தயாளத்துவம்—மெய்யான சீஷத்துவத்தின் அடையாளம்
சீஷத்துவத்தின் உண்மையான இலக்கு, இயேசு கிறிஸ்து போல மாறுவதே ஆகும்.
தலைவர் ரசல் எம் நெல்சன் “நம்முடைய சீஷத்துவத்தை நமது முன்னுரிமைகளில் முதன்மையானதாக்க வேண்டும்“ என்று சமீபத்திலே அழைப்பு விடுத்தார். அந்த வல்லமையான அழைப்பு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிற என்னுடைய தனிப்பட்ட சீஷத்துவத்தைக் குறித்து ஆழமாக தியானிக்கும் படியாக என்னை உலுக்கியது.
சீஷத்துவம் தாமாக வருவது
சீஷன் என்பவன் மற்றவரை பின்பற்றுபவன் அல்லது அவரது மாணவனாக இருக்கலாம்.. தங்களுடைய ஆசிரியரைப் போலாவதற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் “பணிப் பயிற்சியர்” தான் சீஷர்கள். இப்படியாக, இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருத்தல் அவருடைய போதனைகளையும் கோட்பாடுகளையும் விசுவாசிப்பதிலும் மிஞ்சிய ஒன்று என்று பொருள்படுகிறது. அவருடைய தெய்வீக தன்மையை ஒப்புக்கொண்டு அவரை நம்முடைய இரட்சகராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொள்வது மிக முக்கியம் என்றாலும் இவைகளைக் காட்டிலும் சீஷத்துவம் அதிகமானவற்றைக் குறிக்கிறது.
தலைவர் டாலின் எச் ஓக்ஸ் விளக்கினார்: கிறிஸ்துவைப் பின்பற்றுவது சாதாரணமானதோ அல்லது எப்போதாவது கடைபிடிக்கப்படும் நடைமுறையோ அல்ல. இது எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நம்மை வழிநடத்த வேண்டிய ஒரு தொடர் அர்ப்பணிப்பும் வாழ்க்கை முறையுமாகும்.” கர்த்தருடைய பாவநிவாரண பலி, அவருடைய சாத்தியமாக்குகிற வல்லமை ஆகியவைகள் மூலம் நாம் மாற்றப்படுவதற்கு வேண்டுமென்றே மேற்கொள்ளும் பயணம் சீஷத்துவமாகும். “இயேசு கிறிஸ்துவின் சாயலை [நம்முடைய] முகரூபங்களில்” பெறும் வரைக்குமாய் நிச்சயமாகவே, இயேசு கிறிஸ்துவைப் போலாவதே சீஷத்துவத்தின் உண்மையான இலக்காகும்.
கர்த்தருடைய சீஷர்களாவதற்கு அவருடைய எண்ணங்களையும் செயல்களையும்—உதாரணமாக, கீழ்ப்படிதல், தாழ்மை, பொறுமை ஆகியவைகளை நாள் தோறும் மனமுவந்து பின்பற்றவேண்டும். இப்பண்புகளை நம்முடைய சுய அடையாளங்களுக்குள் படிப்படியாக இணைக்கும்போது நாம் “[அவருடைய] தெய்வீ சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகிறோம்” . இரட்சகரின் நடத்தையை உதாரணமாக்குவது அவரை ஆராதிப்பதன் மையப்புள்ளியாக உள்ளது. தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “நாம் இயேசுவை ஆராதிப்பது இயேசுவை நாம் உதாரணமாக்குவதில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகிறது.”
மெய்யான சீஷத்துவத்தின் அடையாளம்
நாம் உதாரணமாக்க வேண்டிய இயேசு கிறிஸ்துவின் பண்புகளில் அநேகமிருக்க, ஒன்று மாத்திரம் முதன்மையானதாக மற்றனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறதாய் திகழ்கிறது. அப்பண்பு அவருடைய தூய அன்பாகிய தயாளத்துவமே. தயாளத்துவமில்லாமல் “நாம் ஒன்றுமில்லை” என்று தீர்க்கதரிசி மார்மனும் அப்போஸ்தலனாகிய பவுலும் நமக்கு நினைவூட்டுகிறார்கள். அல்லது தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திற்கு வெளிப்படுத்தப்பட்டதுபோல “தயாளத்துவம் இல்லாவிட்டால் [நம்மால்] எதையும் செய்யமுடியாது.“
இரட்சகர் தாம் அடையாளமாகவோ அல்லது அறிகுறியாகவோ கொண்ட அன்பினாலே தம்முடைய மெய்யான சீஷர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று அவர் அறிவித்ததாவது:
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் எல்லா மனுஷரும் என்னுடைய சீஷர்களென்று அறிந்துகொள்வார்கள்.”
தயாளத்துவம் வரையறுப்பதற்கு கடினமான கருத்தாயிருந்தாலும் அதனால் தொடப்பட்ட யாவராலும் எளிதாக உணர்ந்து கொள்ளக்கூடும். என் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்ற புத்தகம் “தயாளத்துவம், விசுவாசத்தை போன்று செயலாற்றுவதற்கு வழிநடத்துகிறது” என்று போதிக்கிறது. நிச்சயமாகவே தயாளத்துவத்தை “செயலாற்றும் அன்பு” என்று விவரிக்கலாம். இந்த விளக்கம் “அவர் நன்மைசெய்கிறவராய் சுற்றித் திரிந்தார்” என்ற இரட்சகரின் வாழ்க்கையைப் பற்றிய சுருக்க அறிக்கைக்கு மிகுந்த உள்ளுணர்வை கொடுப்பதாக அமைகிறது.
நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, நம்முடைய போதகர் தம்முடைய தூய அன்பை மற்றவர்களுக்கு நிரூபித்த பாதையில் நாமும் பின்செல்லவேண்டும். இரட்சகர் தயாளத்துவத்தை அநேக வழிகளில் வெளிப்படுத்தினாலும், அவரின் மெய்யான சீஷர்களிடமே காணப்படும் அவருடைய தயாளத்துவத்தின் மூன்று குறிப்பான மாதிரிகளுக்கு நான் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
தயாளத்துவம் மனதுருக்கத்தை வெளிப்படுத்துவது
முதலில் இரட்சகர் மனதுருக்கமாய் இருப்பதின் மூலம் தயாளத்துவத்தை வெளிப்படுத்தினார். மார்மன் புஸ்தகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதுபோல நேபியர்கள் மத்தியில் தம்முடைய ஊழியத்தின்போது கர்த்தர் ஜனங்கள் வீடு திரும்பி மறுநாளில் தம்முடைய திரும்பி வருவதற்கு ஆயத்தப்படும்படியாக தாம் போதித்தவைகளை சிந்திக்க அழைத்தார். பதிவு பின்பு கூறுகிறது:
“அவர்கள் கண்ணீர் விடுவதையும், அவர் தங்களோடு சற்று அதிகமாய்த் தங்கவேண்டுமென்று கேட்பதுபோன்று அவர்கள் அவரையே, கண்ணிமைக்காமல் பார்த்ததையும் கண்டார்.
அவர்களை அவர் நோக்கி: “இதோ, என் உள்ளம் உங்கள் பேரில் மனதுருக்கத்தால் நிரம்பியிருக்கிறது” என்றார்.”
தயாளுத்துவத்தின் ஓர் பகுதியான மனதுருக்கம் பாடுகளை நீக்கிப்போட வகைதேடுகிறது. மனதுருக்கத்தால் நிரம்பியவராய், கர்த்தர் ஜனங்களுக்குள்ளே இருந்த வியாதியஸ்தரையும் உபத்திரப்படுவோரையும் குணப்படுத்தினார். பின்பு, பரலோகத்திலிருந்து தூதர்கள் இறங்கிவந்து சூழ்ந்துகொண்டபோது அவர் சிறு பிள்ளைகளை ஆசீர்வதித்தார். அவர் இந்த மென்மையான, அன்பான கிரியைகளையும் இன்னும் அதிகமானவைகளையும் தம்முடைய “மனதுருக்கத்தால் அசைக்கப்பட்டதினிமித்தம்” செய்தார்.
தென் அமெரிக்காவில் இளம் ஊழியக்காரனாக சேவை செய்தபோது நானும் இப்படியே ஒரு அன்பான நண்பனின் மனதுருக்கத்தால் பலனடைத்தேன். ஒரு மாலை நேரத்தில் என் தோழனுடன் எங்களுடைய ஊழிய தலைவரின் இல்லத்திற்கு நான் காரை ஓட்டிச்செல்லும்போது, இருசக்கர வண்டியிலிருந்த ஒரு இளம் வாலிபன் தீடீரென்று என் வாகனத்திற்கு முன்பு திரும்பினான். அது படு துரிதமாக நடந்ததினால் அந்த மோதலை என்னால் தவிர்க்க முடியவில்லை. சோகமாக, இந்த இளம் வாலிபன் இதன் விளைவாக கொல்லப்பட்டான். அவனுடைய மரணத்தினிமித்தம் நான் தீரா வேதனையடைத்தேன். மோசமான ஒன்று நிஜமாகவே நடந்தது என்று உணர்வு இடிபோல என்மேல் விழுந்தபோது நான் திகைத்து, அதிர்ச்சியடைந்தேன். நான் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டேன். இதுபோல நான் என்றுமே மிகுதியாய் அஞ்சி, தனிமையை உணர்ந்ததுமில்லை. நான் விரக்தியால் நிறைந்து என் மீதி வாழ்க்கை முழுவதும் சிறையில் அடைக்கப்படுவேனோ என்று பயந்தேன்.
என்னுடைய சக ஊழியக்காரரான மூப்பர் பிரையன் கொச்சிவர், விபத்தைக் குறித்து கேள்விப்பட்டு மனதுருகினார். அவர் சிறைக்கு வந்து அதிகாரிகளிடத்தில் நான் தனிமையில் விடப்படாதபடிக்கு என்னுடன் தானும் தங்க அனுமதிக்குமாறு கெஞ்சினார். அற்புதமான வகையில் அவர்கள் அனுமதித்தார்கள். என் வாழ்க்கையின் கொடிய நெருக்கத்தின் தருணத்தில் என்னை அமைதிப்படுத்தி, தேற்றி, ஆறுதலளித்த இந்த சீஷனின் கிறிஸ்துவைபோன்ற அன்பினாலான செயலுக்காக இந்நாள் வரைக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடைய தயாளத்துவ மனதுருக்கம் அவரின் சீஷத்துவத்திற்கான வெளிப்படையான குறியீடு. தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார்: “இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவரை அடையாளம் கண்டுகொள்வதற்கான எளிமையான வழிகளில் ஒன்று என்னவென்றால் அந்நபர் எப்படி மற்றவர்களை மனதுருக்கத்தோடு நடத்துகிறார் என்பதே.”
தயாளத்துவம் சொல்லப்படாத தேவைகளுக்கும் ஊழியம் செயவதாகும்
இரட்சகர் தம்முடைய அன்பை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம் என்னவென்றால் சொல்லப்படாத மற்றவர்களின் தேவைகளை அவர் கவனித்து ஊழியம் செய்ததாகும். தனக்கு உதவிசெய்ய ஒருவருமில்லாமல் 38 வருடங்களாக முடமாயிருந்த மனுஷனைக் கர்த்தர் குணப்படுத்தி நீதியுள்ளவனாக வாழ ஊக்குவித்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை அவர் ஆக்கினைக்குள்ளாக தீர்க்காமல் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தார். மேற்கூரையிலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட திமிர்வாதக்காரனுக்கு கர்த்தர் சரீர சுகத்தை மாத்திரமல்ல பாவமன்னிப்பையும் அருளினார்.
நான் ஆயராக ஊழியம்பண்ண அழைக்கப்பட்டபோது திருவிருந்துக் கூட்டத்தில் நான் மேடையில் அமர்ந்திருக்க என் மனைவி கிறிஸ்டினுக்கு எங்களுடைய ஆறு பிள்ளைகளை தனியாக சமாளிப்பது சவாலாக இருந்தது. நீங்கள் யூகித்ததுபோல, எங்கள் பிள்ளைகள் பல சமயங்களில் பயபக்தியாய் இருக்கவில்லை. அவளுடைய சூழ்நிலையைப்பார்த்து எங்கள் தொகுதியின் இரண்டு உறுப்பினர்களான ஜானும் டெப்பி பெனிச்சும் உதவிபுரிய அவளோடு உட்கார ஆரம்பித்தார்கள். அவர்களுடைய தயவு பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர்கள் எங்கள் குடும்பத்திற்குத் வாடகை தாத்தா பாட்டிபோல ஆனார்கள். கிறிஸ்துவைப் போல இந்த சீஷர்களும் சொல்லப்படாத தேவையை கவனித்து அவர்களுடைய சீஷத்துவத்தின் முக்கிய அடையாளமான அன்பைக்கொண்டு செயலாற்றினார்கள்.
தயாளத்துவம் என்பது மற்றவர்களுக்கு உடன்படிக்கையின் பாதையில் உதவுவதாகும்.
இறுதியாக, இரட்சகரின் பரிபூரண அன்பு, தேவனின் குழந்தைகள் அனைவரும் நமது தெய்வீக திறனை நிறைவேற்ற உதவுவதில் கவனம் செலுத்துகிறது, இதனால் நாம் “அவருடைய இரட்சிப்பிலும், அவருடைய மீட்பின் வல்லமையிலும் பங்குபெற முடியும்.” நம்முடைய போதகரைப் போல மேலும் வளரும் போது சகோதர சகோதரிகளுக்கு உடன்படிக்கையின் பாதையிலே உதவிசெய்யும்படியான நமது விருப்பம் இயல்பாகவே அதிகரிக்கும்.
உதாரணமாக, இடறலடைந்து போனவர்களையோ அல்லது மறக்கப்பட்டுப்போனோம் என்று எண்ணுபவர்களையோ நீங்கள் உயர்த்தி அவர்களை நண்பர்களாகக் கொள்ளலாம், நம்முடைய சபைக்கு புதிதானவர்களை வரவேற்கும்படியாக உதவலாம். அல்லது நம்முடைய நண்பர்களை நம்முடன் திருவிருந்துக் கூட்டத்தில்—ஒருவேளை வருகிற ஈஸ்டர் அன்று ஆராதிக்க அழைக்கலாம். நாம் வேண்டுமென்றே ஜெபத்துடன் பரலோகத்தின் உதவியை நாடினால், இயேசு கிறிஸ்து அவர்களைப் பார்த்து எப்படி உணருகிறார் என்பதை உணர ஒரு இதயத்தையும், பார்க்க கண்களையும் பெற வேண்டுமென்றால், மற்றவர்களை அவர்களின் முன்னேற்றத்தில் ஊக்குவிக்கவும் உதவவும் எண்ணற்ற வழிகள் உள்ளன.
மற்றவர்களுக்கு உடன்படிக்கையின் பாதையிலே உதவி செய்வது வழக்கத்திற்கு மாறான சேவையின் செயலாக உருவம் பெறலாம். உதாரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் என்னுடைய தற்போதைய ஊழியத்தில் நான் அகமடா குடும்பத்தைக் குறித்து அறிந்துகொண்டேன். அவர்கள் 2023ல் ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டார்கள். பின்பு பக்கத்திலுள்ள உடனெட்டா பிலிப்பைன்ஸ் ஆலயத்தில் குடும்பமாக முத்திரிக்கப்பட தேதியை குறித்தார்கள். எனினும், அந்த குடும்பத்தின் நேர அனுமதி பெற்ற சமயத்திற்கு முன்னதாக அநேக சூறாவளிகள் அப்பகுதியைத் தாக்கின. நெல் விவசாயியான சகோதரர் அகமடா, இந்த கடின புயல்களினால் தன்னுடைய பயிர்களை நடமுடியவில்லை. இந்த சூறைக்காற்று கடந்த பின்னர், நடுவதற்கான ஏற்ற காலமாக ஈரப்பதத்தோடு மண் இருக்கும்போதே அவர் துரிதமாக நெல் நாற்று நடவேண்டும். சோகமாக, ஆலய பயணம் தள்ளிப்போடப்படவேண்டும்.
இரண்டு சீஷர்களான மூப்பர் மற்றும் சகோதரி காலின், அகமடா குடும்பத்தின் போராட்டங்களை கேள்விப்பட்டு மற்ற மூன்று இளம் சேவை ஊழியர்களோடு சேர்ந்து, விவசாய அனுபவம் இல்லையென்றாலும் உதவ முன்வந்தார்கள். சுட்டெரிக்கிற சூரியனுக்குக் கீழ் வேலைசெய்து, அவர்கள் நாற்றை நட உதவிபுரிந்து, அகமடா குடும்பம் தங்களுடைய பணியை முடித்து முன்பு நிர்ணயித்தபடியே தங்களின் ஆலய முத்திரித்தலில் பங்குபெற முடிந்தது. நாங்கள் கர்த்தருடைய வீட்டில் “[அகமடா குடும்பத்தினர்] வெள்ளை ஆடைகளை அணிந்திருக்க கண்டபோது அவர்களின் முகரூபங்கள் ஒளிர்ந்தது.” ஒருவருக்கு நாங்கள் செய்த ஊழியத்தால் கண்ட சந்தோஷம் ஒப்பிடமுடியாத சந்தோஷம்!”
தங்கள் சீஷத்துவத்தின் அடையாளமாக சில சக சீஷர்கள் தயாளத்துவதினால் நிரப்பட்டவர்களாய் தங்கள் சகோதர சகோதரிகளை அவர்களுடைய உடன்படிக்கையின் பாதையிலே உதவ தீர்மானித்ததாலே அகமடா குடும்பத்தினர் இப்போது நித்திய குடும்பமாக முத்திரிக்கப்பட்டவர்களாய் அதிக ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் சீஷத்துவம் தான் நிலையான சந்தோஷத்தை பெறுவதற்கான ஒரே வழி. இது மற்றவர்களுக்காக வேண்டுமென்றே அன்பினால் தீர்மானித்த செயல்களால் நிரம்பியிருக்கிற ஓர் பாதை. சீஷத்துவத்தின் பாதை கடினமாயும் சவாலாகவும் இருக்கக்கூடும் சில சமயங்களில் நாம் தடுமாறி விழக்கூடும், ஆயினும் தேவன் நம்மை நினைவில் கொண்டுள்ளார், ஒவ்வொரு முறையும் நாம் முயற்சிக்கும்போதும் நமக்கு உதவ காத்திருக்கிறார் என்பதில் ஆறுதல் பெறலாம். “தேவன் [உன்] கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்கிறார்” என்று ஏசாயா தீர்க்கதரிசி நமக்கு நினைவூட்டுகிறான்.
நம்முடைய பரலோக பிதாவிடமிருந்து வந்த இந்த உறுதியை மனதில் கொண்டவனாய், நமது சீஷத்துவத்தை முன்னுரிமைப்படுத்தும்படியான தலைவர் நெல்சனின் அழைப்பை நாம் பின்பற்ற ஆர்வத்துடன் வேண்டுகிறேன். “கிறிஸ்துவின் தூய அன்பாகிய தயாளத்துவமென்ற” மெய்யான சீஷத்துவத்தின் அடையாளத்தை நாம் எடுத்துச்செல்வதாலே “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாமும் இருக்கும்படிக்கு, பிதா தம்முடைய குமாரனான, இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற யாவர் மேலும், அவர் அருளின இந்த அன்பினால்… நிரப்பப்பட அவரிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்தோடும்” ஜெபிப்போமாக.
இயேசு கிறிஸ்து நமது ஜீவிக்கிற, மகிமையான இரட்சகர், மீட்பர், உதாரணர், நண்பர் என நான் சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.