இரண்டாவது சோதனையைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்
உங்களை நேசித்து ஆதரவு தருபவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளுவதற்குப் பதிலாக அவர்களிடம் ஓடிப்போங்கள்.
சில வருடங்கள் முன்பு, நான் 12 வயதை அடைந்தவுடன் என்னுடைய முதல் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் குழும முழுஇரவு கூடுகையிலே பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தேன். இது நான் நெடுநாளாக எதிர்பார்த்திருந்த ஓர் அழைப்பு. ஏனெனில் என் அப்பா ஒரு குழுமத் தலைவராய் இருந்ததால் அவர் தொகுதியிலிருந்த சிறுவர்களுடன் அடிக்கடி கூடுகைக்கு சென்றார், நானோ வீட்டிலிருந்தேன்.
அந்த நாள் வந்தபோது நான் உற்சாகமாக இருந்தேன். நான் எப்படியாவது பெரிய பையன்களோடு சேர வேண்டும் என்று மனதாயிருந்தேன். நான் என்னையே நிரூபித்துக்காண்பிக்கத் தீர்மானித்திருந்தேன். இப்படியாக நான் குழுவோடு இசைந்திருந்து அதன் அங்கமாக இருக்கிறேனா என்று சில நேரத்திற்குள்ளாகவே சோதிக்கப்பட்டேன்.
என் அப்பாவின் கார் சாவிகளை எடுத்துவரவேண்டும் என்பதே எனக்கு கொடுக்கப்பட்ட வேலை, இது ஏனெனில் தலைவர்கள் மீது சேட்டைகளை அரங்கேற்றம் செய்வதற்காகவே. என் அப்பாவை சமாதானப்படுத்த சரியாக என்ன சொன்னேன் என்பது ஞாபகம் இல்லை. ஆனால் சாவிகளை என் கைகளில் ஏந்தியவாறு கூடியிருந்த சிறார்களிடம் சாதித்துவிட்டேன் என்ற பெருமிதத்தோடு ஓடினேன்.
பிறகு அடுத்த வேலை வந்தது நான் கார் கதவை திறந்து ஒரு கம்பை ஓட்டுநர் இருக்கைக்கும் கார் ஒலியெழுப்பிக்கும் இடையே ஆப்பாக பொருந்துமாறு வைக்கவேண்டும். மாலை வரை ஒலி எழுப்பும் வகையில் நான் கதவைப் பூட்ட வேண்டியிருந்தது. அதனால் தலைவர்கள் காரை அணுகி, அந்த முறட்டு சாதனத்தை அகற்ற எந்த வழியும் இல்லாமல் போனது.
இங்குதான் கதையில் எனக்கு தர்மசங்கடம் உண்டானது. கம்பை வைக்கவேண்டிய இடத்தில் வைத்தவுடனே கதவை மூடிவிட்டு அருகாமையிலிருந்த புதர்களுக்குள் ஒளிந்துகொள்ள என்னால் முடிந்தவரை வேகமாக ஓடினேன். நான் தரையில் உட்கார்ந்தபோது எரிச்சலை உணர்ந்தேன். இருளில் கண்மூடித்தனமாய் செயல்பட்டதினிமித்தம் நான் முட்கள் நிறைந்த சப்பாத்தி கள்ளியின் மேல் உட்கார்ந்தேன்.
என் வலியின் அலறல்கள் கூச்சலிடும் ஒலியெழுப்பியினால் அமிழ்ந்துபோனது. பட்ட துன்பத்திலும் இன்னும் அதிகமாய் படாமலிருக்க நொண்டிக்கொண்டே காருக்கு திரும்பப் போய், என் பாவங்களை அறிக்கையிட்டு, சாதாரணமானதும் சங்கடமானதுமான மருத்துவ உதவியை பெறுவதைக்காட்டிலும் நிவாரணித்திற்கான வேறொரு வழியும் இல்லாதிருந்தது.
இந்த இரவின் மீதமுள்ள நேரத்தில் நான் குப்புறப்படுத்தவனாய் என் அப்பா இடுக்கிகளை வைத்து சப்பாத்திக்கள்ளி முட்களை நீக்கினார். அதற்கு பிற்பாடு நான் அநேக நாட்கள் சவுகரியமாக உட்காரமுடியவில்லை என்பதை மாத்திரம் நான் சொல்கிறேன்.
அந்த அனுபவத்தை அநேகந்தரம் நினைத்துப் பார்த்திருக்கிறேன். நான் என் வாலிபத்தின் பிழையைக் குறித்து இப்பொழுது சிரித்தாலும், மறைபொருளாக அமைந்த சில கொள்கைகள் எனக்கு தெளிவாகியுள்ளன.
சேரவேண்டும், நிரூபிக்கவேண்டும், தவறவிடக்கூடாது என்னும் பயம், பின் விளைவுகளைத் தவிர்த்திட ஒளிந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயமாக்கப்படுகிற தேவை ஆகிய மானிட நடத்தையிலுள்ள அநேக வடிவங்கள் சுபாவ மனுஷனில் பொதுவானதாகத் தோன்றும். நாம் செய்யக்கூடாததை செய்தபிறகு ஒளிந்துகொள்ளுதல் என்ற இந்த கடைசி நடத்தையில்தான் இன்று நான் கவனம் செலுத்தப்போகிறேன்
என்னுடைய சிறுபிராய சேட்டையைக் கொடும் பாவத்திற்கு சமமாக நான் கருதவில்லை. ஆயினும் நம்முடைய அநித்திய ஜீவியகாலத்தின்போது நாம் சோதிக்கப்படுகிறதினாலே உதவியாயிருக்கத்தக்கதாக சில இணையான கருத்துக்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் உணவின் மிகுதியும் தோட்டத்தின் ஒப்பிடப்படமுடியாத அழகையும் கொண்ட ஒரு நிறைவான நிலையை பெற்றிருந்தார்கள். அது அழகுடைய தோட்டம் மாத்திரமல்ல களைகளோ சப்பாத்திக்கள்ளிகளோ இல்லாத ஒரு தோட்டம்.
அப்படியாயினும் அந்தத் தோட்டத்து வாழ்க்கை அவர்களுக்கு தேவையான முன்னேற்றத்தைத் தடுத்தது. அந்த தோட்டம் இறுதியாக சேருமிடமல்ல, ஆனால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி, ஆயத்தமாக்கி பிதா குமாரன் ஆகியோரின் சமூகத்திற்கு திரும்பி செல்லுதலாகிய அவர்களின் இறுதியான சேருமிடத்திற்கு முன்னேறிச்செல்லுவதற்கு அவர்களை அனுமதிக்கின்ற அநேக சோதனைகளில் முதற்சோதனையே ஆகும்.
தோட்டத்தில் எதிர்ப்பு இருந்ததை நீங்கள் நினைவுகூருவீர்கள். லூசிபர் ஆதாமையும் ஏவாளையும் சோதிக்க அனுமதிக்கப்பட்டான். நன்மை தீமைபற்றிய ஞான விருட்சத்தின் கனியைப் புசிக்க அவன் முதலில் ஆதாமை சோதித்தான். புசிக்கக்கூடாது என்ற கற்பனையை நினைவுகூர்ந்தவனாய் ஆதாம் எதிர்த்தான். அதன் பிறகு ஆசீர்வதிக்கப்பட்ட ஏவாள் வந்து கனியை புசிக்க தெரிந்துகொண்டு ஆதாமையும் அவ்வண்ணமே செய்ய சமாதானப்படுத்தினாள்.
இந்த தீர்மானம் பரலோக பிதாவின் திட்டத்தை நிறைவேற்ற அவசியமானதென்று பின்பு ஆதாமும் ஏவாளும் அறிவித்தார்கள். ஆனால் கனியை புசித்ததினாலே அவர்கள் பிதாவினிடத்திலிருந்து நேரடியாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். இதன் விளைவாகவும் நிலைகுலையச் செய்கிறதாகவும் வந்த நன்மையும் தீமையும் அறியத்தக்கதான அறிவு, தாம் தோட்டத்திற்கு திரும்பவும் வருவதாக பிதா அறிவிக்கிற சத்தத்தை அவர்கள் கேட்டபோது அவர்களை வேதனைப்பட வைத்திருக்கக்கூடும். தாங்கள் நிர்வாணிகள் என்று அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் அறியாமையின் நிலையிலே வாழ்ந்தவர்களாய் உண்மையாகவே ஆடைஅணியாதவர்களாய் இருந்தார்கள். அந்த தருணத்தில், தாங்கள் ஆடையின்றி இருக்கிறோமே என்ற வலியை காட்டிலும் தங்களுடைய மீறுதல் அறியப்பட்டுவிட்டதே என்ற வலி கடுமையானதாக இருந்திருக்கக்கூடும். அவர்கள் பாதுகாப்பற்று பெலவீனமாய் இருந்தார்கள். அவர்கள் நிர்வாணிகள் என்ற வார்த்தைக்கேற்ப எல்லா வகையிலும் திராணியற்று இருந்தார்கள்.
என்றுமே சந்தர்ப்பவாதியான லூசிபர், அவர்களுடைய வெளியரங்கமாக்கப்பட்டதும் பெலவீனமானதுமான நிலையை அறிந்தவனாய் அவர்களை மறுபடியும் சோதித்தான். இம்முறை தேவனிடத்திலிருந்து ஒளிந்திருக்கும்படியாக சோதித்தான்.
நான் “இரண்டாவது சோதனை” என்று அழைக்கிற இச்சோதனை, நாம் இணங்கினால் மிகுந்த விளைவைத் தரக்கூடிய சோதனையாகும். நிச்சயமாகவே, தேவனுடைய நியாப்பிரமணங்களை மீறும்படியான எல்லா முதற்சோதனைகளையும் தவிர்ப்பதே உத்தமம், ஆயினும் பூமியில் அனைவரும் பல்வேறு முதற்சோதனைகளுக்கு அடிபணிவார்கள். நம்முடைய பக்குவத்திலும் புரிதலிலும் நாம் முன்னேறுகிறவர்களாய் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை போலாக நாம் பாடுபடும்போது முதற்சோதனையைத் தவிர்க்கும்படியான நம்முடைய பெலன் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
சிலர் தாங்கள் காணப்படவோ அல்லது வெளியரங்கமாக்கப்படவோ விரும்பாமல் தேவனிடத்திலிருந்து ஒளிந்துகொள்ள முயற்சிக்கலாம். அவர்கள் அவமானம் அல்லது குற்ற உணர்வை உணர்கிறார்கள்கள். ஆயினும், தேவனிடத்திலிருந்து ஒளிந்துகொள்வது கூடாதகாரியமென்று நமக்கு பல வேதவாக்கியங்கள் போதிக்கின்றன. சிலவற்றை மாத்திரம் இங்கே நான் பகிருகிறேன்:
கர்த்தர் எரேமியாவுக்கு பின்வரும் கேள்விகளாலே போதிக்கிறார்: “எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ?”
மேலும் யோபு போதிக்கப்படுகிறான்:
“அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
“அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.”
சங்கீதக்காரனாகிய தாவீது, உன்னத கவிதை வடிவிலே ஆச்சரியப்படுவதாவது:
“கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
“என் உட்காருதலையும் எழுந்திருத்தலையும் நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.”
புதிதாக மனமாறியவர்கள்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சமீபத்தில் சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக இரண்டாவது சோதனை சவாலாக இருக்கலாம். தங்களுடைய ஞானஸ்நானம் மூலம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தங்கள்மேல் எடுத்துக்கொள்ள உடன்படிக்கை செய்து கொண்ட அவர்களில் பலருக்கு வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியமாகிறது. ஒருவருடைய வாழ்க்கை முறையை மாற்றுவது எளிதானதல்ல. நீங்கள் பழக்க வழக்கங்களை மற்றும் சேர்க்கைகள் முதலானவைகளை மாற்றுவதும் உங்களுடைய அன்பான பரலோக பிதாவை நோக்கி முன்னேறுவதற்கு அவசியமாகிறது.
சத்துரு தன்னுடைய சூதான தாக்குதலுக்கு நீங்கள் பாதிக்கப்பட்டுப்போவீர்கள் என்று அறிந்திருக்கிறான். பல வழிகளிலே உங்களை அதிருப்தியாக விட்டுப்போன உங்களுடைய கடந்த வாழ்க்கை இப்போது நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிகரமாக தோன்றிடக்கூடும். குற்றஞ்சாட்டுகிறவன், என்று வெளிப்படுத்தல் புத்தகத்தில் அழைக்கப்பட்டவன் உங்களை இப்படிப்பட்ட யோசனைகளாலே சோதிப்பான்: “உன் வாழ்க்கையை மாற்ற உனக்கு போதிய வலிமை இல்லை; உன்னால் இதை செய்ய முடியாது; நீ இந்த ஆட்களோடு சேர்ந்திருக்கமுடியாது; அவர்கள் உன்னை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீ மிகுந்த பெலவீனன்.”
உடன்படிக்கையின் பாதையிலே புதிதாக நடப்பட்டவர்களாகிய உங்களுக்கு இந்த யோசனைகள் உண்மையென்று தோன்றினால், குற்றஞ்சாட்டுகிறவனின் சத்தத்திற்கு செவிகொடாதிருங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம்; உங்களால் இது முடியும், உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; இரட்சகருடன் உங்களால் அனைத்தையும் செய்ய பெலனுண்டு. எங்களுடைய அன்பும் ஆதரவும் உங்களுக்கு முழுவதுமாய் தேவைப்படுகிற தருணத்தில், உங்களுடைய முந்தைய வாழ்க்கை முறையினுள் சற்று பின்னாக அடியெடுத்து வைத்ததினிமித்தம் நாங்கள் உங்களை ஒதுக்கிவிடுவோம் என்று யோசித்து வஞ்சிக்கப்படாதிருங்கள். இயேசு கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் இணையற்ற வல்லமையின் மூலம் நீங்கள் மறுபடியும் சொஸ்தமாக்கப்படுவீர்கள். ஆனால் நீங்கள் அவரிடமிருந்து ஒளிந்துகொண்டு நீங்கள் புதிதாக கண்டெடுத்த விசுவாச சமூகத்திலிருந்து உங்களை தூரப்படுத்திக்கொண்டால் உங்களுக்கு மேற்கொண்டுவரும்படியான பெலனை தரக்கூடியதும் தருவதுமான அந்த ஒரே ஆதாரத்திலிருந்து உங்களையே நீங்கள் தூரப்படுத்திக் கொள்ளுகிறீர்கள்.
சமீபத்தில் மனம் மாறிய என்னுடைய அருமையான நண்பன் ஒருவர், தனிமையில் விசுவாசத்தை காத்துக்கொள்வது எவ்வளவு சிரமமான காரியமென்று பகிர்ந்துகொண்டார். ஆதரவான சமூகம் ஒன்றின் பகுதியாக இருப்பதில் பெரும் பெலனுண்டு—எல்லாரும் தடுமாறுகிறார்கள் எனினும் இயேசு கிறிஸ்துவின் அன்பினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் முன்னேறிச்செல்லுகிறார்கள்.
தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்திருக்கிறார்: உலகத்தை மேற்கொள்வது ஓரிரு நாட்களில் நடக்கும் ஒரு நிகழ்வு அல்ல. நாம் கிறிஸ்துவின் கோட்பாட்டைத் திரும்பத்திரும்ப தழுவும்போது ஜீவியகாலம் முழுமைக்குமாய் நிகழக்கூடியது. நாம் தினமும் மனந்திரும்பி வல்லமையினால் நம்மை தரிப்பிக்கக்கூடிய உடன்படிக்கைகளைக் கைகொள்ளுவதின் மூலம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்துக் கொள்கிறோம். நாம் உடன்படிக்கையின் பாதையில் நிலைநிற்கும்போது, ஆவிக்குரிய பெலன், தனிப்பட்ட வெளிப்பாடு, பெருகும் விசுவாசம், மற்றும் தூதர்களின் ஊழியம் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
நீங்கள் உடல்ரீதியாக காயமடைந்து தேவையான மருத்துவ உதவியை நாடாதிருந்தால் உங்களுடைய நிலைமை மோசமடைந்து உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும். ஆவிக்குரிய காயங்களுக்கும் அது அப்படியே பொருந்தும். ஆற்றப்படாத ஆவிக்குரிய காயங்கள் மாத்திரம் உங்களுடைய நித்திய இரட்சிப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். உங்களை நேசித்து ஆதரவு தருபவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளுவதற்குப் பதிலாக அவர்களிடம் ஓடிப்போங்கள். நல்ல ஆயர்கள், கிளைத் தலைவர்கள், மற்றும் பிற தலைவர்கள் இயேசு கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் குணப்படுத்தும் வல்லமையை நீங்கள் பெறத்தக்கதாக உங்களுக்கு உதவக்கூடும்.
ஒளிந்துகொண்டிருப்போரே, நீங்கள் திரும்பவும் வரும்படி உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம். சுவிசேஷமும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியும் கொடுப்பது என்னவோ அது உங்களுக்கு தேவை. நீங்கள் கொடுப்பது என்னவோ அது எங்களுக்கு தேவை. தேவன் உங்கள் பாவங்களை அறிந்திருக்கிறார். அவரிடமிருந்து நீங்கள் ஒளிந்துகொள்ளமுடியாது. அவருக்கு முன்பு ஒப்புரவாகுங்கள்.
அவருடைய பாதையினூடே முன்னேறிச்செல்ல வாஞ்சையுள்ள யாவரையும் நேசிப்பதையும், ஏற்றுக்கொள்வதையும், ஊக்குவிப்பதுமான சொந்தமாகுதலின் கலாச்சாரத்தை அவரின் பரிசுத்தவான்களாக நாம் ஒவ்வொருவரும் சபையில் வளர்க்க வேண்டும்.
இரண்டாவது சோதனையைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்! பழங்காலம் மற்றும் நவீனகாலம் என்ற இவ்விரண்டு காலத்து தீர்க்கதரிசிகளின் ஆலோசனையைப் பின்பற்றி அன்புள்ள பிதா ஒருவரிடமிருந்து நீங்கள் ஒளிந்துகொள்ளமுடியாதென்று அறிந்துகொள்ளுங்கள்.
பதிலாக, இயேசு கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் அதிசயமான குணப்படுத்தும் வல்லமையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். “சகல வித பெலவீனங்களுக்கு உட்பட்டதும்” முதற் சோதனைகளுள் அநேகவற்றில் துரதிர்ஷ்டவசமாக அடிபணிந்துபோகும் பெலவீனமானதும் சாவுக்குகேதுவானதுமான சரீரம் ஒன்றை பெறுவதும், இந்த சோதனைகளுக்குள் நாம் விழுந்தபோதிலும் முன்னேறுவதும், அப்படி செய்த பின்பு இயேசு கிறிஸ்து பரலோகத்தில் இருக்கும் பிதா ஆகியோரை போலாக தெய்வீக உதவியைத் தேடுவதுமே நம் ஜீவியத்தின் ஒரே நோக்கமாயிருக்கிறது. இது அவருடைய வழி. இதுதான் ஒரே வழி. இந்த சத்தியங்களைக் குறித்து நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியமளிக்கிறேன், ஆமென்.