ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துதல்
நமது தனிப்பட்ட வரம்புகளையும் திறனையும் கர்த்தர் மட்டுமே முழுமையாக அறிவார், அதனால்தான், நமது செயல்திறனை தீர்மானிப்பதற்கு அவர் மட்டுமே முழுமையாகத் தகுதி பெற்றவர்.
சமீபத்தில் நான் வாசித்த ஒரு அனுபவம் என்னை மிகவும் பாதித்தது. இது USA மாஸ்டர்ஸ் தட கள தேசிய சாம்பியன்ஷிப் நிகழ்ச்சியில் நடந்தது. இது மூத்தவர்களுக்கான போட்டியாகும்
1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர்களில் 100 வயதுடைய ஆர்வில் ரோஜர்ஸ் ஒருவர். ஆசிரியர் எழுதுகிறார்:
“தொடக்க துப்பாக்கி சுட்டதும், ஓட்டப்பந்தய வீரர்கள் முன்னேறினார்கள், ஆர்வில் உடனடியாக கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டார், அங்கு அவர் முழு பந்தயத்திலும் தனியாக இருந்தார், மிக மெதுவாக நகர்ந்தார். ஆர்வில்லுடன் இருந்த கடைசி ஓட்டப்பந்தய வீரர் ஓட்டத்தை முடித்தபோது, ஆர்விலுக்கு இன்னும் இரண்டரை சுற்றுகள் மீதமிருந்தன. கிட்டத்தட்ட 3,000 பார்வையாளர்கள் அவர் மெதுவாகப் பாதையை முழுவதுமாக, அமைதியாக, கூட யாருமின்றி தனியாக சுற்றி வருவதைப் பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தனர்
“[ஆனால்] அவர் தனது கடைசி சுற்று தொடங்கியபோது, கூட்டம் எழுந்து நின்று, ஆரவாரம் செய்து கைதட்டியது. அவர் கடைசி பகுதியை அடைந்த நேரத்தில், கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஆரவார ஊக்கத்துடன், ஆர்வில் தனது கடைசி மிஞ்சியிருந்த சக்தியைப் பயன்படுத்தினார். அவர் முடிவுக் கோட்டைக் கடந்ததும், சக போட்டியாளர்கள் அவரை அரவணைத்துச் சென்றதும் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஆர்வில் பணிவுடனும் நன்றியுடனும் கூட்டத்தை நோக்கி கையசைத்துவிட்டு தனது புதிய நண்பர்களுடன் பந்தயப் பாதையை விட்டு வெளியேறினார்.”
இது ஆர்வில் கலந்து கொள்ளும் போட்டியின் ஐந்தாவது பந்தயமாகும், மேலும் மற்ற போட்டி ஒவ்வொன்றிலும் அவர் கடைசி இடத்தை பிடித்திருந்தார். ஆர்வில் தனது வயதில் போட்டியிட்டிருக்கக் கூடாது என்றும், அவர் பந்தயப் பாதைக்குரியவர் இல்லை என்றும், ஏனென்றால் அவர் மற்ற அனைவருக்கும் தன் போட்டிகளால் நேரத்தை நீட்டித்திருக்கிறார் என்றும் சிலர் நினைத்திருக்கலாம்.
அவர் எப்போதும் கடைசி இடத்தைப் பிடித்தாலும், அன்று ஆர்வில் ஐந்து உலக சாதனைகளை முறியடித்தார். அவரது பந்தயத்தைப் பார்த்த யாரும் அது சாத்தியம் என்று நம்பியிருக்க மாட்டார்கள், ஆனால் பார்வையாளர்களோ அல்லது அவரது போட்டியாளர்களோ நடுவர்கள் அல்ல. ஆர்வில் எந்த விதிகளையும் மீறவில்லை, அதிகாரிகள் எந்த தரத்தையும் குறைக்கவில்லை. அவர் அதே பந்தயத்தில் ஓடி, மற்ற அனைத்து போட்டியாளர்களையும் போலவே அதே தேவைகளைப் பூர்த்தி செய்தார். ஆனால் அவரது சிரமத்தின் அளவு—இந்த விஷயத்தில், அவரது வயது மற்றும் வரையறுக்கப்பட்ட உடல் திறன்—அவரை 100க்கும் கூடுதலான வயதுப் பிரிவில் வைப்பதன் மூலம் காரணியாக்கப்பட்டது. அந்தப் பிரிவில், அவர் ஐந்து உலக சாதனைகளை முறியடித்தார்.
ஒவ்வொரு முறையும் அந்தப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆர்வில்லுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது போலவே, நம் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் சிலர், இரட்சகரைப் பின்பற்றுவதற்கும் அவருடனான தங்கள் உடன்படிக்கைகளை மதிக்கவும் தங்களால் இயன்றதைச் செய்தாலும், அவர்கள் நியாயமற்ற முறையில் தீர்ப்பளிக்கப்படலாம் என்பதை அறிந்து, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை அரங்கில் அடியெடுத்து வைப்பதற்கும் மிகுந்த தைரியம் தேவை.
உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும், நம் வயது எதுவாக இருந்தாலும், நம் சூழ்நிலைகள் அல்லது வரம்புகள் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் சொந்தமானோர் என்ற உணர்வை உணருவதும், நாம் விரும்பப்படுகிறோம், தேவைப்படுகிறோம் என்ற உணர்வையும், நம் வாழ்க்கைக்கு நோக்கமும் அர்த்தமும் இருக்கிறது என்பதையும் உணருவதும் மனிதனின் அடிப்படைத் தேவையாகும்.
பந்தயத்தின் கடைசி சுற்றில், கூட்டம் ஆர்விலுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது, தொடர்ந்து ஓட அவருக்கு பலத்தை அளித்தது. அவர் கடைசியாக முடித்தது ஒரு பொருட்டல்ல. பங்கேற்பாளர்களுக்கும் கூட்டத்தினருக்கும், இது ஒரு போட்டியை விட மிக அதிகமானது. பல வழிகளில், இது இரட்சகரின் செயலில் உள்ள அன்பின் அழகான எடுத்துக்காட்டாகும். ஆர்வில் முடித்ததும், அவர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியடைந்தனர்.
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப்பைப் போலவே, நமது சபைகளும் குடும்பங்களும் ஒன்றுகூடும் இடங்களாக நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம்—கிறிஸ்துவின் அன்பினால் தூண்டப்பட்ட உடன்படிக்கை சமூகங்கள்—நாம் எதிர்கொள்ளும் எந்த சவால்களையும் சமாளிக்க ஒருவருக்கொருவர் உதவுகின்றனர், ஒருவருக்கொருவர் தீர்ப்பளிக்காமல் ஒருவருக்கொருவர் பலத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர். நமக்கு ஒருவருக்கொருவர் தேவை. தெய்வீக பெலன் ஒற்றுமையிலிருந்து வருகிறது, அதனால்தான் சாத்தான் நம்மைப் பிரிக்கத் திட்டமிடுகிறான்.
துரதிர்ஷ்டவசமாக, நம்மில் சிலருக்கு, சபைக்குச் செல்வது பல்வேறு காரணங்களுக்காக சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். அது விசுவாசம் தொடர்பான கேள்விகளுடன் போராடும் ஒருவராகவோ அல்லது சமூக கவலை அல்லது மனச்சோர்வு உள்ள ஒருவராகவோ இருக்கலாம். வேறு நாடு, இனம் சார்ந்த ஒருவராகவோ அல்லது வேறு வாழ்க்கை அனுபவங்கள் அல்லது தங்களை மிகவும் வேறுபட்டவர்கள் என்று உணரும் விஷயங்களைப் பார்க்கும் விதங்களைக் கொண்ட ஒருவராகவோ இருக்கலாம், இது கைக்குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் வைத்திருந்து தூக்கமின்மையினாலும் மனஅழுத்தத்தினாலும் அவதிப்படுகிற பெற்றோராகவோ அல்லது தம்பதிகள் மற்றும் குடும்பங்கள் நிறைந்த சபையில் தனியாக இருக்கும் ஒற்றையராகவோ இருக்கலாம். பல வருடங்களாக சபைக்கு வராமல் இருந்துவிட்டுத் திரும்பி வருவதற்குத் தைரியத்தைத் திரட்டும் ஒருவராகவோ அல்லது தாங்கள் மற்றவர்கள் போல இல்லை, ஒருபோதும் மற்றவரோடு கூடி வாழ முடியாது என்று உறுத்தும் உணர்வுகளை கொண்டிருக்கும் ஒருவராகவோ கூட இருக்கலாம்.
தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்: “உங்கள் தொகுதியிலுள்ள ஒரு தம்பதி விவாகரத்து செய்துவிட்டாலோ, அல்லது ஒரு இளம் ஊழியக்காரர் வீட்டிற்கு சீக்கிரம் திரும்பி வந்தாலோ, அல்லது ஒரு வாலிபர் தன்னுடைய சாட்சியத்தை சந்தேகித்தாலோ, அவர்களுக்கு உங்கள் தீர்ப்பு தேவையில்லை. உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் பிரதிபலிக்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.”
நம்முடைய ஆவிக்குரிய, உணர்வுபூர்வ நல்வாழ்வுக்கு மிகவும் தேவைப்படுகிறவைகளாகிய, கர்த்தரிடத்திலும் ஒருவருக்கொருவரிடத்திலுமான முக்கிய தொடர்புகளை வழங்குவதே சபையில் நம் அனுபவத்தின் நோக்கமாகும். ஞானஸ்நானத்திலிருந்து தொடங்கி, தேவனுடன் நாம் செய்யும் உடன்படிக்கைகளில் உள்ளார்ந்திருப்பது, தேவனின் குடும்ப உறுப்பினர்களாகவும், கிறிஸ்துவின் சரீர உறுப்பினர்களாகவும், ஒருவரையொருவர் நேசிப்பதும், கவனித்துக்கொள்வதும் நமது பொறுப்பு, நாம் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலில் ஒரு பெட்டியில் மட்டும் குறியிடுவது அல்ல.
கிறிஸ்துவைப் போன்ற அன்பும் அக்கறையும் உயர்ந்தவை, பரிசுத்தமானவை. கிறிஸ்துவின் தூய அன்பு தயாளத்துவம். தலைவர் நெல்சன் கூறியது போல், “ஒருவர் மீது ஒருவர் சுமைகளைச் சுமத்துவதற்குப் பதிலாக, தயாளத்துவம் நம்மை ‘ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்க’ [மோசியா 18:8] தூண்டுகிறது.
இரட்சகர்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” என்று சொன்னார். தலைவர் நெல்சன் மேலும் கூறியதாவது: “இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவரின் முக்கியப் பண்பு தயாளத்துவம்.” இரட்சகரின் செய்தி தெளிவாக உள்ளது: அவருடைய உண்மையான சீஷர்கள் கட்டியெழுப்புகிறார்கள், உயர்த்துகிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள், அறிவுறுத்துகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள்… நாம் மற்றவர்களிடம் எப்படிப் பேசுகிறோம், அவர்களைப் பற்றி எப்படிப் பேசுகிறோம் என்பது… மிகவும் முக்கியமானது.”
இதைப் பற்றிய இரட்சகரின் போதனை மிகவும் எளிமையானது. இந்தப் பொன் விதியில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது: மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். அந்த நபரின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள், நீங்கள் அவர்களின் இடத்தில் இருந்தால் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவோமோ அப்படியே அவர்களைநடத்துங்கள்.
மற்றவர்களை கிறிஸ்துவைப் போல நடத்துவது நம் குடும்பங்கள் மற்றும் சபைகளுக்கு அப்பாற்பட்டது. இதில் மற்ற மதங்களைச் சேர்ந்த அல்லது எந்த மதத்தையும் சாராத நமது சகோதரிகளும் சகோதரர்களும் அடங்குவர். பிற நாடுகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளும் வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகள் உள்ளவர்களும் இதில் அடங்குவர். நாம் அனைவரும் தேவனின் குடும்பத்தின் ஒரு பகுதியினர், அவர் தம்முடைய எல்லாபிள்ளைகளையும் நேசிக்கிறார். தம்முடைய பிள்ளைகள் தம்மை நேசிக்க வேண்டும் என்றும், மேலும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
சமூகம், ஒதுக்கப்பட்டவர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் தீர்ப்பளித்தவர்களைக் கூட நேசிப்பதற்கும், ஒன்று சேர்ப்பதற்கும், உயர்த்துவதற்கும் இரட்சகரின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. அவருடையது நாம் பின்பற்றக் கட்டளையிடப்பட்ட ஒரு முன்மாதிரி. கிறிஸ்துவைப் போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ளவும், இறுதியில் நமது இரட்சகரைப் போல மாறவும் நாம் இங்கே இருக்கிறோம். அவருடையது சரிபார்ப்புப் பட்டியல்களின் சுவிசேஷம் அல்ல; அது ஆகுதல் பற்றிய சுவிசேஷம்—அவர் இருப்பது போல மாறுதல், அவர் செய்வது போல அன்பு செலுத்துதல். நாம் ஒரு சீயோன் ஜனமாக மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
என்னுடைய 20 வயதுகளின் பிற்பகுதியில், நான் ஆழ்ந்த மனச்சோர்வின் ஒரு காலகட்டத்தை கடந்து சென்றேன், அந்த நேரத்தில், தேவன் இருக்கிறார் என்ற உண்மை திடீரென்று மறைந்து போனது போல் இருந்தது. நான் முற்றிலும் தொலைந்து போனதாகச் சொல்வதைத் தவிர அந்த உணர்வை என்னால் முழுமையாக விளக்க முடியவில்லை. என்னுடைய சிறு பிராயத்திலிருந்தே, என் பரலோக பிதா இருக்கிறார் என்பதையும், நான் அவருடன் பேச முடியும் என்பதையும் அறிந்திருந்தேன். ஆனால் அந்த நேரத்தில், தேவன் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் நான் அனுபவித்ததில்லை, என் முழு அடித்தளமும் இடிந்து விழுவது போல் உணர்ந்தேன்.
இதன் விளைவாக, எனக்கு சபைக்குப் போவது கடினமாக இருந்தது. நான் சென்றேன், ஆனால் அது “ஆர்வமற்றவர்“ அல்லது “குறைந்த விசுவாசமுள்ளவர்“ என்று முத்திரை குத்தப்படுவேன் என்ற பயத்தாலும், மேலும் யாரோ ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட திட்டமாக மாறுவேன் என்ற பயத்தாலும் தான். அந்த நேரத்தில் எனக்கு உண்மையிலேயே தேவைப்பட்டது தீர்ப்பு அல்ல, என்னைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து உண்மையான அன்பு, புரிதல் மற்றும் ஆதரவு ஆகும்.
ஜனங்கள் என்னைப் பற்றிக் கூறுவார்கள் என்று நான் பயந்த சில அனுமானங்கள், மற்றவர்கள் ஒழுங்காக சபைக்குச் செல்லாதபோது நானே அவர்களைப் பற்றிச் சொன்னவைகளாகும். அந்த வேதனையான தனிப்பட்ட அனுபவம், நாம் ஏன் ஒருவரையொருவர் அநீதியாக நியாயந்தீர்க்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோம் என்பது பற்றிய சில மதிப்புமிக்க பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தது.
எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தெரியாததால், தங்களுள் மறைந்திருக்கும் போராட்டங்களை மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று பயந்து, அமைதியாக துன்பப்படுபவர்கள் நம்மிடையே இருக்கிறார்களா?
நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கைப் பந்தயத்தில் எந்த அளவிலான சிரமங்களை எதிர்கொள்கிறோம் என்பதை கர்த்தர் மட்டுமே முழுமையாக அறிவார்—நாம் எதிர்கொள்ளும் சுமைகள், சவால்கள் மற்றும் தடைகள், அவை பெரும்பாலும் மற்றவர்களால் பார்க்க முடியாது. கடந்த காலத்தில் நம்மில் சிலர் அனுபவித்திருக்கக்கூடிய வாழ்க்கையை மாற்றும் காயங்களையும், நிகழ்காலத்தில் நம்மை இன்னும் பாதித்துக்கொண்டிருக்கும் அதிர்ச்சியையும் அவர் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்கிறார்.
பெரும்பாலும், நாம் பாதையில் இன்னும் முன்னேறி இருக்க வேண்டும் என்று நினைத்து, நம்மை நாமே கடுமையாக மதிப்பிடுகிறோம். நமது தனிப்பட்ட வரம்புகளையும் திறனையும் தேவன் மட்டுமே முழுமையாக அறிந்து வைத்திருக்கிறார், அதனால்தான், நமது செயல்திறனை மதிப்பிடுவதற்கு அவர் மட்டுமே முழுமையாகத் தகுதி பெற்றவர்.
சகோதரிகளே, சகோதரர்களே, கதையில் வரும் பார்வையாளர்களைப் போல நாமும் இருப்போம், நமது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், சீஷத்துவப் பயணத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்துவோம்! அதற்காக நாம் விதிகளை மீறவோ அல்லது தரத்தை குறைக்கவோ தேவையில்லை. இது இரண்டாவது பெரிய கட்டளை தான்—நம்மைப் போலவே பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும் என்பது. மேலும் நமது இரட்சகர் கூறியது போல், “இவர்களில் மிகச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ … , நீங்கள் அதை எனக்கே செய்தீர்கள்,“ அது நன்மைக்காகவோ அல்லது தீமைக்காகவோ இருக்கலாம். மேலும் அவர்: ”நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல” என்றார்.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நமக்கு உதவியும் ஊக்கமும் தேவைப்படும் நேரங்கள் வரும். இப்போதிலிருந்து, எப்போதும் ஒருவருக்கொருவர் அதைச் செய்ய உறுதியெடுப்போம். நாம் அவ்வாறு செய்யும்போது, நாம் அதிக ஒற்றுமையை வளர்த்து, நம் ஒவ்வொருவரையும் குணப்படுத்தி உருமாற்றும் பரிசுத்தமான பணியை இரட்சகர் செய்ய வழியை எளிதாக்குவோம்.
இந்த வாழ்க்கைப் பந்தயத்தில், இந்த பூலோகப் பயணத்தில் தான் மிகவும் பின்தங்கிவிட்டதாக உணரும் ஒவ்வொருவரும், தயவுசெய்து தொடர்ந்து செல்லுங்கள். இந்த கட்டத்தில் நீங்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதை இரட்சகர் மட்டுமே முழுமையாக தீர்மானிக்க முடியும், அவர் இரக்கமும், நீதியுமுள்ளவர். வாழ்க்கைப் பந்தயத்தின் மகத்தான நியாயாதிபதி இரட்சகர், நீங்கள் ஓடுவது, நடப்பது அல்லது களைப்புடன் நகர்கிறீர்கள் போன்ற சிரமத்தின் அளவை அவர் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்கிறார். அவர் உங்கள் வரம்புகள், உங்கள் திறன், உங்கள் வாழ்க்கை அனுபவங்கள், நீங்கள் சுமக்கும் மறைவான சுமைகள், உங்கள் இருதயத்தின் ஆசைகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வார். நீங்கள் உண்மையில் அடையாள உலக சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கலாம். தயவுசெய்து நம்பிக்கையை இழக்காதீர்கள். தயவுசெய்து, தொடருங்கள்! தயவுசெய்து தங்குங்கள்! நீங்கள் உண்மையாகவே சொந்தமாயிருக்கிறீர்கள்! கர்த்தருக்கு நீங்கள் தேவை, எங்களுக்கும் நீங்கள் தேவை!
நீங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும், உங்கள் பரலோக பிதாவும் உங்கள் இரட்சகரும் உங்களை முழுமையாக அறிந்திருக்கிறார்கள், உங்களை பூரணமாக நேசிக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை ஒருபோதும் மறக்கவில்லை. அவர்கள் உங்களை வீட்டுக்கு அழைத்துவரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இரட்சகர் மீது உங்கள் கண்ணை வைத்திருங்கள். அவர் உங்கள் இருப்புக் கோல். அவரை விட்டுவிடாதீர்கள். அவர் ஜீவிக்கிறார் என்றும், நீங்கள் அவரை நம்பலாம் என்றும் நான் சாட்சியமளிக்கிறேன். அவர் உங்களை உற்சாகப்படுத்துகிறார் என்பதற்கும் நான் சாட்சியமளிக்கிறேன்.
நாம் அனைவரும் இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்துவோமாக, இது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது ஜெபம், ஆமென்.