் உள்ள ஹில் விமானப்படை தளத்தை சுற்றிப் பார்க்க நான் அழைப்பு பெற்றேன். நான் ஒருபோதும் இராணுவத் தளத்தில் இருந்ததில்லை, ஒரு இராணுவ மதகுருவையோ அல்லது தங்கள் நாட்டிற்குப் பாதுகாப்பு மற்றும் காவல் வழங்குவதற்காகப் பணியாற்றும் ஆண்களையும் பெண்களையும் சந்தித்ததில்லை.

உலகெங்கிலும் உள்ள நமது சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் இராணுவ நிலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர் மற்றும் தொழில்முறை மதகுருக்களைப் போலவே, சேப்ளைன் ஹார்ப் எனக்கு உணர்த்தி உயர்த்தினார். தளத்தில் எங்கள் கடைசி நிறுத்தம் ஆராதிக்குமிடம். சிந்திக்கவும், ஜெபிக்கவும், தியானிக்கவும், ஆராதிக்கவும் விரும்பும் அனைத்து மக்களுக்கும் அவர் சேவைகளை வழங்குகிறாரா என்று நான் மதகுருவிடம் கேட்டேன். அவர் ஆராதனைக்கூடத்தின் முன் சுவருக்குச் சென்று திரைச்சீலைகளுக்குப் பின்னால் இருந்து ஒரு சிலுவையை வெளியே எடுத்தார். அவர் சிலுவையை புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க சேவைகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறினார். அவர் நம் யூத சகோதர சகோதரிகளுக்கு என்ன பயன்படுத்தினார் என்று நான் கேட்டேன், அவர் முன் சுவரின் மறுபுறம் சென்று தாவீதின் நட்சத்திரத்தை வெளியே எடுத்தார்.

பின்னர் நான், “பிற்காலப் பரிசுத்தவான்களின் ஆராதனைகளுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் அந்த சின்னங்களைத் தள்ளிவிட்டு, ஆராதிக்குமிடத்தின் நடுவில் இருந்த பெரிய மரப் பீடத்தைச் சுட்டிக்காட்டினார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள் பீடத்தில் அப்பத்தையும் தண்ணீரையும் ஆயத்தம் செய்து ஆசீர்வதிப்பதாக அவர் கூறினார். நமது யூத, முஸ்லிம், கத்தோலிக்க அல்லது புராட்டஸ்டன்ட் சகோதர சகோதரிகளின் ஆராதனைகளுக்கு முன்பு, பெரிய, நிலையானதாகத் தோன்றுகிற பீடம் அகற்றப்பட்டதா என்று நான் கேட்டேன். பீடம் அப்படியே இருக்கிறது என்றும், ஏனெனில் அந்த மதங்களில் பலவும் ஏதோ ஒரு வகையில் பீடத்தைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, ஈசாக்கைக் கட்டி, தன் ஒரே குமாரனைப் பலியிடத் தயாராக இருந்தான், ஆனால் அவனுடைய கை நிறுத்தப்பட்டது, கர்த்தர் அறிவித்தது போல், “இதோ அடியேன்“ என்று அவன் அறிவித்தான்! எத்தனை முறை மகத்தானவரான இரட்சகர் அல்லது அவருடைய தீர்க்கதரிசிகளில் ஒருவர் “இதோ அடியேன்“ என்று முன்வந்துள்ளனர்?

பீடத்தை நெருங்குவதற்கு முன்பு நம் சகோதர சகோதரிகளுடன் ஒப்புரவாகுமாறு மலைப்பிரசங்கத்தின் போது, ​​இரட்சகர் நம்மை அழைத்தார். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் நாம் பீடத்தில் “பரிசுத்தப்படுத்தப்படுகிறோம்“ என்று பவுல் போதித்தான்.

தீர்க்கதரிசி லேகி “தன் வீட்டையும் … தன் விலைமதிப்பற்ற பொருட்களையும் விட்டுச் சென்றான். … [பின்பு] அவன் கற்களினால் ஒரு பலிபீடத்தைக்கட்டி, கர்த்தருக்குப் பலிசெலுத்தி, தேவனாகிய கர்த்தருக்கு நன்றி செலுத்தினான்.”

வேதாகமும் மார்மன் புஸ்தகமும் பீடங்களில் தேவ குமாரனை தொழுது கொள்ள நமக்குக் கற்பிக்கின்றன. ஏன்?

நமது முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் பலிபீடங்களைக் கட்டி தொழுது கொண்டனர். அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, “அநேக நாட்கள்“ தொழுது கொண்ட பிறகு, ஒரு தூதன் வந்து, நம் ஒவ்வொருவரிடமும் கேட்கக்கூடிய ஒரு சிந்தனையைத் தூண்டும் கேள்வியைக் கேட்டான்: “நீ ஏன் கர்த்தருக்கு பலிகளைச் செலுத்துகிறாய்?“

ஆதாம் பதிலளித்தான், “நான் அறியேன்.”

ஆதாமின் பணிவான ஒப்புதலுக்கு தூதனின் பதில் வியக்க வைக்கிறது: “இந்தக் காரியம் பிதாவின் ஒரேபேறானவரின் பலிக்கு ஒத்ததாயிருக்கிறது. … ஆகவே, நீ செய்கிற காரியம் யாவையும் குமாரனின் நாமத்தில் நீ செய்வாயாக, நீ மனந்திரும்பி, என்றென்றைக்குமாக குமாரனின் நாமத்தில் தேவனை தொழுது கொள்வாயாக.”

திருவிருந்து மேசையும் ஆலய பீடங்களும் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் அவரது அளவற்ற பாவநிவர்த்தியையும் அடையாளப்படுத்துகின்றன.

நாம் நமது உடன்படிக்கைகளைச் செய்து அவற்றை மதிக்கும்போது, ​​சபையில் திருவிருந்து நியமங்களையும், ஆலயத்தில் தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தலையும் பெறும்போது, ​​நாம் இரட்சகருடன் நம்மை இணைத்துக்கொள்கிறோம், அவருடைய இரக்கம், பாதுகாப்பு, பரிசுத்தமாக்குதல், குணப்படுத்துதல் மற்றும் ஓய்வுக்கு அதிக நெருக்கம் பெறுகிறோம்.

உடன்படிக்கைகள் மூலம் இரக்கம் மற்றும் பாதுகாப்பு

15 வயது இளைஞனாக, ஜனவரி மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு அமெரிக்க கால்பந்து விளையாட்டுக்காக திருவிருந்துக் கூட்டத்தைத் தவிர்க்கலாமா என்று என் அப்பாவிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்தத் தேர்வை நானே செய்யும் அளவுக்கு எனக்கு வயதாகிவிட்டது என்றும், ஒரு ஆலோசனையைப் பரிசீலிக்குமாறு அவர் கூறினார். அவர் சொன்னார், “நீ ஒரு முறை திருவிருந்தைத் தவறவிட்டால், மீண்டும் அதைத் தவறவிடுவது எளிது.”

இரட்சகர் சிறந்த இணைப்பாளராக இருந்தால், சத்துரு பிரிப்பவனாக இருப்பான். நம்முடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆராதனை தலங்களிலிருந்தும், இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பிலிருந்தும் நம்மைப் பிரிக்க சாத்தான் நம்மைத் தூண்டுகிறான். நாம் இரட்சகரை ஆராதிக்கும்போது, ​​“இயற்கையான உலக ஓட்டத்திற்கு எதிராகச் செல்லும் வல்லமையைப்“ பெறுகிறோம். நாம் அவருடன் ஐக்கியத்தில் நேரத்தைச் செலவிடும்போது, ​​“சாத்தானிடமிருந்து விடுவிக்கப்படுவோம்“ என்ற வாக்குறுதி நமக்குக் கிடைக்கிறது. “பின்னர், நமது உடன்படிக்கைகளை நாம் கைக்கொள்ளும்போது, அவருடைய … பலப்படுத்தும் வல்லமையுடனும் அவர் நம்மை தரிப்பிக்கிறார்.” பரிசுத்த பீடங்களில் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் மூலம் இரட்சகருடன் தொடர்பு கொள்ளும் அனுபவத்தை நான் மிகவும் போற்றுகிறேன்.

இரட்சகரின் நித்திய பாவநிவர்த்திபற்றி பிரமாணத்தின்மேல் பிரமாணமும் , கற்பனையின்மேல் கற்பனையும் புரிந்துகொள்ளுதலைக் கட்டியெழுப்புவதன் மூலம், சத்துருவின் சூழ்ச்சிகளுக்கு எதிராக ஒரு ஆவிக்குரிய தடுப்பூசியை வழங்குகிறது. மெக்சிகோவில் இளம் மூப்பர் ஜாகி, பெல்ஜியத்தில் ஜூஸ்டர் ஜாகி மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற ஊழியக்காரர்கள், தங்கள் நண்பர்கள் தொடர்பு கொண்ட முதல் வாரத்திற்குள் திருவிருந்தில் கலந்து கொண்டால், ஞானஸ்நானத்தின் ஆசீர்வாதங்களையும் பரிசுத்த ஆவியின் வரத்தையும் பெறுவதைக் காண அதிக வாய்ப்புள்ளது.

டோங்கா அல்லது சமோவாவில் ஒரு இளம் வயது வந்தவர், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் விரைவில் தங்கள் தரிப்பித்தலைப் பெறத் தயாராக இருந்தால், அவர்கள் கர்த்தருடைய வீட்டில் முத்திரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த தரிப்பித்தலில், உறுப்பினர்கள் வல்லமையையும் பாதுகாப்பையும் வழங்கும் ஐந்து பிரமாணங்கள்படி வாழவும், கீழ்ப்படியவும், கடைப்பிடிக்கவும் அழைக்கப்படுகிறார்கள். நாம் கர்த்தருடன் உடன்படிக்கைகளைச் செய்யும்போது, ​​ஒரு பரஸ்பர உறவு உருவாகிறது. நாம் அவருக்கு நமது விசுவாசத்தையும் அன்பையும் காட்டுகிறோம். ஒவ்வொரு வாக்குறுதியும் அளிக்கப்பட்டு, காப்பாற்றப்படும்போது நமது பலமும் வல்லமையும் வளரும்.

நினைவுகூரல் மற்றும் பரிசுத்தப்படுத்துதல்

நாம் தாழ்மையுடனும் அடையாளமாகவும் கர்த்தருடைய பீடங்களில் மண்டியிடும்போது, ​​“தேவனுக்கு முன்பாக [தாழ்மையாயிருந்து], … [நம்] இருதயங்களில் பெருமை கொள்ளாதவர்களாய் இருப்பது” நினைவுகூரலுக்கான ஒரு வாய்ப்பாகும், நான் இளைஞனாக இருந்தபோது என் நண்பர்களோடு வெளிய போவதற்கு முன்பு, என் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள், “நீ யார் என்பதை ஞாபகம் வைத்துக் கொள், வீட்டுக்கு வந்தபின் என்னை வந்து பார்.” சில இரவுகளில், நான் மிகவும் தாமதமாக வீட்டிற்கு வந்ததால், நான் அவரைப் பார்ப்பதை தவிர்த்தேன். அம்மாவுடனான அந்த முக்கியமான சந்திப்புகளைத் தவறவிட்டதற்கு நான் வருந்துகிறேன்.

இன்று, பரலோக பிதாவுடன் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் என் படுக்கைக்கு அருகில் மண்டியிட்டு ஜெபிக்கும்போது அல்லது குடும்பத்தினருடன் கூடியிருக்கும்போது, ​​பீடங்களில் மண்டியிட்டு, என் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து ஆராய்வதை நான் கற்பனை செய்கிறேன். நான் திருவிருந்து பற்றி நினைக்கிறேன், நமக்காக நொறுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட முழு ரொட்டித் துண்டுகள் ஒவ்வொன்றும் கூட, நமது மீட்பரின் உடைந்த சரீரத்தின் அடையாளமாகும். “ஒவ்வொரு ரொட்டித் துண்டும் தனித்துவமானது, அதைப் பகிர்ந்து கொள்ளும் நபர்கள் தனித்துவமானவர்கள் போல“ என்று தலைவர் டாலின் எச். ஓக்ஸின் போதனை எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் முழங்கால்படியிட்டு ஜெபிக்கும்போது, ​​தேவனுக்கு என் சித்தத்தை எவ்வாறு கொடுக்க முடியும் என்று சிந்திக்கிறேன்.

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தார், “திருவிருந்தின் நியமம் என்பது, பரிசுத்தமாகவும், உண்மையாக மனந்திரும்ப, திரும்பத் திரும்ப அழைப்பதாகவும், ஆவிக்குரிய விதமாக புதுப்பிக்கப்பட்டதாயுமிருக்கிறது.” திருவிருந்தில் பங்கேற்பது, தானாகவே பாவங்களை நீக்குவதில்லை. ஆனால், நாம் மனசாட்சியுடன் ஆயத்தப்பட்டு, நொறுங்குண்ட இருதயத்துடனும், நருங்குண்ட ஆவியுடனும் இந்த பரிசுத்த நியமத்தில் பங்கேற்கும்போது கர்த்தருடைய ஆவி எப்போதும் நம்மோடிருக்க நாம் வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்”. மேலும் நமது நிலையான தோழராக பரிசுத்த ஆவியின் பரிசுத்தப்படுத்தும் வல்லமையால், நாம் எப்போதும் நமது பாவங்களின் மன்னிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.”

எமியும் நானும் எங்கள் வாழ்க்கை அனுபவங்களை உன்னிப்பாகப் பார்க்கும்போது, ​​இயேசு கிறிஸ்துவின் பரிபூரண அன்பு மற்றும் தியாகத்தின் பரிசைக் கொண்டாடுகிறோம். நரகத்தின் கோபம் எவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் காண்கிறோம். தீர்ப்பு, பதட்டம், மனச்சோர்வு, புற்றுநோய், நீரிழிவு நோய், நேரலை கொடுமைப்படுத்துதல், திருடப்பட்ட அடையாளம், இழந்த கர்ப்பங்கள் மற்றும் ஒரு குழந்தை, ஒரு சகோதரர் மற்றும் ஒரு தந்தையின் இழப்பு ஆகியவற்றை நாம் எவ்வாறு வெல்ல முடியும்? ஏனென்றால் இயேசு நடுக்கத்தின் கசப்பான பாத்திரத்திலிருந்து, கோபத்தின் பாத்திரத்திலிருந்து—எனக்காக, என் குடும்பத்திற்காக, நம் அனைவருக்காகவும் பருகினார்!

கெத்செமனேயில் இரட்சகர்

கெத்சமனே,-ஆடம் ஆப்ராம், courtesy of altusfineart.com © 2025

“கசப்பான பாத்திரத்திலிருந்து“ அவர் கெத்செமனே தோட்டத்தில் பானம் பண்ணினார், கல்வாரியில் சிலுவையில் அவரது துன்பம் “தீவிரமடைந்தது“, கடினமான, ஆணவமிக்க, வன்முறையான, சீற்றமான மற்றும் நடுக்கத்தை கர்த்தருடைய பீடங்களில் வைத்து, “பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதினாலே சுத்திகரிக்கப்படும்படிக்கு“ நம்மை எப்போதும் அனுமதிக்கிறது.

“நாம் எங்கிருந்தாலும், என்ன செய்திருந்தாலும், நாம் முழுமையாகக் கைவிட்டு, தேவனின் வாக்குறுதிகள் மற்றும் சமாதானத்தின் பீடத்தில் நம்மை அர்ப்பணிப்போம் என்பதே இன்று உங்களுக்காகவும் எனக்காகவும் எனது ஆழ்ந்த ஜெபம்“ என்று சகோதரி பாட்ரிசியா ஹாலண்ட் கூறினார்.

குணப்படுத்துதல் மற்றும் இளைப்பாறுவதற்கான ஒரு இடம்

நாம் பீடத்திற்கு வரும்போது, ​​நாம் ஒரு வெகுமதியைப் பெறுவதில்லை; பரிசு வழங்குபவரைப் பற்றிக் கற்றுக்கொள்கிறோம். அந்தக் கற்றலிலும் உடன்படிக்கை பிணைப்பிலும் குணமடைதல் வருகிறது. நேபி சொன்னான், “என் மாம்சம் அழிந்து போகுமளவும், அவர் என்னைத் தம்முடைய அன்பினால் நிரப்பினார்.” நமது அன்பான இரட்சகர் அழைத்தார், “நீங்கள் எல்லோரும், இப்பொழுதாவது என்னிடத்தில் திரும்பி, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நான் உங்களை குணப்படுத்தும்படியாக மனம் மாறமாட்டீர்களோ?”

எங்கள் இரண்டு மூத்த மகள்களான மெக்கன்சியும் எம்மாவும் சிறியவர்களாக இருந்தபோது, ​​அவர்களுக்குப் பிடித்த கதைகளில் ஒன்று தி குரோனிக்கிள்ஸ் ஆஃப் நார்னியா: தி லயன், தி விட்ச் அண்ட் தி வார்ட்ரோப். நாங்கள் அனைவரும் அஸ்லான் என்ற பெரிய சிங்கத்தின் மீது காதல் கொண்டோம். அந்தப் புத்தகத்தைப் படித்த எங்களின் மறக்கமுடியாத இரவுகளில் ஒன்று, எட்மண்டிற்காக அந்தப் பெரிய சிங்கம் தனது உயிரைக் கொடுத்த இரவு. வெள்ளை சூனியக்காரி கல் மேசையில் சிங்கத்தின் உயிரைப் பறித்தபோது பெற்றோரும் மகள்களும் கண்ணீர் விட்டோம், ஏனெனில் இது மறக்க முடியாதது. சோகம் இருந்தபோதிலும், அற்புதமான சம்பவம் நடக்கும் வரை நம்பிக்கை நீடித்ததால் மறக்கமுடியாதது. அஸ்லான் உயிர்த்தெழுப்பப்பட்டபோது அந்த சிறிய படுக்கையறையில் மகிழ்ச்சியின் சத்தங்கள் எதிரொலித்தன, அஸ்லான் கூறியது, “[தியாகத்தின் உண்மையான அர்த்தத்தை சூனியக்காரி அறிந்திருந்தால்], …துரோகம் செய்யாத ஒரு விருப்பமுள்ள பாதிக்கப்பட்டவர் ஒரு துரோகியின் இடத்தில் [இறந்தால்,] [கல்] மேசை விரிசல் அடையும், மரணம் கூட [ஓய்வெடுக்கத்] தொடங்கும் என்பதை அவள் அறிந்திருப்பாள்.“

இயேசு கிறிஸ்து எல்லா காயங்களையும் குணப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வாழ்வதை சாத்தியமாக்குகிறார்.

அக்டோபர் 2022 பொது மாநாட்டு செய்தியில், தலைவர் ரசல் எம். நெல்சன், ஒரு ஆலய திறந்த இல்லம் வழியாக வரும் ஒரு சுற்றுலா குழுவை விவரித்தார். அங்கே ஒரு இளம் பையன் இருந்தான். தலைவர் நெல்சன் போதித்தார்:

“சுற்றுலா குழு ஒரு தரிப்பித்தல் அறைக்குள் நுழைந்தபோது, மக்கள் தேவனுடன் உடன்படிக்கை செய்ய மண்டியிடும் பீடத்தை சிறுவன் சுட்டிக்காட்டினான், ‘அது நன்றாக இருக்கிறது. மக்கள் தங்கள் ஆலயப் பயணத்தில் இளைப்பாற இங்கே ஒரு இடம் உள்ளது.’

“ … ஆலயத்தில் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வதற்கும் இரட்சகரின் பிரமிப்பூட்டும் வாக்குறுதிக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பைப்பற்றி அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

“’என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது’ [மத்தேயு 11:28–30].”

“மனுஷகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை“ ஆனாலும் அவர் தம்முடைய சீஷர்களை அங்கே தம்முடன் இளைப்பாறும்படி திருவிருந்து மேசைக்கு அழைத்தார். “பீடங்களில் தாழ்மையான ஆத்துமாக்கள் மண்டியிடும்போது,“ சமாதானம் பெருகும். நமது இரட்சகரின் கரங்கள் நீட்டப்பட்டுள்ளன; அவரது மேஜை விரிக்கப்பட்டுள்ளது. தேவனுடைய குமாரனை அவருடைய பரிசுத்த பீடங்களில் வணங்க வாருங்கள். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.