நம் கண்களுக்கு முன்பாகவே
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை உறுப்பினர்கள் மற்றும் குடும்பங்கள், ஊழியங்கள் மற்றும் ஊழியக்காரர்கள், கூடுமிடங்கள் மற்றும் ஆலயங்களில் வளர்ந்து வருகிறது.
சகோதர சகோதரிகளே, உங்களுடன் இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்; உங்களுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; உங்கள் ஜெபங்களால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்.
தலைவர் ரசல் எம். நெல்சன் நமது கடந்த மாநாட்டில் கூறினார்: “நமது கண்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த தருணத்தின் மகத்துவத்தை நாம் தவறவிடாமல் இருக்க ஜெபிக்கிறேன்! கர்த்தர் தன் பணியை விரைவுபடுத்துகிறார்.”
அவரது பணியை விரைவுபடுத்துதல். “விரைவுபடுத்துதல்“ என்பது முக்கியமான ஒரு சொல். இது விரைவாக நகர்வதையும், முடுக்கிவிடுவதையும், அவசரத்தையும் கூட அறிவுறுத்துகிறது. சபையின் வளர்ச்சியிலும், கிறிஸ்துவின் திட்டத்திலும், விரைவுபடுத்துதல் நடக்கிறது. நாம் அனைவரும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம்.
ஏப்ரல் 1834 இல், ஒஹாயோவின் கர்த்லாந்தில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித், ஆசாரியத்துவம் தரித்திருந்த அனைவரையும் சுமார் 14 அடி (4.3 மீ) சதுர பரப்பளவில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் ஒன்று கூட்டினார். இந்த மாநாட்டு மையத்தில் போதுமான இடவசதியுடன், டஜன் கணக்கான பள்ளிக் கட்டிடங்களை நாம் பொருத்த முடியும். ஜோசப் ஸ்மித் கூறினார், “இன்றிரவு நீங்கள் இங்கே பார்க்கும் ஆசாரியத்துவம் ஒரு சிலரே, ஆனால் இந்த சபை வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை நிரப்பும்—அது உலகத்தையே நிரப்பும்.”
அந்தத் தீர்க்கதரிசனம் “நம் கண்களுக்கு முன்பாகவே” நிறைவேறி வருகிறது. பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, உலகெங்கிலும் உள்ள நமது வேதபாட வகுப்புகள், முதிர் வேதபாட வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், உறுப்பினர்களாகவும், குடும்பங்களாகவும், ஊழியங்களிலும், ஊழியக்காரர்களாகவும், கூடுமிடங்களிலும், ஆலயங்களிலும், சேர்க்கையிலும் வளர்ந்து வருகிறது.
சபை எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும், முக்கியமாக அதன் உறுப்பினர்களின் இருதயங்களிலும் வாழ்க்கையிலும் அதிகரித்து வரும் வேளையில், நாம் பூமியில் இருப்பதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் என்று அறியப்படுகிறோம். அவர், அவரது சபை, அவரது வழிகள் மற்றும் அவரது உடன்படிக்கை பாதை பற்றிய நமது சாட்சியங்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம். நாம் அவருடைய ஜனங்கள், அவர் நமது இரட்சகர்.
தலைவர் நெல்சன் “இந்த தருணத்தின் மகத்துவம்“ என்று அழைப்பதைப் பார்த்து நான் வியக்கிறேன், மேலும் அவரது பணிக்காக கர்த்தருக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டைய மற்றும் தற்கால தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் கண்கண்ட சாட்சிகளாக, அவருடைய சீடர்களாக நாம் உயர்ந்து நிற்க நான் ஊக்குவிக்கிறேன்.
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் காலத்தில் செய்தது போலவே, “இதோ இங்கே, இதோ அங்கே“ என்று கூச்சலிடும் மறுப்பாளர்கள் உள்ளனர். இருப்பினும், அவர்கள் இந்த உன்னதப் பணியில் வெறும் அடிக்குறிப்புகளாகவே இருக்கிறார்கள், . தீர்க்கதரி ஜோசப் ஸ்மித்தின் வார்த்தைகளை நினைவு கொள்ளுங்கள், “எந்தவொரு பரிசுத்தப்படாத கையும் பணி முன்னேறுவதைத் தடுக்க முடியாது; துன்புறுத்தல்கள் பயமுறுத்தும், … ஆனால் ஒவ்வொரு கண்டத்தையும் ஊடுருவிச் செல்லும்வரை, ஒவ்வொரு தட்பவெப்பநிலையையும் சந்திக்கும்வரை, ஒவ்வொரு தேசங்களையும் துடைத்துச்செல்லும்வரை, ஒவ்வொரு செவிகளிலும் கேட்கும்வரை, தேவனின் நோக்கங்கள் நிறைவேறும்வரை, பணி முடிந்தது என மகத்தானவரான யேகோவா சொல்லும்வரை, தேவனின் சத்தியம், தைரியமாகவும், மேன்மையாகவும், சுதந்தரமாகவும் முன்னேறிச் செல்லும்.”
இந்த ஆண்டு கர்த்தருக்கு “அவரது பணியை விரைவுபடுத்தும்“ எனது பணிகளில், முன் வரிசையில் ஒரு இருக்கை எனக்குக் கிடைத்தது. சபை முன்பில்லாத வேகத்தில் ஆலயங்களைக் கட்டி வருகிறது, அதிக உறுப்பினர்களுக்கு கர்த்தருடைய வீட்டில் ஆராதிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இரண்டாவதாக, ஊழியப் பணி நல்ல மேய்ப்பரான இயேசு கிறிஸ்துவின் மந்தையில் சாதனை எண்ணிக்கையில் மக்களைச் சேர்ப்பதாகும். மூன்றாவதாக, “இந்த இயேசுவைத் தேடுபவர்களுக்கு“ கற்பிப்பதில் பல கட்டமைப்புகளில் சபைக் கல்வி புதிய உச்சத்தில் உள்ளது.
இன்று சபை வடிவமைப்பு, கட்டுமானம் அல்லது செயல்பாட்டின் பல்வேறு நிலைகளில் 367 ஆலயங்களைக் கொண்டுள்ளது. என்ன நோக்கத்திற்காக? ஒவ்வொரு ஆலயத்திலும் பதில் அறிவிக்கப்படுகிறது: “கர்த்தருக்கு பரிசுத்தம்.“ நம் ஒவ்வொருவருக்கும் பரலோக பிதாவின் மிக உயர்ந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வழியை இந்த ஆலயம் திறக்கிறது. சகோதர சகோதரிகளே, நாம் ஆலயத்திற்கு தகுதியானவர்களாக வாழும்போதும், கர்த்தருடைய வீட்டில் ஆராதிக்கும்போதும், திரையின் மறுபக்கத்தில் நமக்காகவும், நம் முன்னோர்கள் சார்பாகவும் தேவனுடன் உடன்படிக்கைகளைச் செய்யும்போதும், நமது “பரிசுத்தத்தை” விரைவுபடுத்துகிறோம்.
தலைவர் நெல்சன் கூறியுள்ளார்: “சத்துருவின் தாக்குதல்கள் வெளிப்படையாக அதிவேகமாகவும், தீவிரத்திலும், பல்வேறு வகைகளிலும் அதிகரித்து வருகின்றன. ஆலயத்தில் தொடர்ந்து அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் இப்போது மிக அதிகமாக இருக்கிறது. உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை ஜெபத்துடன் பார்க்கும்படி நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். அவருடைய வீட்டில், நாம் கர்த்தரின் பரிசுத்தமான பிரசன்னத்தையும், எல்லையற்ற சமாதானத்தையும் உணர முடியும்.
கடந்த ஆண்டு, மெண்டோசா அர்ஜென்டினா ஆலயத்தின் பிரதிஷ்டைக்கு தலைமை தாங்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. என்னுடைய செய்தியில், ஒரு ஓக் மரம் ஒரு விதையிலிருந்து மெதுவாக வளர்வது போல,” தென் அமெரிக்காவில் கர்த்தருடைய பணி சிறிது காலத்திற்கு மெதுவாக வளரும் என்ற மூப்பர் மெல்வின் ஜே. பல்லார்டின் 1926 தீர்க்கதரிசனத்தைக் குறிப்பிட்டேன். “அது ஒரு நாளில் முளைக்காது“ என்று அவர் கூறினார், ஆனால் ஆயிரக்கணக்கானோர் சபையில் இணைவார்கள், தென் அமெரிக்க நாடுகள் “சபையில் ஒரு வல்லமையாக“ மாறும். அந்த தீர்க்கதரிசனம் “என் கண்களுக்கு முன்பாகவே“ நிறைவேறியதை நான் கண்டேன்.
ஒரு காலத்தில் சிறிய விதையாக இருந்த மெண்டோசா, இப்போது ஒரு வலிமையான ஓக் மரமாக மாறியுள்ளது. அந்த வளர்ச்சி கண்டங்கள் மற்றும் கடல் தீவுகள் முழுவதும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.
கர்த்தர் ஊழியங்களில் தனது பணிகளை விரைவுபடுத்துவதை நாம் காண்கிறோம். 2024 ஆம் ஆண்டில், 450 ஊழியங்களில் 80,000 ஊழியக்காரர்கள் பணியாற்றினர். அவற்றில் முப்பத்தாறு புதிய ஊழியங்கள். கடந்த ஆண்டு, ஊழியப்பணி 3,08,000 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சபைக்குள் கொண்டு வந்தது. எண்ணிக்கையை விட, கூடுகையின் ஆவி ஆத்துமாக்களை இயேசு கிறிஸ்துவிடமும் அவருடைய சுவிசேஷத்திடமும் கொண்டு வருகிறது.
1839 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தீவுகளுக்கு ஊழியக்காரர்களாகப் புறப்பட்ட அப்போஸ்தலர்களான பிரிகாம் யங் மற்றும் ஹீபர் சி. கிம்பலை நான் நினைக்கிறேன். அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தனர்; அவர்கள் குடும்பங்களை நோய்வாய்ப்பட்டவர்களாகவும் ஆதரவற்றவர்களாகவும் விட்டுச் சென்றனர். இருப்பினும், இருவரும் ஒரு வண்டியில் ஏறினர், தங்கள் அன்புக்குரியவர்களைக் காணும்போதே, ஹீபர், “நாம் எழுந்து அவர்களை உற்சாகப்படுத்துவோம்“ என்றார். இருவரும் போராடி எழுந்து நின்று, “ஹூரே, இஸ்ரவேலுக்கு ஹூரே“ என்று கத்தினார்கள்.
பெருவின் லிமாவில், ஊழியப் பயிற்சி மையத்திலிருந்தும், லிமாவில் உள்ள ஊழியங்களைச் சேர்ந்த ஊழியக்காரர்களைச் சந்தித்தபோது, கர்த்தருடைய பணிக்கான அதே உற்சாகத்தைக் கண்டேன். என்னே ஒரு காட்சி! என் கண்களுக்கு முன்பாகவே விரைவுபடுத்தல் நடப்பதைக் கண்டேன். லிமா நகரில் மட்டும் இப்போது ஏழு ஊழியங்கள் உள்ளன.
எங்கள் சந்திப்பின் முடிவில், ஊழியக்காரர்கள் எனக்கு ஒரு விசேஷ ஆச்சரியத்தை அளித்தனர். அவர்கள் எழுந்து நின்று, “இஸ்ரவேலுக்கு ஹூரே“ என்று உற்சாகப்படுத்தினர். அந்த தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்; நீங்கள் அனைவரும் அங்கு இருந்திருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன். என் கண்களுக்கு முன்பாகவே ஊழியக்காரர்கள் அவர்கள் கர்த்தருக்கு சேவை செய்யவும், அவருடைய வருகையை விரைவுபடுத்த உதவவும் “இந்த உலகத்தின் காரியங்களை“ ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
உலகெங்கிலும் உள்ள நமது உறுப்பினர்களுக்கும், நமது விசுவாசத்தில் இல்லாதவர்களுக்கும் கூட, கல்வி வாய்ப்புகளை கர்த்தர் விரைவுபடுத்துவதை நாம் காண்கிறோம். ஒரு சபையாக நம்மை வேறுபடுத்திக் காட்டும் விஷயங்களில் ஒன்று கல்வியின் மீது நாம் அளிக்கும் முக்கியத்துவம். மறுஸ்தாபிதத்தின் ஆரம்ப நாட்களில் கர்த்தர் “படிப்பதாலும் விசுவாசத்தாலும் கற்றுக்கொள்ள நாடுங்கள்” என்று கட்டளையிட்டார். அது இன்று நடக்கிறது, மேலும் அது “ஹூரே“ என்ற ஒரு கூக்குரலுக்கு தகுதியானது.
தற்போது உலகளவில் 800,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேதபாட வகுப்பு மற்றும் முதிர் வேதபாட வகுப்புகளில் சேர்ந்துள்ளனர், இது சபையின் வரலாற்றில் மிக உயர்ந்த சேர்க்கை ஆகும். நமது இளைஞர்கள் அதிகாலை, பகல்நேர மற்றும் மாலை நேர வகுப்புகள் முதல் நேரலை மற்றும் வீட்டுப் படிப்பு வரை பல்வேறு வழிகளில் கூடுகிறார்கள். அவர்கள் ஒரு வலிமைமிக்க மற்றும் நீதியுள்ள சேனை, அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொண்டு, பின்பற்றி, அவரைக் குமாரனாகிய தேவனாக சாட்சியளிக்கும்போது ஒருவருக்கொருவர் பலத்தைப் பெறுகிறார்கள்.
கடந்த இலையுதிர்காலத்தில், யூட்டா பல்கலைக்கழகத்தில் வேதபாட வகுப்பு மற்றும் முதிர் வேதபாட வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நிறைந்த ஒரு அரங்கில் ஒரு ஆராதனை நிகழ்ச்சியில் நான் பேசினேன். இயேசு கிறிஸ்துவை அறிந்து பின்பற்ற வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தைப் பற்றி அவர்களின் வருகை நிறைய கூறியது. அந்த மாணவர்களுக்கு எனது செய்தி தெளிவாக இருந்தது: கர்த்தருக்கும் சமமான நேரத்தைக் கொடுங்கள். உண்மையான, உயர் கல்வியான, “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனைப்“ பற்றிய படிப்போடு கூட, தங்கள் படிப்பை சமநிலைப்படுத்த நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன்.
இன்று எல்லோரிடமும் நான் இதையே கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் “செய்ய வேண்டிய“ பட்டியலில் எது இருந்தாலும், தனிப்பட்ட வேதப் படிப்பு, என்னைப் பின்பற்றி வாருங்கள் என்ற குடும்பப் படிப்பு, ஜெபம், சபை அழைப்புகள், ஊழியம் செய்தல், திருவிருந்தில் பங்கேற்பது, ஆலய ஆராதனை மற்றும் தேவனின் விஷயங்களைச் சிந்திப்பது ஆகியவற்றில் கர்த்தருக்கு ஓய்வு நேரத்தை அல்ல, சமமான நேரத்தைக் கொடுங்கள். நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு, “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்… அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அவர் சொல்வதை நம்புங்கள். அவருக்கும் சமமான நேரத்தைக் கொடுங்கள்.
தலைவர் நெல்சன் சொன்னார், “உங்கள் வாழ்க்கையில் தேவன் ஜெயம்கொள்வாராக என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்.” உங்கள் நேரத்தின் நியாயமான பங்கை கர்த்தருக்குக் கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, உங்கள் நேர்மறையான ஆவிக்குரிய வேகத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.”
வேதபாட வகுப்புகள், முதிர் வேதபாட வகுப்புகள் மற்றும் சபை பல்கலைக்கழகங்களில் அந்த வேகம் அதிகரிப்பதை நாம் காண்கிறோம். இந்த சூழல்களில், கர்த்தர் ஒரு முன்னுரிமை. அதுபோலவே அவர் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.
சபையில் கல்வியின் வளர்ந்து வரும் அளவைக் காட்டும் மற்றொரு பகுதி உலகளாவிய பிஒய்யூ–பாத்வே ஆகும். உலகம் முழுவதும், சேர்க்கை கிட்டத்தட்ட 75,000 ஐ எட்டியுள்ளது மற்றும் வேகமாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலானவர்கள் உறுப்பினர்கள், மேலும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஆப்பிரிக்காவில் உள்ளனர். பாத்வே என்பது கல்வி பெறுதலைப் பற்றியது. படிப்புகளை முடிப்பது என்பது வேலைவாய்ப்பு பெறுதலைக் குறிக்கிறது, மேலும் வேலைவாய்ப்பு பெறுதல் என்பது குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் கர்த்தருக்கு சேவை செய்வதற்கான அதிக வாய்ப்புகளையும் குறிக்கிறது.
உகாண்டாவில் பிணையத் தலைவர்களைச் சந்தித்தபோது, முழு பிணையத் தலைமையும் பிஒய்யூ–பாத்வே-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். நாம் உலகப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக சத்துருவின் தந்திரமான தாக்குதல்களை முறியடிக்க முடியும். பேதுருவின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: “பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.“
சுவிசேஷத்தின் நற்செய்தியின் நடுவில், விசுவாச சவால்கள், சந்தேகங்கள் மற்றும் பதில்கள் இல்லாத கேள்விகள் உள்ளவர்கள் போராடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவே பதில். அவரில் தொடங்குங்கள் உங்கள் வாழ்க்கையில் அவருடைய கரத்தைத் தேடுங்கள். அவருக்குச் செவிகொடுங்கள்! “உங்கள் இருதயம் கலங்காமலிருப்பதாக,” அவர் சீஷர்களுக்கு தனது கடைசி நேரத்தில் கெத்செமனேவுக்கு முன்பாகவும், எருசலேமின் தெருக்களில் தம்முடைய சிலுவையைச் சுமந்து செல்வதற்கு முன்பும், கொல்கொதாவுக்கு முன்பாகவும், ஒரே பேரான தேவனின் குமாரனான அவரால் மட்டுமே செய்ய முடிந்த தனது பாவநிவாரண பலியை நிறைவேற்றினார்.
அவர் புரிந்துகொள்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதனால் நாம் மீண்டும் பரலோகத்தில் நம் பிதாவோடு நித்தியமாக வாழும்படிக்கு நம்முடைய எல்லா பாவங்களையும், தவறுகளையும், துயரங்களையும், மிகவும் மோசமான நாட்களையும் அவர் தம்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் சொன்னார், “ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே.” இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் “உங்களை உயர்த்தும்“ மற்றும் உங்கள் காயமடைந்த ஆத்துமாவை குணப்படுத்தும். அவரை நம்புங்கள், அப்போது நீங்கள் “அவருடைய அன்பின் கரங்களுக்கு“ விரைவாகத் திரும்புவீர்கள்.
நமது ஜீவிக்கும் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்: “நம் கண்களுக்கு முன்பாக என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? இந்த தருணத்தின் மகத்துவத்தை நாம் தவறவிடாமல் இருக்க ஜெபிக்கிறேன்! கர்த்தர் தன் பணியை விரைவுபடுத்துகிறார்.” நமது நாளின் சீஷர்களாகிய நாம், நமது கர்த்தரும் இரட்சகருமானவரின் வருகைக்குத் தயாராகும்போது, “இஸ்ரவேலுக்கு ஹூரே” என்று கூச்சலிடுவோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.