“என்னிடத்தில் கிட்டிச் சேருங்கள்”
இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். நாம் அவரிடம் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை அவர் நமக்கு வழங்குகிறார்.
என் அன்பு சகோதர சகோதரிகளே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் பொது மாநாட்டில் உங்களுடன் கூடிவந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அவரது சபை. அவருடைய நாமத்தில் உலகம் முழுவதும் உள்ள கட்டிடங்களிலும் வீடுகளிலும் நாம் கூடியிருக்கிறோம்.
நாம் அவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்போது உடன்படிக்கையால் அவருடைய நாமத்தை நம்மீது தரித்துக்கொள்கிறோம். அவர் உயிர்த்தெழுந்த மகிமையடைந்த தேவ குமாரன். நாம் பாவத்திற்கும் மரணத்திற்கும் ஏதுவான உலகப்பிரகாரமானவர்கள். இருப்பினும், நம் ஒவ்வொருவர் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பில், அவருக்கு நெருக்கமாக வர அவர் நம்மை அழைக்கிறார்.
நமக்கு அவரது அழைப்பு இதோ, “என்னிடத்தில் கிட்டிச் சேருங்கள், நான் உங்களிடத்தில் கிட்டிச் சேருவேன்; கருத்தாய் என்னைத் தேடுங்கள், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்; கேளுங்கள், பெற்றுக் கொள்வீர்கள், தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்.”
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் நெருக்கமாக உணரும் நேரங்கள் உள்ளன. ஆனாலும், சில சமயங்களில் நமது அநித்திய சோதனைகளின் போது, நாம் அவரிடமிருந்து சிறிது தூரத்திலிருப்பதை உணரலாம், அவர் நம் இருதயங்களில் உள்ளதை அறிந்திருக்கிறார், தனிநபர்களாக நம்மை நேசிக்கிறார் என்ற உறுதிப்பாட்டை விரும்புகிறோம்.
அந்த உறுதிப்பாட்டை உணரும் வழியை இரட்சகரின் அழைப்பு உள்ளடக்கியுள்ளது. எப்போதும் அவரை நினைவில் கொள்வதன் மூலம் அவரை நெருங்கி வாருங்கள். வேதப் படிப்பின் மூலம் அவரை கருத்தாய் தேடுங்கள். பரலோக பிதாவிடம், தம்முடைய நேச குமாரனுடன் நெருக்கமாக உணர, மனமார்ந்த ஜெபத்தின் மூலம் கேளுங்கள்.
இதைப் பற்றி சிந்திக்க ஒரு எளிய வழி உள்ளது. அன்பான நண்பர்களிடமிருந்து நீங்கள் சிறிது காலம் பிரிந்திருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அவர்களுடன் பேசுவதற்கான வழியை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், அவர்களிடமிருந்து நீங்கள் பெறும் எந்த செய்தியையும் நீங்கள் போற்றுவீர்கள், மேலும் அவர்களுக்கு உதவ உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள்.
அது எவ்வளவு அதிகமாக நடந்ததோ, அவ்வளவு காலம் நீடித்தது, பாசப் பிணைப்பு ஆழமாக வலுப்பெறும், மேலும் நீங்கள் நெருங்கி வருவதை உணருவீர்கள். மிகவும் விரும்பத்தக்க தொடர்பும், ஒருவருக்கொருவர் உதவி செய்யும் வாய்ப்பும் இல்லாமல் அதிக நேரம் கடந்துவிட்டால், பிணைப்பு பலவீனமடையும்.
இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். நாம் அவரிடம் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை அவர் நமக்கு வழங்குகிறார். ஒரு அன்பான நண்பரோடு கூட, நீங்கள் அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பரலோக பிதாவிடம், ஜெபத்தின் மூலம் தொடர்புகொள்வதன் மூலமும், எதிர்பார்த்திருந்த பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைக் கேட்பதன் மூலமும், மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் இரட்சகருக்கு சேவை செய்வதன் மூலமும் செய்வீர்கள். விரைவில் நீங்கள் அவரிடம் நெருங்கி வருவதன் ஆசீர்வாதத்தை உணர்வீர்கள்.
என் இளமையில், கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் எளிய செயல்களின் மூலம் இரட்சகரிடம் நெருங்கி வருவதையும், அவர் என்னிடம் நெருங்கி வரும் மகிழ்ச்சியையும் நான் அனுபவித்தேன். நான் சிறுவனாக இருந்தபோது ஒரு மாலை கூட்டத்தின் போது திருவிருந்து வழங்கப்பட்டு வந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பு, வெளியே இருட்டாகவும் குளிராகவும் இருந்த ஒரு குறிப்பிட்ட இரவு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவரது குமாரனை எப்போதும் நினைவுகூரவும் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும் நமது பரலோக பிதாவுடன் உடன்படிக்கை செய்து, திருவிருந்தில் பங்கேற்க பரிசுத்தவான்களுடன் கூடிவர வேண்டும் என்ற கட்டளையை நான் கைக்கொண்டேன் என்பதை நான் நினைக்கும்போதே ஒளியும் அரவணைப்பும் நிறைந்த ஒரு உணர்வினை நான் உணர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது.
கூட்டத்தின் முடிவில் அந்த இரவில் “என்னோடிரும், வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே” எனும் மறக்கமுடியாத வார்த்தைகளுடன் கூடிய, “இரட்சகரே, என்னோடிரும் , இவ்விரவில்” என்ற கீர்த்தனையைப் பாடினோம்.
சிறுவனாக இருந்தபோதிலும் எனக்கு இந்த வார்த்தைகள் ஆவியின் பெரும் உணர்வைக் கொண்டுவந்தன. பரிசுத்த ஆவியின் ஆறுதலின் மூலம் அந்த மாலையில் இரட்சகரின் அன்பையும் நெருக்கத்தையும் நான் உணர்ந்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் இளமையில் அந்த திருவிருந்துக் கூட்டத்தின்போது இரட்சகரின் அன்பு மற்றும் நெருக்கத்தின் அதே உணர்வை மீண்டும் தூண்டிவிட நான் விரும்பினேன். எனவே நான் இன்னொரு எளிய கட்டளையைக் கடைப்பிடித்தேன்: நான் வேதத்தைத் தேடினேன்.
லூக்கா புத்தகத்தில், அவர் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளைப் பற்றி நான் வாசித்தேன், அப்போது விசுவாசமிக்க ஊழியர்கள், இரட்சகர் மீதுள்ள அன்பினால், அவரது உடலுக்கு எண்ணெய் பூச வந்தனர். அவர்கள் வந்தபோது, கல்லறையிலிருந்து கல் உருட்டப்பட்டதைக் கண்டார்கள், அவருடைய உடல் அங்கே இல்லை என்பதைக் கண்டார்கள்.
இரண்டு தேவதூதர்கள் அருகில் நின்று ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்டபடி:
“உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
“மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக,
“அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.”
அன்று மாலை, இரண்டு சீஷர்கள் எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் செல்லும் சாலையில் நடந்து சென்றனர், உயிர்த்தெழுந்த கர்த்தர் அவர்களுக்கு தரிசனமாகி, அவர்களோடு நடந்தார்.
லூக்கா புத்தகம் அந்த மாலையில் அவர்களுடன் நடக்க நம்மை அனுமதிக்கிறது:
“இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்.
“ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
“அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
“அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்?”
இயேசு இஸ்ரவேலின் மீட்பராக இருப்பார் என்று தாங்கள் நம்பியிருந்தபோது அவர் மரித்ததைக் குறித்து தங்கள் துக்கத்தை அவரிடம் சொன்னார்கள்.
துக்கமும் துயரமும் நிறைந்த இந்த இரண்டு சீஷர்களிடம் அவர் பேசியபோது உயிர்த்தெழுந்த கர்த்தரின் குரலில் நேசம் இருந்திருக்க வேண்டும்.
நான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது, நான் சிறுவனாக இருக்கையில் உணர்ந்ததைப் போலவே என் இருதயத்தை உற்சாகப்படுத்திய இந்த வார்த்தைகள் வந்தன:
“அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
“அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்”.
அந்த இரவில் வீட்டிற்குள் பிரவேசிக்கும்படி விடுத்த அவரது சீஷர்களின் அழைப்பை இரட்சகர் ஏற்றுக்கொண்டார். அவர்களோடே அவர் பந்தியிருந்தார். அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களது பார்வையிலிருந்து மறைந்துபோனார்.
அந்த ஆசீர்வதிக்கப்பட்ட சீடர்களின் உணர்வுகளை லூக்கா நமக்காக பதிவு செய்துள்ளான்: “அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா? என்று சொல்லிக்கொண்டார்கள்.”
பிறகு, நடந்ததைப் பதினொரு அப்போஸ்தலர்களிடம் சொல்வதற்காக அந்த இரண்டு சீஷர்களும் எருசலேமுக்கு விரைந்தார்கள். அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கையில், இரட்சகர் மீண்டும் தோன்றினார்.
இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: “உங்களுக்குச் சமாதானம் என்றார்.” பின்னர் அவர் தனது பிதாவின் பிள்ளைகள் அனைவரின் பாவங்களுக்கும் நிவர்த்தி செய்யவும், மரணத்தின் கட்டுகளை உடைக்கவும் அவரது ஊழியத்தின் தீர்க்கதரிசனங்களை மீண்டும் விளக்கினார்.
“எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது:
“அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டும்.
“நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.”
அவரது அன்பான சீஷர்களைப் போலவே, ஞானஸ்நானத்தின் வாசல் வழியாக பிரவேசிக்க தெரிந்துகொண்ட பரலோக பிதாவின் ஒவ்வொரு பிள்ளைகளும் இரட்சகரின் சாட்சியாக இருக்கவும், நமது அநித்திய வாழ்க்கை முழுவதும் தேவையில் இருப்பவர்களைக் கவனித்துக்கொள்ளவும் உடன்படிக்கை செய்திருக்கின்றனர். இந்த அர்ப்பணிப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மகத்தான மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி ஆல்மாவால் மார்மன் தண்ணீர்களில் நமக்கு தெளிவாக்கப்பட்டது:
“நீங்கள் இப்போது, தேவனுடைய மந்தையினுள் வந்து, அவருடைய ஜனமென்று அழைக்கப்பட விருப்பம்கொண்டவர்களாயும், ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, லகுவாக்க மனமுடையவர்களாகவும் இருக்கிறீர்கள்;
“ஆம், துக்கப்படுவோரோடு கூட துக்கப்படவும், ஆறுதல் தேவைப்படுவோருக்கு ஆறுதலளிக்கவும், நித்திய ஜீவனைப் பெறும்படிக்கு, தேவனால் மீட்கப்பட்டு, முதலில் உயிர்த்தெழுவோரோடு கூட எண்ணப்படும்படிக்கும், மரணம் சம்பவிக்குமட்டும், சதாகாலங்களிலும் எல்லாவற்றிலும், எல்லா இடங்களிலும் தேவனுக்கு சாட்சிகளாய் நிற்கவும் சித்தமாயிருக்கிறீர்கள்.”
இந்த வாக்குத்தத்தங்களுக்கு நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது, உங்கள் சேவையில் உங்களுடன் ஒன்றாக இருப்பதற்கான அவரது வாக்குறுதியை கர்த்தர் நிறைவேற்றுவதையும் உங்கள் பாரங்களை லகுவாக்குவதையும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள், காலப்போக்கில் இரட்சகரைப் போலவே மாறி “அவரில் பரிபூரணமாக்கப்படுவீர்கள்.” இரட்சகருக்காக, மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், நீங்கள் அவரிடம் நெருங்கி வருவதைக் காண்பீர்கள்.
உங்களில் அநேகருக்கு நித்திய ஜீவனுக்கான பாதையை விட்டு அலைந்து திரியும் அன்புக்குரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் கொண்டு வர நீங்கள் இன்னும் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் விசுவாசத்தில் கர்த்தருக்கு சேவை செய்யும்போது அவர் அவர்களிடம் நெருங்கி வரும்படியாய் நீங்கள் அவரைச் சார்ந்திருக்கலாம்.
ஜோசப் ஸ்மித்தும் சிட்னி ரிக்டனும் அவருடைய பணிகளுக்காக தங்கள் குடும்பங்களை விட்டு விலகி இருந்தபோது, கர்த்தர் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம்: “என்னுடைய சிநேகிதர்களாகிய சிட்னி மற்றும் ஜோசப், உங்களுடைய குடும்பங்கள் நலமாயிருக்கிறார்கள்; அவர்கள் என்னுடைய கரங்களிலிருக்கிறார்கள், எனக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி நான் அவர்களுக்குச் செய்வேன்; ஏனெனில் சகல வல்லமையும் என்னிலிருக்கிறது.”
தேவையில் இருப்பவர்களின் காயங்களை நீங்கள் கட்டும்போது, கர்த்தரின் வல்லமை உங்களைத் தாங்கும். நமது பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு துணை நிற்கவும் அவர்களை ஆசீர்வதிக்கவும் அவருடைய கரங்களும் உங்களுடன் சேர்ந்து நீட்டப்படும்.
இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு உடன்படிக்கையின் ஊழியரும் அவருக்காக மற்றவர்களை ஆசீர்வதித்து சேவை செய்யும்போது அவருடைய வழிநடத்துதலை ஆவியானவரிடமிருந்து பெறுவார்கள். அப்போது அவர்கள் இரட்சகரின் அன்பை உணர்ந்து, அவரிடம் நெருங்கி வருவதில் மகிழ்ச்சியைக் கண்டடைவார்கள்.
எம்மாவு சாலையில் உள்ள வீட்டில் இரண்டு சீஷர்களுடன் நான் அங்கு இருந்ததைப் போன்று உறுதியாக நான் கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருக்கிறேன். அவர் ஜீவிக்கிறார் என்பதை நான் அறிவேன்.
இதுவே இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை. நியாயத்தீர்ப்பின் நாளில், நாம் இரட்சகருக்கு முன்பாக முகமுகமாய் நிற்போம். இந்த வாழ்க்கையில், அவருடைய சேவையினால் அவரிடம் நெருங்கி வந்து, “நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே.” என்ற வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பவர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியின் நேரமாக இருக்கும்.
உயிர்த்தெழுந்த இரட்சகரும் நமது மீட்பருமானவரின் ஒரு சாட்சியாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.