பொது மாநாடு
கிறிஸ்துவின் வருகைக்குத் தயாராக பங்கேற்கவும்
ஏப்ரல் 2025 பொது மாநாடு


11:24

கிறிஸ்துவின் வருகைக்குத் தயாராக பங்கேற்கவும்

தேவனுடைய பணியில் நாம் ஈடுபடும் விதமான அழைப்புகளும் பிற வழிகளும் இரட்சகரைச் சந்திக்க நம்மைத் தனித்துவமாகத் தயார்படுத்துகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு மண்டபத்தில் நின்று கொண்டிருந்தபோது, ​​மூப்பர் நீல் எல். ஆன்டர்சன் நடந்து சென்றார். நான் ஒரு புதிய பொது அதிகாரியாக அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடைய போதாமை உணர்வை உணர்ந்து, அவர் புன்னகைத்து, “தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத ஒரு மனிதனைப் போல காணப்படுகிறார்” என்றார்.

“ஒரு உண்மையான தீர்க்கதரிசி மற்றும் ஞானதிருஷ்டிக்காரர் இருக்கிறார்” என்று நான் நினைத்தேன்.

பின்னர் மூப்பர் ஆன்டர்சன், “கவலைப்படாதீர், மூப்பர் ஷம்வே என்று கிசுகிசுத்தார். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் அது சரியாகிவிடும்.”

தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு எட்டாத காரியங்களைச் செய்யும்படி ஏன் கேட்கப்படுகிறோம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாழ்க்கையின் கோரிக்கைகளுடன், சபையில் நமக்கு ஏன் அழைப்புகள் தேவை என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நான் கேட்டிருக்கிறேன்.

“நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுவதற்கு உங்களுக்கும் எனக்கும் இதுவே நேரம்,” என்று பொது மாநாட்டில் தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னபோது எனக்கு ஒரு பதில் கிடைத்தது. தலைவர் நெல்சன் இதைச் சொன்னபோது, ​​நாம் தேவனின் பணியில் பங்கேற்கும்போது, ​​கிறிஸ்துவின் வருகைக்கு நம்மையும் பிறரையும் ஆயத்தப்படுத்துகிறோம் என்பதை ஆவியானவர் எனக்குக் கற்பித்தார். அழைப்புகள், ஊழியம் செய்தல், ஆலய ஆராதனை, தூண்டுதல்களைப் பின்பற்றுதல் மற்றும் தேவனுடைய பணியில் நாம் ஈடுபடும் பிற வழிகள் இரட்சகரைச் சந்திக்க நம்மை தனித்துவமாகத் தயார்படுத்துகின்றன என்பது கர்த்தருடைய வாக்குறுதியின் முக்கியமானதாயிருக்கிறது.

நாம் அவருடைய பணியில் ஈடுபடும்போது தேவன் மகிழ்ச்சியடைகிறார்

தேவனின் ராஜ்யம் விரிவடைந்து வருகையிலும், பூமியெங்கும் ஆலயங்கள் நிறைந்திருக்கும் இந்த மகத்துவமான தருணத்திலும், தேவனின் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆத்துமாக்களின் தேவை அதிகரித்து வருகிறது. தன்னலமின்றி சேவை செய்வதே கிறிஸ்துவைப் போன்ற சீஷத்துவத்தின் சாராம்சம். ஆனால் சேவை செய்வது அரிதாகவே வசதியாக இருக்கும். ஆகவேதான் உங்கள் ஆசைகளையும் சவால்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்கு சேவை செய்வதன் மூலம் அவருக்கு சேவை செய்யும் நமது அன்பான ஊழியக்காரர்கள் உட்பட உடன்படிக்கையைக் கைக்கொள்ளும் சீஷர்களான உங்களை நான் பாராட்டுகிறேன். தேவன்” நீதியில் [தம்மைச் சேவிப்பதற்காக] உங்களைக் கனப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்.” அவர் வாக்குறுதி அளிக்கிறார், “[உங்கள்] வெகுமதி பெரியதாக இருக்கும், [உங்கள்] மகிமை நித்தியமாக இருக்கும்.” நாம் சேவை செய்வதற்கு ஆம் என்று சொல்லும்போது, ​​இயேசு கிறிஸ்துவுக்கு ஆம் என்று சொல்லுகிறோம். நாம் கிறிஸ்துவுக்கு ஆம் என்று சொல்லும்போது, ​​மிகவும் பரிபூரணமான வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்கிறோம்.

நான் கல்லூரியில் வேதியியல் பொறியியல் படித்துக் கொண்டே வேலை செய்யும் போது இந்தப் படிப்பினையைக் கற்றுக்கொண்டேன். ஒரு ஒற்றையர் தொகுதிக்கான நிகழ்ச்சிகளைத் திட்டமிடுபவராக இருக்க நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். இது எனக்கு கெட்ட கனவு போன்ற அழைப்பாயிருந்தது. ஆனாலும், நான் ஏற்றுக்கொண்டேன், முதலில் அது சலிப்பூட்டுவதாய் இருந்தது. பின்பு ஒரு நிகழ்ச்சியில் ஒரு அழகான பெண் நான் ஐஸ்கிரீமை பரிமாறிய விதத்தைப் பார்த்து வியந்தாள். என் கவனத்தை ஈர்க்கும் நம்பிக்கையில் அவள் மூன்று முறை திரும்பி வந்தாள். நாங்கள் காதலித்தோம், பிறகு இரண்டே வாரங்களில் அவள் காதலை என்னிடம் முன்மொழிந்தாள். சரி, ஒருவேளை அது அவ்வளவு சீக்கிரமாக நடந்திருக்காது, நான்தான் காதலை முன்மொழிந்தேன், ஆனால் உண்மை என்னவென்றால் இதுதான்: அந்த அழைப்பை நான் வேண்டாம் என்று சொல்லியிருந்தால் ஹைடியை இழந்திருப்பேன் என்பதை நினைக்க எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது.

நமது பங்கேற்பு கிறிஸ்துவின் வருகைக்கான ஆயத்தமாகும்

தேவனுக்கு நாம் தேவை என்பதற்காக அல்ல, மாறாக நமக்கு தேவனும் அவருடைய மகத்தான ஆசீர்வாதங்களும் தேவை என்பதற்காகவே நாம் தேவனின் பணியில் ஈடுபடுகிறோம். அவர் வாக்குறுதி அளிக்கிறார், “ஏனெனில், இதோ, என் திராட்சைத் தோட்டத்தில் பிரயாசப்படுபவர்கள் அனைவரையும் நான் மிகுந்த ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிப்பேன்.“ தேவனின் பணியில் நமது பங்கேற்பு எவ்வாறு ஆசீர்வதிக்கிறது மற்றும் இரட்சகரைச் சந்திக்க நம்மைத் தயார்படுத்த உதவுகிறது என்பதைக் கற்பிக்கும் மூன்று கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாவதாக, நாம் தேவனின் பணியில் பங்கேற்கும்போது, ​​“[நமது] சிருஷ்டிப்பின் அளவை” நோக்கி முன்னேறுகிறோம்.

இந்த மாதிரியை நாம் சிருஷ்டிப்பின் விவரத்தில் கற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு நாள் உழைப்புக்குப் பிறகும், தேவன் “அது நல்லது” என்று கூறி முன்னேற்றத்தை அங்கீகரித்தார். வேலை முடிந்துவிட்டது என்றோ அல்லது அது பரிபூரணமானது என்றோ அவர் கூறவில்லை. ஆனால் அவர் என்ன சொன்னார் என்றால் முன்னேற்றம் ஏற்பட்டது, மேலும் தேவனின் பார்வையில் அது நல்லது!

ஒரு நபரின் மதிப்பு அல்லது தகுதியை தீர்மானிக்கவோ அல்லது சரிபார்க்கவோ அழைப்புகள் இருக்கக்கூடாது. நாம் தேவனுடன் பிரயாசப்படும்போது, ​​நமது சொந்த சிருஷ்டிப்பின் அளவிற்கு வளர்கிறோம்.

நாம் இன்னும் செய்ய வேண்டிய வேலையிருந்தாலும் கூட, நம்முடைய முன்னேற்றத்தில் தேவன் மகிழ்ச்சியடைகிறார், நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். சில சமயங்களில், ஒரு அழைப்பில் சேவை செய்வதற்கான பலமோ அல்லது வழிமுறையோ நமக்கு இல்லாமல் போகலாம். இருப்பினும், ஜெபம் மற்றும் வேதப் படிப்பு போன்ற அர்த்தமுள்ள வழிகள் மூலம் நாம் பணியில் ஈடுபட்டு நமது சாட்சியங்களைப் பாதுகாக்க முடியும். நாம் விருப்பமுள்ளவர்களாக இருந்தும் சேவை செய்ய இயலாதவர்களாக இருக்கும்போது, ​​நம்முடைய அன்பான பரலோக பிதா நம்மைக் கண்டனம் செய்வதில்லை.

இரண்டாவதாக, சேவை செய்வது நமது வீடுகளையும் சபைகளையும் உடன்படிக்கை வாழ்க்கையைப் பயிற்சி செய்யக்கூடிய பரிசுத்த இடங்களாக உயர்த்துகிறது.

உதாரணமாக, கிறிஸ்துவை எப்போதும் நினைவில் கொள்வதற்கான நமது உடன்படிக்கை தனித்தனியாக செய்யப்படுகிறது, ஆனால் இந்த உடன்படிக்கை நாம் மற்றவர்களுக்கு பணி செய்யும்போது பின்பற்றப்படுகிறது. ஒருவருக்கொருவர் சுமைகளைச் சுமந்து, இவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளுடன் அழைப்புகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. நாம் தேவனை நேசிப்பதாலும், நமது உடன்படிக்கைகளின்படி வாழ விரும்புவதாலும் நாம் சேவை செய்யும்போது, ​​கடமை உணர்வு மிக்கதாகவும், சோர்வடையச் செய்யும் வகையிலும் தோன்றும் சேவை மகிழ்ச்சியாகவும், மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் மாறுகிறது.

நியமங்கள் நம்மை இரட்சிப்பதில்லை, ஏனெனில் அவை பரலோக சரிபார்ப்பு பட்டியலை நிறைவேற்றுகின்றன. மாறாக, இந்த நியமங்களுடன் தொடர்புடைய உடன்படிக்கைகளின்படி நாம் வாழும்போது, ​​நாம் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்க விரும்பும் வகையான நபராக மாறுகிறோம். இந்தப் புரிதல் சேவை செய்வதற்கான தயக்கங்களையோ அல்லது சேவை செய்யாமல் இருப்பதற்கான விருப்பங்களையோ வெல்லும். தேவன் என்ன அனுமதிப்பார் என்று கேட்பதை நிறுத்திவிட்டு, தேவன் எதை விரும்புவார் என்று கேட்கத் தொடங்கும்போது, ​​கிறிஸ்துவை சந்திப்பதற்கான நமது ஆயத்தம் வேகமடைகிறது.

மூன்றாவதாக, தேவனின் பணியில் பங்கேற்பது தேவ கிருபையின் வரத்தைப் பெறவும் அவருடைய மகத்துவமான அன்பை உணரவும் நமக்கு உதவுகிறது.

சேவை செய்வதற்கு நாம் நிதி இழப்பீடு பெறுவதில்லை. அதற்குப் பதிலாக, வேதம் நமக்குக் கற்பிக்கிறது, நமது “பிரயாசங்களுக்காக, [நாம்] ஆவியிலே பெலவான்களாகி, [நாம்] தேவ ஞானத்தைக் கொண்டு தேவனிடத்திலிருந்து பெற்ற அதிகாரத்தினாலும் வல்லமையினாலும் [நாம்] போதித்து, தேவனுடைய கிருபையைப் பெற வேண்டும். அது மிகவும் நல்ல வியாபாரம்!.

தேவனின் கிருபையின் காரணமாக, நமது திறமைகள் அல்லது திறமையின்மை ஒரு அழைப்பை வழங்குவதற்கோ அல்லது ஏற்றுக்கொள்வதற்கோ முக்கிய அடிப்படையாக இல்லை. தேவன் தனது பணியில் சரியான செயல்திறனையோ அல்லது தனிச் சிறப்பான திறமையையோ எதிர்பார்க்கவில்லை. அப்படியானால், எஸ்தர் ராணி தனது தேசத்தைக் காப்பாற்றியிருக்க மாட்டாள், பேதுரு ஆரம்பகால சபையை வழிநடத்தியிருக்க மாட்டான், ஜோசப் ஸ்மித் மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியாக இருந்திருக்க மாட்டார்.

நமது திறமைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நாம் செயல்படும்போது, ​​நமது பலவீனம் வெளிப்படுகிறது. இது ஒருபோதும் சௌகரியமாக இருக்காது, ஆனால் “[தேவனின்] கிருபையினாலேயே, … இவற்றைச் செய்ய நமக்கு வல்லமை இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது” அவசியம்.

நாம் தேவனுடைய பணியில் ஈடுபடும்போது பலமுறை விழுவோம். ஆனால் நம் முயற்சியில் இயேசு கிறிஸ்து நம்மை தாங்கிப் பிடிக்கிறார். அவர் நம்மை படிப்படியாக உயர்த்தி, நமது தோல்வி மற்றும் பயத்திலிருந்தும், நாம் ஒருபோதும் போதுமானவர்களாக இருக்க மாட்டோம் என்ற உணர்விலிருந்தும் இரட்சிப்பை அனுபவிக்க செய்கிறார். நாம் நமது அற்பமான ஆனால் சிறந்த முயற்சியைப் பரிசுத்தப்படுத்தும்போது, ​​தேவன் அதை சிறப்பாக்குகிறார். நாம் கிறிஸ்துவுக்காக தியாகம் செய்யும்போது, ​​அவர் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார். இது தேவ கிருபையின் மாற்றும் வல்லமை. நாம் சேவை செய்யும்போது, ​​“பிதாவினால் உயர்த்தப்பட்டு, [இயேசு கிறிஸ்துவுக்கு] முன்பாக நிற்க” நாம் ஆயத்தமாகும் வரை கிருபையில் வளர்கிறோம்.

அழைப்புகள் என்ற வரத்தைப் பெற்று மகிழ மற்றவர்களுக்கு உதவுங்கள்

நான் அவருக்கு முன்பாக நிற்கும்போது, ​​இரட்சகர் என்னிடம் கேட்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் ஒருவேளை ஒரு கேள்வி, “நீ யாரை உன்னுடன் அழைத்து வந்தாய்?” என்பதாக இருக்கலாம். அழைப்புகள் என்பது மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வர உதவும் அன்பான பரலோக பிதாவின் பரிசுத்தமான வரங்கள். ஆகவே அழைப்புகள் இல்லாதவர்களை இன்னும் மனமுவந்து தேட தலைவர்களையும் நம் ஒவ்வொருவரையும் நான் அழைக்கிறேன். கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்த அவர்களுக்கு உதவ தேவனின் பணியில் ஈடுபட அவர்களை ஊக்குவித்து உதவுங்கள்.

ஜானின் ஆயர் அவரைச் சந்தித்து, கர்த்தர் அவர் செய்ய ஒரு பணியை வைத்திருந்ததாகக் கூறியபோது, ​​ஜான் சபைக்கு வழக்கமாக வருபவராக இல்லை. அவர் ஜானை புகைபிடிப்பதை விட்டுவிட அழைத்தார். ஜான் பலமுறை நிறுத்த முயற்சித்த போதிலும், இந்த முறை ஒரு கண்ணுக்குத் தெரியாத வல்லமை தனக்கு உதவுவதை உணர்ந்தார்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு, பிணையத் தலைவர் ஜானைச் சந்தித்தார். அவர் அவரை ஆயத்தில் பணியாற்ற அழைத்தார். ஜான் அதிர்ச்சியடைந்தார். அவர் புகைபிடிப்பதை இப்போது விட்டுவிட்டதாக பிணையத் தலைவரிடம் கூறினார். இந்த அழைப்பு அவர் ஞாயிற்றுக்கிழமை தொழில்முறை கால்பந்து விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் தனது பாரம்பரியத்தை கைவிட வேண்டுமென்ற அர்த்தமாயிருந்தது, ஆனாலும் அவ்வாறு கேட்பது அதிகமாகத்தானிருந்தது. பிணையத் தலைவரின் உணர்த்தப்பட்ட பதில் எளிமையானது: “ஜான், உங்களைக் கேட்பது நானில்லை; கர்த்தர் கேட்கிறார்.”

அதற்கு ஜான், “நல்லது, அப்படியானால், நான் சேவை செய்வேன்” என்று பதிலளித்தார்.

சேவை செய்வதற்கான இந்த தியாகங்கள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆவிக்குரிய திருப்புமுனைகளாயிருந்தது என்று ஜான் என்னிடம் கூறினார்.

நமது அநித்திய பார்வையில், சாத்தியமற்றவர்களாகவோ அல்லது தகுதியற்றவர்களாகவோ தோன்றும் நபர்களுக்கு அழைப்புகளை வழங்கத் தவறி, நமக்கு ஒரு பார்க்க முடியாத புள்ளி இருக்கிறதோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அல்லது முன்னேற்றக் கோட்பாட்டை விட செயல்திறன் கலாச்சாரத்தில் நாம் அதிக அக்கறை கொண்டிருக்கலாம், இரட்சகர் சாத்தியமில்லாதவர்களுக்கும் நிரூபிக்கப்படாதவர்களுக்கும் சேவை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் திறனை எவ்வாறு அதிகரிக்கிறார் என்பதைப் பார்க்காமல் புறக்கணிக்கலாம்.

“ஒவ்வொரு [பெண்ணும்] ஆணும் [தங்கள்] கடமையை அறிந்துகொண்டு செயல்படுவானாக” என்ற வேத பூர்வ கட்டளையின் முக்கியத்துவத்தை மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் கற்பிக்கிறார். இதை நாம் செய்கிறோமா? தலைவர்களும் பெற்றோர்களும் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவும் தாங்களாகவே செயல்படவும் அனுமதிக்கும்போது, ​​அவர்கள் மலர்ந்து செழிப்பார்கள். விசுவாசமுள்ள உறுப்பினர்களுக்கு இரண்டாவது அழைப்பை வழங்குவது எளிதான பாதையாக இருக்கலாம், ஆனால் சேவை செய்ய வாய்ப்பில்லாதவர்களை அழைத்து அவர்கள் கற்றுக்கொள்ளவும் வளரவும் அனுமதிப்பதே மிகச் சிறந்த வழி.

கிறிஸ்து சரீரத்தில் இங்கே இருந்திருந்தால், அவர் நோயுற்றவர்களை சந்திப்பார், ஞாயிறு பள்ளி வகுப்பில் கற்பிப்பார், மனம் உடைந்த இளம் பெண்ணுடன் அமர்ந்து, பிள்ளைகளை ஆசீர்வதிப்பார். அவரால் தனது சொந்த வேலையைச் செய்ய முடியும். ஆனால் அவர் நம்மைக் கற்றுக்கொள்ள அனுமதிப்பது என்ற இந்தக் கொள்கைப்படி வாழ்கிறார், எனவே அவர் நம்மை அவருடைய இடத்தில் அனுப்புகிறார்.

தேவனின் பணியில் பங்கேற்பதன் மூலம் “கர்த்தரின் [இயேசு கிறிஸ்து] பிரதிநிதியாகும் உரிமை, சிலாக்கியம் மற்றும் பொறுப்பு“ வருகிறது.நாம் நம்மை மகிமைப்படுத்தாமல் கிறிஸ்துவை மகிமைப்படுத்த சேவை செய்யும்போது, நமது சேவை ஆனந்தமாகிறது. மற்றவர்கள் நம் வகுப்பையோ, கூட்டத்தையோ, ஊழிய வருகையையோ அல்லது நிகழ்ச்சியையோ விட்டு வெளியேறும்போது, ​​நம்மை விட அதிகமாக கிறிஸ்துவை நினைவுகூரும்போது, ​​பணி உற்சாகமூட்டுகிறது.

இரட்சகரை பிரதிநிதித்துவப்படுத்த ஆர்வத்துடன் நாடுகையில், நாம் அவரைப் போலாகிறோம். நாம் ஒவ்வொருவரும் மண்டியிட்டு இயேசுவே கிறிஸ்து என்று அறிக்கையிடும் பரிசுத்த தருணத்திற்கு அதுவே சிறந்த ஆயத்தம், அவர் ஜீவிக்கிறார் என்பதற்கும், “வரப்போகிறதற்காக ஆயத்தமாக” நமக்கு உதவுவதற்காக, தலைவர் ரசல் எம். நெல்சன் “பூமியின் கடையாந்தரம் மட்டும் கர்த்தருடைய சத்தம்” என்பதற்கும் நான் சாட்சியாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “The Lord Jesus Christ Will Come Again,” Liahona, Nov. 2024, 121.

  2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:2–4 பார்க்கவும்.

  3. Russell M. Nelson, “The Lord Jesus Christ Will Come Again,” 121.

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:5–6.

  5. யோவான் 10:10ஐப் பார்க்கவும்.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:9.

  7. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:19.

  8. ஆதியாகமம் 1 பார்க்கவும்.

  9. இரட்சகரின் தாலந்துகள் பற்றிய உவமையில், எஜமானர் ஒவ்வொரு ஊழியருக்கும் “கொஞ்சத்தில்” பொறுப்பைக் கொடுக்கிறார். “அநேகத்தின்மேல்” எஜமானர்களாக மாறுவதற்கான ஒவ்வொரு ஊழியரின் முன்னேற்றத்திலும் எஜமான் அதிக கவனம் செலுத்தினார், மேலும் அவரது பொருட்களைத் திரும்பப் பெறுவதில் குறைவான அக்கறை கொண்டிருந்தார். பயந்து உழைக்க விருப்பமில்லாத ஒரு வேலைக்காரன் கண்டனம் செய்யப்பட்டு முன்னேற்றம் இல்லாமல் விடப்பட்டான். (மத்தேயு 25:14-28 பார்க்கவும்.)

  10. லூக்கா 21:19 பார்க்கவும். “ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு நீதியான வேலை அவசியம்“ என்று மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் கற்பிக்கிறார். (“Things as They Really Are 2.0,“ [worldwide devotional for young adults, Nov. 3, 2024], Gospel Library).

  11. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:4 பார்க்கவும்.

  12. மோசியா 4:24 பார்க்கவும்.

  13. See Russell M. Nelson, “What We Are Learning and Will Never Forget,” Liahona, May 2021, 79: “God wants us to work together and help each other. அதனால்தான் அவர் குடும்பங்களாக நம்மை பூமிக்கு அனுப்புகிறார், நம்மை தொகுதிகளாகவும் பிணையங்களாகவும் அமைக்கிறார். அதனால்தான் ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் ஊழியம் செய்யவும் அவர் கேட்கிறார். … நாம் தனியாக செய்ய முடிவதை விட மிக அதிகமாக சாதிக்க முடியும். தேவனின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவரது மகிழ்ச்சியின் திட்டம் பாதிக்கப்படும்.”

  14. கலாத்தியர் 6:2; மற்றும் மோசியா 18:8–9 பார்க்கவும்.

  15. தலைவர் ஹென்றி பி. ஐரிங் போதித்தார், “சேவை செய்ய அழைக்கப்படுவது நாம் சேவை செய்யும் எஜமானரை நேசிப்பதற்கான அழைப்பு. இது நமது இயல்புகளை மாற்றுவதற்கான அழைப்பு” (“As a Child,” Liahona, May 2006, 17).

  16. See Henry B. Eyring, “Should a Latter-day Saint sell a product when its use violates the Word of Wisdom?,” Ensign, Apr. 1977, 30.

  17. மோசியா 18:26 மோசியா 27:5; ஐயும் பார்க்கவும்.

  18. 2 நேபி 3:13, 24 பார்க்கவும்.

  19. யாக்கோபு 4:7.

  20. ஏசாயா 40:29–31; 2 கொரிந்தியர் 12:9 பார்க்கவும்.

  21. மத்தேயு 14:15–21 பார்க்கவும். பெருந்திரளான மக்களுக்கு உணவளிக்க ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் வழங்கப்பட்ட போதிலும், இரட்சகர் நன்றியுடன் அந்தப் பலியை ஏற்றுக்கொண்டு, தேவைக்கு அதிகமாக அதை சிறப்பாக்கினார். இந்த அற்புதத்தின் சிறந்த பாடங்களில் ஒன்று, இரட்சகர் நமக்கு வழங்குவது எப்போதும் போதுமானதை விட அதிகமாகும்!

  22. தியாகம் என்ற வார்த்தையின் லத்தீன் வேர் sacer, அதாவது பரிசுத்தமானது அல்லது புனிதமானது என்பதாகும், மேலும் facere, உருவாக்குதல் என்றும் அர்த்தம். நாம் தேவனுக்காக தியாகம் செய்யும்போது, ​​அவர் நம்மைப் பரிசுத்தமாக்குகிறார்.(see ஏலமன் 3:35; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 132:50).

  23. 3 நேபி 27:14.

  24. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:6; 16:6; 18:10–16 பார்க்கவும்.

  25. See Moroni 7:2; General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 4.1, Gospel Library.

  26. See also “Let Us All Press On,” Hymns, no. 243.

  27. Personal experience and correspondence, Jan. 4, 2025; name has been changed.

  28. மத்தேயு 10:5–8; லூக்கா 10:1–9;பொது கையேடு, 4.2.6 பார்க்கவும்.

  29. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:99; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது; மூப்பர் டேவிட் ஏ. பெட்னாருடனான ஒரு உரையாடலிலிருந்து, டிசம்பர். 2024.

  30. ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:20 பார்க்கவும். நமது இளைஞர்கள் சபையில் எதிர்காலத் தலைவர்கள் மட்டுமல்ல. அவர்கள் இப்போது கணிசமான வழிகளில் வழிநடத்தவும் முடியும். 2019–2022 வரை இல்லினாய் சிகாகோ ஊழியத்தில் இயேசு கிறிஸ்துவின் மிகவும் குறிப்பிடத்தக்க சீஷர்களில் 744 பேருக்கு இந்த சத்தியம் சேவை செய்வதை நான் கண்டேன். கோவிட் காலத்தில், இந்த இளம் ஆனால் வல்லமைவாய்ந்த கிறிஸ்துவின் சீஷர்கள் தேவனின் பணியை குறிப்பிடத்தக்க மற்றும் புதுமையான வழிகளில் காணப்படாத உயரங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

  31. 2 நேபி 27:20–21 பார்க்கவும்.

  32. Preach My Gospel: A Guide to Sharing the Gospel of Jesus Christ (2023), 3.

  33. யாக்கோபு 1:17, 19-ல், யாக்கோபின் பணி கர்த்தருடைய பணியாக இருந்தது. அவன் தனது அலுவலை தனக்கென்று உயர்த்திக் கொள்ளவில்லை, மாறாக கர்த்தருக்கே உயர்த்திக் கொண்டான், இதனால் அவன் தேவனுடைய வார்த்தையைப் போதித்து, கடைசி நாளில் கறையற்றவனாகக் காணப்பட முடிந்தது.

  34. 3 நேபி 27:27 பார்க்கவும்.

  35. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:11–12.