நீர் கிறிஸ்து
(மத்தேயு 16:16).
நமது குழந்தைகள் இயேசு கிறிஸ்துவை நம்ப வேண்டும், உடன்படிக்கை மூலம் இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் சொந்தமானவர்களாக இருக்க வேண்டும், இயேசு கிறிஸ்துவைப் போல ஆக முயற்சிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
எங்கள் மகன் நான்காம் வகுப்பு படிக்கும் போது, அவனுடைய வகுப்பு ஒரு மாதிரி அரசாங்கத்தை அமைத்தது, அதில் ஈலையை அவனுடைய நண்பர்கள் வகுப்பு நீதிபதியாகப் பணியாற்றத் தேர்ந்தெடுத்தனர். ஒரு நாள், யூட்டா இரண்டாவது மாவட்ட நீதிமன்றத்தைச் சேர்ந்த பதவியிலிருந்த ஒரு நீதிபதி வருகை தந்து, தனது அதிகாரப்பூர்வ அங்கிகளை ஈலைக்கு அணிவித்து, பின்னர் அவர்களின் வகுப்பிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது ஈலையின் இளம், எளிதில் ஈர்க்கப்படக்கூடிய ஆத்துமாவில் சட்டம் படிப்பதிலும், சட்டமியற்றுபவரான இயேசு கிறிஸ்துவிலும் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது.
பல வருட கருத்தான முயற்சிக்குப் பிறகு, சட்டப் பள்ளிக்கான தனது சிறந்த தேர்வுகளில் ஒன்றின் நேர்காணலுக்கான அழைப்பை ஈலை பெற்றான். அவன் சொன்னான், “அம்மா, என்னிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டன. கடைசி கேள்வி, ‘உங்கள் ஒழுக்க திசைகாட்டியை எங்கிருந்து பெறுகிறீர்கள்?’ என்பதுதான். வரலாறு முழுவதும் மனிதகுலம் தங்கள் வாழ்க்கையை அறநெறிகளிலிருந்து வடிவமைத்து ஒழுக்க முறைகளைப் பெற்றுள்ளது என்று நான் கூறினேன். என் வாழ்க்கையை நான் வடிவமைக்க முயற்சிக்கும் அறநெறியின் முன்மாதிரி இயேசு கிறிஸ்துவின் ஒழுக்கமாகும். மலைப்பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மனிதகுலம் அனைவரும் கடைப்பிடித்தால், உலகம் சிறந்த, சமாதானமான இடமாக மாறும் என்று நான் கூறினேன். பின்னர் நேர்காணல் முடிந்தது, அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான், “அதுவே என் குழந்தைப் பருவக் கனவுகள். மதச்சார்பற்ற கல்வித்துறையில் யாரும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேட்க விரும்புவதில்லை.”
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஈலை உதவித்தொகையுடன் சேர்க்கப்பட்டான். சம்மதிப்பதற்கு முன், நாங்கள் வளாகத்தைப் பார்வையிட்டோம். சட்டக்கல்லூரி ஒரு கோட்டை போல தோற்றமளித்தது, ஒரு அழகிய ஏரியை நோக்கி உயரமான மலையில் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், நாங்கள் அற்புதமான நூலகம் மற்றும் கம்பீரமான தாழ்வாரங்கள் வழியாக நடந்து சென்றபோது, மலைப்பிரசங்கம் பதாகைகளிலும் கல் சிற்பங்களிலும் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டோம்.
மலைப்பிரசங்கம் இதுவரை வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது, அதன் போதனைகளில் முன்னோடியாக உள்ளது. இயேசு கிறிஸ்துவின் குணாதிசயம், அவரது தெய்வீக பண்புகள், மற்றும் அவரைப் போல மாறுவதற்கான நமது இறுதி நோக்கம் ஆகியவற்றை வேறு எந்தப் பிரசங்கமும் நமக்கு நன்றாகப் புரிந்துகொள்ள உதவ முடியாது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீஷத்துவம் நம் வீடுகளில் தொடங்குகிறது—மேலும் ஆரம்ப வகுப்பில் 18 மாதத்திலிருந்தே. நமது குழந்தைகள் இயேசு கிறிஸ்துவை நம்ப வேண்டும், உடன்படிக்கை மூலம் இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் சொந்தமானவர்களாக இருக்க வேண்டும், இயேசு கிறிஸ்துவைப் போல ஆக முயற்சிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
இயேசு கிறிஸ்துவை நம்புங்கள்
முதலில் இயேசு கிறிஸ்துவை நம்புங்கள்.
ஜீவ அப்பப் பிரசங்கத்திற்குப் பிறகு, “[கர்த்தருடைய] சீஷர்களில் பலர்” அவருடைய போதனைகளையும் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்வதைக் கடினமாகக் கண்டார்கள், மேலும் அவர்கள் “அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.” பின்னர் இயேசு பன்னிருவரையும் நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” என்று மனதைப் பிழியும் ஒரு கேள்வியைக் கேட்டார்.
பேதுரு பதிலளித்தான்:
“ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
“நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.”
பேதுரு செய்தபடி, நம்பிக்கை என்பது “ஒருவரை விசுவாசிப்பது அல்லது எதையாவது உண்மை என ஏற்றுக்கொள்வது.” நமது விசுவாசம் இரட்சிப்புக்கு வழிவகுக்கும், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். “[இயேசு] கிறிஸ்து இருக்கிறார் என்ற உறுதியும், அவருடைய [உண்மையான] குணத்தைப் [மற்றும் இயல்பை] பற்றிய [புரிதலும்], அவருடைய சித்தத்தின்படி வாழ நாம் முயற்சிக்கிறோம் என்ற அறிவும் நமக்கு இருக்கும்போது, நாம் … அவர் மீது விசுவாசம் வைக்கிறோம்.”
நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், “இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் எல்லா நம்பிக்கையின் அடித்தளமாகவும் தெய்வீக வல்லமையின் வழியாகவும் இருக்கிறது” என்று அறிவித்தார்.
இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தவும், அவருடைய தெய்வீக வல்லமையை பெறவும் குழந்தைகளுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்? நாம் நமது இரட்சகரைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை.
“[கர்த்தர்] தம்முடைய கரத்தை நீட்டி ஜனங்களிடத்தில் பேசிச்சொன்னதாவது:
“இதோ, இயேசு கிறிஸ்து நானே, …
“எழுந்து வாருங்கள். …
“… ஜனங்கள் போய், தங்கள் கைகளை அவர் விலாவில் போட்டு, அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளின் தழும்புகளைத் தொட்டார்கள்; அவர்கள் ஒவ்வொருவராகப் போய், இதைச் செய்தார்கள்… தங்கள் கண்களால் கண்டு, தங்கள் கைகளால் தொட்டு, நிச்சயமாக அறிந்து, அவர்தான் என்று சாட்சி கொடுத்தார்கள்.“
இளம் குழந்தைகளின் வாழ்க்கையில் இது எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்திக்க நான் உங்களை அழைக்கிறேன். அவர்கள் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தின் சாட்சியங்களைக் கேட்கிறார்களா? அவருடைய ஊழியம் மற்றும் தேவ தன்மையின் பயபக்தியான, ஆராதனைக்குரிய உருவங்களை அவர்கள் பார்க்கிறார்களா? பரிசுத்த ஆவியானவர் அவருடைய யதார்த்தத்தையும் தெய்வீகத்தையும் சாட்சியமளிப்பதை அவர்கள் உணர்ந்து அங்கீகரிக்கிறார்களா? அவருடைய செய்தி மற்றும் ஊழியம் அவர்களுக்குத் தெரியுமா?
இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் சொந்தமாகுங்கள்
இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் சொந்தமாகுங்கள்.
பென்யமீன் ராஜாவின் ஜனங்கள் மனமாற்றத்தில் ஒரு மகத்தான மாற்றத்தை அனுபவித்தனர், மேலும் உடன்படிக்கையின் மூலம் தங்கள் வாழ்க்கையை, தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு அர்ப்பணித்தனர். தேவனுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் அவர்கள் செய்த உடன்படிக்கையின் காரணமாக, அவர்கள் “கிறிஸ்துவின் புத்திரரும் புத்திரிகளுமான, அவரது பிள்ளைகள் எனஅழைக்கப்பட்டனர்.” பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாக, அவருடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்பவும், அவருடைய வருகைக்குத் தயாராகவும் நமக்கு உடன்படிக்கைப் பொறுப்பு இருக்கிறது.
பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து காத்துக் கொள்ள பிள்ளைகளுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்? என்னைப் பின்பற்றி வாருங்கள் கையேட்டின் பின் இணைப்பு A மற்றும் B இல், குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைவர்களை அவர்களின் பரிசுத்தமான பொறுப்பில், குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் தேவனின் உடன்படிக்கைப் பாதையில் ஆயத்தமாக ஆதரிக்கும் உரையாடல் தொடக்கங்கள் மற்றும் பாடங்களைக் காண்கிறோம்.
இயேசு கிறிஸ்துவைப் போலாகுங்கள்
மூன்றாவதாக, இயேசு கிறிஸ்துவைப் போலாகுங்கள்.
மார்மன் புஸ்தகத்தில், இரட்சகர் புதிதாக அழைக்கப்பட்ட சீஷர்களை முடிந்தவரை நெருக்கமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்: “நீங்கள் எத்தகைய மனுஷராய் இருக்க வேண்டும்? மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னைப்போலவே இருக்கவேண்டும்.”
ஞானஸ்நானம் பெற்ற மற்றும் திடப்படுத்தப்பட்ட குழந்தைகள் தங்களையும் மற்றவர்களையும் இயேசு கிறிஸ்துவிடம் கூட்டிச் சேர்க்கும் உடன்படிக்கைப் பொறுப்பை நிறைவேற்ற நாம் எவ்வாறு உதவ முடியும்? “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருப்பது” வாழ்நாள் சீஷத்துவத்துக்கு தேவைப்படுகிறது.
கர்த்தருடைய இளைய சீடர்களுக்கு அழைப்பு விடுக்கும்போது, அவர்களை வழிநடத்தவும், வழிகாட்டவும், அவர்களுடன் நடக்கவும், வழியைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவவும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விலைமதிப்பற்ற குழந்தைகள் கற்பிக்கத் தயாராகும்போது, சாட்சியமளிக்கும்போது, ஜெபிக்கும்போது, அல்லது சேவை செய்யும்போது அவர்களுடன் ஆலோசனை கூறுங்கள், இதனால் அவர்கள் நம்பிக்கையுடனும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். இது அவர்களுடைய சபை என்பதையும், இரட்சகரின் வருகைக்குத் தயாராவதில் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதையும் அறிந்துகொள்ள உதவும் உணர்த்தப்பட்ட வழிகளைத் தேடுங்கள்.
இயேசு கிறிஸ்து நம் வாழ்வின் மையமாக மாறும்போது, நாம் விரும்புவதும், அதை எப்படி விரும்புகிறோம் என்பதும் என்றென்றும் மாற்றப்படுகிறது. மனமாற்றம் எல்லாவற்றையும் மாற்றுகிறது! “பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு,” அது நமது இருதயத்தை மாற்றுகிறது. இது நமது நேரத்தையும், ஆதாரங்களையும் எவ்வாறு செலவிடுகிறோம்; நாம் என்ன படிக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை மாற்றுகிறது. இது ஒரு புகழ்பெற்ற, கல்விசார், தொழில் சார் நேர்காணலில் நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதையும் கூட மாற்றுகிறது.
நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைப் புகுத்த வேண்டும். அவருடைய அநித்தியத்துக்கு முந்தைய தேவ தன்மை, அவருடைய தெய்வீக பணி, அவருடைய சிறையைத் தகர்க்கும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை நம் வீடுகளிலும், இந்த சபையின் ஒவ்வொரு கூட்டத்திலும் நாம் சாட்சியமளிக்கவில்லை என்றால், அப்போது அன்பு, சேவை, நேர்மை, பணிவு, நன்றியுணர்வு மற்றும் இரக்கம் பற்றிய நமது செய்திகள் சிந்தனைமிக்க வாழ்க்கையின் ஒரு ஆடம்பரமான பேச்சாக மட்டுமே மாறும். இயேசு கிறிஸ்து இல்லாமல் மாற்றத்திற்கு எந்த வல்லமையும் இல்லை, ஆசைப்படுவதற்கு எந்த நோக்கமும் இல்லை, வாழ்க்கையின் துன்பங்களுக்கு ஒப்புரவாதல் இல்லை. இயேசு கிறிஸ்துவின் சீஷத்துவத்தில் நாம் சாதாரணமாகிவிட்டால், அது நம் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.
நம் குழந்தைகளிடம் நாம் அவர்களை நேசிக்கிறோம் என்று சொல்லும்போது, அவர்களின் பரலோக பிதாவும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து அவர்களை நேசிக்கிறார் என்றும் சொல்கிறோமா? நமது அன்பு ஆறுதலளித்து ஊக்கமளிக்கலாம், ஆனால் அவர்களின் அன்பு பரிசுத்தப்படுத்தவும், உயர்த்தவும், குணப்படுத்தவும் முடியும்.
இயேசு கற்பனைக் கதையாகவோ, அல்லது எளிமையான இயேசுவாகவோ, அல்லது சரீரமற்ற இயேசுவாகவோ, அல்லது சாதாரண இயேசுவாகவோ, அல்லது அறியப்படாத இயேசுவாகவோ, இருக்கக் கூடாது, ஆனால் மகிமை பொருந்திய, சர்வவல்ல, உயிர்த்தெழுந்த, மேன்மையடைந்த, ஆராதனைக்குரிய, வல்லமை மிக்க, தேவனின் ஒரே பேறான, அவர் இரட்சிக்க வல்லவராக இருக்க வேண்டும்.. பிலிப்பைன்ஸில் ஒரு சிறு குழந்தை ஒரு நாள் எனக்கு உறுதியான சாட்சியமளித்தாள், “நாங்கள் இரட்சிக்கப்படத் தகுதியானவர்கள்!” ”[மிகவும்] சாந்தப்படுத்துதலாக தேவன் நியமித்த” அவருடைய பரிசுத்தமான மற்றும் புனிதமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.