பொது மாநாடு
அந்த ஒருவருக்கு ஊழியம் செய்தலின் வல்லமை
அக்டோபர் 2025 பொது மாநாடு


10:27

அந்த ஒருவருக்கு ஊழியம் செய்தலின் வல்லமை

நாம் அந்த ஒருவருக்கு ஊழியம் செய்யும்போது, இயேசு கிறிஸ்துவிடம் வரவும், கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதிக்கவும் அந்த ஒருவரை அழைக்கிறோம்.

சகோதரிகளே, சகோதரர்களே, இந்த சவாலான காலங்களில் இயேசு கிறிஸ்துவிடம் வந்ததில் உங்கள் விசுவாசமிக்க அர்ப்பணிப்புக்கு நன்றி. நீங்கள் அற்புதமானவர்கள்; நீங்கள் அழகானவர்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் தேவனின் பிள்ளை. நாம் இயேசு கிறிஸ்துவின் உண்மையான அர்ப்பணிப்புள்ள சீடர்களாக மாறும்போது பரிசுத்த ஆவியின் செல்வாக்கை உணர்ந்து, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், கர்த்தருடைய வீட்டில் நாம் ஆராதிக்கும்போது அவருடைய மகிழ்ச்சியை உணர வேண்டும் என்பதே எனது ஜெபம்.

“நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுவதற்கு உங்களுக்கும் எனக்கும் இதுவே நேரம்,” என்று தலைவர் ரசல் எம். நெல்சன் அறிவுறுத்தினார். நம்முடைய சீஷத்துவத்தை நமது மிக உயர்ந்த முன்னுரிமையாக ஆக்குவதற்கான நேரம் இது. தலை சுற்றும் கவனச்சிதறல்கள் நிறைந்த உலகில், இதை நாம் எப்படி செய்ய முடியும்?

அவர் பதிலை வழங்கினார்: “ஆலயத்தில் வழக்கமான ஆராதனை நமக்கு உதவும். கர்த்தருடைய வீட்டில், நாம் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துகிறோம். … நாம் அவரை அறிகிறோம். … இயேசு கிறிஸ்துவை நேர்மையாகத் தேடும் ஒவ்வொருவரும் அவரை ஆலயத்தில் காண்பார்கள்.

அப்படியானால், நாம் எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீடர்களாக மாறி ஒருவருக்கொருவர் உதவுவது? நாம் அந்த ஒருவருக்கு ஊழியம் செய்கிறோம். இரட்சகரின் வழியில் ஊழியம் செய்வது இரக்கம், தயவு, பொறுமை மற்றும் தீர்க்காத அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் அந்த ஒருவருக்கு ஊழியம் செய்யும்போது, இயேசு கிறிஸ்துவிடம் வரவும், அவருடைய மீட்கும் வல்லமையைப் பெறுவதற்காக கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதிக்கவும் ஒருவரை அழைக்கிறோம். வேறு வார்த்தைகளில் எனில், கர்த்தருடைய வீட்டிற்கு வழிநடத்தும் வழிகளில் அந்த ஒருவருக்கு ஊழியம் செய்யும்போது நாம் அர்ப்பணிப்புள்ள சீஷர்களாக ஆவதற்கு ஒருவருக்கொருவர் உதவுகிறோம்.

அன்போடும், நியாயந்தீர்க்காமலும் ஒருவருக்கு ஊழியம் செய்யும் வல்லமையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். கிணற்றடியில் நின்றிருந்த சமாரிய ஸ்திரீயை உங்களுக்கு நினைவிருக்கும். இந்த ஸ்திரீ முக்கியமற்றவளாகவும், தனியானவளாகவும், சோர்வடைந்தவளாகவும், பார்க்கப்படாதவளாகவும் உணர்ந்திருக்கலாம். அவள் சொந்தமானவளில்லை என்று உணர்ந்திருக்கலாம். அவளுடைய வாழ்நாள் முழுவதும் அவளுக்கு ஐந்து புருஷன்கள் இருந்தனர், அவளுடன் வாழ்ந்த மனுஷன் அவளுடைய புருஷன் அல்ல. மற்றவர்கள் அவளுடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளை அறியாமலேயே அநீதியான தீர்ப்பை திணித்திருக்கலாம். நாளின் வெப்பமான பகுதியில் அவள் தனியாக கிணற்றுக்கு வந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனாலும், இயேசு கிறிஸ்து தான் மேசியா என்று அறிவித்த முதல் நபர்களில் இவளும் ஒருத்தி. அவரைப் பொறுத்தவரை, இந்த ஸ்திரீ தேவனின் குமாரத்தி.

ஜீவ தண்ணீரில் பங்கெடுப்பதன் மூலம் ஒருவர் நித்திய ஜீவனைப் பெற முடியும் என்று இயேசு கிறிஸ்து அப்பெண்ணுக்குக் கற்பித்தார். அவர், “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ … ஒருபோதும் தாகமுண்டாகாது; நான் கொடுக்கும் தண்ணீர்… நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்“ என்றார்.

இந்த சமாரிய பெண் இரட்சகரின் அன்பை உணர்ந்து, அவர் மேசியா என்று ஆவியின் மூலம் ஒரு சாட்சியைப் பெற்றாள். இந்த சாட்சிக்குப் பிறகு, அவள் ஊருக்குத் திரும்பி, மற்றவர்களை வந்து பார்க்க அழைத்தாள், இயேசுவே “மெய்யாய் கிறிஸ்து, உலகரட்சகர் என்று அநேகர் விசுவாசித்தார்கள்.” கிறிஸ்து அன்புடன் அந்த ஒருவருக்கு ஊழியம் செய்தார்; இதன் விளைவாக, அநேகர் அவருடைய அர்ப்பணிப்புள்ள சீஷர்களானார்கள்.

கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களான பேதுரு மற்றும் யோவானிடமிருந்து மனதுருக்கத்தோடு ஒருவருக்கு ஊழியம் செய்யும் வல்லமையைப் பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம். பிறப்பிலிருந்தே சப்பாணியான ஒரு மனுஷன் தினமும் தேவாலய வாசலண்டையில் பணம் கேட்டு படுத்திருந்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இந்த மனுஷன் முக்கியமற்றவனாகவும், தனியானவனாகவும், அதைரியமடைந்தவனாகவும், பார்க்கப்படாதனாகவும் உணர்ந்திருக்கலாம். அவன் சொந்தமானவனல்ல என்று உணர்ந்திருக்கலாம்.

“அப்பொழுது பேதுரு, வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட என்று சொன்னான்.”

பேதுரு அந்த மனுஷனைத் தன் வலது கையினால் பிடித்து, அவனைத் தூக்க, அந்த மனுஷன் சொஸ்தமானான். அந்த அற்புதத்தைத் தொடர்ந்து உடனேயே, “நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு“ அந்த மனுஷன் பேதுருவுடனும் யோவானுடனும் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.. பேதுருவும் யோவானும் கர்த்தருடைய ஆலயத்திற்கு வழிநடத்தும் வழிகளில் அந்த ஒருவனுக்கு ஊழியம் செய்தார்கள், அந்த மனுஷன் கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீஷனானான்.

என் நண்பர்களே, என் வாழ்க்கையில் நானும் முக்கியமற்றவனாகவும், தனியானவனாகவும், அதைரியமடைந்தவனாகவும், பார்க்கப்படாதவனாகவும் உணர்ந்த தருணங்கள் இருந்தன. நான் சொந்தமானவன் அல்ல என்பது போல் உணர்ந்திருக்கிறேன். எனக்கு 19 வயதாக இருந்தபோது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் ஞானஸ்நானம் பெற்று, திடப்படுத்தப்பட்டேன். ஒரு வருடம் கழித்து, ஒரு முழுநேர ஊழியக்காரனாக சேவை செய்வதற்கான அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன், ஆனால் சபை வரலாற்றைப் பற்றி நான் இன்னும் கற்றுக்கொள்ளாத நிறைய விஷயங்கள் இருந்தன.

எனது ஊழிய சேவையின் ஆரம்பத்தில், கறுப்பின ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதிப்பதன் அனைத்து ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க அனுமதிக்கப்படாத ஒரு காலம் இருந்தது என்பதை நான் அறிந்தேன். இதை முதன்முறையாக கற்றுக்கொண்டது கோபம், குழப்பம், சந்தேகம் மற்றும் பயம் போன்ற உணர்வுகளைக் கொண்டு வந்தது. இந்த உணர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்தன, பரிசுத்த ஆவியானவரை அடையாளம் காணும் என் திறன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொலைந்துபோனது.

அதிர்ஷ்டவசமாக, எனக்கு ஒரு அற்புதமான ஊழியத் தோழர் இருந்தார், கெவின் விக், அன்புடனும், பொறுமையுடனும், தயவுடனும் எனக்கு ஊழியம் செய்தார். ஒவ்வொரு இரவும் என் சந்தேகத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அவர் கண்டபோது, ​​அவர் இளைய மூப்பர் ஜான்சனிடம், “நான் உன்னை நேசிக்கிறேன்“ என்று கூறுவார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கெவினின் அன்பை உணர அனுமதித்தேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பரலோக பிதாவிடம் ஜெபிக்க எனக்கு தைரியம் வந்தது. நான் ஜெபித்தபோது, கோட்பாடும் உடன்படிக்கைகளுமின் பாகம் 6, வசனங்கள் 21–23க்கு நான் ஈர்க்கப்பட்டேன், அது கூறுகிறது:

“இதோ, நானே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து. … நானே இருளில் பிரகாசிக்கிற ஒளி. …

“… இந்தக் காரியங்களைப்பற்றிய சத்தியத்தை அறிந்து கொள்வதற்காக உனது இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிட்ட இரவை நினைத்துப் பார்.

“இந்தக் காரியத்தைக் குறித்து உனது மனதிற்குள் நான் சமாதானத்தைப் பேசவில்லையா? தேவனிடமிருந்து வருகிறதைவிட மேன்மையான எந்த சாட்சியை நீ பெற முடியும்?”

படித்ததும், எனக்கு ஞாபகம் வந்தது. நான் வாசித்தபோது, ​​மார்மன் புஸ்தகம் தேவனுடைய வார்த்தை என்றும், ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசி என்றும் அறிய நான் உபவாசம் இருந்து ஜெபித்த நாள் எனக்கு நினைவுக்கு வந்தது. இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான வழியில் என்னை இணைக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைகளை நான் நினைவுகூர்ந்தேன். இரட்சகரின் அன்பு, இரக்கம் மற்றும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியில் அவருடைய ராஜ்யம் என்றும், அவருடைய இரண்டாம் வருகைக்கு நம்மைத் தயார்படுத்த அது அவசியம் என்றும் அவர் அளித்த உறுதியை நான் உணர்ந்தேன். நான் நினைவுகூர்ந்ததால், நான் மறுபடியும் பரிசுத்த ஆவியானவரை அடையாளம் காண முடிந்தது, இயேசுவே கிறிஸ்து என்றும், நான் அவருடைய சீஷன் என்றும் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது.

சில சமயங்களில் நமக்கு பதிலளிக்கப்படாத கேள்விகள் இருக்கும், மேலும் நாம் முக்கியமற்றவர்கள், தைரியமில்லாதவர்கள், தனிமையானவர்கள், காணப்படாதவர்கள் போன்ற உணர்வுகளும் இருக்கும். இருப்பினும், என் நண்பர்களே, நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து முன்னேறிச் செல்ல வேண்டும், அவருடைய வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும்:

“உங்கள் இருதயம் கலங்காமலிருப்பதாக.”

“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”

இந்த யதார்த்தத்திற்கும் இரட்சகரின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதத்திற்கும் நான் சாட்சியாக இருக்கிறேன்.

ஆகவே, அந்த ஒருவருக்கு ஊழியம் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்த நாம் என்ன செய்யலாம்? கிறிஸ்துவின் கோட்பாட்டின்படி வாழ்வது நமக்கு உதவும். தலைவர் நெல்சன் விவரிப்பது போல “கிறிஸ்துவின் கோட்பாட்டின்படி வாழ்வது “நம் வாழ்வில் ஆவிக்குரிய வேகத்தை உருவாக்கி, மிகவும் வல்லமைவாய்ந்த, நற்பண்பின் சுழற்சியை உருவாக்கும்.

இயேசு கிறிஸ்துவின் உயர் பிரமாணங்களின்படி வாழ நாம் முயற்சிக்கும்போது … அதிக தயாளம், தாழ்மை, பெருந்தன்மை, தயவு, சுய ஒழுக்கம், சமாதானம் மற்றும் இளைப்பாறுதல் ஆகியவற்றால் நம்மை ஆசீர்வதிப்பதன் மூலம் இரட்சகர் நம்மை இந்த வீழ்ச்சியடைந்த உலகின் இழுப்பிலிருந்து மேலே உயர்த்துகிறார்.”

கிறிஸ்துவின் கோட்பாட்டின்படி வாழ்வதன் மூலம் உருவாக்கப்படும் [இந்த ஆவிக்குரிய] வேகம் நமது தெய்வீக இயல்பை நமது நித்திய இலக்காக மாற்றுவதற்கு வல்லமையளிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு பொருத்தமான வழிகளில் [ஊழியம் செய்ய] உதவவும் நம்மை ஊக்குவிக்கிறது. மூப்பர் ரென்லண்ட் நமக்கு நினைவூட்டுகிறார் “இரட்சகரின் வேலை குணப்படுத்துவதே [நம்மை சொஸ்தமாக்குவது]. நம் வேலை நேசிப்பது—மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் ஈர்க்கப்படும் விதத்தில் நேசிப்பதும் ஊழியம் செய்தலும் ஆகும்.”

கிறிஸ்துவின் கோட்பாட்டின்படி வாழ்வதற்கான நமது திறன் மார்மன் புஸ்தகத்தை தினசரி படிப்பதன் மூலமும், திருவிருந்தில் வாராந்திர பங்கேற்பின் மூலமும் வளப்படுத்தப்படும். தலைவர் நெல்சன் மார்மன் புஸ்தகம் “கிறிஸ்துவின் கோட்பாட்டை கற்பிக்கிறது …[மற்றும்] எங்கும் காணப்படுகிற இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் முழுமையான மற்றும் [தெளிவான] புரிதலை கொடுக்கிறது” என்றும் அறிவித்தார். நான் இப்புஸ்தகத்தை மிகவும் நேசிக்கிறேன். ஒவ்வொரு வாரமும் திருவிருந்தின் நியமத்தில் ஜெபத்துடன் பங்கேற்பது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் அவரது கோட்பாட்டைப் பற்றிய நமது புரிதலை அதிகரிக்கும், மேலும் ஆவிக்குரிய புதுப்பித்தல், ஆறுதல் மற்றும் தேவதன்மைக்குரிய வல்லமையை நம் வாழ்க்கையில் வழங்கும். ”[ஆசாரியத்துவத்தின்] நியமங்களில், தேவதன்மைக்குரிய வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது,” இயேசு கிறிஸ்துவிடம் இருந்து வரும் இந்த வல்லமை, அந்த ஒருவருக்கு ஊழியம் செய்வதற்கான நமது விருப்பத்தையும் திறனையும் பலப்படுத்துகிறது.

மார்மன் புஸ்தகத்தைப் படிப்பதும், திருவிருந்தில் பங்கேற்பதும், தைரியமின்மை உணர்வுகளைக் குறைக்கிறது, இரட்சகரின் வழியில் இருப்பவருக்கு ஊழியம் செய்வதற்கான எனது உறுதியை அதிகரிக்கிறது, மேலும் சீஷத்துவத்தை எனது மிக உயர்ந்த முன்னுரிமையாக மாற்ற உதவுகிறது.

என் நண்பர்களே, கிறிஸ்துவின் கோட்பாட்டின்படி நாம் வாழும்போதும், கர்த்தருடைய ஆலயத்திற்கு இட்டுச் செல்லும் வழிகளில் ஊழியம் செய்யும்போதும், பதிலளிக்கப்படாத கேள்விகள் மற்றும் முக்கியமற்றவர், தைரியமிழந்தவர், தனியானவர் மற்றும் பார்க்கப்படாதவர் என்ற உணர்வுகளுக்கு மத்தியிலும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடன் முன்னேற முடியும் என்று நான் உறுதி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவிடம் வரவும், அவருடைய மீட்கும் வல்லமையையும் அன்பையும் பெறும்படி கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதிக்கவும் அந்த ஒருவரை அழைப்போம். கர்த்தருடைய வீட்டில், நாம் ”[இரட்சகருடைய] இரக்கத்தை உணருவோம். [நமது] மிகவும் குழப்பமான கேள்விகளுக்கு [நாம்] பதில்களைக் கண்டுபிடிப்போம். அவருடைய சுவிசேஷத்தின் மகிழ்ச்சியை [நாம்] நன்றாகப் புரிந்துகொள்வோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “The Lord Jesus Christ Will Come Again,” Liahona, Nov. 2024, 121–22.

  2. யோவான் 4:5–42 பார்க்கவும்.

  3. வரலாற்று ரீதியாக, பெரும்பாலானவர்கள் அதிகாலையில் யாக்கோபுடைய கிணற்றுக்குச் சென்றனர். இது ஒருவருக்கொருவர் ஒன்றுகூடுவதற்கும் ஐக்கியம் கொள்வதற்கும் ஒரு இடமாக இருந்தது. சமாரிய ஸ்திரீ தனியாக யாக்கோபுடைய கிணற்றருகே நாளின் சூடு நிறைந்த உச்சி வேளையில் நண்பகலான ஆறாவது மணிக்கு வந்தாள். இந்தச் சமயத்தில் வருவது அவளைப் பற்றி மற்றவர்கள் என்ன உணர்ந்திருப்பார்கள் என்பதையும், தன்னைப் பற்றி அவள் எப்படி உணர்ந்திருப்பாள் என்பதையும் அவள் எப்படி உணர்ந்தாள் என்பதைக் குறிக்கலாம்.

  4. யோவான் 4:13–14.

  5. யோவான் 4:42.

  6. அப்போஸ்தலர் 3:1–11 பார்க்கவும்.

  7. அப்போஸ்தலர் 3:6.

  8. அப்போஸ்தலர் 3:7 பார்க்கவும்.

  9. அப்போஸ்தலர் 3:8.

  10. ஆகஸ்ட் 1986 இல் நான் பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினராக ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டேன். ஆகஸ்ட் 1987 முதல் ஆகஸ்ட் 1989 வரை, நான் அலபாமா பர்மிங்காம் ஊழியத்தில் ஒரு ஊழியக்காரனாக சேவையாற்றினேன்.

  11. See Church and Gospel Questions, “Race and The Church of Jesus Christ of Latter-day Saints,” Gospel Library.

  12. This experience is explained in greater detail in Peter M. Johnson, “Applying the Doctrine of Jesus Christ into Our Lives” (Brigham Young University–Idaho devotional, Mar. 14, 2023), byui.edu.

  13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:21–23.

  14. யோவான் 14:27.

  15. யோவான் 16:33.

  16. கிறிஸ்துவின் கோட்பாடு ஒன்றோடொன்று தொடர்புடைய ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் அவரது பாவநிவர்த்தி; மனந்திரும்புதல்; நியமங்களைப் பெறுதல் மற்றும் உடன்படிக்கைகளை மதித்தல்; பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தப்படுத்தப்படுதல்; மற்றும் முடிவுபரியந்தம் நிலைத்திருததல். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது செயல் மற்றும் தெய்வீக வல்லமையின் கொள்கையாகும். மனந்திரும்புதல் என்பது நம் இருதயங்களையும் ஆத்துமாக்களையும் அவரை நோக்கித் திருப்புவதன் மூலம் கிறிஸ்துவில் ஒருவரின் விசுவாசத்தைப் பயன்படுத்துவதாகும். மனந்திரும்புதல் தண்டனை அல்ல. இது ஆவிக்குரிய முறையில் இயேசுவிடமிருந்து பிறந்து அவருடைய சாயலை நமது முகரூபத்தில் பெறுவதற்கான செயல்முறையாகும். நியமங்களைப் பெறுவதும், தேவனுடனும் கிறிஸ்துவுடனும் செய்யப்பட்ட உடன்படிக்கைகளை மதிப்பதும் அவர்களின் வல்லமைக்கும் அவர்களின் அன்புக்கும் நமக்கு அதிக அணுகலைத் தருகிறது, மேலும் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தப்படுத்தப்பட நம்மை அனுமதிக்கிறது. கிறிஸ்துவின் கோட்பாட்டின் இறுதிக் கூறு இறுதிவரை நிலைத்திருப்பது, அதாவது கிறிஸ்துவின் கோட்பாட்டின் ஒவ்வொரு கூறுகளின்படி “மீண்டும் மீண்டும்“ வாழ்ந்து, நாம் இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்புள்ள சீடர்களாக மாறி, ஒருவருக்கொருவர் உதவவும், கர்த்தருடைய வீட்டில் நாம் ஆராதிக்கும்போது அவருடைய மகிழ்ச்சியை உணரவும் முடியும் (Dale G. Renlund, “The Powerful, Virtuous Cycle of the Doctrine of Christ,“ Liahona, May 2024, 81; see also Russell M. Nelson, “Overcome the World and Find Rest,“ Liahona, Nov. 2022, 97).

  17. Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” 97.

  18. Dale G. Renlund, “The Powerful, Virtuous Cycle of the Doctrine of Christ,” 82, 83; emphasis added.

  19. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like Without It?,” Liahona, Nov. 2017, 62.

  20. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20..

  21. Russell M. Nelson, “The Lord Jesus Christ Will Come Again,” Liahona, Nov. 2024, 122.