“மார்ட்டின்ஸ் குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)
“மார்ட்டின்ஸ் குடும்பம்,” கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்
ஏப்ரல் 1972–நவம்பர் 1978
மார்ட்டின்ஸ் குடும்பம்
கர்த்தருடைய ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருத்தல்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெல்விசியோ மார்ட்டின்ஸ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சாலை முழுவதும் கார்கள் நிறைந்திருந்ததால், யாரும் நகர முடியவில்லை. ஹெல்விசியோ தனது வாழ்க்கையைப் பற்றி யோசித்தார். அவருக்கு நல்ல வேலை இருந்தது. அவர் தனது மனைவி ரூடாவையும், தனது இரண்டு குழந்தைகளான மார்கஸ் மற்றும் மரிசாவையும் மிகவும் நேசித்தார். ஆனால் ஏதோ ஒன்று குறைவது போல் அவருக்குத் தோன்றியது.
Saints, 4:229–30
ஹெல்விசியோ காரில் இருந்து இறங்கி ஜெபிக்க ஆரம்பித்தார். “என் தேவனே,” அவர் கூறினார், “நீர் எங்கோ இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும், ஆனால் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை.” அவர் பரலோக பிதாவிடம், தனது குடும்பத்தினர் எதையோ தேடிக்கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு அவருடைய உதவி தேவைப்படுவதாகவும் கூறினார். பின்னர் ஹெல்விசியோ தனது காரில் திரும்பி வீட்டிற்குச் சென்றார்.
Saints, 4:230
பின்னர், கர்த்தர் அமெரிக்காவிலிருந்து ஊழியக்காரர்களை அனுப்பினார். அவர்கள் மார்ட்டின்ஸ் குடும்பத்தைச் சந்தித்தனர். அவர்கள் தனது வீட்டிற்கு ஒரு அமைதியான மனநிலையைக் கொண்டு வந்ததை ஹெல்விசியோ கவனித்தார். அந்த நேரத்தில், அமெரிக்காவில் கருமையான சருமம் உள்ளவர்கள் பெரும்பாலும் நன்றாக நடத்தப்படுவதில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் கேட்டார், “உங்கள் மதம் கறுப்பின மக்களை எப்படி நடத்துகிறது?”
Saints, 4:230–31
தேவனின் பிள்ளைகள் அனைவரும் ஞானஸ்நானம் பெறலாம் என்று ஊழியக்காரர்கள் விளக்கினர். ஆனால் அந்த நேரத்தில், ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மூதாதையர்களைக் கொண்ட கறுப்பின மக்களால் ஆசாரியத்துவத்தை தரிக்கவோ அல்லது பெரும்பாலான ஆலய ஆசீர்வாதங்களைப் பெறவோ முடியவில்லை. ஹெல்விசியோவுக்கும் ரூடாவுக்கும் இன்னும் பல கேள்விகள் இருந்தன. அவர்களுக்கு பதிலளிக்க ஊழியக்காரர்கள் தங்களால் இயன்றதைச் செய்தனர்.
Saints, 4:231
பல ஆண்டுகளாக, எல்லா மக்களுக்கும் ஆசாரியத்துவம் மற்றும் ஆலய ஆசீர்வாதங்கள் எப்போது வழங்கப்படலாம் என்பதை அறிய தீர்க்கதரிசிகள் ஜெபித்து வந்தனர்.
Saints, 4:71
ஹெல்விசியோவும் ரூடாவும் சபைக்குப் போக முயற்சி செய்ய முடிவு செய்தனர். அங்கிருந்த பரிசுத்தவான்கள் மிகவும் அன்பானவர்களாகவும், தயவானவர்களாகவும் இருந்தனர். சபையில் கற்றுக்கொண்டது மார்ட்டின்ஸ் குடும்பத்தினருக்குப் பிடித்திருந்தது.
Saints, 4:231–32
ஒரு நாள், சபையிலிருந்து வீடு திரும்பும் வழியில், மார்கஸ் தனது குடும்பத்தினரிடம், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கவனித்ததாகக் கூறினார். “அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியும்,” என்று மார்கஸ் கூறினார். “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்”“ ”மார்கஸ் சொன்னது சரி என்று குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்குத் தெரியும். ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட அவர்கள் முடிவு செய்தனர்.
Saints, 4:232
பல வருடங்களுக்குப் பிறகு, பிரேசிலில் உள்ள பரிசுத்தவான்கள் ஒரு ஆலயத்தைக் கட்டுவதில் மும்முரமாக இருந்தனர். மார்ட்டின்ஸ் குடும்பத்தினர் உற்சாகமாக இருந்தனர், ஆனால் அவர்கள் சோகமாகவும் இருந்தனர். ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு அவர்களால் உள்ளே நுழைய முடியாது. “கவலைப்படாதே,” ஹெல்விசியோ ரூடாவிடம் கூறினார். “கர்த்தர் அனைத்தையும் அறிகிறார்.”
Saints, 4:293–94
உண்மையாக இருப்பது எளிதல்ல. மக்கள் மார்ட்டின் குடும்பத்தை கேலி செய்தனர். அவர்கள் ஏன் சபையில் இருந்தனர் என்பதை அவர்களுடைய நண்பர்களால் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் சபை என்பதை ஹெல்விசியோவும் அவரது குடும்பத்தினரும் அறிந்திருந்தனர்.
Saints, 4:251–52
ஒரு நாள், ஹெல்விசியோ வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, ரூடா, “என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அற்புதமான செய்தி!” என்றார். மிகுந்த உபவாசம் மற்றும் ஜெபத்திற்குப் பிறகு, தீர்க்கதரிசி, தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல், ஒரு வெளிப்பாட்டைப் பெற்றார். தோல் நிறத்தைப் பொருட்படுத்தாமல், எவரும் ஆசாரியத்துவம் மற்றும் ஆலயத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெறலாம் என்று தேவன் அவரிடம் கூறினார்.
அதிகாரபூர்வ பிரகடனம் 2; Saints, 4:318–19
மார்ட்டின்ஸ் குடும்பத்தினரும் இன்னும் பலரும் நீண்ட காலம் காத்திருந்தனர். இப்போது காத்திருப்பு முடிந்தது! ஹெல்விசியோவும் மார்கஸும் ஆசாரியத்துவத்தைப் பெற்றனர். ஹெல்விசியோ, ரூடா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆலயத்தில் ஒரு குடும்பமாக முத்திரிக்கப்பட்டனர். அவர்கள் இப்போது சுவிசேஷத்தின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.
Saints, 4:319–21