தேவனின் அன்பு
இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என நான் மகிழ்ந்து சாட்சியளிக்கிறேன். நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு பரிபூரணமானது, தனிப்பட்டது மற்றும் நிலையானது.
ஒரு கோடையில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் பயணம் செய்தபோது, எங்கள் குடும்பம் ஒரு மாலை நேரத்தை மேகங்களற்ற வானத்தின் கீழ் வெட்ட வெளியில் தூங்கிக் கழித்தது. எண்ணற்ற நட்சத்திரங்களால் நிரம்பியும் மற்றும் எப்போதாவது எரி நட்சத்திரத்துடனும் அற்புதமான வானவெளி எங்களுக்கு மேலே தெளிவாகத் தெரிந்தது. தேவனுடைய சிருஷ்டிப்பின் மகத்துவத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டபோது, அவருடன் ஒரு பயபக்தியுள்ள தொடர்பை உணர்ந்தோம் ஹாங்காங்கில் வளர்ந்த எங்கள் இளம் பிள்ளைகள், இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் அனுபவித்ததில்லை. அவர்கள் அப்பாவித்தனமாக நாங்கள் வீட்டில் இதே வானத்தின் கீழ்தான் வசிக்கிறோமா என்று கேட்டார்கள். இது அதே வானம்தான், ஆனால் நாங்கள் வசித்த இடத்தில் இந்த நட்சத்திரங்கள் இருந்தபோதிலும் காற்று மற்றும் ஒளி மாசுபாடு அவற்றைப் பார்க்க முடியாமல் தடுத்தது என்று நான் அவர்களுக்கு விளக்க முயன்றேன்,
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” என்று வேத வாக்கியங்கள் நமக்குப் போதிக்கிறது. திசைதிருப்பும் கவனச்சிதறல்கள் மற்றும் உலகப்பற்றின் சோதனைகள் நமது ஆவிக்குரிய பார்வையை மறைக்கும்போது, தேவனிலும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிலும் நாம் விசுவாசம் வைக்கும்போது, அவர்கள் இருப்பதன் நிச்சயத்தையும், நம்மீது அவர்கள் காட்டும் அக்கறையையும் பற்றிய தெளிவான உறுதியை நாம் பெறுகிறோம்.
மார்மன் புஸ்தகத்தில், தீர்க்கதரிசி லேகி “ஒரு விருட்சத்தைக் கண்டான், அதன் கனி ஒருவரை மகிழ்விக்கக் கூடியதாய் இருந்தது“ மற்றும் “எல்லாவற்றைக் காட்டிலும் மிக மதுரமாயிருந்தது.“ அவன் கனியை ருசித்தபோது, அது அவனது ஆத்துமாவை மிகுந்த மகிழ்ச்சியால் நிறைத்தது, ஆகையால் அவனது குடும்பத்தினரும் அதை ருசிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். இந்த விருட்சம் “தேவனுடைய அன்பை“ குறிக்கிறது என்றும், மேலும் லேகியைப் போலவே, நாமும் தேவனை நம் வாழ்க்கையில் அழைக்கும்போது அவரைப் பற்றிய மகிழ்ச்சியான சாட்சியைப் பெற முடியும் என்றும் நாம் கற்றுக்கொள்கிறோம்.
இயேசு கிறிஸ்து நம்மீது பரலோக பிதாவின் அன்பின் உருவமாக இருக்கிறார். அவரது பாவநிவாரண பலியின் மூலம், அவர் நம்முடைய பாவங்களைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு, நமது அக்கிரமங்களுக்காக நொறுக்கப்பட்டார். அவர் தனிப்பட்ட முறையில் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்து, நம்முடைய வேதனைகளையும் நோய்களையும் தன்மேல் ஏற்றுக்கொண்டார். நம்மை ஆறுதல்படுத்த அவர் பரிசுத்த ஆவியை அனுப்புகிறார், ஆவியின் கனிகளில் சந்தோஷம், சமாதானம் மற்றும் விசுவாசம் ஆகியவை அடங்கும், அவை நம்மை நம்பிக்கையாலும் அன்பாலும் நிரப்புகின்றன.
தேவனின் அன்பு அனைவரும் அணுகக்கூடியதாக இருக்கும்போது, பலர் அதை ஆர்வத்துடன் தேடுகிறார்கள், மற்றவர்கள் தேவனின் அன்பை உணர விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நம்பவில்லை. இன்னும் சிலர் அதைப் பற்றிக்கொள்ள தீவிரமாக முயற்சி செய்கிறார்கள் இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம், நாம் மீண்டும் மீண்டும் மனந்திரும்பி, வெளிப்படையாக மன்னித்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முயற்சித்து, தன்னலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது, தேவனின் அன்பை நாம் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்று வேதங்களும் மற்றும் கர்த்தருடைய தீர்க்கதரிசியும் நமக்குப் போதிக்கின்றனர். ஜெபம் மற்றும் வேதப் படிப்பின் மூலம் தினமும் அவருடன் உரையாடுவது போன்ற நம்மை அவரிடம் நெருங்கி வரச் செய்யும் காரியங்களைச் செய்யும்போதும், பெருமை, சர்ச்சை, கலகம் போன்ற நம்மை அவரிடமிருந்து தூரப்படுத்தும் காரியங்களைச் செய்வதை நிறுத்தும்போதும் நாம் தேவனின் அன்பை உணர்கிறோம்.
தலைவர் ரசல் எம்.நெல்சன் “இரட்சகரின் உதவியுடன், நம் வாழ்வில் உள்ள பழைய குப்பைகளை அகற்றவும்““கசப்பை ஒதுக்கி வைக்கவும்“ நம்மை அழைத்தார். அவர்மீதும், அவருடைய ஆலயத்தின் நியமங்கள், உடன்படிக்கைகள்மீதும் நமது வாழ்க்கையை மையமாக்குவதால், நமது ஆவிக்குரிய அடித்தளங்களை மிக ஆற்றலுடன் வலுப்படுத்த நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகளை அவர் வழங்கிக்கொண்டிருக்கிறார். நம்முடைய ஆலய உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, கர்த்தருடைய பலப்படுத்தும் வல்லமையை நாம் அதிகமாகப் பெறுகிறோம். இயேசு கிறிஸ்து மற்றும் நமது பரலோக பிதாவின் தூய அன்பை நாம் மிகுதியாக அனுபவிக்கிறோம்!
ஒரு அழகான குடும்பம் மற்றும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையுடன் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நண்பர் எனக்கு இருக்கிறார். ஒரு நோய் அவரை வேலை செய்ய முடியாமல் செய்தபோது இது மாறியது, அதைத் தொடர்ந்து விவாகரத்து ஏற்பட்டது. அதற்குப் பிந்தைய ஆண்டுகள் கடினமாக இருந்தன, ஆனால் அவரது பிள்ளைகள் மீதான அவரது அன்பும் தேவனுடன் அவர் செய்த உடன்படிக்கைகளும் அவரை ஆதரித்தன. ஒருநாள் அவருடைய முன்னாள் மனைவி மறுமணம் செய்துகொண்டதாகவும், ஆலய முத்திரித்தலை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும் அவர் கேள்விப்பட்டார். அவர் கலக்கமும் குழப்பமும் அடைந்தார். அவர் கர்த்தருடைய ஆலயத்தில் சமாதானத்தையும் புரிதலையும் நாடினார். அவர் வருகை தந்த மறுநாள், அவரிடமிருந்து பின்வரும் செய்தி எனக்குக் கிடைத்தது:
“நேற்றிரவு ஆலயத்தில் எனக்கு ஒரு வியப்பான அனுபவம் ஏற்பட்டது. எனக்கு இன்னும் கொஞ்சம் மனக்கசப்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. … நான் மாற வேண்டும் என்று எனக்குத் தெரியும், அவ்வாறு செய்ய நான் வாரம் முழுவதும் ஜெபித்துக் கொண்டிருந்தேன். … நேற்றிரவு ஆலயத்தில் ஆவியானவர் என் இருதயத்திலிருந்து மனக்கசப்பை அகற்றுவதை நான் உண்மையில் உணர்ந்தேன். … அதிலிருந்து விடுபட்டது அவ்வளவு நிம்மதியாக இருந்தது. … என் மீது சுமத்தப்பட்ட ஒரு அச்சுறுத்தும் சரீர பாரம் நீக்கப்பட்டுள்ளது.
அவருக்கு இன்னும் சவால்கள் இருக்கும்போதும், என் நண்பர் கர்த்தருடைய வீட்டில் அந்த அனுபவத்தை பொக்கிஷமாக மதிக்கிறார், அங்கு தேவனுடைய அன்பின் விடுதலை வல்லமை அவருக்கு தேவனுக்கு நெருக்கமாக உணரவும், வாழ்க்கையைப் பற்றி அதிக நம்பிக்கையுடனும், அவருடைய எதிர்காலத்தைப் பற்றி குறைந்த கவலையுடனும் உணர உதவியது.
தேவனுடைய அன்பை நாம் அனுபவிக்கும்போது, நம்முடைய பாரங்களை எளிதாக தாங்கிக்கொண்டு, பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அவருடைய சித்தத்திற்கு அடிபணிய முடியும். தேவன் நம்முடனான அவரது உடன்படிக்கைகளை நினைவுகூர்வார், நமது துன்பங்களில் நம்மை சந்திப்பார், அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிப்பார் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் உணரும் மகிழ்ச்சியை நம் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். லேகியின் குடும்பத்தைப் போலவே, கனியைப் புசிக்கலாமா வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு நபருக்கும் சுயாதீனம் உள்ளது, ஆனால் நாம் நேசிப்பவர்கள் தேவனின் அன்பை உணரக்கூடிய வகையில் நேசிக்கவும், பகிரவும், அழைக்கவும் நமக்கு வாய்ப்பு உள்ளது.
தேவனின் அன்பை உணர மற்றவர்களுக்கு உதவ, மனத்தாழ்மை, தயாளம், மனதுருக்கம், பொறுமை ஆகிய கிறிஸ்துவைப் போன்ற பண்புகளை நாம் நம்மில் வளர்த்து, தேவனை நேசிப்பது மற்றும் நமது சக மனிதர்களை நேசிப்பது என்ற இரண்டு பெரிய கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் பிறர் இரட்சகரிடம் திரும்ப உதவ வேண்டும்.
எங்கள் மகன்களில் ஒருவன் தனது பதின் பருவ ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதிலும் மற்றும் சுயமரியாதையுடனும் போராடினான். அவனுக்கு எப்படி உதவுவது என்பதை அறிய நானும் என் மனைவியும் ஜெபித்தோம், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறாரோ அதைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஒரு நாள், என் மூப்பர் குழுமத் தலைவரிடம், தேவையிலிருப்போர் யாரையாவது நான் என் மகனுடன் சேர்ந்து சந்திக்க முடியுமா என்று கேட்க தூண்டப்பட்டேன். சிறிது சிந்தனைக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க உடல்நல சவால்களைக் கொண்ட ஒரு பெண்ணை சந்திக்கும்படியும், கிளைத் தலைவரின் அனுமதியுடன், ஒவ்வொரு வாரமும் அவளுக்குத் திருவிருந்தைக் கொண்டுவரும்படியும் அவர் எங்களைக் கேட்டுக்கொண்டார். நான் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் இந்த வாராந்திர ஒப்புக்கொடுத்தலுக்கு என் மகன் எவ்வாறு எதிர்வினையாற்றுவான் என்பது பற்றிய கவலையும் இருந்தது.
எங்கள் முதல் சந்திப்பில், இந்த அன்பான பெண்மணிக்காக எங்கள் இருதயங்கள் வலித்தன, ஏனெனில் அவள் தொடர்ந்து வலியில் இருந்தாள். திருவிருந்துக்காக அவள் மிகவும் நன்றியுள்ளவளாக இருந்தாள், நாங்கள் அவளையும் அவளுடைய கணவரையும் சந்திப்பதில் மகிழ்ந்தோம். சில சந்திப்புகளுக்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் வெளியூர் சென்றிருந்தேன், என் மகனுடன் செல்ல முடியவில்லை, ஆனால் எங்கள் வேலையை அவனுக்கு நினைவூட்டினேன். நான் வீட்டிற்கு வந்தபோது, சந்திப்பு எப்படி இருந்தது என்பதைக் கேட்க என்னால் காத்திருக்க முடியவில்லை. என் மகன், தன் வகுப்பு நண்பர்கள் இதுபோன்ற அருமையான செயல்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை என்று பதிலளித்தான். மேலும் அவன் தனது சகோதரனை உதவிக்கு தன்னுடன் அழைத்துச் சென்றததாகவும், திருவிருந்து சுமூகமாக நடந்ததாகவும் விரிவாகக் கூறினான், ஆனால் இந்த அன்பான சகோதரி வார நாட்களில் சோகமாக இருந்ததாராம். ஏனென்றால் அவர் திரைப்படங்களைப் பார்க்க தனது வீட்டிற்கு நண்பர்களை அழைத்திருக்கிறார், ஆனால் அவரது வீடியோ பிளேயர் வேலை செய்யவில்லை. என் மகன் ஆன்லைனில் தேடியதாகவும், சிக்கலைக் கண்டுபிடித்ததாகவும், அதை அந்த இடத்திலேயே சரிசெய்ததாகவும் கூறினான். அவன் பயனுள்ளவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும், அவளுடைய நாளை பிரகாசமாக்கக்கூடிய ஒன்றைச் செய்ய நம்பிக்கையுடையவனாகவும் உணர்ந்தான். தேவன் தன் மீது வைத்திருந்த அன்பை உணர்ந்தான்.
உங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், வாழ்க்கை மேகமூட்டமாக இருந்தும், உங்கள் ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அல்லது தேவனின் அன்பை உங்களால் உணர முடியவில்லை என்றால், தயவுசெய்து உங்கள் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள், நமக்கு மேலே உள்ள நட்சத்திரங்களைப் போலவே, பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் உங்களை அறிகிறார்கள், கேட்கிறார்கள், நேசிக்கிறார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் அவரது சீஷர்கள் ஒரு படகில் “அலைகளால் தூக்கி எறியப்பட்டபோது“ இரட்சகர் தண்ணீரில் அவர்களை நோக்கி நடந்து சென்று அவர்களுக்கு உறுதியளித்தார், “திடன்கொள்ளுங்கள்; நான்தான்; பயப்படாதிருங்கள்“. பேதுரு தண்ணீரில் இரட்சகரை நோக்கி நடக்க விரும்பியபோது, இயேசு அவனை நோக்கி சைகை காட்டி, “வா“ என்றார். பேதுரு தனது கவனத்தை இழந்து மூழ்கத் தொடங்கியபோது, இரட்சகர் உடனடியாக அவனைப் பிடிக்க தனது கையை நீட்டி, “அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?“ என்று கூறி அவனைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.
நம் வாழ்க்கையில் காற்று நமக்கு எதிராக வீசும்போது, நாம் மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் இருக்க தயாராக இருக்கிறோமா? இரட்சகர் நம்மைக் கைவிடுவதில்லை என்பதையும், ஒருவேளை நாம் இன்னும் அடையாளம் காணாத வழிகளில், அவர் நமக்கு அருகில் இருக்கிறார் என்பதையும் நாம் எப்படி நினைவுகூர முடியும்? விசேஷமாக நமக்கு முன்னால் உள்ள பாதை சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், விசுவாசத்தோடு அவரிடம் செல்ல நாம் தயாராக இருக்கிறோமா? நாம் தடுமாறும் போது அவர் எந்த வழிகளில் நம்மை பாதுகாப்பாக உயர்த்துகிறார்? சந்தேகமோ பயமோ இல்லாமல் ஒவ்வொரு எண்ணத்திலும் நாம் எப்படி அவரை விசுவாசத்துடன் பார்க்க முடியும்?
உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய அன்பை இன்னும் ஏராளமாக உணர நீங்கள் விரும்பினால், பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள நான் உங்களை அழைக்கிறேன்:
-
முதலாவதாக, நீங்கள் தேவனுடைய பிள்ளை என்பதை நினைவுகூர அடிக்கடி இடைநிறுத்தி, நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கான காரியங்களை நினைத்துப் பாருங்கள்.
-
இரண்டாவதாக, தினமும் ஜெபியுங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அவருடைய அன்பை உணர வேண்டும் என்பதை அறிய உங்களுக்கு உதவும்படி பரலோக பிதாவிடம் கேளுங்கள்.
-
மூன்றாவதாக, தேவனுடைய அன்பை உணர அந்த நபருக்கு உதவ நீங்கள் என்ன செய்ய முடியும் என்று மனதார கேளுங்கள்.
-
நான்காவதாக, நீங்கள் பெறும் உணர்த்துதலை உடனடியாக செயல்படுத்துங்கள்.
நாம் தொடர்ந்து ஜெபித்து, மற்றவர்களின் சார்பாக கேட்டால், நாம் உதவக்கூடிய நபர்களை தேவன் நமக்குக் காண்பிப்பார். நாம் உடனடியாக செயல்பட்டால், அவர்களுடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கும் வழிமுறையாக நாம் மாற முடியும். அவ்வாறு செய்யும்போது, காலப்போக்கில், நம்முடைய ஜெபங்களுக்குப் பதில்களைப் பெறுவோம், நம்முடைய சொந்த வாழ்க்கையில் தேவனுடைய அன்பை உணருவோம்.
சில மாதங்களுக்கு முன்பு வியட்நாமில் பயணம் செய்தபோது, நானும் என் மனைவியும் ஒரு கடுமையான புயலின் போது புறப்பட்ட விமானத்தில் இருந்தோம். கொந்தளிப்பு கடுமையாக இருந்தது, இருண்ட மேகங்கள், பலத்த மழை மற்றும் மின்னல்களை எங்களின் ஜன்னலினூடே பார்க்க முடிந்தது. ஒரு நீண்ட மற்றும் கொந்தளிப்பான ஏற்றத்திற்குப் பிறகு, எங்கள் விமானம் இறுதியாக புயல் மேகங்களுக்கு மேலே உயர்ந்து அந்த அற்புதமான காட்சிக்கு வெளிப்பட்டது. நமது பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி, எங்கள் மீது அவர்கள் வைத்துள்ள மிகுந்த அன்பை உணர்ந்தோம்.
அன்புள்ள நண்பர்களே, தேவனின் அன்பை அனுபவித்தவன் என்ற முறையில், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தேவனின் அன்பு என நான் மகிழ்ச்சியுடன் சாட்சியளிக்கிறேன். நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு பரிபூரணமானது, தனிப்பட்டது மற்றும் நிலையானது. நாம் விசுவாசத்தோடு அவரைப் பின்பற்றும்போது, நாம் அவருடைய அன்பால் நிரப்பப்பட்டு, அவரது அன்புக்கு மற்றவர்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கமாக இருப்போமாக. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.