கிறிஸ்துவில் எளிமை
கிறிஸ்துவின் கோட்பாட்டை எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் கவனம் செலுத்திய முறையில் பயன்படுத்துவது நம் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண உதவும்.
1. முன்னுரை
முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர், நான் யூட்டா ஓக்டன் ஊழியத்தில் ஒரு ஊழியக்காரனாக சேவை செய்ய என்னுடைய அழைப்பைப் பெற்றேன். நிச்சயமாக, நான் ஐரோப்பாவிலிருந்து வருவதால், “கேரட்டுடன் பச்சைநிறஜெல்-ஓ“ மற்றும் (இறுதி சடங்கு) பியூனரல் உருளைக்கிழங்குகள்“ போன்ற சில உள்ளூர் யூட்டா மரபுகள் எனக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தன!
ஆனாலும், பல பரிசுத்தவான்களின் பக்தி மற்றும் சீஷத்துவம், சபைக் கூட்டங்களில் பங்குகொள்ளும் பெரும் திரளான மக்களின் எண்ணிக்கை, முழுமையாக செயல்படும் சபை நிகழ்ச்சிகளின் பிரம்மாண்டம் ஆகியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். என்னுடைய ஊழியம் முடிவுக்கு வந்தபோது, நான் உணர்ந்த மகிழ்ச்சியும் அனுபவித்த ஆவியின் பலமும், முதிர்ச்சியும் என் எதிர்கால குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்பினேன். “நித்திய பர்வதங்களின் நிழல்களில்” என் வாழ்க்கையை வாழ விரைவாக திரும்பி வர நான் தீர்மானித்தேன்.
இருப்பினும், கர்த்தருக்கு வேறு திட்டங்கள் இருந்தன. சொந்த ஊரில் என்னுடைய முதல் ஞாயிறு அன்று, என்னுடைய புத்திசாலியான ஆயர் வாலிபர்களுக்கு தலைவராக சேவை செய்ய என்னை அழைத்தார். இந்த அருமையான வாலிபர்கள் குழுவிற்கு சேவை செய்வதன் மூலம், கிறிஸ்துவின் சீஷனாக இருப்பதனால் வரும் மகிழ்ச்சி, சபைக் கூட்டங்களின் அல்லது நிகழ்ச்சிகளின் பிரம்மாண்டத்தின் அளவோடு சிறிதளவும் தொடர்புடையதல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.
அதனால் நான் என் அழகான மனைவி மார்க்ரெட்டை மணந்தபோது, நாங்கள் ஐரோப்பாவில் தங்கி எங்கள் சொந்த நாடான ஜெர்மனியில் எங்கள் குடும்பத்தை வளர்க்க மகிழ்ச்சியுடன் முடிவு செய்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் ரசல் எம். நெல்சன் கற்பித்ததை நாங்கள் ஒன்றாகக் கண்டோம்.: “நாம் உணரும் மகிழ்ச்சி, நமது வாழ்க்கையின் சூழ்நிலைகளைப் பொருத்தது அல்ல, எல்லாம் நமது வாழ்க்கையின் நோக்கத்தைப் பொருத்ததே.” நம்முடைய வாழ்க்கையின் கவனம் இயேசு கிறிஸ்துவின் மேலும் அவருடைய சுவிசேஷ செய்தியின் மீதும் இருக்கும்போது, நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சீஷத்துவத்தின் முழு ஆசீர்வாதங்களையும் நம்மால் அனுபவிக்க முடியும்.
2. கிறிஸ்துவில் இருக்கும் எளிமை
இருப்பினும், அதிகரித்துக்கொண்டிருக்கும் மதச்சார்பின்மை, சிக்கல் மற்றும் குழப்பம் நிறைந்த மேலும் பலவிதமான மற்றும் பெரும்பாலும் முரண்பாடான செய்திகளையும் தேவைகளையும் கொண்டுள்ள ஒரு உலகில், நம்முடைய கண்கள் குருடாக்கப்படாமல் நம்முடைய இருதயம் கடினப்படாமல் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தினுடைய “தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான காரியங்களில்” நாம் கவனம் செலுத்துவது எப்படி? குழப்பத்தின் நேரத்தில், “கிறிஸ்துவில் இருக்கும் எளிமையிலே” கவனம் செலுத்துமாறு நினைவுறுத்தி அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பரிசுத்தவான்களுக்கு சிறந்த அறிவுரையைக் கொடுத்தான்.
கிறிஸ்துவின் கோட்பாடும் சுவிசேஷத்தின் பிரமாணமும் சிறு குழந்தைகள் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு மிகவும் எளிமையானவை. இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை பயன்படுத்தி, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியின் வரத்தினால் சுத்திகரிக்கப்பட்டு, இறுதிவரை நிலைத்திருப்பதன் மூலம் நாம் இயேசு கிறிஸ்துவின் இரட்சிக்கும் வல்லமையை அடையலாம், மேலும் நம் பரலோக பிதா நமக்காக ஆயத்தம் செய்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளலாம். தலைவர் நெல்சன் இந்த பயணத்தை “உடன்படிக்கையின் பாதை“ எனவும் “இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீஷராக“ மாறும் செயல்முறை எனவும் அழகாக விளக்கினார்.
இந்த செய்தி மிக எளிமையானது என்றால், கிறிஸ்துவின் பிரமாணத்தை கைக்கொள்ளுவதும், அவருடைய முன்மாதிரியை பின்பற்றுவதும் ஏன் அநேக நேரங்களில் மிகவும் சவாலாக தோன்றுகிறது? ஊக்கம் அல்லது விடாமுயற்சி இல்லாமல் எளிதாக ஒன்றை அடைவதுதான் எளிமை என்று நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு இடைவிடாத முயற்சி மற்றும் தொடர்ச்சியான மாற்றம் தேவை. நாம் “சுபாவ மனுஷனை அகற்றி, [ஒரு சிறு பிள்ளையைப் போல] மாற வேண்டும்.” சிறு பிள்ளைகளைப் போலவே நமது “கர்த்தரில் நம்பிக்கையாயிருப்பது” மற்றும் சிக்கலானவைகளை விட்டுவிடுவது ஆகியவை இதில் அடங்கும். கிறிஸ்துவின் கோட்பாட்டை எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் கவனம் செலுத்தும் வகையில் பயன்படுத்துவதன் மூலம், நமது அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியைக் காணவும், நமது அழைப்புகளில் வழிகாட்டுதலை வழங்கவும், வாழ்க்கையின் மிகவும் சிக்கலான சில கேள்விகளுக்கு பதிலளிக்கவும், நமது மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள பலத்தை வழங்கவும் உதவும்.
ஆனால் கிறிஸ்துவின் சீடர்களாகிய நமது வாழ்நாள் பயணத்தில் இந்த எளிமையை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்த முடியும்? இரட்சகரைப் பின்பற்ற நாம் தேடும்போது, “தூய சத்தியம், தூய கோட்பாடு மற்றும் தூய வெளிப்பாடு“ ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு தலைவர் நெல்சன் நமக்கு நினைவூட்டியுள்ளார். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை என்ன செய்யச் சொல்லுவார்?“ என்று அடிக்கடி கேட்பது ஆழமான வழிகாட்டுதலை வெளிப்படுத்துகிறது. அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது நிச்சயமற்ற தன்மையின் வழியாக ஒரு பாதுகாப்பான பாதையையும், நாளுக்கு நாள் அன்பான, வழிகாட்டும் கரத்தைப் பிடித்துக் கொள்வதையும் வழங்குகிறது. அவர் சமாதானப் பிரபுவும் நல்ல மேய்ப்பருமாவார். அவர் நமது தேற்றரவாளனும் மீட்பருமாவார். அவரே நமது கன்மலையும் அடைக்கலமுமானவர். அவர் ஒரு நண்பர்—உங்கள் நண்பரும் என் நண்பரும் ஆனவர்! தேவனை நேசிக்கவும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும், நம் அயலாரை நேசிக்கவும் அவர் நம் அனைவரையும் அழைக்கிறார்.
நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி, கிறிஸ்துவில் விசுவாசத்துடன் முன்னேறிச் செல்லும்போது, அவருடைய பாவநிவர்த்தியின் வல்லமையைத் தழுவி, நமது உடன்படிக்கைகளை நினைவில் கொள்ளும்போது, அன்பு நம் இருதயங்களை நிரப்புகிறது, நம்பிக்கையும் குணப்படுத்துதலும் நம் ஆவிகளை உயர்த்துகிறது, கசப்பும் துக்கமும் நன்றியுணர்வால் மாற்றப்பட்டு, வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்காக பொறுமையுடன் இருப்போம். சில சமயங்களில், நாம் ஆரோக்கியமற்ற சூழ்நிலையிலிருந்து நம்மைத் தூர விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கலாம் அல்லது தொழில்முறை உதவியை நாட வேண்டியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எளிய சுவிசேஷ கொள்கைகளைப் பயன்படுத்துவது, கர்த்தருடைய வழியில் வாழ்க்கையின் சவால்களைக் கடந்து செல்ல நமக்கு உதவும்.
ஜெபம், உபவாசம், வேதப் படிப்பு, தினசரி மனந்திரும்புதல், வாரந்தோறும் திருவிருந்தில் பங்கேற்பது, தவறாமல் கர்த்தருடைய வீட்டில் ஆராதிப்பது போன்ற எளிய செயல்களிலிருந்து நாம் பெறும் பலத்தை சில நேரங்களில் குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் நாம் எந்த “மிகப்பெரியதான காரியமும்” செய்யத் தேவை இல்லை என்பதை நாம் அடையாளம் கண்டு நம்மை தூய்மையான மற்றும் எளிய கோட்பாட்டில் மையப் படுத்திக் கொள்ளும்போது, சுவிசேஷம் எவ்வளவு “அற்புதமாக செயல்படுகின்றது” என்பதை நாம் காணத் தொடங்குகிறோம். மன உளைச்சலில் இருக்கும்போது கூட நாம் பெலனையும் “தேவனின் சமூகத்தில் தன்னம்பிக்கையையும்” கண்டுகொள்கிறோம். மூப்பர் எம். ரசல் பல்லார்ட் நமக்கு பலமுறை நினைவூட்டியிருக்கிறார், ”அந்த எளிமையில்தான் [நாம்] சமாதானமும், சந்தோஷமும், மகிழ்ச்சியும், காண்போம்.”
கிறிஸ்துவில் உள்ள எளிமையைப் பயன்படுத்துவது, செயல்முறைகளை விட மக்களையும், குறுகிய கால நடத்தைகளை விட நித்திய உறவுகளையும் முன்னுரிமைப்படுத்துகிறது. நாம் நம்முடைய ஊழியங்களை நிர்வகிப்பதை விட்டுவிட்டு, தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதல் போன்ற “அதிக முக்கியத்துவமான காரியங்களில்” கவனம் செலுத்துகிறோம். நம்மால் முடியாத காரியங்களினால் நம்மை பாரப்படுத்திக் கொள்ளாமல் நம்மால் முடிந்த காரியங்களை செய்யும்படி அவற்றை முன்னுரிமைப் படுத்திக் கொள்வதற்கு நம்மை விடுதலையாக்கிக் கொள்கிறோம். கர்த்தர் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்: “ஆகவே, நன்மை செய்வதிலே சோர்ந்து போகாமலிருங்கள், ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள். சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்” நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எளிமையிலும் தாழ்மையிலும் நடக்க என்ன ஒரு வல்லமையான ஊக்கம்.
3. ஓமா சிஸ்லா
என் பாட்டி மார்த்தா சிஸ்லா, பெரிய காரியங்கள் செய்யப்பட “அற்பமும் சொற்பமுமானவைகளை” செய்வதற்கு ஒரு அற்புதமான உதாரணம். நாங்கள் அவரை அன்புடன் ஓமா சிஸ்லா என்று அழைத்தோம். ஓமா மே 30, 1926 அன்று கிழக்கு பிரஷ்யாவில் உள்ள செல்போங்கன் என்ற சிறிய கிராமத்தில் என் கொள்ளுப் பாட்டியுடன் சுவிசேஷத்தைத் தழுவினார்.
மார்த்தா சீஸ்லா (வலது) ஞானஸ்நானம் எடுத்த நாளில்.
அவர் கர்த்தரையும் அவருடைய சுவிசேஷத்தையும் நேசித்தார், அவர் செய்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள உறுதியாக இருந்தார். 1930 இல் அவர் சபையில் உறுப்பினராய் இல்லாத என் தாத்தாவை மணந்தார். இந்த கட்டத்தில் ஓமாவுக்கு சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது சாத்தியமற்றதாகிவிட்டது, ஏனென்றால் என் தாத்தாவின் பண்ணை சபையிலிருந்து தொலைவில் இருந்தது. ஆனால் அவர் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தினார். ஓமா தொடர்ந்து ஜெபம் செய்தார், வேதங்களைப் படித்தார், சீயோனின் பாடல்களைப் பாடினார்.
சிலர் அவர் இனிமேலும் தன் விசுவாசத்தில் சுறுசுறுப்பாக இல்லை என்று நினைத்திருக்கலாம், ஆனால் அது உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. என் அத்தையும் என் தந்தையும் பிறந்தபோது, வீட்டில் ஆசாரியத்துவத்தையோ சபை கூட்டங்களையோ நியமங்களையோ பெற முடியாதிருந்தும், அவர் மீண்டும் தன்னால் முடிந்ததைச் செய்து, தனது பிள்ளைகளுக்கு “ஜெபிக்கவும், கர்த்தருக்கு முன்பாக நேர்மையாக நடக்கவும்” கற்பிப்பதில் கவனத்தைச் செலுத்தினார். அவர் வேதத்திலிருந்து அவர்களுக்கு வாசித்தார், அவர்களுடன் சீயோனின் பாடல்களைப் பாடினார், மிக முக்கியமாக அவர்களுடன் ஜெபித்தார்—ஒவ்வொரு நாளும் 100 சதவிகிதம் குடும்பத்தை மையமாகக் கொண்ட சபை அனுபவம்.
1945 இல், என் தாத்தா வீட்டிலிருந்து வெகு தொலைவில் போரில் பணியாற்றினார். எதிரிகள் தங்கள் பண்ணையை நெருங்கியபோது, ஓமா தனது இரண்டு சிறு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகும்படி தங்கள் பிரியமான பண்ணையை விட்டு சென்றுவிட்டார். ஒரு கடினமான மற்றும் உயிருக்கு ஆபத்தான பயணத்திற்குப் பிறகு, அவர்கள் இறுதியாக மே 1945 இல் வடக்கு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஆனால் ஓமா தன்னால் செய்ய முடிந்ததைத் தொடர்ந்து செய்து வந்தார்: ஒவ்வொரு நாளும்—அவள் தனது குழந்தைகளுடன் ஜெபித்தார், அவள் மனப்பாடம் செய்த சீயோனின் பாடல்களை அவர்களுடன் ஒவ்வொரு நாளும்—பாடினாள்.
வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது, பல ஆண்டுகளாக அன்றாட உணவு கிடைப்பதை உறுதி செய்வதிலேயே கவனம் செலுத்த நேர்ந்தது. ஆனால் 1955 ஆம் ஆண்டில், அப்போது 17 வயதான என் அப்பா, ரெண்ட்ஸ்பர்க் நகரில் வர்த்தகப் பள்ளிக்குச் சென்றார். அவர் ஒரு கட்டிடத்தின் வழியாக நடந்து சென்றார், வெளியில் ஒரு சிறிய பலகையைக் கண்டார், அதில் “கிர்ச் ஜேசு கிறிஸ்டி டெர் ஹெய்லிகன் டெர் லெட்ஸ்டென் டேஜ்”—“பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்துவின் சபை” என்று எழுதப்பட்டிருந்தது. அவர் நினைத்தார், “இது அருமையானது; இது அம்மாவின் சபை.” எனவே, அவர் வீட்டிற்கு வந்தபோது, அவர் ஓமாவின் சபையைக் கண்டுபிடித்ததாக அவரிடம் கூறினார்.
சபையுடன் எந்த தொடர்பும் இல்லாதிருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை கலந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், தன்னுடன் வருமாறு என் தந்தையையும் அழைத்தார். ரெண்ட்ஸ்பர்க் அவர்கள் வாழ்ந்த சிறிய கிராமத்திலிருந்து 20 மைல்களுக்கு (32 கிமீ) மேலான தொலைவில் இருந்தது. ஆனால் இது ஓமாவை சபைக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்போவதில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அவர் என் அப்பாவுடன் மிதிவண்டியில் ஏறி சபைக்குச் சென்றார்.
திருவிருந்துக் கூட்டம் தொடங்கியபோது, என் அப்பா அது விரைவில் முடிந்துவிடும் என்று நம்பி கடைசி வரிசையில் உட்கார்ந்தார். இது ஓமாவின் சபை, அவருடையது அல்ல. அவர் பார்த்தது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கவில்லை: ஒரு சில வயதான பெண்களும், கூட்டத்தில் எல்லாவற்றையும் திறம்பட நடத்திய இரண்டு இளம் ஊழியக்காரர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் பின்னர் அவர்கள் பாடத் தொடங்கினர், என் அப்பா சிறுவனாக இருந்ததிலிருந்தே கேட்ட சீயோனின் பாடல்களைப் பாடினார்கள்: “Come, Come, Ye Saints,” “O My Father,” “Praise to the Man.” குழந்தை பருவத்திலிருந்தே அவர் அறிந்த சீயோனின் பாடல்களை இந்த சிறிய மந்தை பாடுவதைக் கேட்டது, அவரது இருதயத்தைத் துளைத்தது, சபை உண்மை என்பதை அவர் உடனடியாகவும் சந்தேகமுமின்றியும் அறிந்தார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு என் பாட்டி கலந்து கொண்ட முதல் திருவிருந்துக் கூட்டமே, இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் உண்மைத்தன்மையின் தனிப்பட்ட திடப்படுத்தலை என் தந்தை பெற்ற கூட்டமுமாகும். மூன்று வாரங்கள் கழித்து செப்டம்பர் 25, 1955 அன்று, என் தாத்தா மற்றும் என் அத்தையுடன் அவர் ஞானஸ்நானம் பெற்றார்.
ரெண்ட்ஸ்பர்க்கில் நடந்த அந்த சிறிய திருவிருந்துக் கூட்டம் நடந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. நான் அடிக்கடி ஓமாவைப் பற்றி யோசிப்பேன், ஜெபம் செய்வது, வாசிப்பது மற்றும் பாடுவது போன்ற சிறிய மற்றும் எளிமையான விஷயங்களைச் செய்வதை அந்த தனிமையான இரவுகளில் அவர் எவ்வாறு உணர்ந்திருப்பார், இன்று நான் இங்கு பொது மாநாட்டில் நின்று என் ஓமாவைப் பற்றிப் பேசும்போது, அவருடைய போராட்டங்கள் இருந்தபோதிலும், அவருடைய உடன்படிக்கைகளையும், கர்த்தரில் நம்பிக்கையையும் கடைப்பிடிக்க அவருடைய உறுதிப்பாடு என் இருதயத்தை மனத்தாழ்மையாலும் நன்றியுணர்வுடனும் நிரப்புகிறது—அவருக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நமது அற்புதமான பரிசுத்தவான்கள் பலரும், தங்கள் சவாலான சூழ்நிலைகளில் கிறிஸ்துவின் எளிமையில் கவனம் செலுத்துகிறார்கள், ஒருவேளை இப்போது சிறிய மாற்றத்தைக் காண்கிறார்கள், ஆனால் எதிர்காலத்தில் ஒரு நாள் பெரிய விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறார்கள்.
4. சிறிய மற்றும் எளிய காரியங்கள்
சுவிசேஷத்தின் சிறிய மற்றும் எளிமையான விஷயங்களும், கிறிஸ்துவின் மீது உண்மையாக கவனம் செலுத்துவதும் நம்மை உண்மையான மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்கிறது, வலிமையான அற்புதங்களைக் கொண்டுவருகிறது, மேலும் வாக்களிக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது என்பதை என் சொந்த அனுபவத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன். எனக்கு இது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு உங்களுக்கும் உண்மை. மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் வார்த்தைகள், “சில ஆசீர்வாதங்கள் விரைவில் வரும், சில தாமதமாக வரும், சில பரலோகம் செல்லும் வரை வராது; ஆனால் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தழுவுபவர்களுக்கு அவைகள் வருகின்றன.” இதைக்குறித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நானும் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.