ஆவியில் அவரில் முழுமை
முழுமை என்பது இவ்வாழ்விலேயே உடல் மற்றும் மனரீதியான மீட்பினை பெறுவது என்ற அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டியதில்லை. முழுமையடைதல் என்பது இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினாலும் அவரில் மனமாற்றம் அடைவதாலும் பிறக்கிறது.
குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் இரட்சகரிடத்தில் வந்து “எங்களுக்கு இரங்கும்“ என்று உரக்க சத்தமிட்டனர். இயேசுவும் மனமிரங்கினார். அவர்கள் தங்களை ஆசாரியர்களுக்குக் காண்பிக்கும்படி கூறினார், அவர்கள் போகையில் நோய் நீங்கி சுத்தமானார்கள்.
அவர்களில் ஒருவன் தான் குணமானதைக் கண்டு, உரத்த சத்தத்தோடே தேவனுக்கு துதிகளை செலுத்தினான். அவன் இரட்சகரிடத்திற்கு திரும்பிவந்து, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி தெரிவித்தான்.
நன்றி செலுத்தியவனை நோக்கி, இரட்சகர், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,” என்றார்.
இயேசு கிறிஸ்து குஷ்டரோக மனுஷர் பத்து பேரை குணப்படுத்தியிருந்தார். ஆனாலும் அந்த ஒருவன், இரட்சகரிடத்தில் திரும்பி வந்ததில், ஒன்றை கூடுதலாக பெற்றான். அவன் முழுமையடைந்திருந்தான்.
குஷ்டரோக மனுஷரில் ஒன்பது பேர் உடலளவில் குணமடைந்திருந்தனர்.
ஒருவன் மாத்திரமே உடலளவில் குணமடைந்தது மட்டுமன்றி ஆவியிலே முழுமையாக்கப்பட்டிருந்தான்.
இக்கதையினை நான் தியானிக்கும்போது, இந்த உரையாடல் உண்மையாயிருக்குமா என்று வியந்தேன். குணமாதலும் முழுமையடைதலும் ஒன்றல்லவெனில், ஒருவனால் ஆவியிலே அவரில் முழுமையாக்கப்பட்டு, உடலளவிலும் மனதளவிலும் குணமாகாமல் இருக்க முடியுமா?
நம்முடைய குணமாக்கும் போதகர் எல்லா உபத்திரவங்களையும் குணமாக்குவார்—உடல் சார்ந்ததையும் மனம் சார்ந்ததையும்—ஆனால் அவருடைய வேளையில். குணப்படுத்தப்பட காத்திருக்கையில், நம்மால் முழுமையடைய முடியுமா?
ஆவியிலே முழுமையடைதல் என்பதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?
நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அவரை பின்பற்ற தேர்ந்தெடுக்கும்போதும், நம் இருதயங்களை அவர் மாற்றும் வண்ணம் அவற்றை அவரிடம் சமர்ப்பிக்கும்போதும், அவரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்போதும், அவருடனான உடன்படிக்கையின் உறவில் பிரவேசிக்கும்போதும், அவர் சமுகத்திற்குத் திரும்பும் வரையில், நாம் பூமியில் எதிர்கொள்ளும் சவால்களை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ளும் விதமாக அவற்றை மேற்கொள்ளும்போதும், நாம் எல்லாவிதத்திலும் குணமடைந்து இயேசுகிறிஸ்துவில் முழுமையடைகிறோம். நான் முழு இருதயத்தோடு அவருடனான உறவில் இருந்தால், நான் குணமாக காத்திருக்கும் வேளையில் நான் முழுமையடைய முடியும்.
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் நம்பிக்கையை கொடுக்கிறது. நான் முழுமையடைய முயற்சிக்கும்போதே நம்பிக்கையை காண்கிறேன்—இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்திலிருந்து பிறந்த ஒரு முழுமை. அவரில் விசுவாசம் குணமடைதலின் என் நம்பிக்கையை அதிகரிக்கிறது, அந்த நம்பிக்கையானது இயேசு கிறிஸ்துவிலுள்ள என் விசுவாசத்தை பெலப்படுத்துகிறது. இது ஒரு வல்லமை மிகுந்த சுற்று.
உன் விசுவாசம் உன்னை “இரட்சித்தது” என்று கர்த்தர் ஏனோஸிடம் கூறினார். ஏனோஸ் தனது தீர்க்கதரிசி-தகப்பன் யாக்கோபின் வார்த்தைகளை தியானித்தபோது, அவன் நித்திய ஜீவனுக்கான வாய்ப்பினை புரிந்துகொள்ள ஏங்கியபோது, தேவனுடன் வல்லமையான ஜெபத்தில் அழுதபோது முழுமை வந்தடைந்தது. அந்த வாஞ்சை மற்றும் தாழ்மை நிலையில் கர்த்தருடைய சத்தம் அவனுக்கு உண்டாகி, அவனுடைய பாவங்கள் அவனுக்கு மன்னிக்கப்பட்டதாக அறிவித்தது. ஏனோஸ் கர்த்தரிடம் “அது எப்படி நடந்தது?“ என்று கேட்டான் “இயேசு கிறிஸ்துவிலுள்ள உன் விசுவாசத்தினால்தான், … உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,” என்று கர்த்தர் பதிலளித்தார்.
நாம் உடல் மற்றும் மனம் சார்ந்து குணமடைய நம்பிக்கையோடு காத்திருக்கும் வேளையில் இயேசு கிறிஸ்துவிலுள்ள நம் விசுவாசத்தின் மூலம், ஆவியிலே முழுமையடைய நாம் தேடலாம்.
அவருடைய பாவநிவாரண பலியின் நற்பண்பினால், நாம் நேர்மையாக மனந்திரும்பும்போது, ஏனோஸிற்கு செய்தது போல இரட்சகர் நம்மை பாவத்திலிருந்து குணப்படுத்துகிறார். அவரது முடிவில்லா பாவநிவர்த்தி நமது துக்கங்களையும் துயரங்களையும் கூட அடைகிறது.
அவர் நம் நோய்களையும் பிணிகளையும்—தீராத வேதனையையும், தன்னுடல் தாக்கு நோயான தண்டுவட மரப்பு நோய், புற்றுநோய், மனசோர்வு, மனஅழுத்தம் போன்றவற்றை குணப்படுத்தாமல் இருக்கலாம். அவ்வகையான குணமாக்குதல் கர்த்தருடைய வேளையில்தான் நடக்கும். மேலும் அதே நேரம், அவர் மேலுள்ள விசுவாசத்தைக் காட்டும்போது நாம் முழுமையடைய தெரிந்து கொள்ளலாம்!
முழுமையடைதல் என்பது முற்றிலும் நிறைவடைதல். மணவாளன் வந்தபோது எண்ணெய் நிறைந்த தீவட்டிகளை வைத்திருந்த புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளைப்போல, நம்முடைய தீவட்டிகளை மனமாற்றம் என்னும் வல்லமையுள்ள எண்ணெயால் நிரப்பும் போது நாம் இயேசு கிறிஸ்துவில் முழுமையடையலாம். அவ்வாறாக, நாம் இரண்டாம் வருகை என்ற அடையாளமான திருமண விருந்திற்குத் தயாராகிறோம்.
இந்த உவமையில், பத்து கன்னிகைகள் அனைவருமே சரியான இடத்தில் தான் மணவாளனுக்காகக் காத்திருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு தீவட்டியோடு வந்தார்கள்.
ஆனால் அவர் நடுராத்திரியிலே எதிர்பாரா வேளையில் வந்தபோது, அந்த ஐந்து புத்தியில்லா கன்னிகைகளிடத்திலும் அவர்கள் தீவட்டிகளுக்கு போதுமான எண்ணெய் இல்லாதிருந்தது. அவர்கள் துன்மார்க்கர்களாக அல்லாமல் புத்தியில்லாதவர்களாக விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த புத்தியில்லாதவர்கள் மனமாற்றம் என்ற எண்ணையை தங்கள் தீவட்டிகளுக்கு போதுமானபடி ஆயத்தமாக்க தவறிவிட்டார்கள்.
அதனால், அந்த திருமண விருந்திற்குள் உள்ளே அனுமதிக்கும்படியான அவர்களின் விண்ணப்பத்திற்கு, மணவாளனோ “நீங்கள் என்னை அறியீர்களே,“ என்று பதிலளித்தார்.
அதன்படி, அந்த ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளோ அவரை அறிந்திருந்தார்கள். அவரில் முழுமையாயிருந்தார்கள்.
அவர்களின் தீவட்டிகள் மனமாற்றம் என்ற விலையேறப்பெற்ற எண்ணெயினால் நிரம்பியிருந்தது, அதுதான் அந்த புத்தியுள்ள கன்னிகைகளை திருமண விருந்திற்குள் பிரவேசித்து மணவாளனின் வலது பாரிசத்தில் இருக்க அனுமதித்தது.
இரட்சகரால் சொல்லப்பட்டதுபோல, “விசுவாசத்தோடிருங்கள், எப்போதும் ஜெபித்துக்கொண்டிருங்கள், மணவாளனின் வருகைக்கு ஆயத்தமாகும்படியாக உங்களுடைய தீவட்டிகளை சரிசெய்து எரியவிட்டு உங்களுடன் எண்ணெய் வைத்திருங்கள்.“
ஐந்து ஞானமுள்ள கன்னிகைகள்-பென் ஹாமண்ட்
ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளை சித்தரிக்கும் ஒரு அற்புதமான சிற்பம் சமீபத்தில்தான் ஆலய சதுக்கத்தில் ஒத்தாசைச் சங்க கட்டிடத்தின் கதவுகளுக்கு வெளியே சால்ட் லேக் ஆலயத்தின் நிழலிலே வைக்கப்பட்டது.
இந்த உவமையை பயன்படுத்தும் சரியான இடத்தில்தான் இது அமைந்துள்ளது. நாம் உடன்படிக்கைகளை உருவாக்கி கடைபிடிக்கும்போது, முக்கியமாக கர்த்தருடைய ஆலயத்திலே கிடைக்கப்பெறுகின்ற உடன்படிக்கைகளினால் நாம் நம்முடைய தீவட்டிகளை மனமாற்றம் என்ற எண்ணெயினால் நிரப்புகிறோம்.
அந்த ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளும் மனமாற்றம் என்ற எண்ணையை பகிராத பெண்களாக கருதப்பட்டாலும், அவர்களின் எண்ணெய் நிறைந்த பிரகாசமாக எரியும் தீவட்டிகளைத் தூக்கி பிடிக்கும்போது ஒளியை பகிர்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிப்பது போலவும், தோளோடு தோளாக, ஒரு கை மற்றவரை அணைத்துக் கொண்டு, கண்களைப் பார்த்து, மற்றவர்களை வெளிச்சத்திற்கு வரும்படி அழைப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உண்மையாகவே, “[நாம்] உலகிற்கு ஒளியாயிருக்கிறோம்.“ இரட்சகர் அறிவித்தார்:
“நீங்கள் இந்த ஜனத்திற்கு ஒளியாயிருக்கும் பொறுப்பை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைக்கப்பட முடியாது.
“ … [நாம்] மெழுகுவர்த்தியைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைப்போமா? இல்லையே, மெழுகுவர்த்தித் தண்டின்மேல் வைக்கிறோம்; அப்பொழுது அது வீட்டிலுள்ள [யாவருக்கும்] வெளிச்சம் கொடுக்கும்;
“இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, [பரலோகத்திலிருக்கிற] உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.”
அவருடைய ஒளியைப் பகிர நமக்கு கட்டளையிடுகிறார். ஆகவே உங்கள் விளக்கை இயேசு கிறிஸ்துவிடம் மனமாற்றமடையும் எண்ணெயால் நிரப்பி, உங்கள் விளக்கை நேர்த்தியாகவும் பிரகாசமாகவும் எரியவைக்க ஆயத்தமாகுங்கள். பின்பு அந்த ஒளியானது பிரகாசிக்கட்டும். நாம் நம் ஒளியைப் பகிர்ந்து கொள்ளும்போது, இயேசு கிறிஸ்து தருகின்ற நிவாரணத்தை மற்றவர்களுக்குக் கொண்டு வருகிறோம், அவருடனான நமது மனமாற்றம் ஆழமாகிறது மட்டுமல்லாமல், நாம் குணமாகக் காத்திருக்கும்போதே நாம் முழுமையடைய முடியும். நமது ஒளியை பிரகாசமாக ஒளிர விடும்போது, நாம் காத்துக்கொண்டிருக்கும்போதே சந்தோஷமாக இருக்க முடியும்.
நாம் இயேசு கிறிஸ்துவிடம் மனமாற்றம் அடைந்து, குணமாகக் காத்திருக்கும்போதே அவரிடமிருந்து பெலனைப் பெற்று நாம் முழுமையாக முடியும் என்ற கொள்கையை வலுப்படுத்த ஒரு வேத உதாரணம் பயனுள்ளதாக இருக்கும்.
அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஒருவிதமான உபத்திரவம் இருந்தது—அதனை அவன் “மாம்சத்திலே ஒரு முள்,“ என்று கூறினான். அதை நீக்கும்படிக்கு அவன் மூன்றுதரம் கர்த்தரிடம் வேண்டியிருந்தான் கர்த்தர் பவுலை நோக்கி, “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்,” என்றார். அதற்கு பவுல் அறிவித்தான்:
“ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் “மிகவும் சந்தோஷமாய் … மேன்மைபாராட்டுவேன்.
“ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், … இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.”
இயேசு கிறிஸ்துவிலுள்ள நமது பலம் நமது பலவீனத்தில் கூட முற்றிலுமாகவும் முழுமையாகவும் பூரணப்படுத்தப்படலாம்—என்பதை பவுலின் உதாரணம் எடுத்துரைக்கிறது. இவ்வுலகின் போராட்டங்களில் போராடிக்கொண்டிருப்போர் பவுலைப்போல் விசுவாசத்தோடு தேவனை நோக்கித் திரும்பினால் தேவனுடன் நெருங்கிப்பழகும் ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.
பவுல் தன் உபத்திரவத்திலிருந்து குணமடையவில்லை, ஆனாலும் இயேசு கிறிஸ்துவில் ஆவியிலே முழுமையடைந்தான். அவனுடைய கஷ்டத்திலும் கூட, அவனது மனமாற்றத்தின் ஒளியும் இயேசு கிறிஸ்துவின் பெலனும் பிரகாசித்துக்கொண்டிருந்தது, அவன் சந்தோஷமாயிருந்தான். பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் அவன் வியந்து கூறியதென்னவெனில், “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.“
சகோதரிகளே சகோதரர்களே, ஆம் என்பதே பதில், நாம் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குணமாக காத்திருக்கும் வேளையில் நாம் ஆவியிலே முழுமையடைய முடியும். முழுமை என்பது இவ்வாழ்விலேயே உடல் மற்றும் மனரீதியான மீட்பினை பெறுவது என்ற அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டியதில்லை. முழுமையடைதல் என்பது இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினாலும் அவரில் மனமாற்றம் அடைவதாலும், அந்த மனமாற்றத்தின் ஒளியை பிரகாசிக்கச் செய்வதாலும் பிறக்கிறது.
“அழைக்கப்பட்டவர்கள் அநேகர், [தேர்ந்தெடுக்கப்பட] தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர்.”
உயிர்த்தெழுதலில் அனைவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குணமடைவார்கள். ஆனால் இப்பொழுதோ அவரில் முழுமையடைய தெரிந்து கொள்வீர்களா?
நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் மனமாற்றம் அடைந்துள்ளேன் என்பதை சந்தோஷத்தோடு அறிவிக்கிறேன். நான் அவரில் முழுமையடைய முயற்சிக்கிறேன். அவர் ஜீவிப்பதால், அவருடைய ஏற்ற வேளையில், எல்லாமே மீட்கப்பட்டு, குணமாதல் வரும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
மகதலேனா மரியாள் இயேசு கிறிஸ்துவால் குணமடைந்த ஒரு பெண். அவள் இயேசு கிறிஸ்துவில் முழுமையடைந்த ஒரு பெண்ணாக இருந்தாள். அவருடைய சீஷராக, அவள் கலிலேயா முழுவதும் இரட்சகரைப் பின்தொடர்ந்து அவருக்கு ஊழியம் செய்தாள்.
அவள் சிலுவையின் அடியில், அவருடைய மரணத்திற்கு ஒரு சாட்சியாக இருந்தாள்.
அடக்கத்திற்கான ஏற்பாடுகளை நிறைவேற்ற அவள் அவருடைய கல்லறைக்குச் சென்றாள், அடைக்கப்பட்டிருந்த கல் அகற்றப்பட்டிருப்பதையும், கர்த்தருடைய உடல் அங்கு இல்லாததையும் கண்டாள். மரியாள் கல்லறையில் அழுது கொண்டிருந்தபோது, முதலில் தேவதூதர்களாலும், பின்னர் இரட்சகராலும் கேட்கப்பட்டதென்னவென்றால், “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?“ என்பதாகும்.
“என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை“ என்று மரியாள் அழுதாள்.
இயேசு அவளை அன்போடு “மரியாளே“ என்று பெயர் சொல்லி அழைத்தார். அவள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, பரிசுத்தமுடன், “ரபூனி … போதகரே,” என்று பதிலளித்தாள்.
இரட்சகரைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்து ஏசாயா கூறியதாவது, “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லாருடைய முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.“
அவருடைய உயிர்த்தெழுதல் மரியாளின் கண்ணீரைத் துடைக்க அனுமதித்தது. நிச்சயமாக அவர் உங்களுடையதையும் துடைப்பார்,
மரியாள்தான் உயிர்த்தெழுந்த இரட்சகரின் முதல் சாட்சி. அவள் தான் கண்டதைப் பற்றி மற்றவர்களுக்கு முதலில் சாட்சி கொடுத்தாள்.
நான் மரியாளுடன் என் சாட்சியத்தையும் தாழ்மையுடன் சேர்க்கிறேன். அவர் உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். இறுதியில், அனைவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவரில் குணமடைவார்கள். அந்த குணமடைதலுக்காக காத்திருக்கும் வேளையில், குணமாக்கும் போதகர் மீதான விசுவாசமானது நம்மை ஆவியிலே முழுமையாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.