வேதக் கதைகள்
நைட் குடும்பத்தாரும் மற்றவர்களும் சீயோனில் கூடுதல்


“நைட் குடும்பத்தாரும் மற்றவர்களும் சீயோனில் கூடுதல்,”கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள் (2024)

“நைட் குடும்பத்தாரும் மற்றவர்களும் சீயோனில் கூடுதல்,”கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள்

டிசம்பர் 1830–ஆகஸ்ட் 1831

3:16

நைட் குடும்பத்தாரும் மற்றவர்களும் சீயோனில் கூடுதல்

கர்த்தரின் அழைப்புக்குக் கீழ்ப்படிதல்

பாலி மற்றும் ஜோசப் நைட் பிற பரிசுத்தவான்களுடன் ஒஹாயோவுக்குச் செல்லுதல்

பாலி மற்றும் ஜோசப் நைட் தங்கள் குடும்பத்துடன் நியூயார்க்கில் வசித்து வந்தனர். அவர்கள் தீர்க்கதரிசி ஜோசப்பை நன்கு அறிந்திருந்தார்கள். சுவிசேஷத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் சபையில் சேரத் தேர்ந்தெடுத்தனர். கர்த்தர் பரிசுத்தவான்களை ஒஹாயோவுக்குச் செல்லும்படி கேட்டபோது, நைட் குடும்பத்தினர் கீழ்ப்படிந்தனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 37; Saints, 1:33, 94, 109–110

ஒஹாயோவில்  பரிசுத்தவான்களை வரவேற்கும் லீமன் கோப்லி.

ஒஹாயோவிற்கு வந்தபோது நைட் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருந்தனர். சபை உறுப்பினரான லீமன் கோப்லி, சில பரிசுத்தவான்கள் தனது நிலத்தில் வாழ முடியும் என்று கூறினார். பயிர்களை நடவு செய்வதற்கும் வீடுகளைக் கட்டுவதற்கும் அங்கே போதுமான இடம் இருந்தது. ஜோசப் நைட்டும் அவரது மகன்களும் வயல்களை நடவு செய்வதற்குத் தயார்படுத்த கடுமையாக உழைத்தனர்.

Saints, 1:126–27

லீமன் கோப்லியின் நிலத்தை விட்டு வெளியேறும் பரிசுத்தவான்கள்.

ஆனால் ஒரு நாள், லீமன் தனது நிலத்தைப் பற்றிய தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். பரிசுத்தவான்கள் இனிமேலும் அங்கு வாழ்வதை அவர் விரும்பவில்லை. அவர் நைட் குடும்பத்தாரையும் மற்ற அனைவரையும் வெளியேறச் சொன்னார்.

Saints, 1:127

பரிசுத்தவான்கள் ஜோசப் ஸ்மித்திடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டல்.

பரிசுத்தவான்கள் கவலையடைந்தனர். இப்போது அவர்களுக்கு வாழ எங்கும் இடம் இல்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தீர்க்கதரிசி ஜோசப்பிடம் கேட்டார்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 54; Saints, 1:127

சீயோனைக் கட்ட மிசௌரிக்குச் செல்லுமாறு பரிசுத்தவான்களிடம் ஜோசப் கூறுதல்.

இந்தப் பரிசுத்தவான்கள் மிசௌரிக்குச் சென்று சீயோனைக் கட்ட வேண்டும் என்று கர்த்தர் சொன்னார். சீயோன் கர்த்தருடைய ஜனங்கள் கூடி சேரக்கூடிய ஒரு நகரமாக இருக்கும். சீயோனில், அவர்கள் தேவனுடன் உடன்படிக்கைகள் அல்லது வாக்குறுதிகளைச் செய்யும் ஒரு ஆலயத்தைக் கட்டுவார்கள். இந்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடித்தால் அவர் அவர்களை ஆசீர்வதிப்பார். நைட் குடும்பத்தார் செல்ல உற்சாகமாக இருந்தனர்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 29:1–8; 42:30–36; 45:59–66; 54:6–9; 57:1–2; Saints, 1:128

மிசௌரிக்கு செல்லும் வழியில் பாலியின் குடும்பத்தினர் அவளை கவனித்துக்கொள்ளுதல்.

நைட் குடும்பத்தார் மிசௌரிக்குப் பயணித்தபோது, ​​பாலி மிகவும் நோய்வாய்ப்பட்டாள். அவள் அதிக காலம் வாழமாட்டாள் என்று அவளுடைய கணவர் ஜோசப்பும் மகன்களும் கவலைப்பட்டனர். ஆனால் பாலி இறப்பதற்கு முன்பு சீயோனில் இருக்க விரும்புவதாக தனது குடும்பத்தினரிடம் கூறினாள். அவள் அதை எல்லாவற்றிற்கும் மேலாக விரும்பினாள்!

Saints, 1:128

நைட் குடும்பத்தார் மிசௌரிக்கு வந்தடைதல்

நீண்ட பயணத்திற்குப் பிறகு, நைட் குடும்பத்தார் மிசௌரியை வந்தடைந்தனர். அதைப் பார்க்க உயிருடன் இருந்ததற்காக பாலி கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருந்தாள். நைட் குடும்பத்தார் அந்த நிலம் அழகாக இருப்பதாக நினைத்தார்கள். சீயோனை அங்கே கட்ட வேண்டும் என்ற கர்த்தரின் கட்டளையை அவர்கள் கடைப்பிடிக்க முடியும் என்ற விசுவாசம் அவர்களுக்கு இருந்தது.

Saints, 1:132

புதிய ஆலயம் எங்கு இருக்கும் என்பதைக் குறிக்க பரிசுத்தவான்கள் ஒரு கல்லை வைத்தல்.

பரிசுத்தவான்கள் ஒரு சிறப்பு ஜெபத்தைச் செய்து, கர்த்தருடைய ஜனங்கள் வரவிருக்கும் தேசத்தை சீயோன் என்று அழைத்தனர். ஆலயத்தின் மூலை இருக்கும் இடத்தைக் குறிக்க தீர்க்கதரிசி ஜோசப் ஒரு கல்லை வைத்தார். சில நாட்களுக்குப் பிறகு, பாலி இறந்தாள். சீயோனுக்கு வந்து இறந்த பரிசுத்தவான்கள் பரலோகத்தில் இளைப்பாறுவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:1–2; Saints, 1:132–33